Thursday, January 11, 2018

Manikandeswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற திருக்கோயில் தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.................)
________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண் :201*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

🔔 *மணிகண்டேஸ்வரர் திருக்கோவில், திருமாற்பேறு.*🔔
__________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்து இரண்டு தலங்களுல் இத்தலம் பதினொன்றாவதாகப் போற்றப் படுகிறது.

திருமாற்பேறு தலவூரை தற்போது *திருமால்பூர்* என்று அழைக்கிறார்கள்.

*இறைவன்:* மணிகண்டேஸ்வரர், மால்வணங்கீஸ்வரர்.

*இறைவி:* அஞ்சனாட்சி அம்மை, கருணை நாயகி.

*தல விருட்சம்:* வில்வம்.

*தல தீர்த்தம்:* சக்கர தீர்த்தம்.

*ஆகமம்:* சிவாகம முறைப்படி.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர் - நான்காம் திருமுறையில் ஒரு பதிகமும், ஐந்தாம் திருமுறையில் இரண்டு பதிகங்களும், ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும்.

திருஞானசம்பந்தர் - முதலாம் திருமுறையில் இரண்டு பதிகங்கள். ஆக மொத்தம் இத்தலத்திற்கு ஆறு பதிகங்கள்.

*இருப்பிடம்:*
காஞ்சிபுரம் நகரில் இருந்து பதினைந்து கி.மி. தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருஊறல் (தக்கோலம்) அருகில் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோவில்,
திருமால்பூர் அஞ்சல்,
அரக்கோணம் வட்டம்,
வேலூர் மாவட்டம்.
PIN - 631 053

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

☘ *கோவில் அமைப்பு:*
இவ்வாலயத்துக்கு நாம் செல்கையில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளைத் தாங்கிய வண்ணம் ராஜகோபுரம் கண்களுக்குக் காணக் கிடைத்ததும், *சிவ சிவ, சிவ சிவ* மோழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோயிலுக்கு எதிராக சக்கர தீர்த்தக் குளம் இருப்பது தெரிந்து அவ்விடம் அகழ்ந்து சென்றோம்.

தீர்த்தத்தை வாரி சிரசிலிட்டு  இறைவனை நினைந்து வணங்க நினைத்தோம்.

அது முடியாது போயிற்று. அதற்குக் காரணம் தீர்த்தகுளம் சீர் கெட்டு பாசியாலும், புதர்களாலும் ஆட்சியுரிமை பண்ணிக்கொண்டிருந்ததது.

மனம் வலிக்கும் திரும்ப, அங்கிருந்த விநாயகரைக் கண்டு, தோப்புக்கரணமிட்டு வணங்கிவிட்டு, ஆலயவாயிலை நோக்கி நடந்தோம்.

கோபுரத்தை பார்த்து நடந்து வந்து, கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தோம்.

நேரே உயரமான பீடம் அமைக்கப்பட்டு, அதன்மீது பலிபீடம் இருந்தது.

இதனருகாகச் சென்று இருந்த ஆணவமலம் ஒழிய வணங்கிக் கொண்ட பின், மீண்டும் நமக்கு ஆணவமலம் உருவாகதிருக்க வேண்டிவிட்டு, மீண்டும் வணங்கி நகர்ந்தோம்.

இதற்கடுத்து, கவசமிட்ட கொடிமரத்தைக் காணப் பெற்றதும், நெடுஞ்சான்கிடையாக விழுந்து, சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்து நந்தி பெருமானைக் கண்டு வணங்கிக் கொண்டோம். மேலும் ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.

அடுத்துள்ள உள் வாயிலைக் கடந்து மூலவர் சந்நிதி இருந்த இடம் வந்து சேர்ந்தோம்.

வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் இருந்தனர். இருவரையும் ஒருசேர வணங்கிக் கொண்டோம்.

ஒருபுறம் வல்லப வழியாகும், மறுபுறத்தில் சண்முகரையும் கண்டு வணங்கியபடகயே நகர்ந்தோம்.

இம்மூலவர் தீண்டாத்திருமேனியாவார்.

ஈசனைக் கண்டு வணங்கி சிறிது தியானித்து, மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு திரித்துத் தரித்துக் கொண்டோம்.

உட்பிராகாரத்தில் நந்திகேசுவரர் நின்ற திருக்கோலத்தில் காணப்பட்டார் தன்னாலேயே கரங்கள் சிரசிற்கு மேல் உயர்ந்தன.

மூலவருக்கு எதிர்திசையில், செந்தாமரைக்கண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் ஈசனைப் பார்த்து கூப்பிய கரங்களுடன் காட்சி தந்தார். இவருக்கு மேல் உயரத்தில் விமானம் இருக்கின்றன.

இவருக்கு தீபாரதனை முடிந்ததும் தீர்த்தம் கொடுக்கும் மரபு இங்கு கடைபிடிக்கப்படுகிறது.

உட்பிராகாரத்தில் வலஞ்செய்கையில்,  விநாயகர், சிதம்பரேசுவரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், ஆகியோர்களைக் கண்டு வணங்கிக் கைதொழுது நகர்ந்தோம்.

சண்டேசுவரர் சந்நிக்குச் சென்று, இவரை வணங்கும் நெறிமுறையுடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து நடராஜரின் ஆடற்கலையைக் கண்டு ரசித்தோம் வணங்கினோம். இவர் தெற்கு நோக்கி அருள்மழை பொழிந்து வண்ணமிருந்தார்.

இவருக்குப் பக்கத்தில், சிவகாமியம்மையும், மாணிக்கவாசகரும் இருக்கின்றனர். இவர்களிருவரையும் வணங்கித் துதித்தோம்.

மேலும், கஜலட்சுமியைத் தரித்துக் கொண்டோம்.

மூலவர் மணிகண்டேஸ்வரர் தீண்டாத் திருமேனி ஆதலால் இத்தலத்திலுள்ள சிதம்பரேஸ்வரர் சந்நிதியில் தான் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது என இவ்வாலயத் தரிசனத்திற்கு வந்திருந்தோர் கூறினர்.

இங்குள்ள தூண்களில் தட்சிணாமூர்த்தி, சூரியன், மகாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், விநாயகர், முருகன், நான்கு முகங்களும் நன்கு தெரிய பிரம்மா, அம்பாள் வில்வ மரத்தடியில் இறைவனை வழிபடுவது, காளிங்கநர்த்தனம், காமதேனு, பைரவர், வீரபத்திரர் ஆகிய பல வகையான அரிய சிற்பங்கள் உள்ள தூண்களை ரசித்து வணங்கிக் கொண்டே நகர்ந்தோம்.

கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர்கள் ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

துர்க்கை அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாகக் காட்சி தருகின்ற திருமேனி. மிக மிக சிறப்பான அழகு.

திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு திருப்பதிகங்களும், திருநாவக்கரசர் அருளிய நான்கு திருப்பதிகங்களும் ஆக ஆறு தேவாரப் பதிகங்கள் இத்தலத்திற்கு உரியன. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டதாக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அருளிய திருப்பதிகம் கிடைக்கவில்லை.

☘ *தல அருமை:*
மகாவிஷ்ணு ஒருமுறை குபன் என்ற அரசனுக்காக துதீசி முனிவருடன் போரிட்டார்.

அப்போது மகாவிஷணுவின் சக்கரம் முனிவரின் வைர உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது.

சலந்திரனை சம்ஹாரம் செய்த சக்கரம் சிவபெருமானிடம் இருப்பதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணு அதனை பெறவேண்டி இத்தலம் வந்து அம்பிகை பூசித்த இலிங்கத்தை தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச்சித்து வந்தார்.

சிவபெருமான் அவரது பக்தியைப் பரிசோதிக்க வேண்டி ஒரு நாள் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைந்தருளச் செய்தார்.

திருமால் ஆயிரம் பெயர்களால் இறைவனை அருச்சிக்கும் போது ஒரு பெயருக்கு மலர் இல்லாமையால் தனது கண்ணைப் பறித்து இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார்.

உடன் சிவபெருமான் மகிழ்ந்து மகாவிஷ்ணுவிற்கு காட்சி கொடுத்து அவர் வேண்டியபடி சக்கரத்தைக் கொடுத்தருளினார்.

திருமால் வழிபட்டு சக்கராயுதம் பெற்றதால் இத்தலம் அன்று முதல் *திருமாற்பேறு* என்று பெயர் பெற்றது. இன்று பெயர் மருவி திருமால்பூர் என்று இருக்கிறது.

(இதே வரலாற்று உண்மையை திருவீழிமிழலை தலத்திற்கும் சொல்லப்படுகின்றது.)

(இப்புராண வரலாற்றை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி நின்ற கோலத்தில் ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் "கண்"ணும் கொண்டு இருப்பதை இக்கோயிலில் காணலாம்.)

*தல பெருமை:*
ஒருசமயம் கயிலாயத்தில் ஈசனிடம் பேசிக் கொண்டிருந்த பார்வதி,
விளையாட்டாக ஈசனின் 
கண்களை மூடினாள். 

சிவனின் கண்கள் சூரிய, 
சந்திரராக இருப்பதால் உலகம் இருண்டது.

அந்த ஒரு கணநேரத்தில்
உயிர்கள் பட்ட பாடு சொல்லிமாளாது.

தன்னால் உலக மக்கள் சிரமப்பட்டதைக் கண்ட 
பார்வதி, தன்னாலேயே
அந்த பாவம் தீர சிவனின்
அனுமதி பெற்று லிங்க 
பூஜை செய்ய பூலோகம்
புறப்பட்டாள்.

பூலோகத்தில் பாலாற்றங்கரையில் இருந்தவில்வமரத்தடியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள்.

அங்கும் சிவன் தன்
திருவிளையாடலை நடத்த எண்ணம் கொண்டு..........

தன் தலையில் இருந்த
கங்கையை பாலாற்றில் 
பெருகி ஓடச் செய்தார்.

வெள்ளம் சூழ்ந்ததால்
பார்வதி, மணல் லிங்கத்தைப் பாதுகாக்க
தன் கைகளால் அணைத்தாள்.

சகோதரரான திருமாலை, உதவிக்கு அழைத்தாள்.
திருமால் பாம்பணையை உருவாக்கி வெள்ளத்தை
தடுத்து நிறுத்தினார்.

இதன்பின் பார்வதி 
சிவபூஜையை நிறைவேற்றினாள். 

*நின்ற நிலையில் நந்தி:*
ராவணன் இங்கு வந்த 
போது நந்தியை வணங்காமல் 
சிவலிங்கத்தை
தரிசிக்கமுயன்றான்.

கோபமடைந்த நந்தி அவனைத் தடுத்ததார். உடனே, ராவணன் ஆவேசமடைந்து, *"நீ வானர முகத்தைஅடைவாய்,''* என நந்தியை 
சபித்தான்.

நந்தியும், *"ராவணா! என் முகத்தை குரங்காக்கிய உனக்கு, ஒரு குரங்கால்தான் அழிவு நேரும்,''* என்று சபித்தார்.

வானர முகம் பெற்ற நந்தி,
பிரகாரவாசலில் நின்ற
நிலையில் காட்சியளிக்கிறார்.

*சடாரி தீர்த்தம்:*
முதலாம் பராந்தக சோழன்
கட்டிய இக்கோவில் 
ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்கு முந்தையது.

பராந்தகனின் நினைவாக
அமைக்கப்பட்ட
சோளீஸ்வரர் சன்னிதி மேற்கு நோக்கி உள்ளது.

இங்குவழிபட்டால் எல்லா
சிவன் கோயில்களையும்
வழிபட்ட புண்ணியம் உண்டாகும்.

திருமால் இங்கு வந்து பூஜைசெய்ததால், 
இங்கு பக்தர்களுக்கு 
சடாரிசாத்தி, தீர்த்தம்
அளிப்பது குறிப்பிடத்தக்கது.

*சம்பந்தர் தேவாரம்:*
பண்: வியாழக் குறிஞ்சி.
1.🔔குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.

🙏🏾குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவனும், பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும், அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.

2.🔔பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.

🙏🏾பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும் நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக வைத்துள்ளவனும், தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர், மாற்பேறு.

3.🔔கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை யேறியுஞ் சென்றுநின்று
உருவிடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.

🙏🏾பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப்பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும், போரில் வல்ல விடை மீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும்.

4.🔔தலையவன் றலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.

🙏🏾எல்லோரினும் மேம்பட்டவனும், அழகிய தலைமாலையைப் பூண்டு உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும், பல கலைகளையும் உலகிற்கு அருளியவனும், கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

5.🔔துறையவன் றொழிலவன் றொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.

🙏🏾பல்வேறு நெறிகளாய் விளங்குபவனும், பழமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும், பிறையணிந்த சடைமுடியனும், உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடக்கறை பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

6.🔔பெண்ணினல் லாளையோர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.

🙏🏾பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும், தேவர்கள், அசுரர்கள் முனிவர்கள், மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

7.🔔* * * * * * * * * *

🙏🏾* * * * * * * * * *

8.🔔தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய வண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.

🙏🏾குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின் அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

9.🔔செய்யதண் டாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயனன் சேவடி யதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.

🙏🏾சிவந்த தண்தாமரை மலர்போன்ற கண்களை உடைய திருமாலும், கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர், மாற்பேறாகும்.

10.🔔குளித்துணா வமணர்குண் டாக்கரென்றும்
களித்துநன் கழலடி காணலுறார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.

🙏🏾குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப்பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

11.🔔அந்தமின் ஞானசம் பந்தன்சொன்ன
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி யெய்துவரே.

🙏🏾ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்.

            திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
பிரமோற்சவம் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் தீர்த்தவாரி உற்சவமாக பத்து நாட்களுக்கு நடைபெறுகின்றது.

கிருத்திகை,
கார்த்திகை தீபம்,
ஆடி வெள்ளி,
ஆடிப்பூரம்,
ஆனித் திருமஞ்சனம்,
திருவாதிரை திருவிழா முதலிய சிறப்பு விழாக்களாக நடைபெறுகிறது.

*தொடர்புக்கு:*
தேவராஜ் குருக்கள்.
99943 68156
சுமைதாங்கி சாம்பசிவம்.
98402 91716
கணேஷ் நாடார் கடை.
04177- 248220

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு
*சலநாதீசுவரர் திருக்கோயில், திருவூறல்.(தக்கோலம்.)*

_________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment