நீதிமன்ற உத்தரவுப்படி ஹஜ் மான்யம் ரத்து என்ற செய்தி வந்த போது செய்தி சானல்கள் மட்டும்தான் விவாதம் நடத்தின. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து பெரிதாக வருத்தக்குரல் எதுவும் எழும்பியதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரியும், ஹஜ் என்பது அவர்களது மதக் கடமை, அதற்கென்று சில விதிகள் உள்ளன என்று. அதில் முக்கியமான ஒன்று அடுத்தவர் தரும் பணத்திலோ, அல்லது கடன் வாங்கியோ ஹஜ் செய்யக் கூடாதென்பது.
அரசியல்வாதிகள்தான் வழக்கம் போல அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். அப்படியானால் இத்தனை காலம் மான்யம் வாங்கிச் செல்லாமலா இருந்தார்கள் என்று கேட்கலாம். அதற்கு பதில் சொல்ல எனக்குத் தெரியாது.
இந்தச் செய்தி கேட்டதுமே எனக்கு சில வருஷங்கள் முன்னால் வெளியான "ஆதாமின்டெ மகன் அபு" என்ற மலையாளத் திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது. ஹஜ் செய்யக் கிளம்பும் ஒரு முதிய தம்பதியரைப் பற்றிய கதைதான் அது. கண்டிப்பாக கண் கலங்காமல் இத்திரைப்படத்தைக் காண முடியாது. இஸ்லாத்தின் உயர்ந்த கோட்பாடுகளின் படி வாழ்பவர் ஒருவர் உதிர்க்கும் ஒவ்வொரு வசனமும் சிந்திக்க வைக்கும்.
ஆதாமின் மகன் அபு என்னும் முதியவர், தானும் தன் மனைவியும் ஹஜ் செல்வதற்காக சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார் . முதற்கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. பாஸ்போர்ட் எடுக்கப்படுகிறது. முன்பணம் கட்டியது போக தேவைப்படும் மீதத் தொகைக்கு என்ன செய்யப் போகிறோம் என்று புரியவில்லை. தங்களது பிரியத்திற்குரிய பசுவையும் கன்றையும் விற்கிறார்கள். மனைவியின் உடலில் இருக்கும் சொற்ப நகையும் விற்கப்பட அப்போதும் பணம் போதாமல் வீட்டின் முன்புறம் இருக்கும் மிகப்பெரிய பலா மரத்தை ஜான்சன் என்பவருக்கு வெட்டிக்கொள்ளச் சொல்லி விற்கிறார். அந்தப் பலா மரத்திற்கு அறுபதினாயிரம் ரூபாய் தருவதாக ஜான்சன் சொன்னதும் வியந்து போகிறார் அபு. அவர் எதிர்பார்த்ததை விட மிக அதிகத் தொகை அது.
ஹஜ் செல்வது உறுதியாகிறது. செல்வதற்கு முன் தெரிந்தவர்கள் அனைவரிடமும் விடை பெற வேண்டும். அதைவிட முக்கியமானது தான் விடைபெறும் ஒவ்வொருவரிடமும், அபு கூறுகிறார். "நான் அறிந்தோ அறியாமலோ குற்றம் செய்திருந்தாலோ, உங்கள் மனத்தைக் காயப் படுத்தி இருந்தாலோ அதனை மன்னித்து எனக்கு ஆசி கூறி அனுப்பி வையுங்கள்.'' என்கிறார். ஹஜ் என்பது எவருடைய மனத்தாங்கலோ, வருத்தமோ, இல்லாது, அனைவரது மனமார்ந்த ஆசியும் பெற்று செல்லப்பட வேண்டிய மிகப் புனிதமான ஒரு யாத்திரை. (இந்து மதத்திலும் கூட பண்டைய காலத்தில் காசி யாத்திரை செல்லும் போது இப்படி விடை பெற்றுச் செல்வது வழக்கம். ஏனெனில் அப்போது காசி யாத்திரை என்பதே கடினம். வாகன வசதி கிடையாது. மாட்டுவண்டியிலோ அல்லது நடந்தே கூட செல்வோருண்டு. திரும்பி வரும் உத்தரவாதமில்லை என்பதால் இப்படிச் சொல்லி விடைபெறுவது வழக்கம்).
பகைவரிடமும் இப்படி விடைபெற்று அவர்களது ஆசியோடு செல்ல வேண்டும். முன்பொரு முறை அவர் நிலத்தில் எல்லைப் பிரச்சினை காரணமாக பகையாகி ஊரை விட்டுச் சென்று விட்ட சுலைமான் என்பவரைத் தேடிச் செல்கிறார் அபு. ரியல் எஸ்டேட் பிசினெஸ் நடத்தும் சுலைமான் விற்பனைக்கான ஒரு நிலத்தின் அளவு குறைவாக இருந்ததால் அதன் அருகாமையில் இருந்த அபுவின் நிலத்திலிருந்து சிறிதளவு கையகப் படுத்தி விற்க முயலும் போதுதான் தகராறு வருகிறது. தவறைத் தான் செய்து விட்டு அபுவைத் திட்டி விட்டுப் போகிறார் சுலைமான். பிறகு இரண்டு குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லை. சுலைமானிடமும் மன்னிப்பு கேட்டு, விடைபெற்று ஆசி பெற அவரைத் தேடிச் செல்கிறார் அபு. அங்கே சுலைமான் ஒரு விபத்தில் உடல்பாகங்கள் செயல்படாமல் போய் மரணத்தை எதிர்பார்த்து படுக்கையில் இருக்கிறார். அபுவைப் பார்த்ததும் கண்கலங்குகிறார். அபு அவரிடம், தெரிந்தோ தெரியாமலா நான் தவறு செய்திருந்தால் மன்னித்து விடு, உன் ஆசியோடு என்னை ஹஜ் செய்ய அனுப்பி வை என்கிறார். சுலைமான் அழுகிறார்.
நீ எந்தத் தவறும் செய்யவில்லை. தவறு செய்தவன் நான்தான். அதற்கான தண்டனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பூமி அல்லாவுக்குச் சொந்தம். அதை நான் என் பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தேன். என் சுயநலத்தின் காரணமாக நிறைய தவறுகள் செய்தேன். இப்படி ஒரு நிலையில் ஏன் இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன் ஏன் இன்னும் மரணம் வரவில்லை என்று நித்தமும் வேதனைப் படுவேன். இப்போதுதான் புரிகிறது ஏன் எனக்கு இன்னும் மரணம் வரவில்லை என்று. ஒரு வேளை நான் முன்னமே மரணித்திருந்தால், இன்று என் ஆசி பெற்று ஹஜ் செல்ல விடைபெறுவதற்கு நீ வரும் போது என் மரணம், உனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும். என் மன்னிப்பும், ஆசியும் கிடைக்கவில்லையே என்ற குறையோடல்லவா நீ கிளம்பி இருப்பாய்!. அந்தக் குறை உனக்கு ஏற்படாதிருக்கவே அல்லா என்னை விட்டு வைத்திருக்கிறார் போலும். என் ஆசி உனக்கு எப்போதும் உண்டு. நல்லபடி ஹஜ் சென்று வா என்றபடி அவருக்கு ஆசியும் வாழ்த்தும் சொல்லும் போது நிச்சயம் எவருடைய கண்களும் கலங்கும்.
அத்தனை பேரிடமும் விடைபெற்றுத் திரும்பும் வழியில், மீதப்பணத்தை, பலா மரம் வெட்டிச் சென்ற ஜான்சனிடம் பெற்றுக் கொள்ளச் செல்கிறார். ஜான்சன் தான் பேசிய தொகையைத் தருகிறார். கூடவே தயங்கியபடி, "நீங்கள் வீட்டுக்குப் போனால் மீண்டும் இங்கே வருவீர்கள் என்பதால் நானே சொல்லி விடுகிறேன். பலா மரம் நன்றாக இல்லை. வெட்டிய பிறகுதான் தெரிந்தது அதன் உள்ளே அடர்த்தி இல்லாமல் வெறும் வெற்றிடம்தான் (hollow) இருக்கிறது. வியாபாரம் என்றால் லாப நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதனால் நீங்கள் கனவு கொண்டிருந்த ஹஜ் யாத்திரை முடங்க வேண்டாம். நீங்கள் கிளம்புங்கள்" என்கிறான் ஜான்சன்.
"இல்லை. அப்படி நீ நஷ்டத்தை ஏற்று எனக்குப் பணம் கொடுத்தால் அதுவும் கடன்தான். கடன் பெற்று ஹஜ் செல்வது சரியாகாது. எனவே இப்பணத்தை நான் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று திருப்பிக் கொடுக்கிறார்.
அவரது ஹஜ் யாத்திரை பணப் பிரச்சனையால் முடங்கும் நிலை ஏற்பட்டதை அறிந்து அவரது நண்பர் கோவிந்தன் ஓடி வருகிறார். இதில் ஐம்பதினாயிரம் பணம் உள்ளது ஹஜ் செல்லுங்கள் என்கிறார். "இரத்த சொந்தம் தவிர வேறு யாரிடம் பணம் பெற்று ஹஜ் செல்லக் கூடாது என்று கூறுகிறார் அபு. "என்னை உங்கள் சகோதரனாக நினைத்தாவது பெற்றுக் கொள்ளுங்கள்" எனக் கெஞ்சுகிறார் கோவிந்தன். "மிகப் பெரிய மனசு. ஆனாலும் அல்லாவின் விதிகளில் அதற்கு இடம் இல்லை என்கிறார்.
அபுவின் மனைவி உடனே, துபாயில் நாம் பெற்ற மகன் சத்தார் இருக்கிறான் அவனிடம் கேட்டால் தரமாட்டானா என்ன? அவனிடம் கேட்கலாமே என்கிறாள்.
"இதுவரை நம்மைப் பற்றிக் கவலைப்படாமல் நம்மை உதறித்தள்ளியவன் அவன். தவிர இப்போது அவனிடம் இருக்கும் செல்வம் எல்லாம் நேர்மையான வழியில்தான் சேர்ந்ததா என்று நமக்குத் தெரியாது. அந்த சந்தேகத்தோடு அவனிடம் பணம் பெற்றுச் சென்றால் அதுவும் பாபமாகும் என்று அதையும் மறுக்கிறார்.
தங்களது பயணம் முடங்கி விட்டதைத் தெரிவிக்க டிராவல் ஏஜன்ட் அஷ்ரஃபிடம் வருகிறார். பணம் காரணமாக நீங்கள் இம்முடிவை எடுக்க வேண்டாம். என் அப்பா அம்மா ஹஜ் செல்ல விரும்பிய போது எங்களிடம் வசதி இல்லை.இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால் அவர்கள் உயிருடன் இல்லை. எனவே உங்களை என் தாய் தந்தையாக எண்ணி நானே அனுப்பி வைக்கிறேன் என்கிறான்.
"அப்படி நீ அனுப்பினால், அவர்களுடைய ஹஜ் கடமையைத்தான் நாங்கள் செய்வதாக ஆகிவிடும். அதுவும் சரியல்ல. நாங்கள் எங்களுடைய ஹஜ் கடமையை முடிக்க எண்ணுகிறோம். ஹஜ் செல்பவர்கள் அங்கு தாங்கள் இடுப்பிலும் தோளிலும் அணியும் அந்த இரண்டு வஸ்திரங்களை எதனால் பத்திரப் படுத்தி வைக்கிறார்கள் தெரியுமா? தன் மரணத்திற்குப் பின் உடலைப் போர்த்துவதற்குத்தான். உடலைப் போர்த்தும் துணியினால் கூட, மரணத்திற்குப் பின் தான் யாரிடமும் கடன் பட்டு விடக் கூடாது என்றுதான் அவற்றைப் பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். நான் பெற்று வளர்த்த மகனே பயனின்றி இருக்கிறான். அவன் மனசிலும் அந்த மரத்தைப் போல வெறும் வெற்றிடம்தான் இருக்கிறது. நீ நல்லவன் இப்படி கூறிய உன் நல்மனசுக்கே, உன் அப்பாவும் அம்மாவும் நூறு முறை ஹஜ் செய்த புண்ணியம் அடைந்து விடுவார்கள். என்று சொல்லி விட்டு வீடு திரும்புகிறார்.
"இரண்டு பேர் செல்லத்தானே பணம் குறைகிறது. நீங்கள் ஒருவராவது சென்று வாருங்களேன் என்று கூறுகிறாள் மனைவி. "இல்லை நமக்கு இம்முறை ஹஜ் சென்று வர விதிக்கவில்லை. ஒருவேளை நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோமோ என்னவோ? அதனால்தான் நாம் வருவதை அல்லா விரும்பவில்லை போலும். யோசித்துப் பார்த்தால் அந்தப் பலாவை வெட்டியது தவறுதானே. அதற்கும் உயிர் இருக்கிறதுதானே. என் சுயநலத்திற்காக அதை வெட்டி வீழ்த்த விற்றது நிச்சயம் குற்றம்தான். அதற்கான தண்டனையை நாம் அனுபவித்துதான் ஆக வேண்டும். பரவாயில்லை அடுத்தமுறையாவது நாம் ஹஜ் பயணம் செல்ல அல்லா அருள் புரியட்டும். உன் பசுவையும் கன்றையும் திருப்பி வாங்கி விடுவோம். மீண்டும் பணம் சேர்ப்போம் நம் ஹஜ் யாத்திரைக்கு" என்கிறார். விடிந்தால் பக்ரீத். அவர் விடியலில் எழுந்திருக்கிறார். தோட்டத்தில் ஒரு பலாக் கன்றை நட்டு நீர் ஊற்றி விட்டு மசூதியை நோக்கிச் செல்கிறார்.
எத்தகைய உயர்ந்த ஒரு பயணம்! எத்தகைய உயர்ந்த கொள்கைகள்! உண்மையில் எம்மதமும் தீயதைச் சொல்லவில்லை. பாபம் செய்யாதீர்கள் என்றுதான் கூறுகிறது. விருப்பப் படுகிறவர்கள் இணைப்பில் உள்ள திரைப்படத்தை பார்த்து ரசிக்கலாம். ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருக்கிறது. மது அம்பாட்டின் காமரா கவிதை அபாரமாக இருக்கும். சலீம் குமாரும், ஜரினா வஹாபும் வாழ்ந்திருப்பார்கள். இது நடிப்பா, நிஜமா என்ற சந்தேகம் நமக்கு எழும். இயக்குனருக்கு இது முதல் படம் என்பது வியப்பான விஷயம். சலீம் குமாருக்கு தேசீய விருது பெற்றுத்
தந்த படம்.
மொத்தத்தில், கங்கை, மானசரோவர், காசி, காவேரி, ஜம்ஜம் என எந்தப் புனித நீராக இருந்தாலும் நீரின் மூலக்கூறு மாறுவதில்லை. அது H2O தான். கடவுளும் அப்படித்தான்.
நன்றி: வித்யா சுப்ரமணியம்
No comments:
Post a Comment