Courtesy:Smt.Saroja Ramanujam
Entire part is available here in English: https://thiruvonum.wo
Tamil portion is available here: https://thiruvonum.wordp
ஸ்ரீபாஷ்யம் முகவுரை
இன்று சித்ராபௌர்ணமி. முகவுரையை ஆரம்பிக்கிறேன். திங்கட்கிழமை முதல் விரிவுரை தொடங்கும்..
வேதாந்த சூத்ரம் என்றால் என்ன?
இவை வேத வியாசரால் உபநிஷத் கூறுவது பிரம்மத்தை பற்றியே என்று நிலை நிறுத்துவதற்காக சொல்லப் பட்டது.
இதை மறுக்கும் வேதாந்தம் தவிர பிற மதங்களாவன பெளத்த ஜைனம், சாங்கியம் நியாயம் முதலியன. இவைகளில் சாங்கியம் ஞாயம் இவை இரண்டும் வேதத்தை ஆதரித்தாலும் பிரம்மம், ஜீவன், ஜகத் இவைகளைப்பற்றி வேறுவிதமான கருத்தை வலியுருத்துகின்றன . பௌத்தமும் ஜைனமும் வேதத்தையே ஒத்துக்கொள்வதில்லை.
இவைகளின் வாதங்களை முறியடித்து பிரம்மம்தான் உபநிஷத் வாக்கியங்களின் முக்கிய கருத்து என்பதை நிலை நாட்டுவதும் இல்லாமல் பிரம்மத்திடமிருந்துதான் உலகம் தோன்றியது என்பதையும் பிரம்ம சூத்ரம் விளக்குகிறது.
சங்கரர் ராமானுஜர் இவர்களுடைய பாஷ்யங்கள் பிரம்ம சூத்ரத்தின் முக்கிய விளக்கங்களை ஒட்டியே இருந்தபோதிலும் அவரவர் சித்தாந்தத்தின்படி ஒரு சில விஷயங்களில் வேறுபடுகின்றன.
முக்கியமாக அத்வைதத்துக்கும் விசிஷ்டாத்வதத்துக்கும் உள்ள முக்கிய வேற்றுமைகளை ஆராய்ந்து பிறகு மற்ற மதங்களின் வேறுபாடுகளையும் பார்ப்போம்.
ஜீவன் பிரம்மம் ஜகத் இவைகளைப் பற்றிய கொள்கைகள் தான் இந்த வேற்றுமைக்குக் காரணம்.
ஸ்ரீ பாஷ்யம் முகவுரை தொடர்கிறது- இரண்டாம் பாகம்
அத்வைதம்
ப்ரஹ்மம் சத்யம்- ப்ரஹமமே உண்மை.
ஜகத் மித்யா- உலகம் ஒரு மாயத் தோற்றம்.
ஜீவோ ப்ஹ்ம்மைவ நாபர: -ஜீவன் ப்ர்ஹமத்தைத் தவிர வேறு இல்லை.
பிரம்மம் நிர்குணம் நிர்விசேஷ சின்மாத்ரம்- குணங்களற்ற வேறுபடுத்தமுடியாத ஞானமே.
மாயை அல்லது அவித்யை என்பது தோற்றுவிக்கப் படாத (அனாதியான) நேர்மறையான (பாசிடிவ்) வஸ்து.
பிரம்மம் உலகைப் படைத்தது எப்படி என்றால் ஒரு கயிறு பாம்பைப் படைத்தது போல.
அதாவது கயிறைப் பாம்பென்று எண்ணுவது போல.
விசிஷ்டாத்வைதம்
ப்ரஹ்மம், ஜீவன், ஜகத் மூன்றும் உண்மைத் தோற்றமே.
சேதனம் அசேதனம் ஆகிய இவை கொண்ட உலகம் ஈஸ்வரனின் சரீரம்.
ப்ரஹ்ம ஜீவ ஐக்கியம் என்பது உயிருக்கும் சரீரத்துக்கும் உள்ளதைப்போன்றது.
பிரம்மம் என்பது அனந்த கல்யாண குணங்களுடன் கூடிய நாராயணனே.
மாயை என்பது ஈஸ்வர சக்தி . அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பது.
\பிரம்மமே உலகின் காரணம். உலகம் அதனால் செய்யப்பட காரியம்
. மண்ணிலிருந்து குடம் போல. மண் எப்படி உண்மையோ அதே போல குடமும் உண்மை. காரியம் என்பது காரணத்தின் இன்னொரு உருவமே
உலகம் மாயை என்பதை அத்வைதம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்த்துவிட்டு பிறகு விசிஷ்டத்வைத கொள்கையை பார்க்கலாம்.
உலகம் மாயை என்றால் உலகம் என்று ஒன்று இல்லவே இல்லையா?. ஆகாசத்தாமரை , முயல் கொம்பு இவை போன்ற இல்லவே இல்லாத ஆனால் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் ஒன்றா? மந்திரவாதியின் மாயாஜாலம் மாதிரியா?
அத்வைதம் சொல்வது என்னவென்றால் அது அப்படி அல்ல. இருக்கும் பொருளை வேறு மாதிரியாகக் காண்பது.
