யோகவாசிஷ்டம் - வைராக்ய பிரகரணம் - 10
அடுத்து ராமன் நான் என்னும் அகந்தையைப் பற்றி சொல்கிறான்.
அகந்தைதான் எல்லா தீமைகளுக்கும் காரணம்.அதற்கு நான் அஞ்சுகிறேன். இதற்கு அடிமையாகாதவ்ர்களே இல்லை என்று சொல்லலாம். அழகு பணம் பதவி முதலியவை இல்லாத சாமான்யர்களைக்கூட இது விடுவதில்லை.
இது அறியாமையினால் பிறந்து அறியாமையினால் வளர்கிறது. இதுவே எல்லா பாவங்களுக்கும் காரணம். நான் எனது என்ற உணர்வு இந்த்ரிய சுகத்தைத் தூண்டி தீமைகளுக்கு வழி வகுக்கிறது.
நான் என்னும் உணர்வை வெல்ல விரும்பியதால் எனக்கு உணவு உடை மற்ற சுகங்களின் மேல் நாட்டம் இல்லை.
இது மனம் என்னும் சந்திரனை மூடும் கிரகணம் , குணம் என்ற தாமரையை வாடச்செய்யும் பனி,. சரத்காலத்தில் மேகங்கள் ஓடி மறைவது போல நான் எனும் உணர்வு மன அமைதியை மறையச்செய்கிறது.
"நான் ராமன்" என்ற உணர்வு மாறி நான் யார் என்று அறிய முற்படுகிறேன்.
நானென்று உணர்வு உள்ளவரை இன்பம் இல்லை. அது மறைந்தால்தான் உண்மையான ஆனந்தம்.
எப்படி என்றால், ஒரு தீபம் அணைந்தால் அதன் ஒளியும் மறைவது போல் நான் என்னும் மேகம் மறைந்தால் ஆசை என்ற மின்னலும் மறைந்துவிடும்.
அகந்தை கொண்ட மனிதன் ஆசை என்னும் நூலில் கட்டப்பட்ட பிறவிகள் என்னும் முத்துக்களை அணிந்தவனாகக் காணப்படுகிறான்.
நான் எனது என்னும் மந்திரஜாலம் உறவுகள் நட்புகள் உடமைகள் இவை மேல் பற்று என்னும் மயக்கத்தை உண்டுபண்ணுகிறது.
மனம் ஆசையினால் உந்தப்பட்டு காற்றிலாடும் மயிலிறகைப்போல ஆடுகிறது. உணவைத்தேடும் நாய் போல் இந்கும் அங்கும் அலைகிறது. சல்லடையில் இருந்து சிந்தும் நீர் போல, அப்படியும் திருப்தி உண்டாவதில்லை.
வழி தப்பிய மான் போலவும் நிலையில்லா அலை போலவும் மனது தவிக்கிறது. பாற்கடலில் மந்தர மலைபோல எண்ணங்களால் கடையப்பட்டு தவிக்கிறது.
மனம் என்னும் மாக்கடல் ஆசை என்னும் பேரலைகளாலும் சூழப்பட்டு மயக்கம் என்ற சுழல்கலைக் கொண்டதாக இருக்கிறது, இதை எவ்வாறு கடக்க முடியும்?
நான் என்ற வலையினுள் அகப்பட்டு ஆசை என்னும் கயிறுகளால் கட்டப்பட்டு என் மனம் வெளிவர இயலாமல் உள்ளது. வெள்ளத்தில் அடித்துக் கொண்டுபோகப்படும் மரக்கட்டை போலவும் புயல் காற்றினால் அலைக்கழிக்கப்படும் இலை போலவும் உள்ளது என் மனம் .
கடலைக் குடித்துவிடலாம் . மேருவை தகர்க்கலாம். ஆனால் இந்த மனதை அடக்க முடியாது.
ஆசைகள் காடு மரங்களைப்போல வளர்ந்து இன்பம் துன்பம் என்ற பழங்களைக் கொடுக்கின்றன, இவைகளுக்கு மனமே விளைநிலம். அறிவு என்ற கோடரியால் மட்டுமே இவைகளை வேரறுக்க முடியும்.
.
.அடுத்து ராமன் ஆசையினால் வரும் தீமைகளைவிவரிக்கிறான்
No comments:
Post a Comment