Wednesday, December 20, 2017

Yoga vasishtam part9

Courtesy:Dr.Smt.Saroja Ramanujam

யோகவாசிஷ்டம் - வைராக்யப்ரகரணம்-9

ராமன் சொல்கிறான்
நம் வாழ்க்கை என்பது இலைமேல் நீர்த்துளி போன்றது. ஆத்ம ஞானம் கொண்டவர்க்கே இந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.

ஒரு கணம் தோன்றி மறையும் மின்னலைப்போன்ற இந்த வாழ்க்கையில் ஒரு சுகமும் இல்லை. இது நிலையானது என்று நம்புவது, காற்றை சிறைப் பிடிக்கலாம், ஆகாயத்தை துண்டு துண்டாக்கலாம் , அலைகளை தொடுக்கலாம் என்பதைப் போன்றது.

வேகமாக ஓடி மறையும் மேகங்களைப்போல ஓடி, எண்ணை இல்லா விளக்கைப் போல அணைந்து அலைகளைப போல மடிவதுதான் வாழ்க்கை.

இந்த உயிரை உடலில் தக்க வைக்க மனிதன் என்ன பாடுபடுகிறான்! பணத்தை தேடி ஓடுகிறான். வசதிகளை பெருக்கி சுகமாக எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் வாழ வேண்டும் என்று அலையும் மனிதன் ஆயுள் வளர வளர துன்பம்தான் என்பதை உணர்வதில்லை.

அறிவைப் பெருக்கி ஆத்மஞானம் அடைவது ஒன்றுதான் உலகில் நிம்மதியைத் தரும் என்று அறிந்தானில்லை. தாவரங்கள் மிருகங்கள் இவையும் வாழ்கின்றன . ஆனால் மனிதன் மட்டுமே சிந்திக்கும் திறன் படைத்தவன். அதை வீணாக்கி புலனின்பத்தை மட்டும் தேடி வாழ்பவன் மிருகத்திலும் கடைப்பட்டவன். பிறப்பிறப்பற்ற நிலை அடைவதை விட்டு ஜனனமரணம் என்ற சுழலில் அகப்பட்டு அல்லலுறுகிறான்.

மூடனுக்கு சாஸ்திர ஞானம் என்பது ஒரு பெரும் சுமை . அதை அவன் விலக்குகிறான். ஆசை வசப்பட்டவனுக்கு அறிவே ஒரு பெரும் சுமை. அவன் சிந்திப்பதையே தவிர்க்கிறான். நிலையில்லா மனம் கொண்டவனுக்கு அவன் மனமே பாரம் ஆகிறது. அதன் சுமையால் தவிக்கிறான். ஆத்மஞானம் அடையாவிடில் இந்த தேகமே சுமையாகிறது.

எவ்வாறு ஒரு வீடு ஒருபெருச்சாளி தோண்டத் தோண்ட சிதைவுறுமோ அது போல காலம் என்ற எலியினால் நம் ஆயுளின் வேர் கடிக்கப் படுகிறது. 
விஷப்பாம்புகள் ஒரு குகையினுள் வசிப்பதனால் அங்குள்ள காற்றே விஷமாகி விடுவது போல் நோய்கள் உடலினுள் புகுந்து உடலையே விஷமாக்குகின்றன. அதனால் பூச்சி அரித்த மரம் போல உடல் நசிக்கிறது.

ஒரு பூனை எலியைப பிடிக்க அதனை சுற்றி வருவது போல மரணம் நம்மை விடாமல் அச்சுறுத்துகிறது.

அதனால் இந்த மனித வாழ்க்கை ஆத்மஞானம் பெறாவிடில் வீணானதே


No comments:

Post a Comment