அரை இருட்டில் ஒரு கயிறைப்பார்த்து பாம்பென்று நினைக்கிறோம். அது இல்லாத வஸ்து அன்று. ஆனால் அது வேறு மாதிரியான தோற்றத்தை அளிக்கிறது.
இதை வ்யாவஹாரிகக சத்தியம் என்று அத்வைதம் சொல்லுகிறது, அதாவது நடைமுறையில் உலகம் பொய் அல்ல. ஆனால் எல்லாம் பிரம்மமே என்ற உண்மையை நம் அவித்யை மறைப்பதனால் அது பிரம்மமாகத் தோன்றுவதில்லை. உலகமாகத் தோன்றுகிறது.
பிரம்மம் பாரமார்த்திக சத்தியம் அதாவது எக்காலத்திலும் உள்ள உண்மை. அதைத்தவிர உலகம் என்பது மந்திரவாதி காட்டுவது மாதிரி உருவெளித் தோற்றமோ இல்லை ஆகாசத்தாமரை , முயல் கொம்பு என்ற இல்லவே இல்லாத வஸ்துவோ அல்ல.
இது எதனால் ஏற்படுகிறது.? இதற்கு விடை அத்தியாசம் என்று அத்வைதம் கூறுகிறது,. அதாவது ஒன்றின் குணங்களை அறியாமையினால் இன்னொன்றின் மேல் காண்பது.
இது error perception அல்லது தவறான பார்வை என்பது .
அத்தியாசம் என்பது என்ன?
அதாவது ஒன்றின் குணங்களை தவறானபார்வையினால் இன்னொன்றின் மேல் காண்பது.
தவறான பார்வை எப்படி ஏற்படுகிறது? ஒரு கயிறைப் பார்க்கிறோம், சிறிது தூரத்தில் இருந்து பார்க்கும்போது அது ஒரு பாம்புபோலத் தோன்றுகிறது. இது தவறான பார்வை அல்லது erraneous perception. அது ஏன் பாம்புபோலத் தோன்றவேண்டும்? ஏனென்றால் நாம் பாம்பை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.
ஒரு பொருளைப் பார்க்கின்றபோது அது என்னவென்றே தெரியவில்லை என்றால் அது புரியாத பார்வை (non-apprehension).
அதை வேறு ஒன்றாகப புரிந்து கொள்வது தவறான பார்வை(misapprehension or erraneous perception)
என்னவென்று தெரியாத ஒன்றைப் பார்க்கும்போது மனித மனம் தனக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றை அதனுடன் பொருத்திப் பார்த்துத் தவறாகப் புரிந்துகொள்கிறது. பாம்பின் குணாதிசயங்களை கயிற்றின்மேல் ஏற்றி அதைப பாம்பாகப் பார்ப்பதுதான் அத்தியாசம்.
அத்வைதம் கூறுவது என்னவென்றால் கயிறு பாம்பாகத் தோன்றும்போது அது நிஜம் . ஆனால் அது பாம்பல்ல கயிறு என்று அறியும்போது அது பொய்.
அதே போல பிரம்மத்தை உலகமாகக் காணும்போது அது நிஜம் . ஆனால் பிரம்மஞானம் ஏற்பட்டுவிட்டால் எல்லாம் பிரம்மம் என்ற நிலையில் உலகம் உண்மை அல்ல என்ற தெளிவு ஏற்படுகிறது.
அதனால் பிரம்மம் பாரமார்த்திக சத்தியம் , அதாவது எப்போதும் உள்ள உண்மை, பிரபஞ்சம் வ்யாவ்ஹாரிக்க சத்யம் , நடைமுறையில் உண்மை என்று அத்வைதம் கூறுகிறது,
பிரம்மஞானியும் உலகத்தை உணர்கிறான், அது மாயமாய் மறைவதில்லை. ஆனால் அது பிரம்மமே என்று அறிகிறான்.
இதற்கு மாறாக விசிஷ்டாத்வைதம் கூறுவது பிரபஞ்சம் உண்மை பிரம்மமும் உண்மை . இதை சரீர சரீரி பாவம் மூலமாக ஸ்தாபிக்கிறார். பிரம்மமே பிரபஞ்சம் . இதைப் பிறகு விரிவாகக் காணலாம் .
ஸ்ரீபாஷ்யம்- 1
ஸ்ரீபாஷ்யம் வேதாந்த சூத்ரங்களின் விசிஷ்டாத்வைதபரமான விளக்கம்.
இதன் சரித்திரப் பின்னணியை சிறிது ஆராய்வோம். வேதத்தை அனுசரித்து யாகயக்ஞாதிகள் செய்து அதன் பலனை அடைந்தவர்கள் மீமாம்சகர்கள் . இதைச் சொல்லும் பாகம் பூர்வ மீமாம்சம் அல்லது கர்மகாண்டம் எனப்படும். வேதத்தின் பின் பகுதி உத்தர மீமாம்சம் அல்லது ஞானகாண்டம் எனப்படும். இதில்தான் உபநிஷத்துக்கள் காணப்படுகின்றன.
