உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
__________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......................)
__________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் :223*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*சுடர்கொழுந்தீசர் திருக்கோயில், தூங்கானை மாடம் (பெண்ணாகடம்).*
__________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
இத்தலமான தூங்கானை மாடத் தலத்தை, இப்பொழுது பெண்ணாகடம் என்று அழைக்கிறார்கள்.
*இறைவன்:* சுடர்கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர், கடந்தை நாதர்.
*இறைவி:* ஆமோதனாம்பிகை, கடந்தை நாயகி.
*தல விருட்சம்:* செண்பகமரம்.
*தல தீர்த்தம்:* கயிலை தீர்த்தம், பார்வதி தீர்த்தம், இந்திர தீர்த்தம், முக்குளம், வெள்ளாறு.
*ஆகமம்:* சிவாகம முறைப்படி.
*பெயர்க்காரணம்:*
பெண் (தேவகன்னியர்), ஆ (காமதேனு), கடம், (வெள்ளை யானை) ஆகியவைகள் பூசித்துப் பேறு பெற்றதலால், இப்பெயர் உண்டாயிற்று.
பெண்ணாடகத்தை திருக்கடந்தை என்றும் வழங்கிவருகிறார்கள். ஆலயத்தின் பெயர் தூங்கானை மாடம் எனப்படும்.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர். -நான்காம் திருமுறையில் ஒரே ஒரு பதிகமும்,
திருஞானசம்பந்தர்.- முதலாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.
தேவாரப் பாடல்களில் தூங்கானை மாடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்தலம், தற்போது பெண்ணாகடம் அல்லது பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது.
*இருப்பிடம்:*
விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கே பதினெட்டு கி.மி. தொலைவில் பெண்ணாடம் அமைந்து இருக்கிறது.
சென்னையில் இருந்து பெண்ணாடம் சுமார் இருநூற்று முப்பத்தைந்து கி.மி. தொலைவில் இருக்கிறது.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சுடர்கொழுந்தீசர் திருக்கோயில்,
பெண்ணாடம் அஞ்சல்,
திட்டக்குடி வட்டம்,
கடலூர் மாவட்டம்.
PIN - 606 105
*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*பெயர்க்காரணம்:*
தேவகன்னியர், தெய்வலோகப் பசுவான காமதேனு, வெள்ளை யானை இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் (பெண் + ஆ + கடம்) என்று வழங்கப் பெறுவதாயிற்று.
*கோயில் அமைப்பு:*
முதலிலுள்ள முகப்பு வாயிலைக் கடந்து உள் புகுந்தோம்.
உள் சென்றால் நேரே பலிபீடத்தைக் காணப் பெற்றோம். இதனருகாக நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து கொடிமரம் காணக்கிடைக்க இதன் முன் நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம், கரங்கள், செவிகள், புஜங்கள், பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்திருந்த நந்தி மண்டபத்திற்கு சென்று நந்தியாரை வணங்கிப் பின் ஈசனைத் தொழ உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
இந்த ஐந்து நிலைகளைத் தாங்கியபடி இராஜகோபுரம் காணக்கிடைத்தது. *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
இத்தலத்தின் மூலவரைத் தரிசிக்க முன் வந்து நின்றோம். சுடர்கொழுந்தீசர் சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருட்காட்சி தந்து கொண்டிருந்தார்.
மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
மூலவர் சந்நிதி விமானம் கஜபிருஷ்ட அமைப்புடன் இருந்தன. மிக மிக அழகாக இருந்தது.
அம்பாள் சந்நிதியில் அம்பாள் கிழக்கு நோக்கிய வண்ணம் காட்சியருள் புரிந்து கொண்டிருந்தாள்.
கண்குளிர அம்மையைக் கண்டு ஆனந்தித்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
நால்வர் சந்நிதிக்குச் சென்று, நெஞ்சுக்கு நேராக கூப்பிய கரங்களுடன் நால்வரையும் வணங்கியபடியே நகர்ந்தோம்.
அடுத்து, சேக்கிழார், தண்டபாணி உருவங்கள், கோடிவிநாயகர், சோமாஸ்கந்தர், விசுவேசுவரர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் இருக்க ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கி துதித்தோம்.
கட்டுமலை செளந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுவதற்கு முன் அருகாக, இதனருகில் பிரளய காலேசுவரி அம்மன் இருக்கிறாள்.
முன் வந்து நின்று பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
இத்தல தலமரத்தின் கீழ், சண்டேசுவரர் சந்நிதி இருந்தது. இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கித் தொழுதோம்.
மூலவரின் வடபுறத்தில் கட்டுமலையில் செளந்தரேஸ்வரர் சந்நிதி அமைந்து இருந்ததது.
இச்சந்நிதி, தனி விமானத்துடன் வித்தியாசமாக இருந்தன. இங்கு செல்ல படிகளைறிச் சென்றோம்.
செளந்தரேஸ்வரரைக் கண்டு, சிரமேற் கைகள் உயர்த்தி குவித்து தொழுது கொண்டோம்.
கருவறையின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று வாயில்ளிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு கருவறை சுற்றுச் சுவரில் பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.
*திருநாவுக்கரசர்:*
திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது, தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து நினைத்து வருந்தினார்.
சமணர் குழுவிலே, சமண நெறியிலே வாழ்ந்துவந்த இந்த மெய்யுடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார்.
1.🔔பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.
2. 🔔ஆவா சிறுதொண்ட னென்நினைந் தானென் றரும்பிணிநோய் காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார் தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின் பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்தெம் புண்ணியனே என்று.
இப்பதிகத்தில் மூன்றாம் பாடலிலிருந்து ஒன்பதாம் பாடல்கள் வரை சிதைந்து போயினதால், நமக்குக் காணக் கிடைக்கவில்லை.
10.🔔கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான் படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோல் இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்கள் தடவுங் கடந்தையுள் தூங்கானை மாடத்தெந் தத்துவனே.
என்று இப்பதிகங்களைப் பாடி முடித்தவுடன் ஒருவரும் அறியாமல் ஒரு பூதம் வந்து திருநாவுக்கரசர் திருத்தோளிலே பூவிலை சூலப் பொறியும், இடபப்பொறியும் ஆகிய சிவச்சின்னங்களை இட்டது.
அவற்றைக் கண்டு அப்பர் பெருமான் பெருமகிழ்வுடன் மகிழ்ந்து, இறைவனை விழுந்து பணிந்தார்.
திருநாவுக்கரசர் வாழ்க்கையில் இத்தகைய அற்புதம் நிகழ்ந்த தலம் இது.
மேலும், மெய்கண்டார் அவதரித்த பதியும் இதுவாகும்.
*தல அருமை:*
இந்திரனுக்கு தேவலோகத்தில் சிவபூஜை செய்ய மலர்கள் கிடைக்காததால் பூலோகத்து மலர்கள் தேவைப்பட்டது.
இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க பூலோகத்துக்கு தேவகன்னியரை செல்லப் பணித்தார்.
பூலோகம் வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து இறைவனுக்கு வழிபாடு செய்ய, அப்படியே இங்கேயே தங்கி விட்டனர்.
மலர் கொண்டுவரச் சென்ற தேவகன்னியர் திரும்பி வாராமை கண்டு, இந்திரன் காமதேனுவை அனுப்பினான்.
காமதேனு பூலோகம் வந்து, நிலையினைத் தெரிந்தபோது, தானும் தேவகன்னியர் போல இறைவனை வழிபட்டு, அதுவும் இங்கேயே தங்கி விட்டது.
காமதேனுவையும் திரும்பாததைக் கண்டு, காமதேனுவைத் தேடி அழைத்து வருமாறு, இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்பினான்.
வெள்ளையானையும் இங்கு வந்து, நிலைமையினைக் கண்டு, இறைவனை வணங்கி, அதுவும் இங்கேயே தங்கியிருந்து விட்டது.
இப்படி, தொடர்ச்சியாக செல்லுபவர்கள் திரும்ப வராதது கண்டு, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுப் பூலோகம் வந்தான்.
வந்தவன் நிலைமையறிந்து அவனும் பெருமானை வழிபட்டான் என்னும் இத்தல வரலாறு சொல்லப்படுகிறது.
*தலபெருமை:* பெரும்பாலான உலகம் சிவபெருமானால் அழிக்கப்பட்டது.
அப்போது இத்தலம் தவிர அனைத்து இடங்களும் வெள்ளத்தால் மூழ்கின.
இதையறிந்த தேவர்கள் இங்கு வந்து, உயிர்களை இத்தலத்தில் வைத்து காக்கும்படி வேண்டினர்.
சிவனும் நந்தியிடம் வெள்ளத்தை தடுக்க ஆணையிட்டார். சிவனைப் பார்த்திருந்த நந்தி, ஊரை நோக்கி திரும்ப வெள்ளத்தை திசை மாற்றி பூமியை காத்தது.
எனவே இங்குள்ள இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
வெள்ளத்திலிருந்து பூமியை காப்பதற்காக அன்று திசை திரும்பிய நந்தி இன்றும் வாசலை நோக்கி திரும்பியே இருக்கிறது.
வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிக்க சோழமன்னன் ஒருவன் இத்தலம் வரும் போது வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஆற்றின் கரையில் இருந்தபடி மன்னன் சிவனை வேண்டித் குதித்தான். அவனுக்காக தன் இருப்பிடத்தை உயர்த்தி கரையில் இருந்தபடியே தரிசனம் கிடைக்க செய்தார் இறைவன்.
இப்போதும், முப்பது மீட்டர் உயரத்தில் உள்ள கட்டு மலைக்கோயில் என்ற மேட்டுப்பகுதியில் சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி கோயிலுக்குள் உள்ளது.
இது தனிக்கோபுரத்துடன் கூடிய கோயில். ஏறுதற்குப் படிகள் உள்ளன. கட்டுமலைக் கோயிலின் கீழ்ப்பகுதியில் பிரளயகாலேஸ்வரி அம்மனுக்கு சிலையும் இருக்கிறது.
*கலிக்கம்பநாயனார்:*
63 நாயன்மார்களில் ஒருவர் கலிக்கம்பநாயனார் அவதரித்த தலம் பெண்ணாகடம்.
கலிக்கம்பநாயனார் தன் மனைவியுடன் இணைந்து, வீட்டிற்கு வரும் சிவனடியார்களின் பாதங்களுக்கு பாத பூஜை செய்து வந்தார்.
ஒருமுறை அவரது வீட்டில் பணியாளாக இருந்த ஒருவன் சிவனடியாராக அவர் வீட்டிற்கு வந்தான்.
அப்பணியாளின் காலைக் கழுவி பாதபூஜை செய்ய நீர் வார்க்கும்படி மனைவியிடம் கூறினார்.
நம்மிடம் பணியாளனாக இருந்து சென்றவன், சிவனடியாராக வந்திருக்கிறான் என நீர் வார்க்க தாமதித்த மனைவியின் கையை வெட்டினார் கலிக்கம்பர்.
கருணைக்கடலான் ஈசன், அவர் மனைவியின் கையை மீண்டும் தந்தார். கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்ததால் இறைவனுக்கு *கைவழங்கீசர்* என்ற பெயரும் இருக்கிறது.
*சம்பந்தர் தேவாரம்:*
பண்: பழந்தக்கராகம்
1.🔔ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைக டோறு மறையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள்தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.
2.🔔பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலக மெய்தலுறில் அறிமின் குறைவில்லை யானேறுடை
மணிநீல கண்ட முடையபிரான் மலைமக ளுந்தானு மகிழ்ந்துவாழும்
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾பிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க, எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும், தெளிந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை.
3.🔔சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை யானேறுடைப்
பூமா ணலங்க லிலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾இறக்கும் நாளும், வாழும் நாளும், பிறக்கும் நாளும் ஆகிய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும் குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான, மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும்.
4.🔔ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணின் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க் கிடம்போலு முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾நிலையானநோய், பிறப்பு, இறப்பு, துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும், நிலையான வீடு பேற்றைப் பெறவும், தவம் செய்ய விரும்பி மயங்கி நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு உலகில் மயங்காது, திரிபுரங்களை எய்த அழியாத வில்லை ஏந்தியவரும், உலகின் தலைவருமாகிய சிவபிரானது இடமாக விளங்குவதாய், வானளாவிய கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.
5.🔔மயறீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியறீர மேலுலக மெய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾மயக்கம் நீங்காத பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால் அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர் விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா. எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும் நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக.
6.🔔பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கிற்கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன் றுங்கால நமக்காதன்முன்
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொதிந்த புன்சடையி னானுறையும்
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾புலன் நுகர்ச்சிக்குரிய பல தன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில், சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நரை தோன்றும் மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன் பொன்போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும், பழமையான புகழையுடைய கடம்பை நகர்த்தடங்கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.
7.🔔இறையூண் டுகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லா நீள்கழ லேநாளு நினைமின்சென்னிப்
பிறைசூ ழலங்க லிலங்குகொன்றை பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழியாதென மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும், முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய், நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.
8.🔔பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லா மிறையே பிரியா தெழுந்துபோதும்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾பல்வீழ்ந்து பேச்சுத் தளர்ந்து, உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாதெனக்கருதி நிற்கும் நீவிர் அனைவீரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக. கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.
9.🔔நோயும் பிணியு மருந்துயரமு நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயு மனங்கருதி நின்றீ ரெல்லா மலர்மிசைய நான்முகனு மண்ணும்விண்ணும்
தாய வடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காணமாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானைமாடப் பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.
10.🔔பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் மூடுதுவ ராடையரு நாடிச்சொன்ன
திகடீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழையுந் தானும் பொருந்திவாழும்
துகடீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.
🙏🏾பெரும்பசி நலிய, நோய்கள் வருத்துவதால், பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத் துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய் மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங்கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.
11.🔔மண்ணார் முழவதிரு மாடவீதி வயற்காழி ஞானசம் பந்தனல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியதுவே யாகும் வினைமாயுமே.
🙏🏾மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்.
திருச்சிற்றம்பலம்.
*திருவிழாக்கள்:*
பன்னிரண்டு நாட்களாக சித்திரை பிரமோற்சவம்.
ஐந்தாம் நாள் நிகழ்வில், அப்பருக்கு சூல இடப முத்திரை பொறித்த நிகழ்வு.
ஒன்பதாம் நாளில் தேரோட்டம்.
வெள்ளிக்கிழமை வார வழிபாடுகள், பெரும் இயக்கங்கள் வளர்ந்து நடத்தி வரப்படுகிறது.
இங்கு தினமும் அர்த்தசாம பூசையின்போது, தேவாரப் பதிகங்களையும், பஞ்சபுராணத்தையும் பாடப்படுவது சிறப்பு.
*தொடர்புக்கு:*
மலையப்பன்.
94880 46050
துரைசாமி குருக்கள்.
04143- 222788
*அருகிலுள்ள பாடல் பெற்ற தலங்கள்:*
தூங்கானை மாடத்திலிருந்து தொலைவுகள்............
விருத்தாச்சலம்..........20.கி.மி.
திருஎருக்கத்தம் புலியூர்...48.கி.மி.
திருக்கூடலையாற்றூர்.....53.கி.மி.
திருநாரையூர்........................65.கி.மி.
திருஓமாம்புலியூர்................68.கி.மி.
திருவரத்துறை.......................07.கி.மி.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர்.*
____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment