உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
-----------------------------------------------------------------
*146*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
*🌼நடராஜபெருமான் திருக்கோயில், சிதம்பரம்.🌼*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள தலங்களில் இத்தலம் முதலாவதாக பல் போற்றப் படுகிறது.
*இறைவன்:* கனகசபை, சபாநாயகர், திருமூலட்டானேசுவரர், திருமூலநாதர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேரு விடங்கர், பொன்னம்பலம் கூத்தன்.
*இறைவி:* கனகசபை சிவகாமி, திருமூலட்டானம் உமையம்மை.
*தல விருட்சம்:* தில்லை மரம்.
*தல தீர்த்தம்:* சிவகங்கை தீர்த்தம் என்கின்ற புண்ணிய தீர்த்தம், பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்.
*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர்.-எட்டு பதிகம்.
திருஞானசம்பந்தர்.-இரண்டு பதிகம்.
சுந்தரர்.-ஒரு பதிகம்.
மாணிக்கவாசகர்.- தேவாரம்.
*புராணப்பெயர்கள்:*
தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லை வனம்.
*இருப்பிடம்:*
சென்னையில் இருந்து ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சிதம்பரம் செல்லலாம்.
சென்னையில் இருந்து சுமார் இருநூற்று நாற்பது கி.மி. தொலைவில் சிதம்பரம் அமைந்து இருக்கிறது.
காவிரியின் வடகரை சிவஸ்தலங்களை தரிசிக்க சிதம்பரத்தை ஒரு நுழைவாயில் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு நடராஜர் திருக்கோவில்,
சிதம்பரம்.
அஞ்சல் கடலூர் மாவட்டம்.
PIN - 608 001
*ஆலயப் பூஜை காலம்:*
நாள்றும் காலை 6.09 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம் இது.
தரிசிக்க முக்தி தரும் தலம் இது.
பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம் இது.
ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம் இது.
அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக்க் காட்சி தரும் தலம் இது.
நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம் இது.
சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம் இது.
இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம். இந்த சிதம்பரம் கோவில் நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
கருங்கற்களால் கட்டப்பட்ட மதிற்சுவர்களுடனும், விண்ணை முட்டும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் நன்கு அமைந்திருக்கிறது.
கோவில் கோபுரத்து மாடங்களில் எண்ணற்ற முனிவர்கள், தேவர்கள் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கிழக்கு மேற்கு கோபுரங்களில் நூற்றியெட்டு நடன பாவங்களை அறிவிக்கும் சிறபங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
சமயக்குரவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ஒவ்வொரு வாயில் வழியாக தில்லை சிதம்பரம் கோவிலுக்குள் எழுந்தருளினர் என்று வரலாறு கூறுகிறது.
மேற்குக் கோபுர வாயில் வழியாக திருநாவுக்கரசரும், தெற்குக் கோபுர வாயில் வழியாக திருஞானசம்பந்தரும், வடக்கு கோபுர வாயில் வழியாக சுந்தரரும், கிழக்குக் கோபுர வாயில் வழியாக மாணிக்கவாசகரும் வந்து தில்லைச் சிற்றம்பலத்திலுள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர்.
தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்).
அர்த்தசாம வழிபாடு முடிந்தவுடன் எல்லக் கோவில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது.
திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை.
நடராஜப் பெருமானுக்கு உள்ள திருச்சபைகள் ஐந்தில் சிதம்பரம் தலம் கனகசபையாகும்.
மற்றவை
1) திருவாலங்காடு - இரத்தினசபை,
2) மதுரை - வெள்ளிசபை,
3) திருநெல்வேலி - தாமிரசபை,
4) திருக்குற்றாலம் - சித்திரசபை.
இவையன்றி தில்லை சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானுக்கு இக்கோவிலேயே ஐந்து சபைகள் இருக்கின்றன.
அவை முறையே
1)சிற்சபை (சிற்றம்பலம்),
2) கனகசபை,
3) இராசசபை,
4) தேவசபை,
5) நிருத்தசபை ஆகியவையாகும்.
சிற்சபை (சிற்றம்பலம்) நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடமாகும்.
முதலாம் ஆதித்த சோழனுடைய மகன் முதல் பராந்தக சோழன் இச்சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்தான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் "லெய்டன்" நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன.
கனகசபை (பொன்னம்பலம்) சிற்றம்பலத்திற்கு முன் அமைந்துள்ளது.
இங்கு ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது.
இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்த சோழன், கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்து உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று தெய்வச் சேக்கிழார் *"இடங்கழி நாயனார்"* வரலாற்றில் கூறுகின்றார்.
தில்லைக் கோயில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் இப்பொன்னம்பலத்தைப் பொன்னால் வேய்ந்தான் என்று கூறுகின்றது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், இருபத்தோராயிரம் பொன் ஓடுகளை, எழுபத்திரண்டாயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர்.
நாம் தினம், இருபத்தோராயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், எழபத்திரண்டாயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
இராசசபை என்பது ஆயிரங்கால் மண்டபம். இங்கு ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாக்களில் நடராஜப் பெருமான் இரவில் இம்மண்டபத்தில் எழுந்தருளி மறுநாள் காலை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
தேவசபை பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.
இதனின் விமானம் செம்பினால் வேயப்பட்டுள்ளது.
நிருத்தசபை நடராஜப் பெருமானின் கொடிமரத்திற்குத் தென்புறம் மிகவும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
ஊர்த்துவ பெருமானின் திருமேனிதான் இங்கு இருக்கிறது.
மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி தனிக்கோவிலாக பிரகாரத்துடன் அமைந்து விளங்குகிறது.
கோவிலின் வடமேற்குத் திசையில் அம்பிகை சிவகாமசுந்தரி கோவிலை ஒட்டியும், வடக்கு கோபுரத்தை ஒட்டியும் முருகன் கோவில் அமைந்து விளங்குகிறது.
ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானை இருபக்கமும் நிற்க மயிலின் மீது எழுந்தருளி காட்சி தருகிறார்.
முருகனின் திரு உருவம் ஒரே கல்லினால் அமைந்தது சிறப்பானதாகும்.
*சிதம்பர ரகசியம்:*
சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும்.
சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில்.
இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இருக்காது.
தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும்.
மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.
அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது.
இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற இத்தில்லையாகும்.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும், சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது.
அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் இங்கு நடக்கும் இரு சிறப்பு வாய்ந்த பெரும் விழாக்களாகும்.
சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
நூற்று வைணவ திவ்யதேசங்களில் ஒன்று திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளேயே அமைந்திருக்கிறது.
நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம்.
இரண்டு சந்நிதிகளும் அருகருகே அமைந்திருப்பது தில்லை கோவிலின் சிறப்பாகும்.
*நடராஜர் உருவான விதம்:*
வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது.
சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைக் கேட்கப் பெற்றான்.
அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான்.
தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்.
அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்.
ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே நிலை நீடித்தது.
அவர்கள், மன்னனிடம் தங்கள் இயலாமையைத் தெரிவித்தனர். மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது.
"என்ன செய்வீர்களோ தெரியாது… சிலை செய்தாக வேண்டும். அதுவும் இன்று மாலைக்குள் செய்தாக வேண்டும்.
இல்லாவிட்டால், உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன்…' என, எச்சரித்து விட்டு போய் விட்டான்.
அவர்கள் மீண்டும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தனர். சிலையைச் செய்ய முடியவில்லை.
தங்கள் வாழ்வு இறுதிக் கட்டத் திற்கு வந்துவிட்டது என்று பயந்து போயிருந்த நிலையில்,....ஒரு முதியவரும், மூதாட்டியும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர்.
அப்போது, சிற்பிகள் ஐந்து வகை உலோகங்களை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
வந்த பெரியவர்கள், அதைக் கஞ்சி என நினைத்து, தங்களுக்கு பசிப்பதாகவும், கஞ்சியை ஊற்றும்படியும் கேட்டனர்.
எரிச்சலில் இருந்த சிற்பிகள், *"குடியுங்கள்… நிறைய குடியுங்கள்*. நாங்கள் சாகும் நிலை வந்துவிட்டது. சாகுகும் போது, உங்களுக்கு தானம் செய்த புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டு போகிறோம்…' என்று சொல்லி, ஒரு செம்பில், நாலு அகப்பை உலோகக் கலவையை ஊற்றிக் கொடுத்தனர்.
முதியவர்கள் அதை வாங்கி குடித்தனர். உடனே நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையுமாக மாறி, சிலை வடிவில் காட்சியளித்தனர்.
தங்கள் உயிரைக் காக்க வந்த முதியவர்கள் சிவனும், பார்வதியும் என்றறிந்த சிற்பிகள், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
சிலை அமைந்த வரலாற்றை மன்னனுக்கு எடுத்துக் கூறினர் சிற்பிகள்.
மன்னனும், இறைவனின் திருவருளை வியந்து, சிதம்பரத்தில் கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்தான்.
பின்னாளில், அந்நியர் படையெடுப்பின் போது, கோவில்களில் உள்ள சிலைகள் நொறுக்கப்பட்டன.
அபூர்வமான நடராஜர் சிலை பாழ்பட்டு விடக் கூடாது என்பதால், தில்லை வாழ் அந்தணர்களும், ஆயிரத்தெட்டு மடாதிபதிகளும் சிலையைஎடுத்துக் கொண்டு, ஊர் ஊராகச் சென்றனர்.
கடைசியாக, மலையாள தேசத்துக்கு எடுத்துச் சென்று, ஒரு ஆலமரப்பொந்தில் ஒளித்து வைத்தனர்.
இதனால், அந்த ஊருக்கு, *"ஆலப்புழை'* என்று பெயர் ஏற்பட்டது.
அந்நியர்கள் சென்றதும், அந்தச் சிலையை அவ்வூரிலுள்ள அம்பலத்தில் (கோவிலில்) வைத்து பூஜை செய்தனர்.
அந்த இடத்துக்கு, *"அம்பலப்புழை'*என்று பெயர் ஏற்பட்டது.
இதுபோல மற்றுமொரு முறை, அம்பலப்புளி புளியமரப் பொந்தில் சிலகாலம் இருக்கப் பெற்று மீண்டும் ஒருமுறை மீண்டு வந்தார்.
இவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து வந்தவர்தான் இந்த நடராஜர் சிலை.
சிவாலயங்களில் உள்ள நடராஜர் சன்னதிகளில், ஆண்டில் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அதில், ஆனி உத்திர நாளும் ஒன்று. இந்த நன்னாளில், நடராஜப் பெருமானை வணங்கினால், பிறப்பற்ற நிலை கிடைக்கும் என்பது உண்மை.
*🌸கோபுரங்கள்:🌸*
இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் இருக்கின்றன. இவை ஏழு நிலைகளைத் தாங்கிக் கொண்டு வணங்கச் செய்விக்கின்றன.
கோபுரத்தின் கீழ்ப்பகுதி தொன்னூறு அடி நீளமும், அறுபது அடி அகலமும்,நூற்று முப்பத்தைந்து அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது.
இக்கோபுரத்தின் வாசலின் உயரம் நாற்பது உடையவையாகும்.
*🌸விநாயகர் சந்நிதிகள்:🌸*
முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர்,
பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி,
மோகன கணபதி,
கற்பக விநாயகர்,
நர்த்தன விநாயகர்,
திருமூல விநாயகர் என பல்வேறு விநாயகர்கள் சந்நிதிகள் இக் கோயிலில் இருக்கின்றன.
சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரே கூறினார்.
*🌸கோவில்கள்:🌸*
சிதம்பரம் நடராசர் கோவிலில், கோவிலுக்குள் பல்வேறு கோயில்கள் அமைந்திருக்கின்றன.
சிவகாமசுந்தரி அம்மன் கோவில், மூன்றாவது பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் சிவகாமசுந்ததரி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இச்சந்நதி அருகே யமன் மற்றும் சித்திரகுப்தனுக்கு சிலைகள் அமைந்திருக்கின்றன.
பாண்டிய நாயகர் கோவில், சிவகாம சுந்தரி கோவிலின் வடக்கே, பாண்டிய நாயகர் கோவில் அமைந்துள்ளது.
இது முருகன் கோவிலாகும். இக்கோவிலில் ஆறுமுகம் கொண்ட முருகன், வள்ளி மற்றும் தேவசேனாவுடன் உள்ளார்.
*🌸நவலிங்க கோவில்:🌸*
நவகிரகங்களால் வழிபடப்பட்ட இலிங்கங்கள் அனைத்தும் இக்கோவிலில் உள்ளன.
*🌸சபைகள்:🌸*
சித்சபை,
கனகசபை,
நடனசபை,
தேவசபை,
ராஜசபை ஆகிய ஐந்து சபைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்திருக்கின்றன.
பேரம்பலம் என்பது தேவசபை என்றும்,
நிருத்த சபை என்பது நடனசபை என்றும்,
கனகசபை என்பது
பொன்னம்பலம் எனவும் அறியப்பெறுகிறது.
பொன்னம்பலத்தில் இருபத்தெட்டு தூண்கள் உள்ளன, இவை இருபத்தெட்டு ஆகமங்களையும், சிவனை வழிபடும் இருபத்தெட்டு வழிகளையும் குறிக்கின்றன.
இந்த இருபத்தெட்டு தூண்களும் அறுபத்து நான்கு மேற் பலகைகளை கொண்டுள்ளது.
இப்பலகைகள் அறுபத்து நான்கு கலைகளை குறிக்கின்றது. இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள் மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிப்பனவாகும்.
பொன்னம்பலம்" சற்று இடது புறமாக இருக்கிறது, இது நம் உடலின் இதயத்தை குறிப்பதாகும்.
இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை *"பஞ்சாட்சர படி"* என்று அழைக்கப்படுகின்றது,
அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது.
"கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது.
இந்த கனக சபையைத் தாங்க நான்கு தூண்கள் உள்ளன, இது நான்கு வேதங்களை குறிக்கின்றது.
*🌸தீர்த்த இருப்பிடங்கள்:🌸*
பரமானந்த கூபம் - நடராசர் கோயிலின் கிழக்கில் அமைந்துள்ளது.
குய்யதீர்த்தம் - நடராசர் கோயிலின் வடகிழக்கே கிள்ளைக்கு அருகே அமைந்துள்ளது.
புலிமடு - சிதம்பரம் கோயிலின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
வியாக்கிரபாத தீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு மேற்கில் இளமையாக்கினார் கோயிலிக்கு எதிரே அமைந்துள்ளது.
அனந்த தீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு மேற்கிலுள்ள திருவனந்தேச்சுரத்துக்கு கோயிலில் அமைந்துள்ளது.
நாகச்சேரி - அனந்தேச்சுரத்துக்கு மேற்கில் அமைந்துள்ளது.
பிரமதீர்த்தம் - நடராசர் கோயிலுக்கு வடமேற்கே இருக்கும் திருக்களாஞ்சேரியில் கோயிலில் அமைந்துள்ளது.
சிவப்பிரியை - நடராசர் கோயிலுக்கு வடக்கே உள்ள பிரமசாமுண்டி கோயிலின் முன் அமைந்துள்ளது.
திருப்பாற்கடல் - சிவப்பிரியைக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது.
பொற் கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றது.
அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள பதினெட்டு தூண்கள், பதினெட்டு புராணங்களையும் குறிப்பனவை.
*🌸வழிபாடு:🌸*
உலகில் உள்ள அனைத்து சிவகலைகளும் சிதம்பரம் நடராசர் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் மீண்டும் கோவிலை வந்தடைகின்றன. (இதில் திருவாரூர் தியகராஜாவை தவிர )
இதன் காரணமாக, மற்ற சிவாலயங்களை விட தாமதமாக இக்கோவிலில் அர்த்த சாம பூசை நடத்தப் பெறுகின்றனர்.
இவ்வாறு அனைத்து சிவகலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்தசாம பூசையில் கலந்து கொள்வது ஈடானதாகக் கருதப்படுகிறது.
*🌸ஆறு கால:🌸*
சிதம்பரம் நடராசருக்கு நாள்தோறும் ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.
அவை...
காலை சந்தி,
இரண்டாங் காலம்,
உச்சி காலம்,
சாயங் காலம்,
ரகசிய பூசை காலம்,
அர்த்த சாமம்.
*🌸ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள்:🌸*
ஒரு நாளில் ஆறு கால பூசைகள் நடைபெறுவது போல தேவர்கள் செய்யும் பூசையாக ஆண்டுக்கு ஆறு பூசைகள் சிதம்பரம் கோவிலில் நடைபெறுகின்றன. அவை...
சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலை வேளையில் அபிசேகம்.
ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் நடைபெறும் அபிசேகம்.
ஆவணி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் நடக்கும் அபிசேகம்.
புராட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் நடத்தப்பெறும் அபிசேகம்.
மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் நடக்கும் அபிசேகம்.
மாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் நடந்தேறும் அபிசேகம்.
*🌸விழாக்கள்:🌸*
சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா.
நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் *நடரானராசன்* எனப்படுகிறது.
இதை மக்கள் சொல்லிச் சொல்லி மருவி நடராசன் எனவும் அழைக்கும்படியாகிவிட்டது.
சிவபெருமானின் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.
சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது.
இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக இங்கு வந்து அரங்கேற்றம் வழங்குகின்றனர்.
கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.
பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும்.
சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.
*🌸நூல்கள்:🌸*
தமிழகத்திலுள்ள கோவில்களில் அதிகமான நூல்களினாலும், பாடல்களினாலும் போற்றப்படுகின்ற கோவிலாக சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளது.
இத்தலத்தினைப் பற்றி நாற்பத்தி மூன்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
தேவாரம்- பதினோறு திருப்பதிகங்கள்.
திருவாசகம்- இருபத்தைந்து திருப்பதிகங்கள்.
திருக்கோவையார்,
திருமுறைக் கண்ட புராணம்,
திருவிசைப்பா,
திருபல்லாண்டு,
திருமந்திரம்,
கோயில் நான்மணிமாலை,
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்,
பெரியபுராணம்,
சிதம்பரம் மணிக்கோவை,
சிதம்பரச் செய்யுட் கோவை,
சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை,
தில்லைக்கலம்பகம்,
தில்லையுலா,
மூவரு லா,
தில்லை யமகவந்தாரி,
சிதம்பரவெண்பா,
சிதம்பர சபாநாத புராணம்,
பாண்டிய நாயக முருகன் பிள்ளைத் தமிழ்,
புலியூர் வெண்பா,
நடேசர் திருவருட்பா,
நடராச திருவருட்பா,
நடராசர் சதகம்,
நடராசர் திருப்புகழ்,
சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ்,
சேக்கிழார் புராணம்,
சிவகாமியம்மைப் பதிகம்,
தில்லை கற்பக விநாயகர் வெண்பா அந்தாதி,
தில்லை நவமணி மாலை,
சிதம்பர விலாசம்,
பரமரகசிய மாலை,
திருவருட்பா,
தில்லைத் திருவாயிரம்,
புலியூர் புராணம்,
சிதம்பரப் புராணம்,
நடராஜர் காவடிச்சிந்து,
நடராசர் பத்து,
நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்,
சிதம்பரம் பட்டியல்,
முத்துத்தாண்டவர் கீர்த்தனைகள்,
சிதம்பரம் சிவகாமியம்மை பஞ்சரத்தினம்,
தில்லை பாதி நெல்லை பாதி ஆகியவை.
*☘தேவாரம்:☘*
1.☘பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே.
2.☘கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தநான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.
3.☘கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினே னின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள் கூடநீ யாடு மாறே.
4.☘சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை யடிமை செய்ய
எந்தைநீ யருளிச் செய்யா யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி யோவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலு மாட அடியிணை யலசுங் கொல்லோ.
5.☘கண்டவா திரிந்து நாளுங் கருத்தினா னின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த விறைவநீ யாடு மாறே.
6.☘பார்த்திருந் தடிய னேனான் பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே யென்ப னுன்னை மூவரின் முதல்வ னென்பன்
ஏத்துவா ரிடர்க டீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.
7.☘பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே.
8.☘மனத்தினார் திகைத்து நாளு மாண்பலா நெறிகண் மேலே
கனைப்பரா லென்செய் கேனோ கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பா னடியனேன் வந்த வாறே.
9.☘நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று வழகநீ யாடு மாறே.
10.☘மண்ணுண்ட மால வனு மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.
திருச்சிற்றம்பலம்.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரை தலங்களின் நாளைய தலப்பதிவு *பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம்.*
-------------------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment