Sunday, December 31, 2017

Jambukeswarar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற திருக்கோயில் தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...............)
*திருவானைக்கா பதிவு, நீளம் கருதி இன்றும் நாளையும் தொடர்ந்து வரும்.*
__________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 190:*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

🍁 *ஜம்புகேஸ்வரர் திருக்கோவில், திருவானைக்கா.*🍁

(தொடரை பதிந்து வருகையில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபதாவது தலமான திருவானைக்கா விடுபட்டுப் போயிருந்தது. அதை இன்று பதிகிறோம். இத்துடன் காவிரித் தென்கரைத் தலங்கள் 127-ம், காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து மூன்றும், ஆக மொத்தம் 190 பதிவிட்டு உள்ளது. இனி நாளை தொண்டை நாட்டு தல தொடர் பதிவுகள் வரும்.)
__________________________________________
*இறைவன்:* ஜம்புகேஸ்வரர், திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்.

*உற்சவர்:* ஜம்புகேஸ்வரர், சந்திரசேகர், தீர்த்தாள் நாதர்,  சோமாஸ்கந்தர்.

*இறைவி:* அகிலாண்டேஸ்வரி.

*தல விருட்சம்:* வெண்நாவல்.

*தல தீர்த்தம்:* நவ தீர்த்தங்கள்.
காவிரி தீர்த்தம்,
இந்திர தீர்த்தம்,
சந்திர தீர்த்தம்,

*ஆகமம்:* சைவாகமம்.

*ஆலயப் பழமை:*
ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*பெயர்க்காரணம்:*
வெள்ளை யானையும், சிலந்தியும் வழிபட்டது. யானை (ஆனை) வழிபட்டதால் ஆனைக்கா என்றும் பெயர் பெற்றது.

பெண்ணால் மரத்தடியில் (ஜம்பு) சுவாமி எழுந்தருளியிருப்பதால் ஜம்புகேஸ்வரம்.

சம்பு முனிவரே  வெண்ணாவல் மரமாக வந்து பிறந்தார் என்பது வரலாறு.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறையில் இரண்டு பதிகங்களும், மூன்றாம் திருமுறையில் ஒரு பதிகமும் மொத்தம் மூன்று பதிகங்கள்.

திருநாவுக்கரசர் -ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகமும், ஆறாம் திருமுறையில் இரண்டு பதிகங்களும் மொத்தம் மூன்று பதிங்கள்.

சுந்தரர் - ஏழாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம். ஆக மொத்தம் இத்தலத்திற்கு ஏழு பதிகங்கள்.

*இருப்பிடம்:*
திருவானைக்கா திருச்சி நகரின் ஒரு பகுதியில் அமைந்திருப்பதாகும்.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்,
திருவானைக்காவல்,
திருவானைக்காவல் அஞ்சல்,
திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம்,
PIN - 620 005

*ஆலயப் பூஜை காலம்:*
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

🌾 *கோவில் அமைப்பு:*
கிழக்கு நோக்கிய பதின்மூன்று நிலைகளைத் தாங்கிய இராஜகோபுரத்தைக் காணக் கிடைத்ததும் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

இன்னொரு கோபுரம் மேற்கு நோக்கி பார்த்த வண்ணம் ஏழு நிலைகளைத் தாங்கிய கோபுரம் ஒன்றும் இருக்கிறது.

இத்தலத்திற்கு ஐந்து பிரகாரங்கள் இருக்கின்றன.  இதில் நான்காவ பிரகாரம் திருநீற்று பதில் எனப்படுவையாகும்.

திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம்.

மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைபட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில்.

சுமார் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.

மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் அப்புலிங்கமாக காட்சி தருகிறார். 

இவரை மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.

நான்காம் பிரகாரத்திலிருந்த அம்பாள் சந்நிதிக்கு வந்து நின்றோம். அம்பாள் அகிலாண்டேஸ்வரி தனி சந்நிதி கொண்டு அருட்ப்பார்வை வழங்கிக் கொண்டிருந்தாள்.

அம்மையை கண்குளிர தரிசித்து மணங்குளிர அவளருளை பெற்றுக் கொண்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்.

அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும்.

இந்தக் காதணிகளை *தாடகங்கள்* என்று அழைப்பார்கள்.

அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

உஷத் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.

உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

மேலும் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது.

பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

*தல வரலாறு:*
புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது.

அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது.

சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யில், மழையில் கிடந்தது.

சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.

யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும்,மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.

யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.

சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.

இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து எழுபது கோவில்கள் கட்டினான்.

அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன.

கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை  பதிகத்தில் நான்காம் திருமுறையில் *"ஆதியில் பிரமனார் தாம்"*என்று தொடங்கும் பதிகம் - 4வது பாடலில்) தெரிவிக்கிறார்.

🔔 *"சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக் கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே"*

🙏🏾திருவானைக்காவிலுள்ள பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரை உடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டில் அந்நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார்.

🌾 *அம்பிகை வழிப்பட்ட லிங்கம்.*
இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் ஏற்படுத்தியது.

ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை, சிவனை வழிபட சித்தம் கொண்டார்.

அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது.

அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

🌾 *குபேரலிங்கம்.*
மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது.

மிகப்பெரிய வடிவமாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது.

இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிபட்டதால் தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே.

இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சன்னதி ஆகிப்போனது.

🌾 *சிற்பங்கள்.*
பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது.
 வெளிப்பிரகாரத்தூண்களில்இந்த சிற்பம் இருப்பதை காணவேண்டியதில் முக்கியம்.

அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது.

ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள்.

அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மிக்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாக செதுக்கப்பற்றுள்ளதைப் பார்க்கும்போது, நம்மை பிரமிக்க வைக்கிறது.

*நாவுக்கரசர் தேவாரம்:*
1.🔔முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை
மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்னானை யாப்பண்ணி யேறி னானைச்
சார்தற் கரியானை தாதை தன்னை
என்னானைக் கன்றினையென் ஈசன் தன்னை
யெறிநீர்த் திரையுகளும் காவிரிசூழ்
தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾முன் ஒரு காலத்தில் யானையைக் கொன்று , அதன் தோலைப் போர்த்தியவனாய் , ஞானம் மிகப் பெறாத அடியேனுடைய சிந்தை மனம் வாக்கு இவற்றைத்தான் இவரும் யானைகளாகக் கொண்டு இவர்ந்தானாய் , அடியார்க்கு அல்லது மற்றவருக்குக் கிட்டுதற்கு அரியனாய் , எல்லோருக்கும் தந்தையாய் , என் ஆனைக் கன்று போன்று எனக்கு இனியவனாய் , என்னை அடக்கி ஆள்பவனாய் , அலைகள் மோதும் காவிரியை அடுத்த அழகிய ஆனைக்காவில் தேனாகவும் பாலாகவும் இனியனாய் , நீர்த்திரள் வடிவாக அமைந்த பெருமானை நான் தலைப்பட்டேன் .

2.🔔மருந்தானை மந்திரிப்பார் மனத்து ளானை
வளர்மதியஞ் சடையானை மகிழ்ந்தென் உள்ளத்
திருந்தானை இறப்பிலியைப் பிறப்பி லானை
இமையவர்தம் பெருமானை யுமையா ளஞ்சக்
கருந்தான மதகளிற்றி னுரிபோர்த் தானைக்
கனமழுவாட் படையானைப் பலிகொண் டூரூர்
திரிந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾அமுதமாக உள்ளவனாய் , தியானிப்பவர் மனத்து இருப்பவனாய் , பிறையை அணிந்த சடையனாய் , மகிழ்ந்து என் உள்ளத்து இருப்பானாய் , பிறப்பு இறப்பு இல்லாதவனாய் , தேவர்கள் தலைவனாய் , பார்வதி அஞ்சுமாறு கரிய மத நீரை உடைய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனாய் , வலிய மழுப்படையை உடையவனாய் , ஊர் ஊராய்ப் பிச்சை எடுத்துத் திரிவானாய்த் திருவானைக்காவில் உள்ள நீர்த்திரள் ` வடிவாக அமைந்த பெருமானைத் தலைப்பட்டேன் .

3.🔔முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முந்நீர்நஞ் சுண்டிமையோர்க் கமுதம் நல்கும்
உற்றானைப் பல்லுயிர்க்குந் துணையா னானை
ஓங்காரத் துட்பொருளை உலக மெல்லாம்
பெற்றானைப் பின்னிறக்கஞ் செய்வான் தன்னைப்
பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றுஞ்
செற்றானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடினேனே.

