தேவையை யார் அறிவார் தெய்வம் ஒன்றே அறியும்
காஞ்சிபுரத்தில் ஸ்ரீசக்ர நாயகியாக வீற்றிருக்கும் காமாட்சியம்மன் கோவிலில், நவாரத்திரி விழா ஏக தடபுடலாக நடக்கும். விழாவைக் காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் இருந்து கோபு (80), லலிதா (75) என்ற முதிய தம்பதியர் நவராத்திரியை ஒட்டி, அம்பாளைத் தரிசிக்க வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தனர். அம்பாள் சன்னிதியை நெருங்கிய போது, அங்கே சுவாசினி பூஜைக்கு (தம்பதி பூஜை) ஏற்பாடு நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தனர்.
லலிதா அம்மையார் தன் கணவரிடம், "ஏங்க! பார்த்தீங்களா! இந்த தம்பதிகளெல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க! அம்பாள் சன்னிதி முன்னாடி அமர்ந்து பூஜை செஞ்சுக்கப் போறாங்க. நமக்கு இவ்வளவு வயசாயிடுச்சு! இருந்தாலும், நமக்கு இந்த கொடுப்பினை இல்லை பாருங்க!" என்றார்.
கோபி தன் மனைவியிடம், "சரி...விடு... யார் யாருக்கு என்ன கொடுப்பினை இருக்கோ, அது தான் நடக்கும். இதை நெனச்செல்லாம் வருத்தப்படாதே. அம்பாளை தரிசிச்சுட்டோம் இல்லையா! அது ஒண்ணே இந்த நவராத்திரியில் கெடச்ச பெரிய பாக்கியம்," என்று ஆறுதல் சொல்லி அழைத்துச் சென்றார்.
அம்பாள் தரிசனம் முடிந்ததும் காஞ்சி சங்கர மடத்திற்கு சென்று, மகாபெரியவரைத் தரிசிக்க வரிசையில் சென்றனர். இவர்கள் முறை வந்ததும், பெரியவர் ஆட்காட்டி விரலால் அவர்களை அழைத்தார். அவர்கள் பெரியவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றனர்.
"நேரா காமாட்சி கோவிலுக்கு போங்கோ! அங்கே நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரி இருப்பார். அவரைப் போய் பாருங்கோ!" என்றார்.
கோபி பெரியவரிடம், "பெரியவா! இப்ப தான் நாங்க அம்பாள் தரிசனம் முடிச்சு அங்கிருந்து வர்றோம்," என்றனர்.
"பரவாயில்ல! இன்னொரு தடவை போங்க, நான் சொன்னதை செய்யுங்கோ," என்றார்.
தம்பதிகளும் உடனடியாக கோவிலுக்குச் சென்று, சாஸ்திரிகளைப் பார்த்தனர். பெரியவர் அனுப்பி வைத்த விபரத்தை எடுத்துச் சொன்னார்கள்.
ராமச்சந்திர சாஸ்திரிகள் அவர்களிடம், "சரியான நேரத்துக்கு தான் பெரியவர் உங்களை அனுப்பி வச்சிருக்கார். சுவாசினி பூஜைக்கு ஒரு தம்பதி குறையுது. யாரை தேர்வு செய்றதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதற்குள் பெரியவரே உங்களை அனுப்பி வச்சுட்டார்," என்றார்.
தம்பதிகளுக்கோ பரமானந்தம்... வானில் பறப்பது போல் பரவசநிலை அடைந்தனர். 'தங்கள் ஆதங்கம் எப்படி மகாபெரியவருக்கு தெரிந்தது... எல்லார் உணர்வையும் அறிந்த ஞானியாக இருக்கிறாரே' என்று உணர்ச்சிவசப்பட்டனர்.
தம்பதி பூஜையில் ஒருவராக அவர்களும் அமர்த்தப்பட்டனர். பூஜை முடிந்து மீண்டும் பெரியவரை தரிசிக்க ஓடினர்.
"என்ன... நீங்க நினைச்சது போல் சுவாசினி பூஜை ஆச்சா...!" என்று பெரியவர் கேட்கவும், தங்கள் தேவையை நிறைவேற்றிய, அந்த மனித தெய்வத்தின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக்கினர்.
No comments:
Post a Comment