Monday, March 19, 2018

Koorathaazhwar

Courtesy:Sri.J.K.Sivan

அருமையான குரு அபிமான சிஷ்யன்'' -3
. J.K. SIVAN

ஸ்ரீ ராமானுஜருக்கு வயது ஆகிவிட்டது. ஸ்ரீ வைஷ்ணவம் வேரூன்றி விட்டது. எண்ணற்ற வைஷ்ணவர்கள் அவரை போற்றினாலும் சில எதிரிகளும் முளைத்தனர். பொதுவாக சமயம் எதிர்க்காவிட்டாலும் சில சைவர்கள் ராமானுஜரின் அயராத உழைப்பால் வளர்ந்த வைஷ்ணவ வளர்ச்சியில் கவலை கொண்டனர். கங்கைகொண்ட சோழ புரத்தில் ஒரு கிளர்ச்சி. அவருக்கும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்கும் தீவிர எதிர்ப்பாக அமைந்தது. அந்த சோழ தேச ராஜா குலோத்துங்கன், கிருமி கண்ட சோழன் என்ற பெயருடைய ஒரு தீவிர சைவன். தனது ராஜ்யத்தில் சைவத்தை தவிர மற்ற, குறிப்பாக வைஷ்ணவத்தை பூண்டை வேரோடு ஒழிக்க முடிவெடுத்தான். அது ராமானுஜரை அழித்தால் மட்டுமே முடியும் என்று சிலர் மூலம் அறிந்தான்.

"அழைத்து வாருங்கள் அந்த ராமானுஜனை இங்கே"

சோழ ராஜாவின் கட்டளை குதிரை வீரர்கள் மூலம் பறந்தது. ராமானுஜரை தனது சைவ குருமார்களுடன் விவாதம் செய்யவைத்து தோற்கடிக்க வேண்டும் வைஷ்ணவத்தை விட்டு சைவத்தை ஏற்கச் செய்யவேண்டும், மறுத்தால் கொன்றுவிடவேண்டும். இந்த எண்ணம் செய்தியாக கசிந்து சில பக்தர்கள் ராமானுஜரிடம் ஓடினர்.

''எக் காரணம் கொண்டும் நீங்கள் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல கூடாது. அரசனை சந்திக்க வேண்டாம். ஆபத்து. உடனே சோழநாட்டை விட்டு வெளியேறுங்கள்" என்று கெஞ்சினர்.

அரசனின் ஆட்கள் வந்துவிட்டனர் ராமானுஜரைத் தேடி. கூரேசர் எப்படியோ ராமானுஜரை சம்மதிக்க வைத்து, தான் அரசனை நேரில் சென்று சந்தித்தார். விரக்தியுடன் ராமானுஜர் சிலருடன் சேர்ந்து கர்நாடகாவில் மேல் கோட்டையை (திருநாராயணபுரம்) நோக்கி நகர்ந்தார். அங்கு பன்னிரண்டாண்டுகள் அந்த முதியவருக்கு வனவாசம் விதிவசமாகியது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஸ்ரீ வைஷ்ணவத்தை அங்கு பரப்பினார். ஸ்ரீ சம்பத் குமாரன் ஆலயம் நிர்மாணித்தார். அவரது விடா முயற்சியால் மேல்கோட்டை ஸ்ரீ ரங்கத்துக்கு அடுத்ததாக சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தலமாகியது.

ஒரு நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு வைஷ்ணவர் ராமானுஜரை மேல்கோட்டையில் வந்து சந்தித்தார். ஆர்வத்துடன் ஆசார்யன் மூச்சு விடாமல் கேட்கிறார்:

"என் உயிரான ஸ்ரீரங்கம் எவ்வாறு இருக்கிறது? என் பிள்ளைகள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாம் நலமா?"

"நீங்கள் இல்லையே என்கிற குறை தவிர எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது அங்கு" என்றார் வைஷ்ணவர்.

"என் சீடன் கூரேசன் எப்படி இருக்கிறான் ? அவனை இழந்து நான் தனியனாகிவிட்டேனே!!! " என்று ஆதங்கத்தோடு கேட்டார் ஆசார்யன்.

கண்களில் நீர் பெருக, நா தழுதழுக்க வந்திருந்த ஸ்ரீ வைஷ்ணவர் சொன்னார்:

"சுவாமி தங்களை ஜாக்ரதையாக அனுப்பிவிட்டு கூரேசரும் மஹா பூரணரும் அரசன் ஆணைக்கு கட்டுப் பட்டு கங்கை கொண்ட சோழ புரம் அழைத்து செல்லப்பட்டனர். ராஜா அவர்களிடம் "சிவனைக் காட்டிலும் பெரிதொன்றும் இல்லை" என சம்மதித்து எழுதிகொடுங்கள் என்றான். கூரேசன் மறுத்தார். வேதம் சாஸ்த்ரம், உபநிஷத் ஸ்ம்ரிதி புராணம் இவற்றிலிருந்து எல்லாம் மேற்கோள் காட்டி நாராயணனே மேலானவன் போற்றத் தக்கவன் என நிருபணம் செய்தார். ஏற்க மறுத்தான் சோழன். கையொப்பமிட்டுக் கொடு இல்லாவிட்டால் உன் கண் இங்கே பிடுங்கப்படும் என ஆணையிட்டான்.

"கெடுமதி கொண்ட அரசனே, உன் விருப்பம் நிறைவேறாது. உனக்கு வேலை மிச்சம் பண்ணுகிறேன். நானே என் கண்களை பிடுங்கிக் கொள்கிறேன் என்று அவன் நீட்டிய எழுத்தாணியால் கண் விழி கோளங்களை வெளி கொணர்ந்து அவன் காலடியில் எறிந்தார். உன்னைப் பார்த்ததால் அந்த கண்கள் செய்த பாவத்திற்கு இது தண்டனையாகட்டும்''
என்கிறார் கூரேசர் கண்களை இழந்து.

"நீ கையொப்பமிடு'' என மஹா பூர்ணர் நம்பிகளை ஆணையிட்டு அவரும் மறுக்கவே அரசனின் சேவகர்கள் அவர் நேத்ரங்களை அழித்தனர். கூரேசர் வயதில் இளையவராதளால் நம்பிகளைத் தாங்கி வர ரத்தம் பீறிட வழியெல்லாம் ஆறாகப் பெருக சோழன் அரண்மனையை விட்டு தண்டனை பெற்று வெளியேறினர். கங்கை கொண்ட சோழபுரம் தாண்டி வந்தவுடன் நம்பிகளின் பெண் அத்துழாய் பிராட்டி அவருக்காக காத்திருந்தவள் கண்ணற்ற தந்தையைக் கட்டிக்கொண்டு கதறினாள். நம்பிகளால் மேற்கொண்டு நகர இயலவில்லை. கூரேசன் மடியில் தலையும் அத்துழாய் மடியில் காலுமாக சோழ மண்ணிலே சாய்ந்தார்.

"சுவாமி!! ரங்கனை விட்டு பிரிந்ததும், ஸ்ரீரங்கத்தை பிரிந்ததும், ராமானுஜரைப் பிரிந்ததும் எங்கோ கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வெளியே ஒரு காட்டு பிரதேசத்தில் வாழ்வு முடிவதால் உங்களுக்கு மனமொடிந்து விட்டதா?" என்கிறார் கூரேசர்.

"கூரேசா, நீ அறியாததா? ஒரு வைஷ்ணவனின் அந்திம நேரத்தில் நாராயணனே அருகில் இருப்பான். ஜடாயுக்கு ஸ்ரீ ராமன் அருகில் வந்து அருளவில்லையா ? இதில் காடென்ன நாடென்ன? மேலும் கேள் , ஒரு சுத்த ஸ்ரீ வைஷ்ணவன் மடியிலோ வீட்டிலோ மரணம் சம்பவித்தால் அதற்கு மேல் எது சிலாக்கியம்? நான் ஸ்ரீரங்கத்தில் மரணமடைந்தால் அனைவரும் ஸ்ரீ ரங்கத்தில் மரணம் தான் வைஷ்ணவனுக்கு சிறந்தது என நினைப்பரே!. நமது ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்ன சொல்கிறது? பெருமாளிடம் பிரபத்தி சரணாகதி பண்ணினவனுக்கு எங்கு மரணம் சம்பவித்தாலும் நாராயணன் அருகில் இருப்பது சத்ய வாக்காயிற்றே!. இதென்ன அனாமதேய இடமா? இங்கல்லவோ என் குருநாதர்கள் நாதமுனிகளும் குருகை காவலப்பனும் வைகுண்ட ப்ராப்தி பெற்ற இடம். விசனப்படாதே. நான் மகிழ்ச்சியோடு விடை பெறுகிறேன்". மஹா பூர்ணர் பெரிய நம்பிகள் மறைந்தார்."

நிகழ்ந்ததைப் பூரா கேட்ட ராமனுஜரின் கண்களில் பிரவாகம். தனது குரு பெரிய நம்பிகளுக்கு தான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் என்று நினைவு கூர்ந்தார். தனக்காக அவர் உயிர் தியாகம் செய்தது ராமானுஜரை வாட்டியது. அந்திம நேரத்தில் அருகிருந்து மஹா பூர்ணருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிட்டவில்லையே என நொந்தார். பெருமாளே என்ன பாக்கியம் கூரேசனுக்கு? என்னால் முடியாததை அவன் நிறைவேற்றினானே, அவனல்லவோ குருவை மிஞ்சிய சீடன்?"


''அருமையான குரு அபிமான சிஷ்யன்'' 4
. J.K. SIVAN

இத்தொடர் இந்த பதிவுடன் நிறைவு பெறுகிறது.

கண்ணிழந்த கூரேசன்மெதுவாக ஸ்ரீரங்கம் திரும்பினார். திருக்கோஷ்டி நம்பிகள், திருமலை ஆண்டான் , திருவரங்க பெருமாள் அரையர் என்று ஒவ்வொருவராக மஹா புருஷர்கள் எல்லாம் மறைந்து போய் விட்டார்களே. திருப்பதியில் ராமானுஜரின் நெருங்கிய உறவினர் ஸ்ரீ சைல பூரணரும் இல்லை. திருக்கச்சி நம்பிகளும் விண் எய்திவிட்டார்.கூரேசருக்கு ஸ்ரீ ரங்கம் வெறிச்சோடியது போல் தோன்றியது. தனிப்பட்டு விட்டோமோ?

மனம் கலங்கிய கூரேசர் ரங்கநாதனே கதி என்று தனிமையில் மன வியாகூலத்தை ரங்கனிடம் கொட்ட ஆலயம் சென்றபோது ஆலய வாசலிலே காவலர்கள் தடுத்தனர்.

''அரசனின் ஆணை, யார் ராமானுஜரைத தம்முடைய குரு அல்ல என ஒப்புக்கொள்கி றார்களோ அவர்கள் மட்டும் ஆலயத்தில் அனுமதிக்கபடுவர்".

"ஓ அப்படியா, ஐயா ! உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் ராமானுஜரை இகழ்ந்து புறக்கணித்துவிட்டு கூரேசனுக்கு ரங்கன் இந்த ஜென்மத்தில் மட்டு மல்ல எந்த ஜென்மத்திலும் தேவையில்லை"

வெகுண்ட கூரேசர் வீடு திரும்பினார். "ஆண்டாள், பசங்களைக் கூப்பிடு. அரங்கனைப் 
பார்க்கமுடியாத ஸ்ரீரங்கம் இனி நமக்கில்லை. வேறெங்காவது செல்வோம்".

அவர்கள் அவ்வாறே திருமாலிருஞ்சோலை (மதுரை அருகே) சென்று குடியேறி தனிமையில் வாழ்ந்தனர். காலம் மாறியது. கிருமி கண்ட சோழன் மாண்டான். ஆட்சி மாறியது. பல வருஷங்கள் ஓடிவிட்டது.

நூறு வயதான ராமானுஜரும் ஸ்ரீரங்கம் மீண்டார். கோலாகல வரவேற்பு. பிரபந்தங்கள் பாசுரங்கள் எதிரொலிக்க ஸ்ரீவைஷ்ணவ பக்த கோடிகள் உற்சாகமாக அவரை வரவேற்றனர். அவர் கண்களோ கூரேசனை தேடியது. கூரேசர் வீட்டு வாசலை அடைந்தார்.

கூரேசர் ராமானுஜர் வரவை அறிந்து குடும்ப சகிதம் ஸ்ரீரங்கம் விரைந்தார். கண்ணிழந்த கன்று தாய்ப் பசுவை ஆர்வமாக நாடியது. ஸ்ரீ ரங்கத்தில் தான் இருந்த வீடு தேடி ஆசார்யன் வந்ததாய், தன்னை காணோமே என்று வருந்தியது கேட்டு புளகாங்கிதம் அடைந்தார் கூரேசர்.

ஸ்ரீரங்கத்தில் மீண்டும் பல வருஷங்கள் கழித்து ஆச்சார்யனும் சிஷ்யனும் சந்தித்தனர். நா எழவில்லை இருவருக்கும். எண்ணங்கள் ஓடின, காஞ்சியில், ஸ்ரீரங்கத்தில், காஷ்மீரில், ஸ்ரீபாஷ்யம் எழுதியது என்று எத்தனையோ எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை. எத்தனை எத்தனை இடையூறுகள், இன்னல்கள்,எதிப்புகள், விவாதங்கள்! இருவரும் ஒன்றாக அல்லவா எல்லாவற்றையும் கடந்தோம்.

ராமானுஜர் கண்களில் காவேரி. கூரேசருக்கோ கண்ணே இல்லையே.!! விழியற்று பேச்சற்று தடுமாறித் தத்தி ராமானுஜரின் கால்களில் விழுந்தார். குருவின் பாத கமலங்களை கெட்டியாக இரு கரங்களாலும் பிடித்து கொண்டார். அமைதி நிலவியது. பாசத்தோடு கூரேசரைத் தொட்டு தூக்கி மார்போடு அணைத்து கொண்டார் ராமானுஜர்.

"என் அருமை கூரேசரே, என்ன செய்தீர் நீர், எனக்காகவும் ஸ்ரீ வைஷ்ணவத்துக்காகவும் உமது கண்களையே தியாகம் செய்த மஹாபுருஷரே !

பன்னிரண்டு வருஷங்கள் கழித்து மீண்டும் ஆச்சர்யனின் அமுத குரலை கேட்ட கூரேசர் வானில் பறந்தார்.

"சுவாமி, நான் எங்கோ எப்போதோ யாரோ ஒரு சிறந்த ஸ்ரீ வைஷ்ணவனின் நெற்றியை பார்த்து இவன் எவ்வளவு அலங்கோலமாக ஊர்த்வ புண்ட்ரம் சாற்றிக் கொண்டிருக்கிறான் பார்" என்று கேலி செய்திருப்பேனோ என்னவோ. அந்த பாவப் பிராயச்சித்தமாக எனக்கு விழிகளை இழக்கும் தண்டனை கிடைத்ததாக கருதுகிறேன்"'

" நீராவது பாவம் செய்வதாவது!. கூரேசரே , நான் செய்த பாபத்திற்காக தான் உமக்கு இந்த தண்டனை.. நடந்ததெல்லாம் போகட்டும் என்னோடு வாரும் . நீரும் நானும் செய்ய வேண்டியது அநேகம் இன்னும் உள்ளது" . கை பிடித்து கூரேசரை ஆசார்யன் கூட்டி சென்றார், நிஜமும் நிழலும் ரங்கநாதர் ஆலயம் அடைந்தது. ஸ்ரீ வைஷ்ணவம் மீண்டும் துளிர்த்தது. கிருமி கண்ட சோழன் காலத்தில் ஆலயம், ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தமான அனைத்து பள்ளிகள், மடங்கள் நூலகம் எல்லாம் நாசமாகி இருந்தது. இருவரும் தவறுகளை எல்லாம் திருத்துவதில் முனைந்தனர்.

ராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம். லக்ஷ்மண பெருமாளாக ராமருக்கு அவர் ஆற்றிய தொண்டு ராமரை நெகிழ வைத்து எப்படி கைம்மாறு செய்வது என தோன்றி கூரேசனாக அவதரித்து ராமானுஜருக்கு சேவை செய்வதன் மூலம் கடனை தீர்த்து கொண்டார் என சொல்வதுண்டு.

ராமானுஜருக்கு வயது நூறைத்தாண்டி விட்டது. கூரேசரும் இப்போ கிழவர், கண்ணற்றவர் ஒரு நாள் ரங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு அங்கேயே நின்றார் கூரேசர்.

"என்ன கூரேசா ஏதோ சொல்ல நினைக்கிறாய் போலிருக்கிறதே?" என்றான் ரங்கன்

"எனக்குக் குறை யொன்று மில்லை கோவிந்தா! . எதோ உன் முன்னால் நின்று ஆத்ம திருப்திக்கு மனசுக்குள்ளேயே பாடவேண்டும் என தோன்றியது."

"எனக்கும் உன்னை கண்டதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எதாவது என்னிடம் கேளேன் ??"

"ரங்கா ! என்ன விளையாடுகிறாயா எனக்கு தான் ஒரு குறையும் நீ வைக்கவில்லை என்றேனே . நான் என்ன கேட்பேன் உன்னிடம்?"

"அப்படியொன்றுமில்லை, நீ எதாவது கேட்டே ஆகவேண்டும் உனக்கில்லை என்றால் ரங்கநாயகிக்காகவாவது, என் ராமானுஜனுக்காவாவது எதையாவது கேள்!!"

"சரி ரங்கா, என்னை இந்த உடலில் இருந்து விடுவித்து உன் பாத கமலத்தில் சேர்த்து கொள்ளேன் !"

""ஹு ஹும்" " இல்லை வேறே எதாவது கேள் கூரேசா !!"

"வேறே ஒன்றுமே இல்லையே என்ன கேட்பேன்.?!""

"சரி உன் விருப்ப படியே ஆகட்டும். உனக்கு மட்டும் அல்ல, உன்னைச் சார்ந்த அனைவருக்கும் நீ கேட்ட வரம் அளிக்கிறேன் !!"

பரம திருப்தியோடு கூரேசன் திரும்பினார். ராமானுஜருக்கு மேற்கண்ட சம்பாஷனை தெரியவந்தது. ஆனந்தத்தில் மேலே அணிந்திருந்த வஸ்திரத்தை தூக்கி போட்டு பிடித்து கூத்தாடினார்.

ஒரு சிஷ்யன் கேட்டான் ஆச்சர்யரே என்ன ஆயிற்று ? "

ஸ்ரேஷ்டர் கூரேசரால் எனக்கும் அல்லவா நாராயணனின் பாத கமலப்ராப்தி வரம் கிட்டியது. நானும் கூரேசனைச் ''சார்ந்த''வனல்லவா". இதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. திருக்கோஷ்டி நம்பி ''நான் உபதேசித்த ரகசிய மந்திரத்தை எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக அறிவித்தத்தில் நீ நரகத்துக்கு செல்வாய்'' என்ற சாபம் இருந்ததே. எப்படி வைகுண்டம் செல்லமுடியும். இப்போது கூரேசன் மூலம் அது நிவர்த்தி ஆகிவிட்டதல்லவா?

தொண்டு கிழவர் ராமானுஜர் கூரேசர் வீடு நோக்கி சென்றார்.

"கூரேசா", நீர் என்ன கார்யம் செய்துவிட்டீர் குருவாகிய என்னை கேட்காமலேயே ??"
கூரேசருக்கு புரியவில்லை, பதில் சொல்லவில்லை விழியின்றி விழித்தார்.

"ஏன் பேசமுடியவில்லை உமால்? எதற்காக ரங்கனிடம் உடலிலிருந்து விடுபட கேட்டீர் . நான் குருவாக இருக்கும்போது எனக்கு முன்பு நீர் அங்கு ஏன் செல்லவேண்டும். சொல்லும் ஏன் அவ்வாறு கேட்டீர்?

"சுவாமி!! நாராயணன் திருவடியில் பரமபதம் பெற முறையாகவே வேண்டினேன்"

"புரியும்படியாக சொல்லும் . மழுப்பவேண்டாம் "

"நீங்கள் சொல்வீர்களே ஒரு பாசுரம். அதில் வருமே "பரம பதம் சென்ற மூத்தவர்கள், இளையவர்கள் பரமபதம் அடைய வரும்போது வாசலில் நின்று வரவேற்பர் என்று " எனக்கு அதில் உடன்பாடில்லை. இளையவர்கள் முன்பாக சென்று மூத்தவர்கள் வரும்போது முறையாக மரியாதையுடன் அவர்களை வரவேற்க வேண்டும். ஆகவே நான் சிஷ்யன் என்ற இளையவன் எனவே உமக்கு முன்பாக செல்ல வரம் கேட்டேன்". என்றார் கூரேசர். ஆடிப்போனார் ஆசார்யன்

" என்னருமை கூரேசா, வைகுண்டத்தில் வயது ஏது? இளையவர் யார்? முதியவர் யார்? பாபி யார் ? புண்யசாலி யார்? ஞானி யார்? அஞ்ஞானி யார்? தெரிந்தும் கூட, இங்கு செய்தது போல் அங்கும் எனக்கு சேவை செய்ய உன் மனம் விழைந்தது புரிகிறது. என் அருமை கூரேசரே !! உமக்கு ஈடு நீரே தான்"

ஆசார்யன் கண்களில் நீர்மல்க கூரேசனை தழுவிக்கொண்டார் ."நீரே என் ஆத்மா.உம்மை நான் எப்படி ப் பிரிய முடியும்? என்னை தனியனாக விட எண்ணமா? என்னையும் உம்மோடு கூட்டி செல்ல வேண்டியதுதானே "

கூரேசன் சிலையாக நின்றார். இறைவன் முன்பு நின்றிருந்தபோதும் இந்த எண்ணம் தோன்றாமல் போனதே என சிந்தித்தார் .

"என்னை மன்னித்தது விடுங்கள் பிரபோ!!" என்று ராமனுஜரின் கால்களைப் பிடித்தார்.

"கூரேசா, உமக்கு வரமளித்த ரங்கநாதன் எனக்கும் வரமளிப்பான் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நேரே போகிறேன் எனக்கு முன் போகாமல் உம்மை தடுக்க வரம் தேடுகிறேன்- இல்லை. தவறு. தவறு, ரங்கனின் ஆக்னையை மாற்ற நான் யார்?. நாராயணன் சித்தம் அவ்வாறென்றால் அதற்கு உட்படுவதே என் கடமை""

ஒரு கணம் யோசித்த ஆசார்யன் தொடர்ந்தார்

"கூரேசா!! நீர் போய்விட்ட பிறகு நான் எப்படி இங்கு வாழ முடியும்? பரமபத நாராயணன் உம்மைக் கவர்ந்தான். நீவிர் அங்கே செல்லும் . நான் இங்கே ரங்கனாக உள்ள நாராயணன் நிழலில் இருக்கிறேன்."

கால ஓட்டத்தில் துகள்கள் உருண்டன. கூரேசன் பரமபதம் அடைந்தார், ராமானுஜரை அனேக சீடர்கள் சென்றடைந்தனர். அவர்களில் ஒருவராவது கூரேசனாக முடியுமா?


1 comment: