உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
--------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....................)
--------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 239*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
*சிவ தல அருமைகள் பெருமைகள்:*
*🏜பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிபுலியூர்:*
------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள இருபத்து இரண்டு தலங்களில் இத்தலம் பதினெட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.
திருப்பாதிரிபுலியூர் என்றும் இத்தலமானது தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதியாகும்.
*🌙இறைவன்:* பாடலீஸ்வரர், பாடலேஸ்வரர், தோன்றாத்துணை நாதர்.
*💥இறைவி:* பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவநாயகி.
*🌴தல விருட்சம்:* பாடலம் (பாதிரி)
*🌊தல தீர்த்தம்:* சிவகர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.
*🔥ஆகமம்:*வாதுள ஆகமம்.
*பெயர்க்காரணம்:*
பாதிரி தலமரமானதாலும், புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதர் வழிபட்ட சிறப்பினாலும், பாதிரிப்புலியூர் என வழங்கப்பெற்றது.
புலியூர் என வழங்கப்படும் தலங்கள் ஐந்து ஆகும்.
அவற்றுள் பெரும்பற்றப்புலியூராகிய சிதம்பரம் தென்புலியூர் என்றும், இத்தலம் வடபுலியூர் என்றும் வழங்கப்பட்டன.
இத்தலத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. அவை, கடைஞாழல், கன்னிவனம், பாடலபுரம், ஆதிமாநகர், உத்தராபுரம், பாதிரிப்பதி, புலிசை ஆகியன.
*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர். -நான்காம் திருமுறையில் ஒரே ஒரு பதிகமும்,
திருஞானசம்பந்தர். -இரண்டாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகமும், ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.
*🛣இருப்பிடம்:*
திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதி. திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது.
நகரப் பேருந்து வசதிகள் இருக்கிறது.
*✉அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்.
திருப்பாதிரிபுலியூர் அஞ்சல்.
கடலூர்.
கடலூர் மாவட்டம்.
PIN - 607 002
*கோவில் அமைப்பு:*
கெடில நதியின் தென்கரையில் ஊரும், திருக்கோயிலும் அமைந்திருக்கின்றன.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருந்தன.
நான்கு புறமூலைகளிலும் விநாயகர் கோயில் அமைந்திருக்கும் இராஜவீதியும், மடைவளாகமும் சேர்ந்து, ஐந்து பிரகாரங்களைக் கொண்டு இவ்வாலயம் அமைந்திருந்தன.
இராஜகோபுரம், ஏழு கலசங்களைக் கொண்டு, ஐந்து நிலைகளைத் தாங்கியபடி காணப்பெற்றதும், முதலில் கோபுரத்தைக் கண்டு *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
இராஜகோபுரத்திற்கு பக்கத்திலேயே சிவகரதீர்த்தம் நல்ல படித்துறைகளுடன் அமைந்திருந்தன.
தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டு கோபுர வாயிலை நோக்கி சென்றோம்.
கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் அழகாக காட்சியாய் தெரிய ரசனையுடன் ஆனந்திக்கு டிவி தொடர்ந்தோம்.
வாயிலைக் கடந்து உட்சென்றோம். சற்று உயரத்துடனே பலிபீடம் இருந்தன. இதனருகாக சென்று நின்று, நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு மேலும் மனதில் ஆணவமலம் துளியாதிருக்கும் மனத்தையும் தருமாறு வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
அடுத்து, செப்புக்கவசமிட்ட கொடிமரத்தைக் காணப் பெற்றோம். இதன் முன்பாக நெடுஞ்சான்கிடையாக பூமியில் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.
அடுத்திருந்த நந்திபெருமான் முன் வந்து நின்று, வணங்கிக் கொண்டு, மேலும் ஈசனைத் தொழ உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.
வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் காணக்கிடைக்கவில்லை. தலமரங்களான பாதிரி மரங்களை நிறைய வளர்த்து வருகின்றனர்.
இத்தல விருட்சத்தில், ஒரே காலத்தில் பன்னிரு வகையான மலர்கள் பூத்த மரமாம் இது.
இவ்விருட்சத்தின் வேர் நாதமாகும். அடிமரம் ஐந்து சக்திகள். தழைகள் யாவும் வேதங்கள். மணம் ஐந்தெழுத்து ஆனதாம்.
இவ்விருட்சத்தின் வேர்கள், மங்கண முனிவர் மற்றும் உபமன்யு முனிவர் மீதி பட்டதால், சாபம் நீங்கப் பெற்றனர்.
அம்பிகையும் இவ்விருட்சத்தனடியிலேயே தவமியற்றி வந்திருக்கின்றார்.
வெளிப்பிராகாரத்தை வலம் செய்து முடித்து துவார விநாயகர் இருக்குமிடம் அருகே வந்து சேர்ந்தோம்.
விநாயகரைக் கண்டதும்,... விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.
அடுத்து இவரின் தம்பியார் துவார சுப்பிரமணியரையும் கண்டு தொழுது கொண்டோம்.
அங்கிருந்த இரண்டாவது வாயிலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினோம். உள்சுற்றில் சந்திரனும் இதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும், அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி சந்நிதிகளாக இருந்தன.
அனைத்தையும் ஒவ்வொன்றாக வணங்கிப் பணிந்தோம்.
அமர்ந்த நிலையுடன் அப்பர் பெருமான், கைகூப்பி உழவாரக் கோலத்துடன் காட்சி தந்தார். இவர் புரிந்த உழவாரத்தை நினைத்து, கண்ணீர் மல்க திரும்பவும் வணங்கிக் கொண்டோம்.
திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் பார்ப்பது இந்த சிவ தலத்தில் மட்டுமே காண முடிந்தது.
உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர் கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்...
இவரையும் நாம் விடவில்லை!'........தோப்புக்கரணமிட்டு தலையில் குட்டிக் கொண்டு வணங்கிப் பணிந்தோம்.
அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார்.
உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள்,
மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன.
தலமரமான ஆதிபாதிரி மரத்தைக் கண்டோம். அருகில் சென்று, தீண்டப்பெறாமல் வணங்கிக் கொண்டோம். தல விருட்சத்தை பாதுகாக்கும் பொருட்டு, பித்தளைத் தகடுகளினால் கவச வேலிட்டு பாதுகாத்து வருகின்றனர்.
அடுத்து, மூலவரைத் தரிசிக்க அவர் ஐசந்நிதி சென்றோம். சந்நிதி வாயிலில், துவாரபாலகர்கள் இருந்தனர்.
துவாரபாலகர்களை வணங்கிக் கொண்டு, மேலும் ஈசனைத் தரிசிக்க அனுமதி வேண்டிக் கொண்டு சந்நிதிக்குள் புகுந்தோம்.
பாடலேஸ்வரரின் தனிசனம் எளிமையாக நமக்கு கிடைத்தது. மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு நகர்ந்தோம்.
புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இத்தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.
பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று.
இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் வடக்கு நோக்கிய மயிலின் மீது ஒரு காலை மடித்து அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சியருள்கிறார்.
வள்ளி தெய்வானை இருவரும் அருகே நின்ற கோலத்தில் காட்சிதருகின்றனர்.
அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல் அருளிச் செய்துள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்கு இருக்கிறது.
எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும்.
பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்).
ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
அடுத்து, பெரியநாயகி சந்நிதிக்குச் சென்றோம். கண்கள் குளிர தரிசித்து மணங்குளிர ஆனந்தித்து அவளருளை பெற்றுக் கொண்டு அப்படியே அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.
*சிறப்பு:*
திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் *"கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே"* என நமசிவாயப் பதிகம் பாடித் துதித்தார்.
துதித்த பாடலின் அருளால், அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்தோடலல்லாமல், கறையேறி வந்திட வழியும் ஏற்படுத்தித் தந்தது.
