ஒரே ஒரு அனுக்ரஹம்!...
அறுபது வயதை தாண்டிய அந்த பக்தர், நித்யம் ஶிவபூஜை பண்ணுபவர். வெளியூர்வாஸியான அவர், பெரியவாளை தர்ஶனம் பண்ண, காஞ்சிபுரத்துக்கு வந்து, ஒரு ஹோட்டலில் இறங்கி, ஸ்நானத்தையும் பூஜையையும் முடித்துக்கொண்டு கொண்டு, ஶ்ரீமடத்துக்கு வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்.
" பரமேஶ்வரா....எனக்கு, ஒண்ணே ஒண்ணை மட்டும் அனுக்ரஹம் பண்ணணுன்னு வேண்டிக்கிறேன்...."
பெரியவா அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
" எனக்கு.... அனாயாஸ மரணம் கெடைக்கணும்"
மனஸில் அழுத்தித் கொண்டிருந்த மரண பயத்தால், அபயம் வேண்டி, ப்ரார்த்தித்துக் கொண்டார்.
(அனாயாஸ மரணம் என்றால், ரொம்ப நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்து, குடும்பத்தில் உள்ளவர்க்கெல்லாம் கஷ்டம் குடுத்து, "போனால் தேவலை" என்று, தான்.. உள்பட எல்லாரும் நினைக்கும்படி படுத்தி, ஒரு வழியாக போய் சேர்வது என்றில்லாமல், நொடியில் லகுவாக சட்டென்று உயிர் போய்விடுவது என்பதாகும்)
"நீ... தெனோமும் பூஜை முடிக்கறச்சே சொல்ற ப்ரார்த்தனை ஸ்லோகமா... இதச் சொல்லு.....
அனாயாஸேன மரணம் வினா தைன்யேன ஜீவனம் !
தேஹி மே க்ருபயா ஶம்போ த்வயி பக்திம் அசஞ்சலாம் !!
இத சொல்லிட்டு, த்ரயம்பக மந்த்ரம் சொல்லிண்டிரு........"
ப்ரஸாதம் குடுத்தார்.
பெரியவா திருவாக்கால், எப்பேர்ப்பட்ட மந்த்ரோபதேஸம்!
[த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமாம்ருதாத்]
பக்தர் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு காஞ்சியில் அவர் தங்கியிருந்த ரூமுக்கு போய் கதவை திறந்து நாற்காலியில் உட்காரும்வரை பெரியவாளுடைய ஆக்ஞைப்படி 'அனாயாஸேன மரணம்' என்ற ப்ரார்த்தனையையும், ம்ருத்யுஞ்ஜய மந்த்ரத்தையும் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவர் நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த க்ஷணம், அவருடைய ப்ரார்த்தனையை, நம் ப்ரத்யக்ஷ பரமேஶ்வரனான பெரியவா அனுக்ரஹித்து விட்டார்!
ஆம்! அவர் "அனாயாஸமாக" ம்ருத்யுவை ஜெயித்து, ஶிவ ஸாயுஜ்யத்தை பெற்றுவிட்டார்!
பெரியவா அவருக்கு ப்ரஸாத ரூபத்தில், "மரணமில்லாப் பெருவாழ்வு"க்கான entrance ticket-ஐயும் சேர்த்தல்லவா குடுத்திருக்கிறார்!
என்ன பாக்யம்!
ஸாதாரணமாக, நமக்கு வேண்டியவர்கள் யாராவது, "இனி பிழைக்கமாட்டார்!" என்று ரொம்ப ஸீரியஸ் கண்டிஷனில் இருந்தால், அவர்கள் பிழைக்கணும் என்பதற்காக ம்ருத்யுஜ்ஜய ஹோமம் பண்ணி, அவர் [ஶரீரம்] பிழைத்தால், பகவான் காப்பாற்றிவிட்டான் என்று ஸந்தோஷப்படுவோம்.
ஆனால் மறுபடியும் என்றாவது அவருடைய மரணம் நேரத்தான் போகிறது என்பதை தெரிந்தும், தெரியாத முட்டாள்களாக அல்ப ஸந்தோஷத்தில் கூத்தாடுவோம்.
உண்மையில் ம்ருத்யுவை [மரணம்] ஜெயிப்பது என்றால், இனி பிறவி வருமோ எனும் பயத்தை வேரோடு கெல்லி எறிந்து, இந்த ஜன்மாவிலேயே, உயிரோடு இருக்கும் போதே ஆத்மானுபவத்தை பெறுவதுதான்!
நமக்கெல்லாம், ஸுமார் 60 வயஸான பிறகுதான், மரணம் என்ற ஒரு ஸங்கதியும் நம்முடைய வாழ்வெனும் கச்சேரியில் கடைஸியில் இருக்கிறது என்பதைப் பற்றி யோஸிப்போம்.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்ற பழமை மொழியை எப்போதும் போல தவறாகப் புரிந்து கொண்டு, லோகாயதமான கலைகள், வேலைகளுக்கு ஒப்பிட்டுவிட்டு, குழந்தைகளை ஏகப்பட்ட class-களில் சேர்த்துவிட்டு, நாமும் அதுகள் பின்னாலேயே பம்பரமாக சுற்றிக் கொண்டிருப்போம்.
நம்முடைய ஆத்ம சிந்தனையை ஐந்து வயஸில் புறக்கணித்து விட்டோம் என்றால், ஐம்பது என்ன? தொண்ணூறு வயஸானாலும், சாப்பாட்டிலும், வம்பிலும், கேளிக்கைகளிலும்தான் மனஸை செலுத்த முடியுமே தவிர, நம்முடைய உண்மையான ஸ்திதியை உணர, முயற்சி கூட செய்ய மாட்டோம்!
செய்ய மாட்டோம்! என்பதை விட, நம்முடைய பழக்க வழக்கங்கள், நம்மை அப்படி செய்ய விடாது.
பொறுப்புகள் எல்லாமே முடிந்துவிட்டால் கூட, நம்முடைய குழந்தைகள் பின்னாலேயே நம்முடைய கருத்தை செலுத்திக் கொண்டிருப்போமே தவிர, போகும் காலத்துக்கு நமக்கு யார் துணை வரப்போகிறார்கள்? என்பதைப் பற்றி ஆழமாக யோஸிப்பதில்லை!
நம்முடைய உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால், யார் பார்த்துக் கொள்வார்கள்? கையில் பணம் இல்லாவிட்டால் நம்முடைய கடைஸி காலம் எப்படி இருக்கும்? என்பதையெல்லாம் ரிடையர் ஆனபின் விழுந்து விழுந்து யோஸிப்போமே தவிர, இந்த உளுத்துப் போன உடல் விழுந்தபின், உள்ளிருந்து இத்தனை நாள் இதை ஆட்டுவித்துக் கொண்டிருந்த உயிர் கிளம்பி போகும் போது, அப்போது போகும் வழிக்கு எதை பண்ணிக் கொள்ளுவது? என்பதை கொஞ்சம் கூட யோஸிக்க மாட்டோம்.
Life Insurance என்று, "வாழும் போதும்; வாழ்க்கைக்கு பிறகும்" என்று எதுகை மோனையோடு கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால், Insurance/Assurance after Death என்பதைக் குடுக்க பகவானால் மட்டுமே முடியும்!
அத்தனையிலிருந்தும் விலகி, பகவத் ஸ்மரணம், ஆத்ம விசாரம், எளிய வாழ்வு, தனிமை என்பதன் அழகை, வலிமையை உணர்ந்து கொண்டால், மரணத்தைக் கண்டு பயமில்லை!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
No comments:
Post a Comment