Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
வேதார்த்த சங்க்ரஹம்-8
தந்தை "எது ஒன்றை அறிந்தால் எல்லாம் தெரியவருமோ அதை அறிந்துகொண்டாயா," என்று கேட்க ச்வேதகேது " அது எப்படி சாத்தியம் " என்று கேட்கிறான். அதற்கு அவர் மூன்று உதாரணங்கள் காட்டி விளக்குகிறார்.
யதா சௌம்ய ஏகேன ம்ருத்பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விக்ஞாதம் ஸ்யாத்
களிமண்ணிலிருந்து அதனால் ஆனா எல்லாப் பொருள்களும் தெரிய வருகின்றன.
வாசாரம்பணம் விகார: நாமதேயம் மிருத்திகா இத்யேவ ஸத்யம்
வித்தியாசம் பெயரிலும் உருவத்திலும் தான். எல்லாம் மண் என்பதே உண்மை.
இதே போல பொன், பொன்னாலான பொருட்கள். இரும்பு, இரும்பிநாள் ஆனா பொருட்கள் என்று வெவ்வேறு உதாரணங்களைக் கூறுகிறார்.
ஒரு குயவனுக்கு எல்லா மண் பாத்திரங்களும் மண்ணே. ஒரு பொற்கொல்லனுக்கு எல்லா நகைகளும் பொன்தான். அதே போல கருமானுக்கு எல்லாக் கருவிகளும் இரும்பு.
இதைத்தான் திருமூலர் மரத்தில் மறைந்தது மாமத யானை என்ற சொற்களால் கூறுகிறார்.
பார் முதல் பூதம் என்கிற பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுலகைக் காணும்போது பரம்பொருள் தெரிவதில்லை . பரம்பொருளைக் காண்போர்க்கு இவ்வுலகம் தெரிவதில்லை. எல்லாம் பரம்பொருளாகவே தெரிகிறது என்பது இதன் கருத்து. இதுதான் பிரம்மஞானம் . இதைத் தெரிந்துகொண்டாயா என்று கேட்கிறார்.
ஸ்வேதகேது இதை அறியவில்லை என்றதும் அவரே சொல்ல ஆரம்பிக்கிறார்.
"ஸதேவ ஸௌம்ய இதம் அக்ர ஆஸீத், ஏகம் எவ அத்விதீயம்
சௌம்ய- அன்பு மகனே
அக்ரே – முதலில்
இதம்- இந்த பிரபஞ்சம்
ஸத் ஏவ- பிரம்மம் ஆகவே
ஆஸீத்- இருந்தது
(ஸத், தத், ஓம் என்ற சொற்கள் பிரம்மத்தை குறிக்கின்றன.)
ஏகம் ஏவ- அது மட்டும்தான் இருந்தது
அத்விதீயம் – அதைத்தவிர வேறொன்று இல்லை
அக்ரே , முதலில் என்றால் எதற்கு முதலில்? படைப்பிற்கு முதலில் என்று அர்த்தம். அதாவது இந்த உலகம் படைப்பிற்கு முன் பிரம்மமாகவே இருந்தது என்று பொருள். ஏகம் ஏவ அத்விதீயம் ஒன்றுதான் இருந்தது இன்னொன்று இல்லை என்பதனால் அதிலிருந்துதான் எல்லாம் ஏற்பட்டது என்று பொருள்.
உதாரணமாக ஒரு பானை செய்வதற்கு மண் வேண்டும். இது முதல் காரணம் அல்லது உபாதான காரணம். (material cause_)
குயவன் வேண்டும். இது நிமித்த காரணம். ( effiecient cause ) அதைசெய்யும் கருவி வேண்டும். உதவிக்காரணம் ( auxiliary cause)
இங்கு பிரம்மத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என்பதனால் பிரம்மத்திலிருந்து, பிரம்மத்தினாலேயே பிரம்மத்தைக் கொண்டே செய்யப்பட்டது உலகம் என்று ஆகிறது.
சரி பிரம்மம் மட்டுமே இருந்தது எதனால் உலகம் உண்டானது?
தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய என்கிறார். அதாவது பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது. இதன் மூலம் மேற்கூறிய மூன்று காரணங்களும் பிரம்மமே என்று ஆகிறது.
வேதார்த்த சங்க்ரஹம்-9
அத்வைதத்தின் விளக்கம் என்னவென்றால்., எப்படி பானை முதலியவை பெயர், உருவம் இவைகளினால் வேறுபட்டாலும் அத்தனையும் மண் என்பதுதான் உண்மையோ அதேபோல உலகத்தில் உள்ளவை யாவும் பெயர் , உருவம் இவற்றில்தான் வேறு உண்மையில் பிரம்மம்தான்.
எப்படி கயிறைப் பாம்பாகப் பார்க்கிறோமோ அதேபோல பிரம்மத்தை உலகமாகக் காண்கிறோம். பிரம்மம்தான் சத்யம் என்பதுதான் ம்ர்த்திகேத்யேவ சத்யம் என்னும் வாக்கியத்தின் பொருள்..இதை எப்படிப் புரிந்துகொள்வது?
ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். சர்க்கரையில் நிறைய பொம்மை செய்வதைப் பார்த்திருக்கிறோம். விதவிதமான பொருள்கள் மிருகங்கள் பட்சிகள் முதலியன. ஆனாலும் நமக்கு எல்லாம் சர்க்கரையாகத்தானே தெரிகிறது? அதே போல் பிரம்மஞாநிகளுக்கு உலகம் ப்ரம்மமாகத்தான் தெரிகிறது.
குழந்தைகள் அந்த பொம்மைகளை எல்லாம் வாயில் போட்டாலோ உதிர்த்தாலோ ஒரு நிமிடத்தில் சர்க்கரையாகமாறிவிடும் என்பது தெரியாமல் நிஜம் என்று நினைத்து, என்னுடையது குடம், உன்னுடையது மீன், அவனுடையது வாத்து என்று நினைப்பதுபோல நாம் உலகத்தை வேறுபடுத்திப் பார்க்கிறோம்,
.இதுதான ஏகவிக்ஞானேன சர்வ விக்ஞானம், அதாவது எது ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகிறதோ என்ற வாக்கியத்தின் பொருள்.
பிரம்மமே மாயையின் மூலம் பலவாகத் தெரிகிறது. இதுதான் தத் ஐக்ஷத பஹுசஸ்யாம் ப்ரஜாயேய , பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது என்பதன் அர்த்தம்.
இதற்கு ராமானுஜர் கூறும் பதில்,
எதுவும் உண்மை இல்லை என்றால் அவைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏகவிக்ஞானேன சர்வவிக்ஞானம், எது ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் விளங்குமோ என்பதற்கு அர்த்தமே இல்லை
.
.பிரம்மத்தை ஆன்மாவாகக் கொண்டதனால் எல்லாம் உண்மையில் பிரம்மமே என்ற பொருளில்தான் ஏகவிக்ஞானேன சர்வ விஞ்ஞானம் என்பது பொருந்தும்.
எப்படி மண்ணாலான பொருள்கள் பெயர் உருவம் இவை இன்றி மண்ணாகவே இருந்தனவோ அவ்வாறே இந்த உலகம் பிரம்மத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் இருந்தன . அப்போது பிரம்மம் ஒன்றுதான் இருந்தது. இதுதான் ம்ருத்திகா இத்யேவ சத்யம் என்பதன் பொருள்.
பிரம்மம்தான் பிரபஞ்சத்தின் உபாதான், நிமித்த , உதவிக் காரணமாக இருப்பதால் பிரம்மத்தை தெரிந்துகொண்டால் இந்த பிரபஞ்சத்தை தெரிந்துகொள்ளலாம் என்று பொருள்.
எல்லாம் பிரம்மத்தில் சூக்ஷ்ம வடிவில் உள்ளன. அது ஸ்தூல வடிவத்தில் தோன்றுவதே தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாஎய என்ற வாக்கியத்தின் பொருள்.
சரி ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.
வேதார்த்த சங்க்ரஹம்-10
ஸ்ருஷ்டி எப்படி ஏற்பட்டது எனபதை அடுத்ததாகப் பார்ப்போம்.
ராமானுஜரின் விளக்கத்தின்படி,
தத் ஐக்ஷத பஹு ஸ்யாம் பிரஜாயேய
பிரம்மம் பலவாக ஆக சங்கல்பித்தது.
ஸ்வாம்ச ஏகதேசாதேவ வியதாதி பூதானி ஸ்ருஷ்ட்வா
தன்னுடைய ஒரு அம்சத்தினாலேயே ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களை தோற்றுவித்து,
சாந்தோக்யத்தில் தத் தவம் அஸி என்ற பகுதியில் ஆகாயம் முதலான பூதங்களின் சிருஷ்டி சொல்லப்படவில்லை.
அங்கே 'தத் ( பிரம்மம்) தேஜோ அஸ்ருஜத ,' அக்னியை சிருஷ்டித்தது என்றுதான் காணப்படுகிறது. அதாவது பஞ்ச பூதங்களில் பிரத்யக்ஷமாகப் பார்ப்பது நெருப்பு முதலான மூன்றுதான். ஆகாயத்திற்கும் வாயுவிற்கும் உருவம் கிடையாது. ஆதலால் முதல் இரண்டிற்கும் பல உருவம் கிடையாது.
அக்னியிலிருந்து நீர் அதிலிருந்து மண் இப்படி ஸ்ருஷ்டிக்ரமம் சொல்லப்படுகிறது.
அதற்குப்பிறகு பிரம்மம் சங்கல்பித்தது.
'அஹம் இமா: திஸ்ரா: தேவதா: அனேன ஜீவேன ஆத்மநா அனுப்ரவிச்ய நாமரூபே வ்யாகரவாணி' (சாந்தோக்ய உப.)
இதன் பொருள், 'இந்த மூன்றினுள் அவற்றின் ஜீவனாகப் புகுந்து பெயர் ,உருவம் இவற்றை கற்பிப்பேன்.'
இவ்வுலகில் உள்ளவை எல்லாம், நம் சரீரம் மனம் புத்தி இவைகளும் கூட பஞ்ச பூதங்களினால் ஆனது ஆகையால் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது பிரம்மமே என்று ஆகிறது.
இப்போது ஜடவஸ்துக்களின் உளதாம் தன்மை (existence) அவற்றின் உள் பிரம்மம் அந்தர்யாமியாக இருப்பதனால் தான் என்று அறிகிறோம்.
இப்போது புலன் உணர்ச்சி கொண்ட உயிர்களும் உலகத்தில்(sentient) உள்ளவைதானே ? அவைகளுக்கும் பிரம்மமே ஜீவனாக இருக்கிறது அல்லவா? அத்தகைய ஜீவராசிகள் பிரம்மத்தின் உடல்லகவும் பிரம்மமே அவைகளின் உயிராகவும் உபநிஷத் வாக்கியங்கள் மூலம் அறிகிறோம்.
'எது ஜீவாத்மாவின் உள் இருந்துகொண்டு அதை நடத்துகிறதோ, எதை ஜீவாத்மா அறியவில்லையோ,எதற்கு ஜீவாத்மா சரீரமாக உள்ளதோ அதுதான் உண்மையானஆத்மா, அந்தர்யாமியாகவும் நித்யமாகவும் இருக்கிறது. அதுதான் ப்ரஹ்மம்.'(brhd.up. 5.7)
அதனால் எல்லாவற்றிற்கும் பிரம்மமே அந்தராத்மா என்று அறிகிறோம். 'ப்ரம்மாத்மகானி தானி ஸர்வாணி.'
ஆகையால் தேவர், மனுஷ்யர், யக்ஷர், ராக்ஷசர், பசு, ம்ருகம், பக்ஷி, வ்ருக்ஷம், கோடி, கட்டை, கல், புல், பானை, துணி, முதலிய எல்லா சொற்களும் அதனதன் உருவம், குணம் இவைகளால் அவற்றின் மூலமான பிரம்மத்தையே சுட்டுகின்றன.
இதை எளிதாக விளக்கலாம். இது ஒரு பசு என்று சொல்லும்போது நாம் அதன் உருவத்தை மட்டுமா குறிப்பிடுகிறோம்? அதன் குணங்கள், தன்மை மேலும் அதை ஒரு உயிருள்ள ஜந்துவாக அல்லவா காண்கிறோம்?
அதே போல இவன் தான் ராமசாமி அன்று சொல்லும்போது அவன் உருவம் மட்டுமா நம் மனதில் தோன்றுகிறது? அதற்கு அவன் படமே போதும். அவன் யார் எப்படிப்பட்டவன் என்ற எல்லா விஷயங்களும் நம் மனதிற்கு வருகின்றது. மேலும் அவனுடைய தேகத்தைத் தாண்டி அவன் ஒரு உயிருள்ள மனிதன் என்னும்போது தேகம் மனம் புத்தி எல்லாவற்றிற்கும் மேல் அவன் உயிர் அல்லது ஆன்மா என்பது தானே உண்மை. இல்லாவிட்டால் அவன் என்பது போய் அது என்றாகிவிடுமே.
அதனால் பெயர் உருவம் குணம் மற்ற சம்பந்தங்கள் எல்லாவற்றிற்கும் மேல் ஆன்மா என்பதே முக்கியம் ஆகிறது. அந்த ஆன்மாவிற்குள் அந்தராத்மாவாக இருப்பதே பிரம்மம்.
\அடுத்து சாந்தோக்யத்தில் வருவது,
ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் ஸ ஆத்மா தத் தவம் அஸி ச்வேதகேதோ என்று முடிக்கிறார் உத்தாலகர்.
இதன் பொருள், இந்த உலகத்தில் உள்ளது எல்லாம் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கொண்டது . அதுதான் உண்மை,. நீ உண்மையில் பிரம்மமே .
,
'க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ச ஜகத் தஸ்ய சரீரம். '
'அதனால் பிரம்மம்தான் அகில உலகத்துக்கும் ஆத்மா. அகில உலகமும் பிரம்மத்தின் சரீரம் ' 'த்வம்' என்னும் சப்தத்தால் கூறப்படும் 'நீ' பிரம்மத்தினுடைய படிவமே. இதனால் எல்லாம் பிரம்மத்தையே ஆத்மாவாகக் கொண்டவை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.
'தத் த்வம் அஸி' என்ற மஹாவாக்கியத்தின் பொருள், நீ என்ற ஜீவன் உன் அந்தராத்மாவான பிரம்மமே என்பது.
இந்த சரீர சரீரி பாவம்அதாவது பிரம்மம் தான் ஆத்மா ஜீவன் , ஜகத் இவை அதன் உடல் என்பதை பின்னும் விவரிக்கிறார் . அதைப் பின்னர் காண்போம்.
வேதார்த்த சங்க்ரஹம் -11
எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாக இருப்பது ப்ரம்மமே என்பதனால் எப்படி ஒருவரின் பெயர் அவருடைய உடலை மட்டும் குறிக்காமல அவருடைய ஆத்மாவை குறிக்குமோ அதுபோல எந்தப் பொருளை குறிப்பிட்டாலும் அது பிரம்மத்தையே குறிக்கிறது.
இது எப்படி என்றால் இப்போது ஒருவருடைய தந்தை இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்பா போய்விட்டார் என்று சொல்கிறோம். அப்பா என்ற சொல் அவர் உடலை அல்ல அவர் ஆத்மாவைக் குறிக்கிறது என்று தெரிகிறது. அதே போல இவ்வுலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அந்தராத்மாவாக உள்ள பிரம்மம்தான் எல்லாவற்றினாலும் குறிக்கப்படுகிறது.
'யஸ்ய ஆத்மா சரீரம்' என்ற உபநிஷத் வாக்கியமும் இதைத்தான் கூறுகிறது. அதனால் 'ப்ரம்மாத்மகானி சர்வாணி' எல்லாவிதமான உயிருல் உயிரில்லாத வஸ்துக்களும் பிரம்மத்திற்கு சரீரமாகவும் பிரம்மமே அவற்றின் ஆத்மாவாகவும் இருக்கிறது. அதனால் சொற்களின் மூலம் அறியப்படுவது எல்லாம் முடிவில் பிரம்மத்தையே சுட்டுகின்றன.
'.ஸதேவ சௌம்ய இதம் அக்ர ஆஸீத்' என்ற சாந்தோக்ய உபநிஷத் விளக்கத்தில் பிரம்மமே ஜகத்காரணம் என்று பார்த்தோம். அதற்குப்பிறகு 'ஸந்மூலா: ஸௌம்ய இமா: ஸர்வா: பிரஜா: ஸதாயதனதா: ஸத்ப்ரதிஷ்டா:' (சாந்தோக்ய-6.8., 4-6), இவை எல்லாம் ஸத், அதாவது பிரம்மத்தில் இருந்து தோன்றின, பிரம்மத்தில் இருக்கின்றன, பிரம்மத்தால் நிலைநிறுத்தப் படுகின்றன , என்ற வாக்கியம் காணலாம்.
எப்படி உடலுக்கு உயிர் காரணமோ , உயிரினால் உடல் வாழ்கிறதோ , உயிர் உடலை தாங்குகிறதோ அதேபோல பிரம்மம் இந்த உலகத்திற்கு உயிர் அல்லது ஆத்மாவாக இருக்கிறது,
எப்படி உடல் உயிரின் உடைமையோ அதே போல உலகம் பிரம்மனின் உடைமை.
ராமானுஜர் மேலும் சொல்கிறார்
'ஏதத் ஆத்ம்யம் இதம் ஸர்வம் தத் சத்யம்' என்ற வாக்கியம் 'தத் தவம் அஸி' என்பதற்கு முன்பு காணப்படுகிறது. இதன் பொருள், பிரம்மம் ஜகத் காரணம் என்பதனால் இந்த உலகம் உண்மை ஏனென்றால் பிரம்மமே அதன் அந்தராத்மாவாக இருக்கிறது. பிறகு 'தத் தவம் அஸி' அந்த பிரம்மம்தான் உண்மையில் நீ என்று சொல்லப்படுகிறது.
க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ஸ எவ ஆத்மா க்ருத்ஸ்னம் ஜகத் தஸ்யசரீரம். அதாவது பிரம்மம் அகில உலகத்திற்கும் ஆத்மாவாக உள்ளது. அகில உலகமும் அதன் சரீரம்.
அதனால் தத் அந்த பிரம்மம் த்வம் அஸி நீதான். எப்படி என்றால் நீ என்பது எப்படி உன் உடலைக் குறிக்காமல் உன் ஆத்மாவைக் குறிக்குமோ அது போல உன் ஆத்மாவிற்கும் அந்தராத்மாவான பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
தத் த்வம் அஸி என்பது ஏன் பிரம்மஜீவ ஐக்யத்தைக் குறிப்பதாக இருக்கக் கூடாது? ஏன் சரீர சரீரி பாவத்தை கொண்டுவரவேண்டும் என்றால் அதற்கு ராமானுஜர் என்ன சொல்கிறார் என்று பிறகு பார்க்கலாம்.
No comments:
Post a Comment