இவ்வதிசயத்தைக் கண்ட ஊர் மக்களெல்லாம் அதிசயித்து அன்பு கொண்டு, மகிழ்ந்து அப்பரை வரவேற்கச் சென்றார்கள்.
இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் *"கரையேறவிட்ட குப்பம்"* என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.
*தல சிறப்பு:*
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலேஸ்வரர் திருக்கோயில் 458-ஆம் ஆண்டில் சிம்மவர்மன் ஆட்சியின் போது பாடலிபுரம் என்று வழங்கப்பட்டு வந்தது.
பாதிரி மரங்கள் நிறைந்திருந்ததால் பாதிரியூர் என்றும் அழைக்கப்பட்டது. ஆறு, ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பாதிரிப்புலியூர் என்றும், அப்பர் தனது தேவாரத்தில் திருப்பாதிரிப்புலியூர் என்றும், சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடலிபுரம், கன்னிமாவனம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
சோழர் ஆட்சி காலத்தில் கோயிலுக்கு நிலங்கள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக தேவதான திருப்பாதிரிப்புலியூர் எனவும் அழைக்கப்பட்டது.
*தல பெருமை:*
மங்கணர் என்ற முனிவர் இறைவனை பூஜிப்பதற்காக வனத்தில் மலர்களை பறித்தார்.
அப்போது கையிலும் கால்களிலும் முட்கள் குத்தி ரத்தத்திற்கு பதிலாக நறுமணத்தோடு வெந்நீர் கசிந்து ஒழுகியது.
இது கண்டு அவர் துள்ளி குதித்து கூத்தாடினார். இப்படி ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தபோது...........
அங்கு அவ்விடத்தில் நீண்டகாலமாக கடும் தவம் செய்து கொண்டிருந்த தூமாப்பர் எனும் முனிவர் தலையின் மேல் மங்கணரின் கால்பட்டது.
இதனால் கோபம் அடைந்த தூமப்பர், மங்கண முனிவரை முயலாக உருமாறிப் போகுமாறு சாபமிட்டார்.
மங்கண முனிவர் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பாடலேஸ்வரர் கோயிலில் தவமிருந்து சாபவிமோசனம் பெற்றார்.
வியாக்ரபாத முனிவர் என்பவர் ஈசனின் பூசனைக்காக மலர்களை பறிக்க புலிக்கால் வேண்டி அதனை பெற்றவர்.
புலிக்கால் கொண்டு இறைவனை வழிபட்டதால் *திருப்பாப்புலியூர்* என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
*தல அருமை:*
கைலாயத்தில் சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
பல முறை ஆடியும், ஆட்டத்தின் வெற்றி ஈசனுக்கு வாய்க்கவில்லை. இருப்பினும் வெற்றி தனக்கே என ஈசன் கூற, பார்வதி கோபமாக ஈசனின் கண்களைப் பார்த்தாள்.
விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருமாலும் உண்மையை சொல்லாமல் மறைத்து அமைதியாய் இருந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த பார்வதி சிவனின் கண்களை தன் கைகளால் மறைத்தாள்.
ஒரு நொடியே ஆயினும் உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. அனைத்து செயல்களும் நின்று போயின.
ஈசன், உடனே பார்வதிக்கு சாபம் கொடுத்தார்.
சாபம் பெற்ற பார்வதி, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தனக்கு மன்னிப்பு அளிக்குமாறும் வேண்டினாள்.
அதற்கு சிவபெருமான், நீ பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசித்து வருமாறும், அவ்வாறு பூசித்து வருங்காலங்களில் எந்த தலத்தில் உன்னுடைய இடது கண்ணும், இடது தோறும் துடிப்பு உண்டாகிறதோ, அந்தத் தலத்தில் உன்னை ஆட்கொள்வேன் என்று கூறினார்.
சாபம் பெற்ற பார்வதி, பல தலங்களையும் வழிபாடுகளை செய்து கொண்டே வந்தாள்.
பாதிரி வனமாகத் திகழ்ந்த திருப்பாதிரிப்புலியூர்க்கு வந்து தங்கி உருவமற்ற தூய்மையான நிலையில் தவமிருந்து இறைவனை பூஜித்தாள்.
அப்போது, பார்வதியின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன.
இத்தலத்தின் ஆலயத்தில் இறைவனின் கருவறையை வலம் வரும்போது, (கஜலட்சுமி சந்நிதியை அடுத்து) துர்க்கை கோஷ்ட மூர்த்தம் இருக்குமிடத்தில் *அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் இருக்கிறது.*
இவ்விடத்தை அருந்தவநாயகி சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது.
இந்த சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம் மட்டுமே இருக்கிறது.
சிவனை வழிபட மாணிக்க வாசகர் திருப்பாதிரிப்புலியூரை நோக்கி வந்தார்.
கெடிலம் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. திருப்பாதிரிப்புலியூர் சிவன் முன்தோன்றி தன்னை பின்தொடர்ந்து வெள்ள நீர் மீது நடந்து வருமாறு அழைத்தார்.
அச்சம் காரணமாக மாணிக்கவாசகர் செல்லமறுத்தார். அப்போது சிவன் தன் கைப்பிரம்பை ஏவி விட்டு கெடிலம் நதியை வடக்குதிசைக்கு மாற்றிவிட்டார்.
திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் எனும் நூலில் கரத்திற் கண்ணுடையவன், காலிற் கண்ணுடையவர், வியாக்ரபாதர், , உபமன்னியு முனிவர், பதஞ்சலிமுனிவர், மாதிராசன ஆகியோர் இக்கோயில் இறைவனை வணங்கி இறையொளியில் கலந்ததாக கூறப்படுகிறது.
இக்கோயிலில் உள்ள செப்பு விக்ரகத்திற்கு படைப்பதற்காக நாள்தோறும் இருநாழி உணவு படைத்து வழிபாடு செய்வதற்காக பதின்கலம் நெல்லும் ஆட்டுக்கலும் அளித்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பாதிரிப்புலியூர் சிவன் கோயில் விழாக்களில் சித்திரை வைகாசி, ஆனி, மார்கழி, பங்குனி விழாக்கள் குறிப்பிடத்தக்கவை. இக்கோயிலில் மன முருகி வழிபட்டால் பிரிந்த கணவர் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் நீங்கி ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகமாகும்.
இத்திருத்தலம் பாபவிமோசன தலாமாகவும் போற்றப்படுகிறது.
*தல அதிசயம்:*
ஈசன் பாடலேசுவரர் பதினாறு வயது நிரம்பிய பாலசூரியராய் திருநீறு உருத்திராக்கம் அணிந்து வேதாகமங்களைப் பாதுகைகளாகக் கொண்டு, பாடலிவனத்தின் திருவீதிகளில் சித்தர் போலத் திரிந்து வந்தார்.
அப்படித் திரிகையில், கண் பார்வை இல்லாதிருந்தோர்க்கு, கண்ணொளியை ஈந்து அருளினார்.
செவித் திறனற்றோர்க்கு, கேட்கும் வல்லமையை அருளி வந்தார்.
பேச்சுத் தன்மை முடையோர்க்கு, பேசுகின்ற ஆற்றலையும், ஊனமுடமானோர்க்கு ஊனத்தை நீங்கச் செய்யும் வல்லமையை அருளி வந்தார்.
நோயுள்ளோர்களுக்கும் நல்லுடல் பெறுதலை உண்டாக்கி, இப்படி பல சித்து வேலைகளையும் நிகழ்த்தினார்.
இவரைக் கண்டு தரிசித்த மலடிமார்களுக்கு, மகப்பேறு அருள் உண்டானது.
அப்பர் பெருமானை, சமணர்கள் ஒன்றுகூடி கல்லோடு இணைத்துக் கட்டி கடலில் மூழ்கியழிய செய்யும் செயலைப் புரிந்தனர்.
அப்பர் பெருமான், சொற்றுணை வேதியன் எனும் திருப்பதிகம் இறைவன் மீது பாடினார்.
அப்பாடலைக் கேட்ட ஈசன், அப்பரைப் பிணைத்திருந்த கல்லைத் தெப்பமாக மிதக்கச் செய்தார். அதோடு மட்டுமல்லாமல், அக்கல்லே தோணிபோல நகர்ந்து விரைந்து சென்று அப்பர் பெருமானை கரையேற்றிவிட்டது இத்தலந்தான் இது.
*நாவுக்கரசர் தேவாரம்:*
1.🔔ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
🙏திருப்பாதிரிப்புலியூரில் தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த பெருமான் , அடியேனுக்குத் தாயாய் தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய் அமைந்து , மூன்று உலகங்களையும் படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள் இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் .
2.🔔பற்றாய் நினைந்திடப் போதுநெஞ் சேயிந்தப் பாரைமுற்றும்
சுற்றா யலைகடன் மூடினுங் கண்டேன் புகனமக்கு
உற்றா னுமையவட் கன்பன் றிருப்பா திரிப்புலியூர்
முற்றா முளைமதிக் கண்ணியி னான்றன மொய்கழலே.
🙏நெஞ்சே ! இவ்வுலகை முழுதும் சுற்றிக்கொண்டு அலையை உடைய கடல் மூடிக் கொண்டாலும் நமக்கு உறுதுணையாய் உமாதேவிக்கு அன்பனாய்த் திருப்பாதிரிப்புலியூரில் பிறையைக் கண்ணியாகச் சூடிய சிவபெருமானுடைய எல்லா நலன்களும் செறிந்த திருவடிகளே நமக்கு அடைக்கலம் நல்குவன என்பதனை அறிந்துவிட்டேன் . ஆதலின் , அவற்றையே நமக்குப் பற்றுக்கோடாக எப்பொழுதும் நினைப்பாயாக . நினைந்திடு எப்போதும் - பாடம் .
3.🔔விடையான் விரும்பியென் னுள்ளத் திருந்தா னினிநமக்கிங்
கடையா வவல மருவினை சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல் பவர்பா திரிப்புலியூர்
உடையா னடிய ரடியடி யோங்கட் கரியதுண்டே.
🙏காளை வாகனனாகிய பெருமான் விரும்பி அடியேன் உள்ளத்தில் இருக்கின்றான் . இனி நம்பக்கம் துயரங்கள் அடையா . தீவினைகள் நெருங்கா . கூற்றுவனுக்கு யாங்கள் அஞ்ச மாட்டோம் . பிரமனைப் போன்ற அந்தணர்கள் வாழ்வதும் நாற்பக்கங்களும் தாமரைகள் மலர்ந்திருப்பதுமாகிய திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானுடைய அடியவர்களுக்கு அடித்தொண்டர்களாகிய எங்களுக்குச் செய்ய இயலாத அரிய செயல் என்பது ஒன்று உண்டோ ?
4.🔔மாயமெல் லாமுற்ற விட்டிரு ணீங்க மலைமகட்கே
நேயநிலாவ விருந்தா னவன்றன் றிருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந் திருப்பாதிரிப்புலியூர்
மேயநல் லான்மலர்ப் பாதமென் சிந்தையு ணின்றனவே.
🙏மலைமகளாகிய பார்வதியிடத்தில் அன்பு நிலைபெற்றிருக்க உள்ளவனாகிய பெருமானுடைய திருவடிக்கண் உலகமெல்லாம் வந்து வழிபடுமாறு திருப்பாதிரிப்புலியூரில் விரும்பித் தங்கியிருக்கும் அப்பெரியவனுடைய தாமரை போன்ற திருவடிகள் மாயை எல்லாம் முழுதும் அகன்று ஆணவம் அகலுமாறு அடியேன் உடைய சிந்தையில் நிலையாக உள்ளன .
5.🔔வைத்த பொருணமக் காமென்று சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா ரவர்பா திரிப்புலியூர்
அத்த னருள்பெற லாமோ வறிவிலாப் பேதைநெஞ்சே.
🙏மெய்யுணர்தல் இல்லாத அறியாமையை உடைய மனமே ! நமக்கு என்று சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி அவனை மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது , செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ?
6.🔔கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
🙏திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே ! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன் . கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன் . வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக .
7.🔔எண்ணா தமர ரிரக்கப் பரவையு ணஞ்சையுண்டாய்
திண்ணா ரசுரர் திரிபுரந் தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்
கண்ணார் நுதலாய் கழனங் கருத்தி லுடையனவே.
🙏முதலில் உன்னைத் தியானிக்காமல் , கடலில் விடம் தோன்றிய பின் அமரர்கள் உன்னை வேண்டக்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டாய் . வலிமை நிறைந்த அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவனே ! பண்ணின் பயனாம் நல்லிசைப் பாடல்கள் ஒலிக்கின்ற பாதிரிப் புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனே ! உன் திருவடிகள் எங்கள் உள்ளத்தில் உள்ளன .
8.🔔புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனற்கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.
🙏இவ்வுலகிலே அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற , திருப்பாதிரிப் புலியூரில் உறையும் , செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில் தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் .
9.🔔மண்பாத லம்புக்கு மால்கடன் மூடிமற் றேழுலகும்
விண்பா றிசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சனெஞ்சே
திண்பா னமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.
🙏நெஞ்சே ! இவ்வுலகம் பாதல உலகுக்குப் போய் அழியுமாறு நிலநடுக்கம் உற்று உலகைக் கடல் வெள்ளம் மூட மற்ற ஏழுலகங்களும் வானத்திலே இருப்புக் குலைந்து சிதறச் சூரிய சந்திரர் தம் நிலையான இருப்பிடத்தைவிட்டுக் கீழே விழுந்தாலும் எதனைப் பற்றியும் அச்சம் கொள்ளாதே . திருப்பாதிரிப்புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனாய் ஞான ஒளியை உடைய பெருமானுடைய திருவடிகளாகிய திண்ணிய பகுதி நமக்குப் பாதுகாவலுக்கு உளது என்பதை நாம் அறிவோம் .
10.🔔திருந்தா வமணர் தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா வரக்க னுடனெரித் தாய்பா திரிப்புலியூர்
இருந்தா யடியே னினிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே.
🙏மலையைப் பெயர்க்க முற்பட்ட , நல்லறிவு பொருந்தாத இராவணனுடைய உடலை நெரித்தவனே ! திருப்பாதிரிப் புலியூரில் உறைபவனே ! மனம் திருந்துதல் இல்லாத சமணருடைய தீயவழியிலே ஈடுபட்டு மனம் மயங்கி , இப்பொழுது முத்தியைத் தரும் திருவடிகளில் சரணமாகப் புகுந்து விட்டேன் . இனி , அடியேன் பிறவி எடுக்காத வகையில் அடியேனை ஏற்றுக் கொள்வாயாக .
திருச்சிற்றம்பலம்.
*🌾திருவிழாக்கள்:*
நவராத்திரி,
சஷ்டி,
கார்த்திகை சோமவாரங்கள்,
மாசி மக கடலாட்டு விழா,
சித்திரையில் வசந்தோற்சவம்,
வைகாசியில் பிடாரி உற்சவம் ஒரு வாரமாக,
சித்திரை சதயப் பெருவிழாவில் மூன்றாம் நாளில் அப்பர் பெருமான், கடலில் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய ஐதீக விழா.
*☎தொடர்புக்கு:*
04142- 236728
*📣அருகிலுள்ள பாடல் பெற்ற தலங்கள்:*
திருப்பாதகரிபாபுலியூர் தலத்திலிருந்து தொலைவுகள்.................
வடுகூர்........................27.கி.மி.
புதுச்சேரி.....................26.கி.மி.
தியாகவல்லி.............20.கி.மி.
தீர்த்தனகிரி...............26.கி.மி.
திருமாணிகுழி..........09.கி.மி.
திருஅதிகை................22.கி.மி.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அருள்மிகு சிவலோகநாதசுவாமி திருக்கோயில், திருமுண்டீச்சரம்.*
-----------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment