Monday, November 20, 2017

Vedaranyam temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_______________________________________
                      *143*
*🌸பாடல் பெற்ற சிவ தல தொடர்.🌸*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*🌷மறைக்காட்டுநாதர் கோவில், திருமறைக்காடு (வேதாரண்யம்)🌷*
___________________________________________
திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம் என்று அழைகாகப்படுகிறது)

*இறைவன்:* மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்.

*இறைவி:*
வேதநாயகி, யாழினு இனிய மொழியாள்.

*தல விருட்சம்:* வன்னிமரம், புன்னைமரம்.
(இந்த வன்னிமரத்தடியில்தான் விசுவாமித்திரர் தவஞ் செய்தார்.)

*தல தீர்த்தம்:* மணிகர்ணிகை, மற்றும் வேத தீர்த்தம். (ஆலத்துக்கு எதிரில் இருக்கும் கடல்.)

*தியாகராஜர்:* புவனிவிடங்கர்.

*நடனம்:* ஹம்சபாத நடனம்.

*பீடம்:* ரத்தின சிம்மாசனம்.

*பதிகம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர் -5
திருஞானசம்பந்தர் -4
சுந்தரர் -1

*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*இருப்பிடம்:*
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் அறுபத்தைந்து கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் ஐம்பது கி.மி. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது.

திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன.

இங்கிருந்து இரண்டு கி.மி. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு வேதாரண்யேசுவரர், திருக்கோவில்,
வேதாரண்யம்,
வேதாரண்யம் அஞ்சல்,
வேதாரண்யம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
PIN 614 810

*ஆலயத் திறப்பு காலம்:*
நாள்தோறும் காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00  மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்

*திருக்கோவில் அமைப்பு:*
இராசகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியிருக்க, அதுகண்டு *சிவ சிவ சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

முன்னாலுள்ள மண்டபத்தின் பக்கத்தில் தலமரம் வன்னிமரத்தைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

இம்மரத்தடியிவ் எண்ணற்ற நாகப்பிரதிஷ்டைகள் இருந்தன.

இதெனெதிரில் தீர்த்தம் அமைந்துள்ளது. இறங்கி தீர்த்தினை வாரி சிரசிலிட்டு வணங்கிக் கொண்டோம்.

உள்சுற்று செல்கையில், அறுபத்துமூவர், மற்றும் இராமநாதலிங்கம் இருக்க முன் நின்று வணங்கிக் கொண்டோம்.

வெளிப்பிராகாரத்தில் இராமரை தொடர்ந்து வந்த வீரஹத்திபாவத்தைப் போக்கிய வீரஹத்தி விநாயகர் இருந்தார். இவரையும் கண்டு தொழுது கொண்டோம்.

பக்கத்தில் இருந்த குமரன் சந்நிதிக்கும் சென்று மனமுருக வேண்டி வணங்கி நகர்ந்தோம்.

அடுத்து,சேர சோழ பாண்டிய லிங்கங்கள் தனித்தனியே மூன்று சந்நிதிகளாக இருந்தன. ஒவ்வொன்றையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

புன்னைமரத்தடியில் நசிகேது, சுவேத கேது  

முன்மண்டபத்தின் மேற்புறத்தில் வண்ண ஒவியங்கள் தீட்டப்பட்டிருந்தன.

தலவிநாயகர், காட்சி கொடுத்த நாயனார், ஆறுமுகர், ஜ்வரதேவர், சனிபகவான், வீணையில்லாத சரஸ்வதி, அன்னபூரணி, துர்க்கை, சோழீஸ்வரலிங்கம் முதுலிய சந்நிதிகளுக்குச் சென்று ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம். 

இங்குள்ள நடராஜசபையை தேவசபை என அழைக்கிறார்கள்.

இங்கும் நவக்கிரகங்கள், இத்தலம் கோளிலித் தலங்களுள் ஒன்றாதலால் வரிசையாக இருந்தன.

பள்ளியைறையை வணங்கித் தொழுது திரும்ப, அடுத்து பைரவர், சூரிய  சந்திரர்கள் சந்நிதிகளுக்குச் சென்று வணங்கிக் கைதொழுது திரும்பினோம்.

உள்வலம் சென்றதை முடித்துப் படிகளேறி முன்மண்டபத்திற்கு வந்தோம்.

இங்கிருக்கும், தியாகராஜ சபை விடங்கர், பெட்டிக்குள் பாதுகாப்பாக உங்கள் எனக் கூறினார்கள். நாங்கள் பார்க்க முடியவில்லை.

உள் வாயிலைக் கடந்து வந்தால் இருபுறமும் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதைக் காணப் பெற்றோம்.

கண்டோம், வணங்கிக் கொண்டோம், உற்சவத் திருமேனியழகுகளின் அருள்பார்வைகளைக் கண்டு சொக்கிப் போனோம்.

மூலவரைத் தரிசிக்க சந்நிதிக்கு முன் வருகையில், இருபுறமும் இருந்த  துவாரபாலகர்களைத் தொழுது, உட் புக அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

மூலவரைக் கண்டு மனமுருக பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம்.

மூலவரான வேதாரண்யேசுவரர் சிவலிங்கத்திருமேனி, சுவாமிக்குப் பின்னால் *'மறைக்காட்டுறையும் மணாளர்'* திருமணக் கோலத்தில் காட்சியருளிய வண்ணமிருந்தார்.

இம்மணாளருக்கு ஆண்டுக்கொருமுறை தான் திருமஞ்சனம். திருமஞ்சனம் முடிந்ததும் சந்தனக்காப்புசார்த்தப்படும்.

இதுஅடுத்த திருமஞ்சனத்தின் போதுதான் களையப்படும்.

ஆகவே மணாளர், சந்தனக்காப்பு மணத்தில் வருட முழுவதும் காட்சியளிக்கிறார் என்பது விசேஷமான செய்தியாகும்.

சுவாமி சந்நிதிக்கு பக்கமாகவே அம்பாள் சன்னதியும் இருந்தது. கிழக்குப் பார்த்த அரூளாசி வழங்கிக் கொண்டிருந்தாள்.

அம்மையின் முன் மனமுருகி பிரார்த்தித்து தொழுது குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.

மரகதத் விடங்கருக்கு நாள்தோறும் திருமஞ்சனமுண்டு.

வீதியுலாவில், தியாகேசர் புறப்படாத நாள்களில் சந்திரசேகரரே எழுந்தருளுகிறார்.

தியாகேசருக்குப் பதிலாக இவருக்குப் பட்டம் கட்டும் நாளை *"சந்திரசேகரப் பட்டம்"* என்பர். *"பட்டம் கட்டிய சென்னிப் பரமர்"* என்பது தேவாரம். *கலியுகத்திற்கு முன்பு:*
தமிழகத்தின் நீளமான கிழக்கு கடற்கரை நிலப்பரப்பை அலங்கரிக்கும் அழகிய கடலோர நகரங்களில் ஒரு சிறிய நகரம் நமது வேதாரண்யம் ஆகும்.

கலியுகம் பிறக்கும் முன்பு திரு மறைகள் *(நான்கு வேதங்கள்)* சிவபெருமானுக்கு பூஜை செய்து காடுகளாக மாறி வாழும் ஊர் என்பதால்
*வேத+ஆரண்யம்*என்று சமஸ்க்ருத வார்த்தைகளாலும், *திரு+மறை+காடு*என்று தமிழிலும் பெயர் பெற்ற ஊராகும்.

சிவனை ஊரிலிருந்தும், ஊரிலிருந்து சிவனையும் பிரிக்க முடியாதபடி, பெரிய கோவிலின் நான்கு பக்கச் சுவரை மையமாகக் கொண்டு விரிந்து
பரவி நிற்கும் ஊர் வேதாரண்யம்.

பரமேஸ்வரன் வேதாரண்யேஸ்வரராகவும், பரமேஸ்வரி வேதநாயகியாகவும் அருள்பாலிக்கும் ஊர் வேதராண்யம்.

திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்தது,......

விஸ்வாமித்ரர் மகரிஷி பட்டம் பெற்றது,.......

முற்பிறவி சாபத்தால் எலியாக உருமாற்றம் பெற்ற மகாபலி மன்னன், அனைய இருந்த கோவில் சோதியை தூண்டி சாப விமோசனம் பெற்றது,.......

மூடிய கதவினை திருநாவுக்கரசர் பாடித் திறந்தது,........

கோவில் தீர்த்தம் கங்கை நதிக்கு ஒப்பாக மணிகர்ணிகை என்று அழைக்கபெற்றது,.......

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நிற்கும் கடல் *வேதநதி*என்று வளங்கபெருவது,.......

பச்சை மரகத லிங்கமாய் எம்பெருமான் விடங்கர் தினம் தேனிலும் பாலிலும் குளித்து பக்தர்க்கு அருள் வழங்குவது,........

எல்லா உயிர்களின் மொத்த அழகையும் தன்னுள்ளே கொண்டு, புன்னகை பூத்த இதழுடன் காட்சி கொடுக்கும் தென்முக துர்க்கை,......

யாழின் இசையை விட இனிய குரல் பெற்றதால் 'யாழைப் பழித்த மொழியம்மை' என்று தனியாக காட்சி அளிக்கும் அம்மன்,......

அம்மனிடம் தோற்ற காரணத்தால் யாழ்/ வீணை இல்லாமல் காட்சியளிக்கும் சரஸ்வதி,.......

ராவண வதம் முடிவுற்ற பிறகு மனப்பிரமையுடன் இருந்த ராமனுக்கு மார்பில் உதைத்து 'பிரம்மஹத்தி' தோஷத்தை நீங்க செய்த *'வீர ஹத்தி விநாயகர்'* அருள் கொடுப்பது,.......

அப்பர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவராலும் பாடல் பெற்றது,.....

ஆயிரம் வேலி நிலம் கொண்டது, ஆண்டு முழுவதுவும் திருவிழா கொண்டும், ஆண்டு முழுதும் நாண்கு வீதிகளிலும் தெய்வம் வலம் வருவதும்......

சன்னதியின் பெயர் பெற்ற விளக்கழகு,......

இது அனைத்தும் நம் ஊர் திருமறைக்காடு திருக்கோவில் பற்றிய சிறப்புகளாகும்.

இத்தனை சிறப்புகள் ஒரே கோவிலுக்கு எப்படி வந்தது என்பது எல்லோருக்கும் வியப்பாக இருக்கும்.

கடலும் கடல் சார்ந்த இடம் என்பதால் சங்க கால நிலப்பரப்பு பிரிவுகளின்படி *'நெய்தல்'*பூமி நம் வேதராண்யம்.

 வேதாரண்யத்தைப் பொறுத்த வகையில், கடல் நீரின்றி அமையாது  இவ்வூர். இங்கு கடல் சார்ந்த தொழில்களே பொருளாதாரத்தின் அடித்தளம்.

கடலும், சுடுமணலும், கடற்காற்றும்.. ஒவ்வொரு முறையும் இங்கு சென்று திரும்பும்போது இந்த வெண்சுடு மணலின் ஸ்பரிசத்தையும், உப்புக்காற்றின் நமச்சலையும் உணரும் போது நம்முள் ஏற்படும் உணர்ச்சி பெருக்குகளை எழுத்தறிவித்து முடியா.

இந்த நெய்தல் பூமி  நெய்துள்ள வலை பின்னல்கள், பல வித உணர்வுகளை நமக்கு உணர்த்துகிறது.

இந்த அனுபவம் இங்கு வாழ்வோர்க்கும், இங்கு வருவோர்க்கும் இருக்கும்.

மேலும் இந்திய சுதந்திர வரலாற்றில் தன் பங்களிப்பை முதன்மைபடுத்தி கொடுத்தது இந்த உவர்ப்பு நிலம்தான் வேதராண்யம்.

நம் தாத்தா காந்திஜி அவர்களால் குஜராத் 'தண்டியில்' தொடங்கப்பட்ட உப்பு சத்யாக்கிரஹ போராட்டம், தமிழ்நாட்டில் நம் மூதறிஞர் ராஜாஜி தலைமயில் வேதை மண்ணின் மைந்தர் 'திரு.சர்தார் வேதரத்தினம் பிள்ளை' அவர்களின் முழு முயற்சியோடு வரலாற்று சிறப்பு மிக்க உப்பு சத்தியாகிரக போராட்டம் இங்கு நடை பெற்றது வேதராண்யத்தை நாம் நினைந்து பார்க்க தவறக்கூடாது.

*கோவில் விபரங்கள்:*
தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலமாகும்.

இந்த விடங்கரின் பெயர் புவனி விடங்கர். இவரின் நடனம் ஹம்ச பாத நடனம்.

இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர். இவர் சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார்.

இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும்.

இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் இவ்வாறு பெயர் கொண்டுள்ளாள்.

இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை ஏந்தாது தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள்.

துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள்.

இவள் சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம்.

அகத்தியான்பள்ளியில் அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளியது போல, இறைவன் இந்தத் திருமறைக்காடு தலத்திலும் அக்கோலத்தைக் காட்டியருளி உள்ளார்.

அகத்தியான்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.

இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது.

இராமர் பூஜித்த இராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது.

இங்கிருக்கும் வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார்.

இவரின் சந்நிதி கோவிலின் மேற்கு வெளிப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது.

இச்சந்நிதிக்கு கொடிமரமும் உள்ளது. இதற்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது.

இத்தலத்தில் உள்ள  முருகப்பெருமானை அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர்.

இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில் காட்சி அளிக்கின்றன.

இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார்.

விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷி ஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார்.

அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.

இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும் இருக்கின்றன.

முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன.

மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்துதான் தினமும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து அபிஷேகிக்கப்படுகிறது.

வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்க ஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம்.

கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம்.

கோவிலின் நேர் எதிரே கிழக்கே கடல் உள்ளது. இதையே வேததீர்த்தம் என்றும், சந்நிதி தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர்.

இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால் நூறு முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாகும்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகவும், விசேஷமானதாகவும் கருதப்படுகின்றது.

தீர்த்தத்தில் நீராடி தூய்மையான உண்மை மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.

*தல அருமை:*
ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த வண்ணமிருந்தனர்.

நான்கு வேதங்களும் மனித உருக்கொண்டு அருகிலுள்ள *நாலுவேதபதி* என்ற இடத்தில் இருந்து கொண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன.

கலியுகம் ஆரம்பமாகப்போவதை அறிந்து, இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்தன நான்கு வேதங்களும்.

ஆகவே, கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாக அழுந்தப் பூட்டிவிட்டு சென்றுவிட்டன.

அதன்பிறகு பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே செல்வதும் திரும்புவதுமாக இருந்தனர்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர்.

அப்போது ஊர்மக்கள் அனைவரும் மதிலின் ஒரு புறத்திலுள்ள திட்டிவாசல் வழியாக செல்வதும், திரும்புவதுமாக இருந்தனர். திருக்கதவும் தாழ்பட்டிருப்பதையும் கண்டனர்.

ஊர் மக்களை பார்த்து விபரம் கேட்டனர். அதற்கு வேதங்கள் திருக்கதவை தாழிட்டுவிட்டதைக் கூறினர்.

திருக்கதவமிருக்க புறம் சென்று தரிசிப்பது மரபன்றோ? எனக்கூறி
திருநாவுக்கரசர் பதிகம் பாட இறைவன் தாழ்திறந்தான்.

திருஞானசம்பந்தர் பதிகம் பாட திறந்த தாழ்கதவம் தாழ் பொருந்தியது.

அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசியார், நீங்கள் பாண்டிய நாடு வரவேண்டும் என்று இங்கிருக்கும் சம்பந்தருக்கு அழைப்பு விடுத்தார்.

மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார்.

மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.

அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி அவ்விடம் சென்றார்.

இங்குள்ள நடராஜ சபை தேவ சபை என அழைக்கப்படுகிறது.

வேதாரண்யத்திலிருக்கும் விளக்கு *விளக்கழகு* என்று இக்கோயிலுக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்தது.

*வழிபட்டோர்கள்:*
அகத்தியர், வசிஷ்டர், கௌதமர், விசுவாமித்திரர், நாரதர், மாந்தாதா, முசுகுந்த சக்கரவர்த்தி, ஸ்ரீராமர்.

*சிந்தாமணி விநாயகர்:*  சிந்தாமணி எனும் மணியைத் தரித்துக் கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டதாகும்.

அபிஜித் என்பவனுக்கும், குணவதி என்பவளுக்கும் பிறந்தவனான கணன் எனும் அசுரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது சிந்தாமணியின் உதவியால் கபிலர் 
தனக்களித்த விருந்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு கபிலரிடமிருந்து அம் மணியைப் பறித்துக் கொண்டு வந்துவிட்டார்.

கபிலர் விநாயகரை நோக்கி யாகம் புரிந்து அம் மணியை மீட்டுத்தர வேண்டினார்.

சித்தி, புத்தி தேவிகளுடன் சிங்க 
வாகனத்தில் தோன்ற விநாயகர் தனது திருக்கைப் பாசத்தினால் கணனின் சிரசை அறுத்து சிந்தாமணியை கபிலரிடம் கொடுத்தார்.

இதனாலேயே இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் ஏற்பட்டது.
 ஆவார்

 *ஆறாம்திருமுறை தேவாரம்:*
🔔தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾மறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மணாளன் ஆம் சிவபெருமான் தூண்டப்பட்ட விளக்கொளி போன்ற ஒளியின னாய்ப் பழைய தேவர்களுக்கு முடிமணியாய்த் தன்னை நினையாதார் காண்பதற்கு அரிய கடவுளாய்த் தன்னைத் தியானிப்பவருக்கு மிக எளியனாய் வேண்டுவார் வேண்டுவதை ஈவானாய்ப் பேறாகிய தன்னை அடைவதற்குத் தானே ஆறாய் (வழியாய்) விரதங்களால் மாட்சிமைப்பட்ட மனமுடைய சான்றோர்களின் மனத்தானாக உள்ளான்.

🔔கைகிளரும் வீணை வலவன் கண்டாய்
காபாலி கண்டாய் திகழுஞ் சோதி
மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்
மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்
பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்
பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்
வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾கைகளால் ஒலிக்கப்படும் வீணையை வாசிப்பதில் வல்லவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய் ஒளி விளங்கும் ஞான விளக்குப்போன்ற வடிவினனாய் மெய் அடியார் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வித்தாய்ப் படம் எடுக்கும் நாகத்தை அணிந்தவனாய் மேலாளரையும் கீழ்ப்படுத்த மேலானாய்ப் பாசூரை உகந்தருளியிருப்பவனாய்க் கூர்மை மிக்க வாட்படையை உடையவனாய் மறைக்காட்டுள் உறையும் மணாளன் உள்ளான்.

🔔சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾மறைக்காட்டுள் உறையும் மணாளன் முன்னொரு கால் சிலந்திக்கு அருள் செய்தவனாய், திரிபுரங்களைத் தீ மடுத்தவனாய், நிலம் அதனைச் சூழ்ந்தநீர், தீ, காற்று என்ற பூதங்களில் எங்கும் பரவி இருப்பவனாய், உருவமும் உருவம் அற்ற நிலையும் உடைய வனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்ப் பிரமனும் திருமாலும் தானேயாய்க் களங்கம் நீங்கிய பெரிய விடை ஒன்றினை இவர்பவனாய் அடியார்கள் மனக்கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான்.

🔔கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்
காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய்
புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய்
வெள்ளிமிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾மறைக்காட்டுள் உறையும் மணாளன் கள்ளிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவனாய்க் காலனைக் காலால் ஒறுத்தவனாய்ப் புள்ளியை உடைய மான்தோலை உடுத்தவனாய்ப் புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய், வெள்ளி போல ஒளி வீசும் பிறையை முடிமேல் சூடியவனாய், வெண்ணீறு அணிந்தவனாய்த் திருச்செந்தூரை விரும்பும் முருகனுக்குத் தந்தையாய் உள்ளான்.

🔔மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான்.

🔔ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய், கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய், அகத்தியான்பள்ளியையும், ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய், அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய், இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான்.

🔔வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்
பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன். வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன். மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன். தேவர்கள் போற்றும் தலைவன். பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன்.சீசைலத்தில் உறைபவன். அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத்தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன்.

🔔அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தௌகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கும் இறைவன் கண்டாய்
என்னெஞ்சே யுன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் அடியார்களுக்கு மறுமையைப் பயக்கும் அமுதமாய்ச் செல்வத்தைக் கொடுத்து இம்மையில் நலன்பயக்கும் தௌந்த தேனாய், நம் மனத்தைவிட நமக்கு இனியவனாய், உண்மையான ஞானப்பிரகாசம் நல்கும் விளக்காய், திருவெண்காட்டில் உறைபவனாய், நம் தீவினைகள் நீங்குமாறு நம் மயக்கத்தைப் போக்கும் மருந்தாகவும் உள்ளான்.

🔔மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்
ஆதியு மந்தமு மானான் கண்டாய்
பால விருத்தனு மானான் கண்டாய்
பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமான ஆணவ மலத்தைச் செயலறச் செய்யும் தலைவனாய், முத்தமிழும் நான்மறையும் ஆகியவனாய், கல்லால மரநிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறத்தை மௌனநிலையில் உபதேசித்தவனாய், ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் அந்தமுமாக உள்ளவனாய்ப் பாலனும் விருத்தனுமாக வடிவு எடுத்தவனாய்ப் பெரியபவள மலைபோன்ற உருவினனாய், கொன்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனாய், மறைக்காட்டு உறைகின்ற மணாளன் காட்சி வழங்குகின்றான்.

🔔அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று
சோதிவிர லாலுற வைத்தான் கண்டாய்
பெயரவர்க்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.

🙏🏾மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் பிரமனும் திருமாலும் அறியாத வகையில் தீத்தம்பமாய் நீண்டு உயர்ந்த தலைவன். இராவணன் துயரால் நடுங்குமாறு ஒளிவீசும் விரலால் அழுத்தியவன். தசக்கிரீவன் என்ற பழைய பெயரை உடைய அவனுக்கு இராவணன் என்ற பெயரையும் வழங்கிப் பல அருள்களையும் செய்தவன். அவனுக்கு மேம்பட்ட வாட்படையையும் ஈந்தவன். அடியார்களுக்கு மயக்கத்தைத் தரும் ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களைத் தீர்ப்பவன்.


        திருச்சிற்றம்பலம்.
பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அகஸ்தீசுவரர் திருக்கோயில், அகத்தியான்பள்ளி.*
__________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment