உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
--------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..........................)
-----------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் 229:*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*திருநாவலேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர்:*
--------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற நடு நாட்டில் அமைந்துள்ள இருபத்திரண்டு தலங்களில் இத்தலம் எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருநாவலூர் என்னும் இத்தலத்தை, இன்றைக்கு இவ்வூர் மக்கள் *திருநாமநல்லூர்* என அழைக்கிறார்கள்.
*இறைவன்:* திருநாவலேஸ்வரர், பக்த ஜனேஸ்வரர்.
*இறைவி:* சுந்தரநாயகி, மனோண்மனி.
*தல விருட்சம்:* நாவல் மரம். (இம்மரம் அம்மன் சந்நிதிக்கு அருகில் இருக்கிறது.)
*தல தீர்த்தம்:* கோமுகி தீர்த்தம். (இத்தீர்த்தம் கோயிலுக்கு மேற்கில் அமைந்துள்ளது.)
*கெடில நதி* இந்நதி ஊருக்குத் தெற்கே ஒரு கி.மி. தொலைவில் இருக்கிறது.
*தேவாரம் பாடியவர்கள்:*
சுந்தரர் - 1- ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.
*இருப்பிடம்:*
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் தாண்டி செல்கையில் மடப்பட்டு என்ற ஊர் வரும்.
இதைத் தாண்டி பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே சாலை பிரிந்து பண்ருட்டி செல்லும் சாலையில் இரண்டு கி.மீ சென்றால் இந்தத் தலத்தை அயடையலாம்.
சாலையோரத்தில் ஊர் ஆரம்பிக்கும் இடத்திலேயே கோயில் அமைந்துள்ளது.
பேருந்தில் செல்வோர் விழுப்புரத்திலிருந்து அரசூர், மடப்பட்டு வழியாக உளுந்தூர்ப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி கெடிலம் நிறுத்தம் (திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள இடமே *"கெடிலம் நிறுத்தம்"* என்று சொல்லப்படுகிறது) என்று கேட்டு அங்கு இறங்கினால் திருக்கோவிலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் பேருந்துகள் வரும்.
அவற்றில் ஏறி இரண்டு கி.மீ சென்று ஊரையடைந்து மேற்சொல்லியவாறு கோயிலை அடையலாம்.
கோயில் உள்ள இடத்தில் பேருந்துகள் நிற்கும்.
அருகிலுள்ள பெரிய ஊர் பண்ருட்டி விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில் பன்னிரண்டு கி.மீ. தூரத்தில் திருநாவலூர் அமைந்துள்ளது.
பண்ருட்டியில் இருந்து திருநாவலூருக்கு பேருந்து வசதி உள்ளது.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோயில்,
திருநாவலூர் அஞ்சல்,
உளுந்தூர்பேட்டை வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்,
PIN - 607 204
*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆவயம் திறந்திருக்கும்.
*தொடர்புக்கு:*
ஆலய குருக்கள் முத்துசாமி சிவம் .
கைபேசி. 94433 82945
செந்தில் குருக்கள்:
கைபேசி. 9486150809
*கோவில் அமைப்பு:*
கெடில நதியின் வட கரையில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைத் தாங்கியபடி காட்சி தர *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
கோபுரத்தையடுத்து இடதுபுறம் உள்ளே செல்ல, சுந்தரர் சந்நிதி இருந்தது. சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
திருநாவலூர் சுந்தரரின் அவதாரத் தலமும் இது.
தனது இரு மனைவியரான பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ நிற்கின்றார். எதிரில் வெள்ளையானை நிற்கிறது. சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார்.
பூலோக வாழ்க்கையை நீத்து, சுந்தரர் கயிலாயம் சென்றபோது, யானை மீது சென்றதாக வரலாறு கூறுகிறது.
எனவே சுந்தரருக்கு எங்கே சந்நிதி அமைத்தாலும் யானை வாகனமே அமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
உள் இடம் மிகவும் விசாலமாக இருந்தது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் எதிரில் கவசமிட்ட கொடிமரம் காணக் கிடைக்க, இதன் முன் நெடுஞ்சான்கிடையாய் பூமியில் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்திருந்த பலிபீடத்தருகாக போய் நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
திரும்ப நந்தியாரிடம் வந்து வணங்கிக் கொண்டு, மேலும் ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.
அடுத்து, கொடிமர விநாயகர் சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
உள்வாயிலைக் கடந்ததும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. தெரிந்த திருமேனிகளைக் கண்டு கைகூப்பி வணங்கினோம்.
அடுத்து, நால்வர் பெருமக்கள் திருமேனியும், சுந்தரர் இரு மனைவியுடனும், முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் இருந்தன. கண்டு கைதொழுது கொண்டோம்.
அடுத்து, நடராஜர் சபைக்கு வந்தோம். நடராஜர் சிவகாமியம்மை ஆகியோர்களைக் கண்டு ஆனந்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து மூலவர் சந்நிதிக்கு விரைந்தோம். நேரே மூலவர் பக்த ஜனேஸ்வரர் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி தரிசனம் தந்தார்.
மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு நகர்ந்தோம்.
பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை ஐந்து தினங்கள் சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் உள்ள மூலவர் மீது பிரவாகப்படுகிறது.
உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப் பெரிய சிவலிங்க மூர்த்தம் இருந்தது. இதன் முன் விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டோம்.
பொல்லாப் பிள்ளையார், சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலிய சந்நிதிகளும் அடுத்து இருக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
தொடர்ந்து யுகலிங்கங்களை கண்டு வணங்கிக் கொண்டு, திரும்ப கஜலட்சுமி சந்நிதிக்குச் சென்று கைதொழுது கொண்டோம்.
கருவறைச் சுவரில் சண்டேசுரர் வரலாற்றின் நிகழ்வுகளை சிற்பங்களாக அமைத்திருந்தனர்.
பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களைத் துண்டிப்பது, இறைவன் கருணை செய்வது ஆகியவை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம் இருக்கிறது.
நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மேற்கு நோக்கி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார்.
பக்கத்தில் பைரவர் திருமேனிகளும் சூரியனும் உள்ளனர்.
அம்பாள் கோயில் தனியே அழகான முன் மண்டபத்துடன் அமைந்திருந்தது.
அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தந்தாள். இங்கேயும் மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
வடக்குச் சுற்றில் தல மரங்களான நாவல் மரங்களை அம்மன் சந்நிதிக்கு அருகில் இருப்பதைக் கண்டோம். மரத்தைத் தீண்டப்பெறாமல் வணங்கிக் கொண்டோம்.
இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே என்கின்றனர் அங்கிருப்போர்..
இத்தலத்தின் விருட்சமான நாவல் மரம் ரோகிணி நட்சத்திற்குரிய மரமாகும்.
ஆகவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனையும், அம்பாள் மனோண்மணியையும் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடுவது நலனைத் தரும் என்றும் சொல்கின்றனர்.
*மகாவிஷ்ணு வழிபட்ட தலம்:*
இரண்யன் என்ற அசுரன் (பிரகலாதனின் தந்தை) தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்தான்.
தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர்.
மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவு செய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன் தனக்கு மரணம் நிலத்திலும், நீரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினை பெற்றிருந்தான்.
இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார்.
நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர்.
இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார்.
ஆலய பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார்.
சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.
கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடியேந்தி நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
சுக்ரபகவான் இத்தலத்தில் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது.
சுக்கிரனால் நிறுவி வழிபடப்பட்ட லிங்கம் நவகிரகங்களுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.
*திருப்புகழ் தலம்:*
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்றவாறு எழுந்தருளியுள்ளார்.
சுந்தரர் தனது பதிகத்தில் இறைவன் திருவெண்ணைநல்லூரில் மூல ஆவணம் காட்டி தன்னை அடிமை கொண்டதையும், இறைவனால் *வன்றொண்டன்*என்னும் பெயரைப் பெற்றதையும் குறிப்பிடுகிறார்.
*"நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும், கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்"* என்று தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.
*சிறப்புகள்:*
மக்கள் வழக்கில் *'திருநாமநல்லூர்'*என்ற பெரரையும் வழங்கி வருகின்றனர்.
சுந்தரரின் தந்தையாரான சடைய நாயனார் அவதரித்தும், சிவத் தொண்டாற்றியும் வந்த பெரும்பதி இது.
அவதாரத் தலம்: திருநாவலூர்.
வழிபாடு: இலிங்க வழிபாடு. முத்தித் தலம்: திருநாவலூர். குருபூசை நாள்: மார்கழி திருவாதிரை.
சுந்தரர் அவதாரத் திருத்தலம்:
திருநாவலூர்.
வழிபாடு:
குரு வழிபாடு.
முத்தித் தலம்: திருஅஞ்சைக்களம் திருக்கயிலாயம்.