🙏🏾பிறையை முடிமாலையாக அணிந்தவனாய் , கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்க்கு அமுதம் வழங்கும் உறவினனாய் , பல உயிர்களுக்கும் துணையாவானாய் , ஓங்காரத்தின் உட்பொருளாய் , உலகங்களை எல்லாம் தோற்றுவித்துப்பின் ஒடுக்குபவனாய்த் தன்னைத் தலைவன் என்று போற்றாத அசுரர்களின் முப் புரங்களையும் அழித்தவனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

4.🔔காராருங் கறைமிடற்றெம் பெருமான் தன்னைக்
காதில்வெண் குழையானைக் கமழ்பூங் கொன்றைத்
தாரானைப் புலியதளி னாடை யானைத்
தானன்றி வேறொன்று மில்லா ஞானப்
பேரானை மணியார மார்பி னானைப்
பிஞ்ஞகனைத் தெய்வநான் மறைகள் பூண்ட
தேரானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾கருமை நிறைந்த நீலகண்டனாய்க் காதில் வெண்ணிறக்குழையை அணிந்தவனாய் , நறுமணம் கமழும் கொன்றைப் பூ மாலையனாய் , புலித்தோலை ஆடையாக அணிந்தவனாய் , ஞானமே வடிவாகிய பொருளாய் உள்ளவனாய் , படிகமணிமாலையை மார்பில் அணிபவனாய் , உலகங்களை அழிப்பவனாய் , தெய்வத் தன்மை பொருந்திய நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடையவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழு நீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

5.🔔பொய்யேது மில்லாத மெய்யன் தன்னைப்
புண்ணியனை நண்ணாதார் புரம்நீ றாக
எய்தானைச் செய்தவத்தின் மிக்கான் தன்னை
ஏறமரும் பெருமானை யிடமான் ஏந்தும்
கையானைக் கங்காள வேடத் தானைக்
கட்டங்கக் கொடியானைக் கனல்போல் மேனிச்
செய்யானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾பொய்க்கலப்பற்ற மெய்ம்மை வடிவினனாய் , புண்ணியனாய் , பகைவர் மும்மதில்களும் சாம்பலாகுமாறு அம்பு செலுத்தியவனாய் , தவத்தில் மேம்பட்டவனாய் , காளை வாகனனாய் , மானை ஏந்தும் இடக்கையனாய் , கங்காள வேடத்தானாய் , கட்டங்கம் என்ற படையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உடையவனாய் , தீயைப்போன்று சிவந்த மேனியனாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

6.🔔கலையானைப் பரசுதர பாணி யானைக்
கனவயிரத் திரளானை மணிமா ணிக்க
மலையானை யென்தலையி னுச்சி யானை
வார்தருபுன் சடையானை மயானம் மன்னும்
நிலையானை வரியரவு நாணாக் கோத்து
நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾கலையையும் , மழுப்படையையும் ஏந்திய கைகளை உடையவனாய் , பெரிய வயிரத்திரளாய் , மாணிக்கமலையாய் , என் தலையின்மேல் உள்ளானாய் , நீண்டசெஞ்சடையனாய் , சுடுகாட்டில் நிலையாக இருப்பவனாய் , வாசுகி என்ற பாம்பை நாணாகக் கோத்து , தன்னை விருப்புற்று நினையாத அசுரர்களின் மும்மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு , வளைக்கப்பட்ட மேருமலையாகிய வில்லினை உடையவனாய் , திருவானைக்காவில் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

7.🔔ஆதியனை யெறிமணியி னோசை யானை
அண்டத்தார்க் கறிவொண்ணா தப்பால் மிக்க
சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட
வேதியனை அறமுரைத்த பட்டன் தன்னை
விளங்குமல ரயன்சிரங்கள் ஐந்தி லொன்றைச்
சேதியனைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾எல்லோருக்கும் முற்பட்டவனாய் , மணியின் ஓசை போல எங்கும் பரந்தவனாய் , உலகில் உள்ளவரால் அறிய முடியாதபடி உலகுக்கு அப்பாலும் பரவிய சோதி வடிவினனாய் , வேதத்தின் விழுமிய பொருளாய் , வண்டுகள் தங்கும் கொன்றை மலர் , எல்லோருக்கும் முற்படத் தான் பூண்ட பூணூல் இவற்றால் விளங்கும் வேதியனாய் , அறத்தை உபதேசித்த ஆசிரியனாய் , தாமரையில் விளங்கும் பிரமனுடைய ஐந்து தலைகளில் ஒன்றை நீக்கியவனாய் , திருவானைக்காவில் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

8.🔔மகிழ்ந்தானைக் கச்சியே கம்பன் தன்னை
மறவாது கழல்நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப் பானைப்
பூதகணப் படையானைப் புறங்காட் டாடல்
உகந்தானைப் பிச்சையே யிச்சிப் பானை
ஒண்பவளத் திரளையென் னுள்ளத் துள்ளே
திகழ்ந்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾கச்சி ஏகம்பத்தை விரும்பி உறைபவனாய் , தன் திருவடிகளை மறவாது விருப்புற்று நினைத்து வாழ்த்தி உயர்த்திப் புகழ்ந்த அடியவர்களைப் பொன்னுலகு எனப்படும் தேவர் உலகை ஆளச் செய்பவனாய் , பூதகணமாகிய படையை உடையவனாய் , சுடு காட்டில் கூத்தாடுதலை விரும்புபவனாய் , பிச்சை ஏற்றலை ஆசைப் படுபவனாய் , பவளத்திரள்போல என் உள்ளத்தில் விளங்குபவனாய் , திருவானைக்காவுள் உறைபவனாய் , உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

9.🔔நசையானை நால்வேதத் தப்பா லானை
நல்குரவு தீப்பிணிநோய் காப்பான் தன்னை
இசையானை யெண்ணிறந்த குணத்தான் தன்னை
இடைமருதும் ஈங்கோயும் நீங்கா தேற்றின்
மிசையானை விரிகடலும் மண்ணும் விண்ணும்
மிகுதீயும் புனலெறிகாற் றாகி யெட்டுத்
திசையானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾எல்லோருடைய விருப்பத்திற்கும் உரியவனாய் , நான்கு வேதங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் , வறுமை மனநோய்கள் உடல்நோய்கள் ஆகியவற்றை நீக்குபவனாய்ப் புகழுக்கு உரியவனாய் , எல்லையற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமாயவனாய் , இடை மருதும் ஈங்கோயும் உறைவிடமாக உடையவனாய் , காளைவாகனனாய் , விரிந்த கடலும் ஐம்பூதங்களும் எட்டுத் திசைகளும் ஆகியவனாய் , திருவானைக்காவுள் உறைவானாய் , உள்ள செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே .

10.🔔பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்
பண்டயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணஞ்
சீர்த்தானைச் செந்தழல்போ லுருவி னானைத்
தேவர்கள் தம் பெருமானைத் திறமுன்னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்
ஆண்மையெலாங் கெடுத்தவன்தன் இடரப் போதே
தீர்த்தானைத் திருவானைக் காவு ளானைச்
செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே.

🙏🏾மன்மதன் உடல் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவனாய் , ஒருகாலத்தில் பிரமன் திருமால் இருவரும் தன்னை முடி அடி அறிய முடியாதவாறு தீப்பிழம்பாய் நின்றவனாய் , தேவர்கள் தலைவனாய் , தன்னுடைய வலிமையை நினைத்துப்பாராமல் ஆரவாரித்து ஓடிவந்து , கயிலை மலையை எடுத்த இராவணனுடைய ஆற்றலைப் போக்கிப்பின் அவன் துயரை அப்பொழுதே தீர்த்தானாய்த் திருவானைக்காவுள் உறைபவனாய் உள்ள செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே .

            திருச்சிற்றம்பலம்.


*திருவிழாக்கள்:*
வைகாசி மாதத்தின் பத்து நாட்களாக வசந்த விழா,
ஆடிப்பூர விழா,
புரட்டாசி நவராத்திரி விழா பத்து நாட்கள்,
தைத் தெப்பத் திருவிழா பன்னிரண்டு நாட்கள்,
*பஞ்சப்பிரகாரத் திருவிழா* மாசி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி சித்திரை நட்சத்திரம் வரை, தொடர்ந்து நாற்பது நாட்கள் விழா மிகவும் பிரசித்தி.
சுவாமி அம்பிகையாகவும், அம்பிகை சுவாமியாகவும் காட்சிதரும் வைபவம் ஐந்து பிரகாரங்களிலும் நடைபெறும்.

*தொடர்புக்கு:*
0431- 2230257

இத்தல அருமைகள் பெருமைகள் நீளம் கருதி, நாளையும் தொடர்ந்து​ வரும்.
_________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு  செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment