Thursday, February 1, 2018

Tiruvadigai temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
---------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......................)
----------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் 228:*

*தேவாரம் பாடல் பெற்ற தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை:*
----------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் இத்தலம் ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:* அதிகை வீரட்டேஸ்வரர்.

*இறைவி:* திரிபுரசுந்தரி.

*தல விருட்சம்:* சரக்கொன்றை.

*தல தீர்த்தம்:* கெடிலம், ஆலகங்கை, சங்கர தீர்த்தம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர்- 16.பதிகங்கள்.
திருஞானசம்பந்தர் - 1பதிகம்.
சுந்தரர் - 1பதிகம், ஆக மொத்தம் இத்தலத்திற்கு பதினெட்டு பதிகங்கள்.

*இருப்பிடம்:*
கடலூரிலிருந்து திருவந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருவதிகை கோயில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் ஒரு கி.மி. சென்றால் அதிகை வீரட்டேஸ்வரர் கோவிலை அடையலாம்.

பண்ருட்டிக்கு அருகில் சுமார் இரண்டு கி.மி. தொலைவில் உள்ளது.

சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,
திருவதிகை,
பண்ருட்டி அஞ்சல்,
கடலூர் மாவட்டம்,
PIN - 607 106

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00  மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*
கோவில் சுமார் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும்.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஏழுநிலைகளைத் தாங்கியும், ஏழு  கலசங்களுடனும் காட்சி தர *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் இருந்தது. இதைத் திருநீற்று மண்டபம் என்று அழைக்கிறார்கள்.

இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்கள் மிக மிக அழகாகத் தெரிந்தன.

இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் இருந்தன.

கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் பெண்கள் அழகிய சிற்பங்களின் காட்சி  மிக மிக சிறப்பாக இருந்தது.

வலப்பக்கத்தில் சற்று உயரத்தில் திரிபுமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். மிக நேர்த்தியான அமைப்பில் உருவாக்கியிருந்தனர் இந்த அமைப்பை. இதன் கீழ் கஜசம்ஹாரகோலம்.

கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தோம். உட்புறத்தில் மற்றொரு பதினாறுகால் மண்டபம் இருந்தது.

திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கத்தில் சங்கர தீர்த்தத்தைக் காணப்பெற்றோம். அருகே சென்று தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு வெளிவந்நோம்.

இதனின் வடப்பக்கத்தில் சுமார் ஐந்து அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்துடன் காணப்படும்  புத்தர் சிலை இருந்தன.

திரும்ப, இரண்டாவது கோபுர வாயிலின் வெளிப்புற த்திற்கு வந்து சேர்ந்தோம்.

இங்கு விநாயகரைக் கண்டு விட்டோம். விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்திருந்த கொடிமரத்து முன்பாக வந்து, நெடுஞ்சான்கிடையாய் பூமியில் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்து, பலிபீடத்தருகாக வந்து நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

இரண்டாலது கோபுரமான ஐந்து நிலைகளையுடைய கோபுரத்தை அன்னாந்து நோக்கி வணங்கிக் கொண்டு, இதன்  வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம்.

உள்ள வந்ததும் முதலில், ஒரு பெரிய நந்தி உருவச்
சிலைக் காணப்படவும் கையுர்த்தி வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்க இருவரையும் கண்டு வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

இரண்டாவது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும், அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி இருந்தது. ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று, சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.

இதற்கடுத்து பைரவர் இருந்தார். இவர் முன் வந்து பவ்யபயத்துடன் வணங்கிப் பணிந்து நகர்ந்தோம்.

அடுத்து சனீஸ்வரர் இருந்தார்.

இதனையடுத்து துர்க்கையம்மன் சந்நிதி இருந்தன. முன் நின்று சில நிமிடங்கள் தியாணம் அனுஷ்டித்து திரும்பினோம்.

மூன்றாவது வலச் சுற்றில் தான் மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருந்தது.

கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் பதினாறு பட்டைகளுடன் சுயம்பு லிங்கமான ஈசன் காட்சி கொடுத்தார்.

கருவறைக்குள் ஈசன் திருமேனிக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலக் காட்சி கிடைக்கிறது.

திருக்கோயிலில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருக்க, ஈசனை வணங்கிக் கொள்ள அதிக நேரமெடுத்துக் கொண்டோம்.

இதற்கு முன்பொரு சமயம், எட்டுவருடங்களுக்கு முன்பு, இவ்வாலயத் தரிசனத்திற்கு சென்றிருந்த போது, பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. ஈசனை நன்றாகக் கண்டு தரிசிக்க முடியாது போயிற்று. அன்று முழுவதும் மனதெல்லாம் எதையோ தொலைத்து விட்டன போலிருந்தது.

எட்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது இரண்டாவது முறையாக இவ்வாலயத் தரிசனத்திற்கு வந்தபோது,...., அன்றைய மனக்குறை இன்று நீங்கிப் போய், புதையலை கண்டெடுத்த பிரமை கொண்டோம். சிவ சிவ.

ஈசனை கண்குளிர தரிசித்து மணங்குளிர ஆனந்தித்து, பிரார்த்தனை செய்தோம். ஈசனுக்கு அர்ச்சகர் ஏற்றி இறக்கிக் காட்டிய தீபஜோதியை வணங்கிக் கொண்ட பின், வெள்ளியவிபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

வெளிவந்து, மூலவரின் மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமானத்தைக் கண்டு, அதன் அழகில் மெய்சிலிர்த்து நின்றோம்.

அப்போது நாம்  வியந்து பார்ப்பதைப் பார்த்த அருகிலிருந்தவர் ஒருவர் நம்மிடம்,...............

என்ன? இப்படிப் பார்த்து வியந்து போகிறீர்.... இது
பல்லவர் காலத்தில் உருவானவை. இன்னொரு அதிசயத்தை காட்டுகிறேன் பாருங்கள் என சொன்னதோடு நம் கரம் ஒன்றை பிடித்து சில ஆடிகள்தூரம் வரை அழைத்து வந்தார்.

இதோ பாருங்கள்!, ஈசனின் கருவறை விமானத்தின் மேல் விழும் சூரியஒளியால், விமானத்தின் நிழல் பூமியில் விழுவதில்லை பாருங்கள் என்றார்.

ஆமாம். கண்டு அதிசயித்தோம். கோபுரத்தின் நிழல் கீழே விழுகவில்லை. இறைவன்
கருவறை விமானத்தின் நிழல், பூமியில் சாயாதபடிக் பல்லவர்கள் இப்படி கட்டியிருக்கின்றனர்.

(இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் விமானத்தைக் கட்டுவித்தமாதிரி, பல்லவர்கள் இந்தத் தலத்து விமானத்தை இவ்விதம் அமைத்திருக்கின்றார்.)

அடுத்து அம்பாள் பெரியதாகி சந்நிதிக்குச்  சென்றோம். அம்பாள் சந்நிதி வாயிலிருந்து பார்த்தால், அம்பாள் சந்நிதி கோபுரம் தெரிகிறது.

விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடுகளின் சிற்பங்கள், நம் மனதை கவர்ந்து கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

அப்படி கருத்தைக் கவரும் சிற்பங்களில் திரிபுராந்தகச் சிற்பமும் ஒன்றாகும்.

பன்னிரு திருக்கரங்கள். ஒரு கையில் சூலம் ஏந்திய நிலை. ஒரு கையில் வில்லேந்திய நிலை. ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்திய விதமான நிலையில் வில்லை வளைத்து நிற்கும் சிற்பம் சிறப்பு.

அம்பாள் சந்நிதிக்குள் வந்து மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

மேலும் இத்தலத்திற்கு வந்து, கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள் ஆகியோர் இத்தலத்து ஈசன் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர்.

உள் சுற்றின் தென்மேற்காக வந்தபோது, பஞ்சமுக லிங்கம் காணக் கிடைத்தது. இந்த லிங்கத்தை அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.

இதுவும் பல்லவர் காலத்தைச் சார்ந்தவை என்பது மட்டுமல்ல!, இத்தகைய பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் அரிதில் காண முடியாதொன்றாகும். 

அருகாக வந்து நின்று, கூனக் குறுக நின்று பயபவ்யத்துடன் வணங்கிக் கொண்டோம். 

இந்த லிங்கத்தின் அமைப்பு, மூன்று திசைகளையும் நோக்கி நான்கு முகங்கள் பார்த்த வண்ணம் இருந்தன. ஒரு முகம் மட்டும் மேல் நோக்கி இருந்தன.

பஞ்சமுக லிங்கம் என்பது இவ்வித அமைப்பில் அமைப்பதுதான் ஐதீகம் என்று அங்கிருந்த குருக்கள் கூறுனார்.

இது ஒரு அரிய தரிசனம் விபரங்களோடு நமக்கு கிடைத்ததை எண்ணி ஆனந்திக்கு திரும்பவும் ஒரு முறை கையுர்த்தி வணங்கிக் கொண்டு திரும்பினோம்.

அடுத்து, வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் இருந்தன. ஒவ்வொன்றாக வணங்கிக் கொண்டே நகர்ந்தோம்.

இதனையடுத்து, யாகசாலை, நவக்கிரக சந்நிதிகள் இருந்தது.

கால்கள் சிறுது  ஓய்வெடுக்க மனது நினைத்தது. அருகில் உள்ள தின்னையில் அமரப் போனோன்......,

என்னோடு உடன் வந்தவரோ,........அதோ,.......
அடுத்து நடராஜ சபையே தெரிகிறது. அங்கேயே அமரலாம். அப்படியே அவனாடற்  நளினத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாமே? என்றார்.

நடராச தரிசனம் சிறப்பாக இருந்தது. அவனை உற்று உற்று நோக்க,..... பதஞ்சலியார்க்கு ஆடிக் காட்டிய தோற்றம் நம் கண்கள் முன்னே நிழலாடியது. 

எழுந்து வந்து நடராஜப் பெருமானின் பாதகமலங்களைக் கண்டு வணங்கி விட்டு திரும்பினோம்.

நாம் நடந்து கொண்டுதான் இருந்தோம். ஆடவல்லானோ நம்மை பின்தொடர்ந்தும், முன்வந்துமாய் இருந்தான்.

ஆம்!, எங்கே பார்த்தாலும் அவன் ஆடற் நளினமே தெரிந்தன. மதில்களில், தூண்களில், தரையினில், எங்கு நம் பார்வை திரும்பினாலும், அங்கு அவனாடற் நிலையே நிழலாகத் தெரிந்தன சிவ சிவ. ஆலயத்தை விட்டு நீங்கும் வரை இன்று இதே நிலைதான் சிவ சிவ.

இந்நிலையுடனே நடந்திட,
முருகப் பெருமான் இருக்கும் சந்நிதிக்கு வந்து விட்டோம். முருகப் பெருமான் தம் தேவியர் இருவருடன் அருள் வடிவாக நின்றார். கரம்கூப்பி, கையுர்த்தி வணங்கித் தொழுதோம்.

உற்சவரும் தம் தேவியர்கள் இருவருடன் சண்முகப் பெருமானாகிய காட்சி தந்தார். இவர்களையும் உள்ளம் உருக வணங்கிக் கொண்டோம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியிருக்கிறார்.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.

திருநாவக்கரசர் உழவாரப்பணி செய்த இந்தத் தலத்தை மிதிக்க அஞ்சிய சுந்தரர் அருகாமையிலிருந்த சித்தவடமடத்தில் தங்கிக் கொண்டு இத்தலப் பெருமானை வழிபட்டிருக்கிறாராம்.

சுந்தரர், இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது, அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து சுந்தரர் நகர்ந்து படுத்தாராம்.

மறுபடியும் மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுத்திருக்கிறார்.

சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச, அதன்பின் அது இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் என்பதை உணர்ந்து புரிந்து கொண்டு அவரை வணங்கினாராம்.

இவ்வாறு சுந்தரர், இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றதும், பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாகும்.

*தல  அருமை:*
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை.

அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.

வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.

இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன.

இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.

தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின.

இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார்.

தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார்.

அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின.
இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை.

*திருநாவுக்கரசர்:*
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலகவதியும், மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர்.

மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார்.

தமக்கை திலகவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இறந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வந்தார்.

தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார்.

இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்கமுடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார்.

அவரும்....
*கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன் நான் அறியேன் ஏற்றாய அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம் படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில வீரட்டானத் துறை அம்மானே*
என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார்.

மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ  சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார்.

தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.

*திருநாவுக்கரசர் தேவாரம்:*
பண்: காந்தாரம்.

1.🔔சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய சந்தனச் சேறும் முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும் , அழகிய புலித்தோல் ஆடையும் , வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும் , தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த , பகைவரோடு மாறுபடும் காளையும் , மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும் , திண்ணிய கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேம் யாம் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப்போவதும் இல்லை .

2.🔔பூண்டதொர் கேழ லெயிறும் பொன்றிக ழாமை புரள
நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾அணிகலனாக அணிந்த மகாவராகத்தின் கொம்பும் , நீண்ட திண்ணிய இடத்தோள் மீது வலப்புறமாகச் சுற்றி , பொன்போல் விளங்கும் , ஆமை ஓட்டின் மீது புரண்டவாறு , நிலாப் போல் ஒளிவீசும் வெள்ளிய பூணூலும் , காண்டற்கினிய கொக்கின் இறகும் , தம்மோடு பொருந்திய மழுவின் வடிவம் எழுதப் பெற்ற கொடியும் , பெருகிவரும் கெடிலயாற்றுத் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம்யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதும் இல்லை

3.🔔ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்
சித்த வடமு மதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾தோளில் மாலையாக அணிந்த இளைய பாம்பும் , இரண்டாகிய தோள் பட்டிகையும் , பலவடங்களாக அமைந்த முத்து மாலையினை இணைந்த உருத்திராக்கக் கண்டிகையும் , மூன்று இலைவடிவாக அமைந்த முத்தலைச் சூலமும் , சித்தவடம் என்ற பெயரிய சைவமடம் ஒன்றுடைய திருத்தலமும் , மதில்கள் உயரமாக உடைய அதிகை நகரை ஒருபுறம் சூழ்ந்து இயங்கும் விரைந்து செல்லும் கெடில நதித் தீர்த்தமும் உடைய பெருமானுடைய அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதுமில்லை .

4.🔔மடமான் மறிபொற் கலையு மழுப்பாம் பொருகையில் வீணை
குடமால் வரையதிண் டோளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும்
இடமால் தழுவிய பாக மிருநில னேற்ற சுவடும்
தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾ஒருகையில் மான்குட்டி , ஒருகையில் மான் தோல் ஆடை , ஒருகையில் மழுப்படை , மற்றொரு கையில் பாம்பு , மற்றொருகையில் வீணை இவற்றை உடையவராய் , மேற்றிசைப் பெருமலையை ஒத்த திண்ணிய தோள்களும் , வில்போல் வளைந்து ஆடுகின்ற கூத்தின் பயிற்சியும் , பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடுடைய திருமால் தழுவிப் பொருந்தியிருக்கும் , இடப்பாகமும் , நீர்த்துறைகள் அமைந்த கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

5.🔔பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்
வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்
நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும் , இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும் , மேம்பட்ட கயிலை மலையையும் , நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

6.🔔கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்
அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾உயிர்கள் அறியாதவாறு மறைந்து நின்று அடியார்களுக்கு ஒளி வீசும் திருவருளாகிய விளக்கின் ஒளியும் , சுழலுகின்ற துடி என்ற இசைக் கருவியின் ஓசையும் , எங்கும் பரவிய தேவ கணத்தர் பதினெண்மரும் வேற்றிடங்களில் பழகி அறியாதனவாகிய பாட்டின் ஒலியும் , கூத்துவல்லார் கூத்தாடும் அரங்கங்களில் கண்டு அறியப்படாததாகிய கூத்து நிகழ்ச்சியும் , முறையாக ஓடிவரும் கெடில நதித் தீர்த்தத்தின் புனிதமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.

7.🔔கொலைவரி வேங்கை யதளுங் குவவோ டிலங்குபொற் றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾தம்மால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய புலித்தோலும் , திரட்சியோடு விளங்கும் பொலிவுடைய தோடும் , பெருவிலையுடைய சங்கினாலாகிய காதணியும் , விலையே இல்லாத மண்டையோடாகிய உண்கலனும் , பார்வதி தங்குமிடமாகக்கொண்ட மார்பும் , நீலமணியின் நிறங்கொண்டு விளங்கும் கழுத்தும் , ஒழுகுகின்ற கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.

8.🔔ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும்
பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾கூத்தாடுதலை விரும்பிச் செய்த நிலையும் , இடுப்பில் இறுக்கிக் கட்டிய பாம்பும் , இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு , பல ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும் , ஆராய்ந்து , அறியமுடியாத கூத்தும் , மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலில் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

9.🔔சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும் , துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும் , யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும் , சோலைகள் மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப் போவதும் இல்லை .

10.🔔நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது மொன்று மலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

🙏🏾பார்வதி நடுங்கும்படியாக நரம்புகளால் செயற்படும் கைகளைக் கோத்து தன் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்துக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் கதறும்படியாக முதலில் அழுத்திப் பின் அவன் பாடிய சாமகானம் கேட்டு அவனுக்கு வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமானாய் , வளருகின்ற சோலைகளை உடைய வீரட்டக் கோயிலை ஒரு புறம் சுற்றி நீர் நிரம்பியுள்ள கெடில நதித் தீர்த்தத்தை உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .

           திருச்சிற்றம்பலம்.

*திருநாவுக்கரசர் தேவாரம்:*
பண் :கொல்லி

1.🔔கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

🙏🏾கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். ஏற்றாய் அடிக்கு + ஏ. ஏ - தேற்றம்.

2.🔔நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

🙏🏾அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.

3.🔔பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

🙏🏾அதிகை ... அம்மானே! உலகப்பற்றுக்களோடு இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டை யோட்டில் பிச்சை ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன் வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

4.🔔முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

🙏🏾அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர் நிறைந்த அதிகை ... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம் தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன் உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப் போக்குவது அன்றோ!

5.🔔காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

🙏🏾ஆரவாரித்துப் பெருகும் கெடிலக் கரையிலமைந்த அதிகை வீரட்டானப் பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச் செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின் ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில் விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில் ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய் வயிற்றோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு அறியாதேனாய் நாளை வீணாக்கினேன்.

6.🔔சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

🙏🏾அதிகை ... அம்மானே! இறந்தவர் மண்டை யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.

7.🔔உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்
வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்
அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

🙏🏾அதிகை ... அம்மானே! அடியேனுக்குத் தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய் நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப் புரட்டி அறுத்துச் சூலை நோய் உள் உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன். இனி, உமக்குத் தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.

8.🔔வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்
சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான்
கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

🙏🏾அதிகை ... அம்மானே! வெண்ணிறச் சங்கினால் ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும் இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய் அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும் காத்தருள்க.

9.🔔பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்
அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

🙏🏾அதிகை ... அம்மானே! பொன்னார் மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும் செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும் பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து எங்களை அமைவுறச்செய்யும்.

10.🔔போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்
ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்
வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்
ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 

🙏🏾ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக் கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர் யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும் அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.

          திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
தை மாதத்தில் தேர்த் திருவிழா.
வைகாசி மாதத்தில் வசந்த உற்சவ விழா.

*தொடர்புக்கு:*

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *திருநாவலேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்.*

--------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment