Tuesday, October 24, 2017

Thiruparankundram temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
________________________________________
*🔔அறுபடை வீடு தொடர்🔔*

*திருப்பரங்குன்றம்.*

முதல்படை வீடு. இங்கு சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.

முருகன் அமர்ந்த கோலத்திலுடன் இங்கு
காண்பது சிறப்பு.

இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார்.

சிவனின் பெயரால் இத்தலம் *'திருப்பரங்குன்றம்'* எனப்படுகிறது.

முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________
*திருச்செந்தூர்*
இரண்டாம் படைவீடு. 

இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்றும் பெயர் கொண்டது.

முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடம் இது.

இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்வார்கள் ஏனையோர்கள்..

அதனால்தான் இந்த முருகனின் திருவடிகளை வணங்கினால் பிறவிப் பெருங்கடலை கடக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளார்கள் பக்தர்கள்.
__________________________________________
*பழநி*
மூன்றாம் படைவீடு.

மருந்தே மலையாக அமைந்த தலம் இது.

பழநியில் கால் வைத்தாலே பாதி நோய் தீரும்.

மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை நான்கு மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி தரிசித்து, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கப் பெறுவதுடன், வாழ்க்கையை உணரும் ஞானஒளியையும் பெற்று விடலாம்.

முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் போன்றவற்றை சாப்பிட்டால் நோய் தீரும் என்பது உண்மை.

பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது முருகன் சிலையினால்தான்.

போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது இந்த தண்டபாணி சிலை. (இச்சிலை முழுமையும் மூலிகை திடத்தால் ஆனவை. துளியேனும் கற்கள் இல்லை. )

இந்த மூலிகைச் சிலையிலிருந்து அபிஷேகிக்கப்பட்ட நீரை அருந்துவதால், நம்மில் தெரியாதிருக்கும் நோய், நமக்குத் தெரியாமலே ஒழிந்து போகிறது.

நோய் இருப்பது தெரிந்து, இவ்வவிஷேக தீர்த்தத்தை அருந்த சத்தியமாக நோய் தீரப்பெறுகிறது.
_________________________________________
*சுவாமிமலை*
நான்காம் படைவீடு.

சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார்.

தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன்.

அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார்.

அதனால் *'சிவகுருநாதன்'* என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.
________________________________________
*திருத்தணி*
ஐந்தாம் படைவீடு.

பொதுவாக அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், இங்கே மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார்.

சூரனுடன் போரிட்டபோது ஏற்பட்ட காயம் இது.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார்.

கோபம் தணித்த இடம் என்பதால் *'தணிகை'* என இவ்வூர் பெயர் பெற்றது.

அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது.

இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.
________________________________________
*சோலைமலை.*
ஆறாவது படைவீடு.

அவ்வைக் கிழவியிடம், 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.

உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது.

அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தார் முருகன்.

தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். 

                 *🔔1🔔*

அறுபடைவீட்டில்......
*🔔திருப்பரங்குன்றம்*

ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது.

இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும்.

இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.

*🔔லிங்க வடிவில் மலை:* திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை.

இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார்.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது.

இம்மலையின் உயரம் சுமார் நூற்று தொன்னூறு மீட்டராகும்.

இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

*🔔தல அருமை:*
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார்.

தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோதுமுருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.

புனிதமான மந்திரப்
பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள்.

சிவபெருமான் – பார்வதிதேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.

இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.

எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார்.

எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும்.

அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான்.

இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

*🔔பெயர்க்காரணம்.*
பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.

இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது.

இம்மலையின் உயரம் சுமார் நூற்று தொன்னூறு  மீட்டராகும்.

இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.

இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று,
பரங்கிரி,
திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி,
கந்தமாதனம்,
கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.

*🔔சிறப்புகள்:*
முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.

லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.

சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார்.

*🔔கோயில் அமைப்பு:*
இக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது.

இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.

ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.

கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது.

இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது.

இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது.

இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

கல்யாண மண்டபத்தையடுத்துக் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன.
இது இத்தலத்தின் சிறப்பாகும்.

கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.

மகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோயில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன.

அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன.

கருவறையில் ஒரு பெரிய பாறை. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார்.

மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன.

இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர்.

மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலின்வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன

கற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோயில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார்.

மூலவர் திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார்.

இப்பெருமானின் திருமணச்சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

பரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது.

இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர்.

திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர்.

இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோயில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

இக்கோயிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன.

இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று உள்ளது.

அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன.

*🔔அமைவிடம்:*
தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கும் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே ஒன்பது கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது.

மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன.

பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது.

ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம். மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

       சண்முகா சரணம்.

*நாளை, இரண்டாம் படைவீடு திருச்செந்தூர்.*
_______________________________________
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.
 

No comments:

Post a Comment