ஐந்தாம் வேதம் : 3 J.K. SIVAN
குருவின் சோதனைகள்
கதையைத் தொடரும் முன்பு மீண்டும் நண்பர்களே ஒரு சின்ன அப்பீல். தயவு செய்து மஹா பாரதம் போன்ற பழைய ஐயாயிரம் வருஷ கதைகளை படிக்கும்போது காரண காரியம் தேடாதீர்கள். இக்கால நிலையோடு சாப்பிடாமல் அதில் இழையோடும் குருபக்தி, உண்மை, நம்பிக்கை, தெய்வ பலம் இதை மட்டும் ரசியுங்கள்.
மகா பாரதத்தில் தௌம்யர் என்று ஒரு ரிஷி வருவார். அவருக்கு உபமன்யு, ஆருணி, வேதா என்று மூன்று சிஷ்யர்கள். அவரது ஆஸ்ரமம் அருகே ஒரு சிறு காட்டாறு வெள்ளத்தில் மடை திறந்து விட்டது. ''அதை அடைத்து விட்டுவா, ஊருக்குள் வெள்ளம் வந்து விடும்'' என்று ஆருணியை அனுப்பினார் ரிஷி. ஆருணி எவ்வளவோ முயன்றும் மடை வாயை மூட முடியவில்லை. கடைசியில் தானே குறுக்கே படுத்து நீர் வருவதை தடுத்தான்.
''எங்கே, ஆருணி போனான் ? நேரமாகிறதே, போனவனைக்காணோமே'' என்று மற்றவரிடம் கேட்ட ரிஷிக்கு அவர்கள் ஆருணியின் நிலைமை சொல்லப்பட்டது.
''அடாடா ஆருணி தானே படுத்து வெள்ளத்தை நிறுத்திக்கொண்டிருக்கிறான். வாருங்கள் அவனைப் போய்ப் பார்க்கலாம் மீட்கலாம்'' என்று அனைவரும் சென்றனர். குரு வாய்ச்சொல் மீறாமல் தன்னுயிரையும் லட்சியம் செய்யாமல் மடை வாயில் தன்னையே தடையாக நிறுத்திய நீ இன்று முதல் வேதம் போற்றும் ''உத்தாலகர் என்று பேர் பெறுவாய் '' என வாழ்த்தினார் ரிஷி.
அவருடைய மற்றொரு சிஷ்யன் உபமன்யு. அவனுக்கு ஆஸ்ரம பசுக்களை மேய்க்கும் வேலை. சற்று குண்டாக இருப்பான்.
''என்னடா நீ இவ்வளவு புஷ்டியாக இருக்கிறாயே அப்படி என்ன சாப்பிடுகிறாய்? எங்கிருந்து ஆகாரம் கிடைக்கிறது?.
''குருநாதா, நான் அன்றாடம் கிடைக்கும் பிக்ஷையில் தான் வாழ்கிறேன்''
''தவறு. உனக்கு கிடைக்கும் பிக்ஷையை நீ குருவிடமே அல்லவா அளித்து விடவேண்டும். அது தானே முறை.'' என்றார் தௌம்யர்.
வெகுநாள் இவ்வாறு தனக்கு கிடைக்கும் பிக்ஷையை குருவிடம் கொடுப்பான். அவனுக்கு ஒன்றும் தராமல் தானே உண்பார்.
மீண்டும் ஒருநாள் கேட்டார்.
''என்ன நீ இன்னும் பழையபடியே புஷ்டி குறையாமல் இருக்கிறாயே என்ன ரகசியம்?
''குருவே, அடியேன் தங்களுக்கு பிக்ஷை அளித்துவிட்டு மீண்டும் பிக்ஷைக்கு செல்வதில் என்ன கிடைக்கிறதோ அதில் தான் வாழ்கிறேன்.''
''பெருந்தவறு. ஓர் முறை பிக்ஷைக்கு சென்றவன் மீண்டும் செல்வது தவறு. மற்றோருக்கு கிடைக்கும் பிக்ஷையைத் தடுக்கிறாயே.''
அன்று முதல் பசுக்களை மேய்த்துவிட்டு ஆஸ்ரமம் திரும்புவான். பிக்ஷைக்கு தனியாகச் செல்வதில்லை.
''ஏதோ செய்கிறாய் நீ. இன்னும் இளைக்காமல் அப்படியே தான் இருக்கிறாய். சொல் எப்படி உன் ஜீவனம் நடக்கிறது'' என்றார் தௌம்யர்.
''குருவே நான் இந்த பசுக்கள் தரும் பாலில் வாழ்கிறேன்''
''என் அங்கீகாரம் இன்றி எப்படி நீ பசுக்களின் பாலைப் பருகலாம். இனி இவ்வாறு செய்யாதே.'''
''அப்படியே குருவே'' பழையபடியே அவன் பருத்து புஷ்டியாக இருப்பதை சிலநாள் கழித்து கவனித்த குரு
''எப்படி நீ இப்போது வாழ்கிறாய் என்று சொல்லேன்'' என்று குரு ஒரு நாள் கேட்டதற்கு உபமன்யு சொன்னான்:
''பசுக்களிடம் பால் பருகிய கன்றுக்குட்டிகளின் வாயில் வழியும் நுரையில் தான் என் காலம் ஓடுகிறது'' என்றான்.
''மகா பாபமாச்சே. சிறு கன்றுகள் உனக்காக தமது வாயில் நுரையை விழுங்காமல் செய்துவிட்டாயே. இனி அவ்வாறு செய்யாதே'' என்றார் குரு.
காட்டில் மரங்களின் இலையில் காலம் தள்ளினான் உபமன்யு. சில காட்டு இலைகளை உண்டதால் கண் மங்கிற்று. ஊர்ந்து சென்று ஒரு குழியில் விழுந்தான். வெளியே வரமுடியாமல் அங்கேயே சுருண்டு கிடந்தான்.
தௌம்யர் சிஷ்யர்களை அழைத்து ''உபமன்யுவைக் காணோமே, எங்கே என்று தேடி அழைத்து வாருங்கள்'' என கட்டளை இட்டார். அவன் கண் பார்வை இன்றி ஒரு பெரிய குழியில் கிடப்பதை அறிந்தார். அவனைத்தேடி சென்று ஒரு பாழும் கிணற்றின் அடியில் கிடந்த அவனிடம் ''உபமன்யு என்ன செய்தாய் சொல்?''
''குருவே காட்டின் இலைகளில் வாழ்ந்த நான் ஏதோ ஒரு விஷ இலையை உண்டு பார்வை இழந்ததால் கிணற்றில் விழுந்து விட்டேன்''
''உபமன்யு, உன் குரு பக்தியை சோதித்தேன். உனக்காக நான் அஸ்வினி தேவதைகளை வணங்குகிறேன். நீயும் அவர்களை வேண்டிக்கொள் உனக்கு பார்வை மீண்டும் கிடைக்கும்.'' குருவார்த்தை என்றும் தட்டாத உபமன்யு அஸ்வினி தேவதைகளை வேண்டினான். அவர்கள் அவன் குருபக்தியை மெச்சி அவனுக்கு ஒரு பிரசாதம் அளித்தார்கள்.
''இதை உண்டால் உன் பார்வை திரும்பும். '
'' நான் என் குருவிற்கு இதை அளிக்காமல் உண்ணமாட்டேன்''
''தவறில்லை, நீ இதை உண்ணலாம். உன் குருவும் உனக்காக வேண்டினார். அவரிடமும் இதே பிரசாதம் தந்தோம் ஆனால் அவர் தனது குருவிற்கு அதை அர்ப்பணிக்காமல் தானே உண்டார். நீயும் அவ்வாறே செய்வதால் தவறில்லை''
''முடியாது மன்னிக்கவும் அப்படி எனக்கு பார்வையே வேண்டாம்.' என்றான் உபமன்யு.
அஸ்வினி தேவதைகள் அவன் குருபக்தியை வெகுவாக பாராட்டி அவனுக்கு பார்வை அளித்தார்கள். சத்யம் பேசிய அவனது பற்கள் தங்கமாயின. தௌம்யர் பற்கள் இரும்பைப்போல் கருத்தன. பார்வை கிடைத்த உபமன்யு குருவிடம் ஓடினான். விழுந்து வணங்கினான்.
''எல்லா சோதனைகளிலும் தேறிய உபமன்யு, நீ சகல வேத சாஸ்திரங்களும் அறிந்த ஞானியாவாய் '' என அருளினார்.
அடுத்ததாக வேதா என்ற சிஷ்யனுக்கு பரிக்ஷை நடத்தினார் தௌம்யர். மாடு போல் அன்ன ஆகாரமின்றி, வாய் முணுமுணுத்தல் இன்றி இன்முகத்தோடு குருவிற்கு சகல சேவைகளும் செய்தான் வேதா.
இப்படியாக அவனது குருகுல வாசம் முடிந்தது. கல்யாணம் செய்துகொண்டான். வாழ்க்கை ஓடியது. அவனுக்கும் நிறைய சிஷ்யர்கள். ஆனால் அவர்களை துன்புறுத்தவில்லை. எதையும் எதிர்பார்க்கவில்லை. தான் பட்டதெல்லாம் தன்னோடு போகட்டும் என்ற எண்ணத்தில் அவர்களை அன்போடு நடத்தினான்.''
தனது குருவின் வீட்டிலேயே தங்கி அவருக்கு சகல பணிவிடைகளும் செய்தான் உதங்கா எனும் சிஷ்யன். ஊர் திரும்பிய குருவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "உதங்கா என் மகனே, நீ செய்த சேவைக்கு நான் செய்ய முடிந்ததெல்லாம் இனி நீ சிஷ்யனல்ல. சகலமும் கற்றுவிட்ட நீ இனி குரு ஸ்தானம் பெற்றுவிட்டதால் என்னைப்போன்று நீயும் நல்ல சில சிஷ்யர்களைப் பெற்று அவர்களுக்கு நல்வழி காட்டு. உன் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறட்டும் ''
குருவுக்கு தக்ஷிணை? குருவே நீங்கள் எதைக் கேட்டாலும் கொணர்ந்து தருவேன் கட்டளையிடுங்கள்'' என்றான் உதங்கா.
சரி அப்பனே, நீ உள்ளே போய் குரு பத்னியிடம் என்ன தேவை என்று கேட்டு அதைப் பெற்று வா. அது போதும்'' என்கிறார் குரு.
''என் மகனே உதங்கா, நீ நேராக பௌஷ்ய ராஜாவிடம் செல். அவன் ராணி போட்டுக்கொண்டிருக்கும் காதணிகளைப் பெற்றுக்கொண்டு வா'' இன்றிலிருந்து நாலு நாளில் இந்த ஆஸ்ரமத்தில் சில பிராமணர்களுக்கு உபசாரம் நடக்கும்போது நான் அந்த காதணிகளை அணிந்து அவர்களை வரவேற்பேன். வெற்றியோடு வா. இன்றேல் நடப்பது நடக்கட்டும்'' என விருப்பத்தை தெரிவித்தாள் குருபத்னி.
வழியில் எத்தனையோ சோதனைகளைச் சந்திந்து பௌஷ்ய ராஜாவின் அரண்மனை அடைந்தான் உதங்கா. ராஜாவின் சிம்மாசனம் அருகே சென்று வணங்கினான். ராஜா இந்த பிரம்மச்சாரியை மெச்சி ''என்ன பரிசு வேணும் உனக்கு'' என்று வினவ ''மகாராஜா எனது குரு மாதாவுக்கு தங்கள் ராணி அணிந்துகொண்டுள்ள காதணிகள் வேண்டுமாம். தரவேண்டும்'' என்று கேட்டான்.
மகாராஜா சிரித்து ''மகனே, நீயே மகாராணியைச் சந்தித்துக் கேள்'' என்று அனுப்ப, ராணியைத் தேடினான். கண்ணில் பட வில்லை. ராணியைக் காணோம் என்று ராஜாவிடம் வந்து முறையிட ''உன்னிடம் பரிசுத்தம் இருந்தால் மட்டுமே ராணி கண்ணில் தெரிவாள்'' என்று ராஜா சொல்ல, உதங்கா அங்கேயே தவமிருந்து குருவைத் தியானித்து பிறகு மீண்டும் அந்தப்புரம் சென்றபோது ராணி தெரிந்தாள் .
ராணி அவன் குருபக்தியை மெச்சி தனது காதணிகளை கழட்டிக் கொடுத்த போது ''அப்பனே தக்ஷகன் என்கிற என்கிற நாக ராஜன் இந்த காதணிகளை வெகு காலமாக அடைய காத்திருக்கிறான் ஜாக்ரதையாக அவனிடமிருந்து தப்பி உன் குருவிடம் போய்ச் சேர்'' என்றாள் ராணி.
ராஜாவுக்கு நன்றி தெரிவித்து விட்டு. உதங்கா புறப்பட்டான். போகும் வழியில் காட்டில் ஒரு நீர் நிலையைக் கண்டதும் தனது கையிலிருந்த மூட்டையைக் கீழே வைத்துவிட்டு ஆற்றில் இறங்கினான். ஸ்ரமபரிகாரம் பண்ணினான். எங்கிருந்தோ ஒருவன் இதைக் கவனித்துவிட்டு ராணி கொடுத்த காதணிகள் இருந்த உதங்காவின் பையை ஆற்றங்கரையிலிருந்து திருடி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். வெளியே வந்து பையைக் காணாத உதங்கா தனது குருவை த்யானித்து அந்த சக்தியில் ஓடி அந்தத் திருடனைப் பிடித்து விட்டான். பிடிபட்ட திருடன் தனது சுய உருவான தக்ஷகன் எனும் ராஜ நாகமானான். அருகே இருந்த ஒரு பொந்தில் நுழைந்து மறைந்து தான் வாசம் செய்யும் நாகலோகம் சென்றுவிட்டான். அந்த புற்றை தான் கையில் வைத்திருந்த ஒரு கோலினால் அகலமும் ஆழமும் படுத்தினான் உதங்கா. குருவைத் தியானித்து வேகமாக பள்ளம் தோண்டின உதங்காவுக்கு இந்திரன் தனது வஜ்ராயுதம் கொடுத்து உதவினான். ஆழமான அந்த பள்ளத்தில் இறங்கி உதங்கா நாகலோகம்டைந்தான். அனேக மாட மாளிகை கோபுரங்களை கடந்து சென்ற அவனை நாகப்படை சூழ்ந்து கொண்டது.
MY MAHABHARATHAM BOOK IN TWO VOLUMES '' AINDHAM VEDHAM'' OF ABOUT 1000 PAGES IN ART PAPER WITH MULTI COLOR PICTURES ARE AVAILABLE FOR A MINIMUM DONATION OF RS. 1000. THIS IS NOT FOR SALE, BUT TO MEET THE PRINTING EXPS ONLY. INTERESTED MAY CONTACT ME. J.K.SIVAN 9840279080 OVER PHONE OR WHATSAPP MSG.
No comments:
Post a Comment