குருபூசை நாள்: ஆடி, சுவாதி.
இது சுந்தரரின் தாயாரான இசைஞானியாரும் வாழ்ந்து, தொண்டாற்றி, முத்தி பெற்றத் தலமும் இது.
திருமுறைத் தலமட்டுமல்லாமல் அருணகிரிநாதரின் திருப்புகழும் இத்தலத்திற்கு இருக்கிறது.
நரசிங்க முனையரையர் இத்தலத்தில் அவதரித்து, அரசு வீற்றிருந்தவர். குறுநில மன்னர்.
அவதாரத் தலம்: திருநாவலூர்.
வழிபாடு: சங்கம வழிபாடு. முத்தித் தலம்: திருநாவலூர். குருபூசை நாள்: புரட்டாசி.
கங்கையின் புத்ரி என்று சித்தர்களால் வழங்கப்படும் பெருமை பெற்றது கெடில நதி. இது கங்கை நதியின் மறு உருவம்.
கெடில நதியின் வடகரையில் குடிகொண்டுள்ள திருநாவலேஸ்வரர் சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லவர் மட்டுமல்ல, சகல பீடைகளையும் தோஷங்களையும் எரித்து, நம்மை நற்கதி அடைய வைப்பவரும் ஆவார்
திரு ஆரூரான் என்ற சுந்தரருக்கு, தானே நின்று மணமுடித்து, முக்தியும் தந்த ஈசனின் பெருமையே பெருமை.
'கெடிலமெனுந் நீர் பிரவாகமது கங்கா தேவியின் அச்சென
விளங்க, அதில் அதிகாலை நீராடி நாமநல்லூரானை தொழ கிட்டாதேது' என்கிறார் சுக்கிராச்சாரியார்.
திருநாவலூரில் நாவல் மரங்கள் அடர்ந்த காட்டினுள் எழுந்தருளி நடனம் செய்யும் பிரான் நாவலேஸ்வரப் பெருமான்.
எல்லா இனத்தவருக்கும் பிரியமான சிவன் என்பதால், சுந்தரப் பெருமான் இந்த நாவலூர் ஈசனை, பக்த ஜனேசுவரர் என்று போற்றுகின்றார்.
'வன்தொண்டனானேன், பக்தஜனேசுவரனரு ளதினாலே' - என்று சுந்தரரைக் குறித்து பாம்பாட்டி சித்தர் கூற்று இது.
சுக்கிராச்சாரியர் தொழுத இத்தலப் பொல்லாப் பிள்ளையாரை தொழுதக்கால், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்'' என்கிறார் கண்வ மகரிஷி.
பொல்லாப் பிள்ளை
தொழுதக்கால் என்பால் எழுந்த பீடை யகலுமே.
நேத்திராடன தோஷங் கருகுமே' என்கிறார் கண்வ மகரிஷி..
இங்குள்ள நவகிரகங்களில், சுக்கிர பகவான் முன் எழுந்தருளி இருக்கும் லிங்கம், *சுக்கிர லிங்கம்* எனப்படும்.
வாரம் தோறும் வெள்ளிக் கிழமையில், சுக்கிர ஓரையில் இவரைத் தொழுது, மொச்சை பயிறு சுண்டல் நைவேத்யம் செய்து வந்தால், தனம் பெருகும். கடன் உபாதை அடைபடும் என்பது அகத்தியர் கூறிய வாக்கு.
சுங்கநாளில் சுங்கனாக்கிய சிவனை நாமநல்லூரேகி தொழ மொச்சை கொண்டாராதிப்போருக்கு
திருமகள் அருளும் மலைமகள்
கருணையுஞ் சேரப் பாரீர்.
எளிமையான பூஜை. கடுவிரதம் தேவை இல்லை. பெரும்பொருள் செலவு செய்து தானமோ, யாகமோ செய்ய வேண்டியதில்லை.
சுங்க நாள் என்றால், சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை எனப் பொருள்.
இங்குள்ள நவகிரகங்களுள் சூரியன் மட்டும் மேற்கு நோக்கித் திரும்பி, மூலவரான திருநாவலேஸ்வரரை தரிசனம் செய்கின்றார்.
பங்குனி மூன்றாம் வாரத்தில் சூரியன் தனது ஒளியை மூலவர் மேல் விழச் செய்து பூஜிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
கருவறையில் இருக்கும் சண்டேசுவர சிற்பங்களை நாம் தொழுதால், உடல் சரும பீடை அகலும். ஜபம் சித்தியாகும். நல்ல குரு, ஆச்சாரியன் நமக்கு கிடைப்பார் என்பது முற்றிலும் உண்மையாம்.
*சுந்தரர் தேவாரம்:*
பண்: நட்டராகம்.
1.🔔கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும் , அதனால் , ` அம்பு எய்தலில் வல்லவர் ` எனப் புகழத்தக்கவராயினாரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு , ` திருமால் , பிரமன் , இந்திரன் ` என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரே யாகும் .
2.🔔தன்மையி னால்அடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾தமக்கு இயல்பாக உள்ள ` பேரருளுடைமை ` என்னுங் குணத்தினால் , என் பிழையைத் திருவுளங்கொள்ளாது , அடிமை என்பது ஒன்றையே கருதி , என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந் நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு , ` வன்றொண்டன் ` என்பதொரு பதவியைத் தந்தவரும் , பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து , எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .
3.🔔வேகங்கொண் டோடிய வெள்விடை
ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்கடற் கோடியின்
மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர்பவரும் , மெல்லிய இயல்பினை உடையாளாகிய மங்கை ஒருத்தியைத் திருமேனியிற் கொண்டவரும் , என்னைத் திரு வெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையுங் கொண்ட வரும் , தென்கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூடி இன்பங் கொண்டவரும் , பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும் .
4.🔔அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்
சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத்
தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾ஆனிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவரும் , ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும் , தம் அடியை யடைந்த சண்டேசுவர நாயனாரை அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்ந்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரிற் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டு , என் நெஞ்சத்தை ஈர்த்துக்கொண்டவரும் , நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும்.
5.🔔உம்பரார் கோனைத்திண் தோள்முரித்
தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾தேவர்கட்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும, யானையை உரித்தவரும், சிவந்த பொன்போல்வதும், நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும், வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும், ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும்.
6.🔔கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்
கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்
பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾திருக்குடமூக்கில் ( கும்பகோணம் ) திருக் கோவலூர் , திருப்பரங்குன்றம் இத்தலங்களைக் கோயிலாகக் கொண்ட வரும் , வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும் , தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் நடன மாடுதலை மேற்கொண்டவரும் , சூரியனை (` பகன் ` என்பவனை ) க் கண் பறித்தவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது நமது திரு நாவலூரேயாகும்.
7.🔔தாயவ ளாய்த்தந்தை ஆகிச்
சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக்
கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾எனக்குத் தாயாகியும் , தந்தையாகியும் இறத்தல் பிறத்தல்கள் இல்லாதவாறு என்னைத் தமது பொன் போலும் திருவடிக் கண் அகலாதபடி இருக்க வைத்த , மூங்கில் இடத்தவரும் , என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .
8.🔔வாயாடி மாமறை ஓதிஓர்
வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾தீயின்கண் நின்று ஆடுபவரும் , சினம் பொருந்திய ஒரு பன்றியின் பின் வேடுவராய்ச் சென்று வில்தொழிலைப் புரிந்த வரும் , பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக்கொண்டு வேதிய வடிவாய் வந்து சொல்லாடி என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவராகிய இறைவருக்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .
9.🔔படமாடு பாம்பணை யானுக்கும்
பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும்
பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾படமாடுகின்ற , பாம்பாகிய படுக்கையையுடைய திருமாலுக்கும் , பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவிக்கும் , மணி வடம் அசைகின்ற ஆனேற்றுக்கும் , ` பாகன் ` எனப்படும் தன்மை யுடையவராய் , ஒருநாள் என்னிடம் வந்து , தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில் என்னைக் கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நடனமாடும் பெருமானாராகிய இறைவற்கு இடமாயிருப்பது , நமது திருநாவலூரேயாகும் .
10.🔔மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்
தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
🙏🏾தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும் , மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும் , தடுக்க வொண்ணாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து , உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும் .
11.🔔நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊர்அணி நாவலூர்என்
றோதநற் றக்கவன் றொண்டன்ஆ
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே.
🙏🏾முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும் , நமக்கு உரிய ஊரும் , நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு , விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு , நல்ல தகுதியை உடையவனும் , ` வன்றொண்டன் ` என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும் , கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும் .
திருச்சிற்றம்பலம்.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *பழமலைநாதர் திருக்கோயில், திருமுழுக்குப் மற்றும். (விருத்தாசலம்.)*
--------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment