Monday, March 12, 2018

Madurai meenaakshi temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
----------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல....................... .)
---------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 244*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருஆலவாய் (மதுரை):*
--------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பதினான்கு தலங்களில் இத்தலம் முதலாவதாக போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்.

*💥இறைவி:* மீனாட்சி, அங்கயற்கண்ணி.

*🌴தல விருட்சம்:* கடம்ப மரம்.

*🌊தல தீர்த்தம்:* பொற்றாமரை, வையைஆறு, எழுகடல்.

*🔥ஆகமம்:*

*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர். -இரண்டு பதிகங்களும்,
திருஞானசம்பந்தர். - பத்து பதிகங்களும், ஆக மொத்தம் இத்தலத்திற்கு பன்னிரண்டு பதிகங்கள்.

*🛣இருப்பிடம்:*
மதுரை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். கோவில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி..மி தொலைவில் உள்ளது.

தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் மதுரைக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.

*✉அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி
அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரர் திருக்கோவில்,
மதுரை.
PIN - 625 001

தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது.

பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும்.

சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.

மதுரையை அழிக்க வருணனை ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும்.

இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது.

ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.

*🏜கோவில் சிறப்பு:*
எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது இத்திருக்கோவில்.

இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன.

இவற்றுள் நூற்று அறுபது அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது.

கிழக்கு கோபுரத்தின் உயரம் நூற்றி ஐம்பத்து மூன்று அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.

இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்று மேலும்  ஒரு பெயர் உண்டு.

மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்பட்டு வருகிறாள்.

அன்னை மீனாட்சி. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள் என்பர்.

இங்குள்ள சிவலிங்கம், பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும்.

எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரையும் கூறுவர்.

இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டிருக்கிறார்.

*முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!* என்று. (இந்த பதிகத்தின் பதினோரு பாடல்களும், அதன் பொருள்களும் பதிகத்தின் கடைசியில் இருக்கிறது.)

*தல அருமை:*
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது.

ஒருமுறை விருத்திராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.

அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார்.

அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான்.

இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார்.

இந்திரன் சிவபெருமானுக்கு கோயில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானத்தை வரவழைத்தான்.

இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார்.

அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.

ஈசனின் அறுபத்துநான்கு திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவையாகும்.

பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் இருந்து வருகிறது.

இறைவனின் ஐந்து சபைகளில் இத்தலம் வெள்ளி சபை. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். இந்த சந்நிதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.

*முக்குறுணி விநாயகர்:*
தெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே நாம் காண்பது முக்குறுணி விநாயகர் சந்நிதி.

மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூர் தெப்பக்குளம் அருகே மண்ணை வெட்டியபோது, மண்ணில் புதையுண்டிருந்த இந்த விநாயகர் திருவுருச் சிலையை கண்டெடுத்தான்.

பின்பு இந்தச் சிலையை இங்கே பிரதிஷ்டை செய்தார்.

ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் இந்த விநாயகருக்கு பதினெட்டு படி (முக்குறுணி) அரிசியால் கொழுக்கட்டை தயார் செய்து படைக்கப்படுவதால் இவ்விநாயகர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்பட்டு வருகிறார்.

ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து நக்கீரருடன் வாதிட்ட தலம் இது.

நக்கீரர் தன்னுடன் வாதாடுவது இறைவன் என்று தெரிந்தும் "நெற்றிக்கன் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட தலம் இது.

முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றியதும், திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை இறைவன் கொடுத்ததும் நிகழ்ந்ததும் இந்த மதுரைத் தலத்தில்தான்.

திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம் இது.

சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம் இந்த மதுரையாகும்.

வருடம் முழுவதும் எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இது.

பாணபத்திரருக்கு தன் கைப்பட பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம் இந்த மதுரையாகும்.

இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.

பல்வேறு இலக்கியங்களிலும் பாராட்டுகின்ற பதி.

யோகநிலையில் இத்தலம் *'துவாத சாந்தத் தலம்'* எனப்படும்.

சங்ககாலப் புகழ்பெற்ற தங்கப்பதி. இறைவியே தடாதகையாக அரசாண்ட தலம் இது.

முப்பெருஞ் சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

திருஞானசம்பந்தர் இத்தலத்தில் வந்து தங்கியிருந்து சைவம் பெருக்கிய திருமடாலயம்  மிகப் பழமையான ஆதீனம் (மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம்) தெற்காவணி மூலவீதியில் உள்ளது.

குமரகுருபர சுவாமிகள் இத்தலத்துப் பெருமாட்டியின் (மீனாட்சியம்மை) மீது பிள்ளைத் தமிழ், குறம், கலம்பகம் முதலிய பலவகைப் பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

மாநகராட்சி தகுதியில் உள்ள மக்கட் செறிவு கொண்ட மிகப் பெரிய நகரத்துள் அமையப்பெற்றிருப்பதால், புதிதாக வருவோர்க்கு மிகவும் சுலபம்.

இறைவன், சௌந்திர பாண்டியனாக இருந்து ஆட்சி செய்த இடம் இது.

அங்கயற்கண்ணியாம் தடாதகைப் பிராட்டியார் இறைவனை மணம் புரிந்து ஆட்சி செய்த பதியும் இது.

இராஜசேகர பாண்டியனுக்காக இறைவன் வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய தலம் இத்தலம்.

மாணிக்க வாசகர் இறைவனது பெருமையை அரிமர்த்தன பாண்டியனுக்கு உணர்த்திய தலம் இது.

கூன் பாண்டியனின் வெப்பு நோய் ஞானசம்பந்தரால் நீக்கப்பெற்று, நின்றசீர் நெடுமாற நாயனார் ஆகிய தலம்.
அவதாரத் தலம் : ஆலவாய் (மதுரை).
வழிபாடு: குரு வழிபாடு. முத்தித் தலம்: மதுரை. குருபூசை நாள்: ஐப்பசி - பரணி. 

மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் சைவம் வளர்த்த தலம் இது.

மூர்த்தி நாயனார் அவதரித்த தலம் இது.

சொக்கநாதருக்கு சார்த்த மூர்த்தி நாயனார் சந்தனம் அரைத்தச் சந்தனக்கல் இன்றும் கோயிலில் உள்ளது. 

அவதாரத் தலம் : மதுராபுரி. ஆலவாய் (மதுரை). வழிபாடு: இலிங்க வழிபாடு. முத்தித் தலம்: மதுரை. குருபூசை நாள்: ஆடி  கார்த்திகை

*🏜கோவில் அமைப்பு:*
இக்கோயிலுள் அன்னை மீனாட்சிக்கே முதலில் வழிபாடு நடைபெறுவது மரபு.

ஆதலின் பக்தர்கள் அணைவரும் கீழ விதியிலுள்ள அம்பாள் சந்நிதி வாயில் வழியாக ஆலயத்துள் புக, நாமும் அவர்களோடு உள் புகுந்தோம்.

மிகப் பெரிய கோபுரம். அன்னாந்துதான் பார்த்தோம். கோபுரத்தில் ஏராளமான சிற்பங்கள் ஆர்ப்பரித்து காட்சியாய் தெரிந்தன. *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

சிற்பக்கலை மிக நேர்த்தியான முறையில் அழகுடையவையாக காட்சி தந்தன. பார்க்க பார்க்க மிக பிரமிப்பிகாக இருந்தன. *சிவ சிவ.*

இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தபோது, முதலில்  அஷ்டசக்தி மண்டபத்தைக் காண நேர்ந்தது. *சிவ சிவ*

இதன் வாயிலில் மீனாட்சி கல்யாணச்சிற்பம் சுதை வடிவுடன் அழகுற அருள்வடிவாக அமைத்திருந்தார்கள். கையுர்த்தி வணங்கிக் கொண்டோம். *சிவ சிவ*

எட்டு பெருந்தூண்கள் இருந்தன. எட்டும் சக்திகளின் வடிவங்களை நமக்கு உணர்த்திக் காட்டின. வணங்கிக் கொண்டோம். *சிவ சிவ*

திருவிளையாடற் புராணக் காட்சிகள் பல இதில் இடம் பெற்றிருந்தன. இதைக்கண்டு நகர்ந்து செல்கையில், திருவிளையாடல் புராண நிகழ்வுகள் மனக்கண் முன்னே நிழலாடியது. *சிவ சிவ*

அடுத்துள்ள நாயக்கர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற விளக்குகளைக் கொண்ட பித்தளையாலான திருவாசி  பார்ப்போரின் கண்களைக் கவரும் வண்ணமிருந்தது. மிக மிக அருமை *சிவ சிவ*

அடுத்துருந்த வழியே சென்றோம். இவ்வழி பொற்றாமரைக் குளம் இருக்கும் இடம் கொண்டு வந்து விட்டன. குளத்தில் பளிங்கு போன்ற நீர் நிறைந்திருந்தது. படிகளும் சுற்றுப்புறமும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றது தெரிந்தது. உழவாரத் தொண்டு புரிவோரின் பார்வை இங்கு மேய்கிறது என்பதை உணர்ந்தோம். *சிவ சிவ*

மிகப்பெரிய குளமான இந்த குளந்தான், இந்திரன் தன் வழிபாட்டிற்காக பொன்மலர் பறித்த குளம் ஆகும். *சிவ சிவ.*

திருக்குறள் நூலை இக்குளத்தில் சங்கப் பலகையில் வைத்துத்தான் சங்கப் புலவர் ஏற்றுக் கொண்டதாக வரலாறு என முன்னமே படித்திருந்தோம்.

இதற்குச் சான்றாக, அழகான படிக்கட்டுக்களுடன் உள்ள இக்குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப்புலவர்களின் உருவங்களை பொறித்து வைத்துள்ளதைக் கண்டோம். மனதிற்கு ஆனந்தமாக இருந்தது. *சிவ சிவ*

மேலும் தென்கரை மண்டபத்தில் திருக்குறட்பாக்கள் முழுவதும் சலவைக் கற்களில் பொறித்து அக்கற்களை சுவரில் பதித்து நிறுத்தியிருந்தார்கள்.

முழுமையும் படித்தால், ஆலய தரிசன நேரம் பாதிக்கபடுமென்பதாலும், வீட்டில் குறள்நூல் இருக்கிற தெம்பாலும், குறளணி வரிசைகளை பார்வையிட்டுக் கொண்டே நகர்ந்தோம்.

இதைவிட்டு அகழ்ந்து செல்கையில் பொற்றாமரைக் குளத்தின் மேற்குப் பக்கமாக வந்து சேர்ந்தோம். இங்கு ஊஞ்சல் மண்டபம் இருந்தது.

ஊஞ்சலாடு அறை முழுவதும் எல்லா பக்கமும்  கண்ணாடிகள் பொருத்தியிருந்தார்கள்.

அம்மை ஊஞ்சல் வைபவத்தில் ஊஞ்சல் ஆடும் அழகை பக்தர்கள் அணைவரும் காணவேண்டும் என்பதற்காக இந்த கண்ணாடி அமைப்பு. *சிவ சிவ*

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் சுவாமியையும் அம்பாளையும் இந்த மண்டபத்தில் பொன்னூசல் நடத்தி வைக்கின்றனர். 

இன்றைய ஆலய தரிசனத்தில் அந்த பாக்கியம் நமக்கு இல்லை. *சிவ சிவ*.  நாம வந்து விட்டிருந்தது சனிக்கிழமை தினமானதால். *சிவ சிவ*

அடுத்து, கிளிக்கூட்டு மண்டபத்தைக் காண நேர்ந்தது. அழகான சிற்பக்கலையின் முதிர்ச்சி இதில் பொங்கி கிடந்தது.

பாண்டவர்கள், வாலி, சுக்ரீவன், திரௌபதி, புருஷாமிருகம் முதலிய சிற்பங்களும் இங்கு இருந்தன. 

இவர்களை, என்னதான் நூல்களில் வாசித்திருந்தாலும், இப்போது இங்கு வந்து பார்த்தபோது, இவர்களை நேரில் கண்டுவிட்டது போல ஒரு உணர்வு தென்பட்டது. காரணம், சிற்பங்களின் நேர்த்தி அப்படி இருந்தது.

மண்டபத்தின் மேற்பகுதியில் தெய்வங்களின் பல்வேறு தோற்றங்கள் இருந்தன. இதில் மீனாட்சி திருக்கல்யாணமும் வண்ணச் சித்திரங்களாக வரையப்ப்பட்டிருந்தது. *சிவ சிவ*

சுவாமி அம்பாளின் திருக்கல்யாணம் நடந்தபோது,..... அகத்தியர் தென்திசை நோக்கிச் செல்லப் பணித்திருந்தாரே ஈசன்,...அப்போது இடையில் இத்திருக்கல்யாண திருக்கோலத்தைக் காணும் நிகழ்வு அகத்தியருக்கு கிடைத்தே!.

அதுபோலவே, இத்திருக்கல்யாண கோலச் சித்திரத்தைக் காணும் போது, அகத்தியர்க்கு  கிடைத்த அதே காட்சி, நமக்கும் இப்போது கிடைத்தது போலிருந்தது இச்சித்திரத்தின் உயிருணர்ச்சிகள். சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம். *சிவ சிவ*

அம்பாள் சந்நிதி இருக்கும் வெளிப் பிரகாரத்தில் திருமலை நாயக்கரும், அவரின் இரு துணைவியாரும் உள்ள சுதையாலான சிற்பங்கள் இருப்பதைப் பார்த்தோம். இவரின் பெருந் தொண்டுக்கு நம் சிரந்தாழ்ந்த வணக்கத்தைத்தான் நம்மால் கொடுக்க முடிந்தது. *சிவ சிவ*

அடுத்து, அரணகிரிநாதரின் திருப்புகழ்ப் பாடல்களை குமரன் சந்நிதியில் செதுக்கப்பட்டிருந்தன. கண்டு லயித்தோம்.

இப்பிரகாரத்தில் உள்ள ஆறுகால் பீடத்தில்தான் குமரகுருபர சுவாமிகள் பாடியருளிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்று அருகிருந்த ஒருவர் கூறினார்.

திரும்பி கொஞ்சதூரம் சென்றதும், மகாமண்டபம் ஒன்று இருந்தது. இங்கு இருந்த சந்நிதிக்கு முன் வந்து பார்த்தோம். ஐராவத விநாயகர்தான் சந்நிதிக்குள் இருந்தார்.

விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு, அம்மண்டபத்திலேயே சிறுது ஓய்வெடுத்துக் கொண்டோம்.

இன்னும் தரிசிக்க வேண்டியது நிறைய இருப்பதாலும், ஓய்வின் நேரத்தை அதிகப்படுத்தாது, எழுந்து கொண்டு உடனிருந்தோரையும்  துரிதப் படுத்தினோம்.

விநாயகப் பெருமானின் சந்நிதிக்கு அடுத்து முருகப்பெருமான் சந்நிதி இருந்தது. மனமினிக்க வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து அம்மையின் சந்நிதிக்குள் புகுந்தோம்.
அம்பாள் மீனாட்சி கையில் கிளியுடன் செண்டு ஏந்தி நின்ற திருக்கோலத்தில்  அருட்காட்சி தந்தாள். 

மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

அம்மைக்கு, திங்கள்தோறும் தங்கக்கவசம், வைரக்கிரீடம் சார்த்தப்படுகிறதாம். அருகிருந்தோர் ஒருவர் கூறினார். இவ்வலங்காரத் தரிசனத்தைக் காணும் பாக்கியமும் நமக்கு இல்லை. ஏனென்றால், நாம்தான் சனிக்கிழமை வந்திருக்கிறோமே!.

அம்பாளை வணங்கிப் பின் வெளியேறி, கிளிக்கூட்டு மண்டபம் வழியாக வந்து கோபுரவாயிலைக் கடந்தோம்.

இங்கிருந்து சுவாமி சந்நிதிக்குச் செல்ல நடந்து கொண்டிருந்தோம். போகும்போது எதிரில் முக்குறுணி விநாயகர் இருந்தார். இவர் மிகவும் விசேஷமினவரென்று கூறக் கேட்டிருந்தோம். 

ஆதலால் பிடி காதை, எனச் சொல்லி, காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.

முக்குறூணியாரின் திருமேனியித் தரிசனம் மனதிற்கு இனிமையாக இருந்தது. ஆனந்தத்துடன் விலகி வந்தோம். இவரின் திருமேனி சுமார்
எட்டு அடி உயரம் இருக்கும். மிகப்பெரிய திருமேனியென்றாலும் அழகும் பெரியதாகத்தான் இருந்தது.

பிராகாரத்தில் வலம் வரும்போது, சங்கப்புலவர்களின் சந்நிதிகளும் சம்பந்தபெருமான் சந்நிதியும் இருந்தன.

நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்து தொடர்ந்தோம்.

சுவாமி சந்நதிக்குச் செல்லும் முன்புற எதிரில் கம்பத்தடி மண்டபம் இருந்தது. இங்கு சிலைகள வடித்த சிற்பியை மனதார நினைத்து வாழ்த்த வேண்டும் போலிருந்தது நமக்கு.

சிற்பக் கலையின் தன்மையை மென்மையாக உருக்கி ஊற்றிருந்தார் அந்த சிற்பி. அவ்வளவு பிரமிக்க வைத்த படைப்பு இங்கிருந்தது.

மண்டபத்தின் நடு பகுதிக்கு வந்தபோது, தங்கக் கொடி மரமத்தைக் காணப் பெற்றோம். இதன்முன்பாக நெடுஞ்சான்கிடையாக விழுந்து சிரம், கரங்கள், செவிகள், புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம். *சிவ சிவ*

அடுத்திருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு, இறைவனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம். *சிவ சிவ*

இதற்கடுத்தாக இருந்த பலிபீடத்தருகாக போய் நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு மேலும் மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.

சுற்றிலும் இருந்த எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உயிரோட்டத்துடன் காணப்பட்டன. இச்சிலைகளைத் தீண்டிப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது இச்சிலைகள் எட்டும். சிற்பியை நினைந்து கொண்டோம்.

சங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அற்புதமாக இருந்தது. கண்டு வியந்து, மலைத்து நகர்ந்தோம்.

அடுத்தும் ஒரு பிரமிப்பான ஒரு தோற்றம். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பமாக இருந்தன. தன்னாலேயே நம் கரங்கள் சிரசின் மேலாக உயர்ந்தன.

இந்த சிற்ப அழகை எவ்வளவுதான் வர்ணிப்பது? நமக்கு வருத்தமாகத்தான் இருந்தது!,, எவ்வளவு நாளாய் கண்களை கூர்மையாக்கி திருத்தியிருப்பான் அந்தச் சிற்பி!',.....ஓரிரு  வார்த்தைகளில் *அழகு*  என சொல்லி முடித்து விடுகிறோமே?

நம் மனம் திருப்தி அடையவில்லை. இதை வடித்த சிற்பியின் குலம், வாரிசுகள், தொடரும் சந்ததிகள் என யாவரும் *'நலம் பயக்க வாழ'* இவர்கள் அனைவருக்காகவும் இறைவன் முன்பு தியாணிக்கலாம் என முடிவு செய்தோம்.

மேலும் கம்பத்தடி மண்டபத்தின் பக்கத்தில் இரு பெரிய தூண்கள் ஆரவாரமாக காட்சி தந்தன.

இருதூண்களில் அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலாரூபங்கள் இருந்தன. அடுத்துள்ள தூண்களில் ஊர்த்துவதாண்டவர் காளியின் சிலாரூபங்கள் கொள்ளையழகுகளை நிறைத்து காட்சி தந்தது. *சிவ சிவ* என மொழிந்தோம்.

இதையெல்லாம் நாம் வணங்கிக் கொள்ளும் தன்மையைத் தவிர நம்மிடம் வேறு ஒன்றும் இல்லை. இதை பலிபீடத்தருகாக வந்து கூட
முறையிட்டுவிட்டுத்தான் வந்திருந்தோம். எனவே கூப்பிய கரங்களுடன் வணங்கியபடி நகர்ந்தோம்.

சுவாமி சந்நிதிக்கு முன் வரவும், சந்நிதி வாயிலில்  இரு பெரிய துவார பாலகர்கள் கம்பீரமாகக் காட்சி தந்தனர்.

உள் நுழையும் முன், துவாரபாலகர்கள் இருவரையும் முதலில் வணங்கிக் கொண்டோம். பின்பு இவர்களிடம் ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

உள் நுழைந்ததும் பிராகாரத்தில் திருவிளையாடற்புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஆறுகால் பீடம் உள்ள காட்சி இருந்தது.

தரிசன வரிசை நகர, ஆறுகால் பீடத்தைக் கண்டு நகர்ந்தபடியே வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, அறுபத்துமூவர் இருந்தனர். இவர்களையும் நடையோட்டத்துடனே  தரிசித்துக் கொண்டோம். *சிவ சிவ*

அடுத்து, கலைமகள் சந்நிதி இருந்தது. வணங்கிக் கொண்டோம். கலைமகள் அருளால் நாம் படித்தது ஏழரை வருடங்களே! அதற்கு பிறகு குடும்பபப் பாரம். எனவே படிப்பைத் தொடர வழியில்லை. தொடர, விதியும் மறித்து விட்டது. இருப்பினும் ஏழரை ஆண்டு கால படிப்பு கிடைத்ததினால்தான், இன்று மொபைலில் டைப் செய்ய முடிகிறது. 

இந்த *பதியும் பணியே பணியாய் அருள்வாய்*, என உங்கள் கண்களுக்கு பதிவாய் வருவதற்கு இந்த கலைமகள்தான் காரணம். மீண்டும் ஒருமுறை கலைமகளை வணங்கிப் பின் நகர............

காசிவிசுவநாதர், பிட்சாடனர், சித்தர், துர்க்கைச் சந்நிதிகள் இருந்தன. ஒவ்வொரு சந்நிதியையும் தொடர்ச்சியாக பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டு சென்றோம். *சிவ சிவ*

இத்தல கடம்பமரமான தலமரத்தை வெள்ளிக் கவசத்தால் போர்த்தி பாதுகாப்பு செய்திருந்தனர். இதனருகாக செல்லும் போது, தீண்டாமல் வணங்கிச் சென்றோம். *சிவ சிவ*

மேலும் தொடர்ந்து செல்கையில், கனகசபையும், யாகசாலையும் இருக்க, பார்த்து பூரித்து வணங்கி நகர்ந்தோம்.

இதற்கடுத்ததாக சாட்சி சொல்ல வந்த வன்னிமரமும், கிணறும் அடுத்தடுத்து இருந்தன. வணங்கிப் பணிந்தோம். *சிவ சிவ*

(இதன் வரலாறு அதிசயமானது. இந்த வரலாற்றில் சம்பந்தபெருமானின் லீலை மகத்தானது. இதனின் விரிவான வரலாறை திருவிளையாடல் புராண பதிவில் கொடுத்திருந்தோம். ஆதலால் இதனின் வரலாற்றை இங்கு விரித்துரைக்கவில்லை.)

அடுத்து வெள்ளியம்பலத்தைக் கண்டோம். சபை முழுமையும் வெள்ளியியங்கள் அலங்கரித்தன. கால்மாறி ஆடிய பாதங்களை வெகு நேரம் நோக்கினோம். அதன் பின்பே ஆடவல்லானின் திருமுகத்தை நோக்கி பணிந்து திரும்பினோம். *சிவ சிவ*

ஈசனின் சந்நிதிக்கு நாம் சென்று கொண்டேயிருந்தாலும்,  கால்மாறி ஆடிய அம்பலக் கூத்தனின் அற்புத நடனக்கோலழகு மட்டும்  நம் கண்களிலிருந்து அகழவில்லை.

இதன் லயிப்பிலேயே நாம் இருக்க, மெல்ல மெல்ல தரிசன வரிசை நகர்ந்து செல்லும்போது, அடுத்து சோமசுந்தரப் பெருமான் முன் வந்தோம். *சிவ சிவ* சிரமேற் கைகுவித்து கொண்டே ஈசன் சந்நிதி முன் வந்து நின்றோம்.

சோமசுந்தரப் பெருமான் திருமேனி சிறியதான லிங்கத் திருமேனியாக காட்சி தந்தார். கண்கள் குளிர தரிசித்தோம். மனங்குளிர ஆனந்தித்தோம். திரேகத்தினுள் ஏதோருவித புதுகுருதி, நம் உடலில் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

நா, தழுதழத்தது, தொண்டைக்குழி கணத்தது, கண்ணீர் துளிக்க ஈசனைக் கண்டு வணங்கினோம். மனமுருக பிரார்த்தனை செய்தோம். *சிவ சிவ, சிவ சிவ*

தரிசன வரிசையின் உந்துதலால் ஈசனை, இதற்குமேல் நின்று தியாணித்து தரிசிக்க முடியவில்லை.

அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை கேட்டபிறகே கிடைத்தது. வாங்கிக் கொண்ட அவ்விபூதியை அப்படியே திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு நகர்ந்தோம்.

அர்ச்சகரிடம் விபூதியை கேட்டுப் பெறாதோர் நீறு இல்லா நெற்றியுடன் வெளியேறிப் போய்க்கொண்டிருந்தனர்.

இந்த இடம் முக்கியமான ஒன்று. நாம் தரிசனம் செய்யும் இந்த தலத்தில் வைத்துத்தான், மாலிக்பூரன் படையெடுத்து வந்து விக்கிரகத்தை துண்டுபடுத்தினான்..............

மாலிக்கபூாின் படைகள் புறப்பட்டு வந்து, மதுரை மணலை புழுதியாக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது. 

மாலிக்பூரின் படையை நாளை எதிர்கொள்வோம்.........
  
            திருச்சிற்றம்பலம்.
-----------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*