மீமாம்சகர்களைப் பொறுத்தவரையில் வேதம் சொல்லுவது கர்மகாண்டம்தான். பின் பாகமான உபநிஷத்துக்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அந்த காலகட்டத்தில் யாகம் யக்ஞம் முதலியவை மட்டுமே வைதிக காரியங்கள் எனக் கருதப்பட்டு உயிர் பலி மிகுதியாக செய்யப்பட்டு வந்தபோது புத்தர் தோன்றினார் ,
அவர் இறப்பிற்கு பிறகு எதுவும் இல்லை. எல்லாம் அநித்தியம். சுவர்க்கம் மறுபிறப்பு இவைகளுக்காக உயிர்ப்பலி கொடுப்பது பாவம் என்று அஹிம்சையை வலியுறுத்தினார். இந்த கொள்கை பரவினதும் மக்கள் யாகம் முதல்யவைகளை விட்டதுமல்லாமல் வேதத்தையே விட்டுவிட்டனர்.
இந்த காலகட்டத்தில்தான் சங்கரர் தோன்றினார். உலகம் அநித்தியம்தான். ஆனால் நித்தியமான வஸ்து ஒன்று உண்டு. அதுதான் உபநிஷத்துக்களில் சொல்ல்ப்பட்டிருக்கிறது என்று பிரம்மத்தை நிலை நாட்டினார்.
இவ்வாறு அந்தந்த சூழ்நிலையை ஒட்டியே வேதங்களின் உபதேசங்களை மக்கள் சரிவரப் புரிந்துகொள்ளாமல் தவறான மார்கத்தில் செல்வதைத்தடுக்க இறைவனே அனுப்பியவர்கள்தான் மகான்கள்.
சங்கரர் காலத்திற்குப்பிறகு அவருடைய மித்யாவாதம் அவர்பின் வந்தவர்களால் பலத்து பக்தி என்பதே குறைந்துவிடுமோ என்ற சந்தர்ப்பத்தில் இறைவனின் தூதர்களாக ராமானுஜர் மத்வர் இவர்கள் தோன்றினர்.
வடக்கிலும் பல பக்தர்கள் தோன்றி பக்தியை வளர்த்தனர்.
வேதாந்தசூத்ரங்கள் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட உண்மைகளை ஒழுங்குபடுத்தி சுருக்கமாக சொல்வதற்கு முற்படுகின்றன. சங்கரராலும் ராமானுஜராலும் எழுதப்பட்ட பாஷ்யங்கள் ப்ரம்ம்சூத்ரத்தைத் தழுவியே இருந்தாலும் பிரம்மம், ஜகத், ஜீவன் இவைகளின் நிலை பற்றிய விளக்கங்களில் அவரவர் கொள்கைக்கேற்ப மாறுபடுகின்றன.
இப்போது நாம் ஸ்ரீபாஷ்யத்திற்குப் போவோமா ?
மங்களச்லோகம்
வேதார்த்த சங்க்ரஹத்தில் உள்ளபடி இதிலேயும் ராமானுஜர் நாராயணனை ஸ்ரீனிவாசன் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் ஸ்ரீனிவாசன் என்பது நாராயணனையும் குறிக்கும் அல்லவா?
அகிலபுவனஜன்மஸ்தேமபங்காதி லீலே
வினதவிதிதபூதவ்ராதரக்ஷைகதீக்ஷே
ஸ்ருதிசிரஸிவிதீப்தேபரஹ்மணி ஸ்ரீநிவாசே
பவது மமபரஸ்மின் சேமுஷீ பக்திரூபா
என் புத்தியானது பக்திரூபத்தில் வேதத்தின் முடிமேல் விளங்கி தன்னை வணங்கும் எவரையும் காக்கும் வ்ரதம் கொண்டு பிரபஞ்சத்தைப் படித்து, காத்து அழிக்கும் அலகிலா விளையாட்டுடைய பரபிரம்மஸ்வரூபமான நாராயணனிடத்தில் லயிக்கட்டும்.
அகிலபுவனஜன்மஸ்தேமபங்காதி லீலே- பிரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி, , ஜன்ம , காத்தல், ஸ்தேம, அழித்தல், பங்க, இவை யாவையும் அவனுடைய லீலை. பங்காதி என்றால் அழித்தல் முதலிய என்பது பொருள். சிருஷ்டி, காத்தல் அழித்தல் மூன்றையும் சொல்லிய பிறகு எதற்கு ஒரு ஆதி பதம்?
அதாவது அவன் பிரபஞ்சத்தை ப்படைத்தது மட்டும் அல்லாமல் அதன் உள்ளே அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதைக் குறிக்கிறது.
அகிலம் என்றால் சர்வம் என்று பொருள். ஆனால் அகிலம் என்ற சொல்லை கையாண்டது ஏனென்றால் அ என்ற அகாரம் மங்களகரமானதும் அல்லாமல் அகாரம் நாராயணனைக் குறிக்கிறது. ,
பக்திரூபா சேமுஷீ- பக்தி ரூபமான புத்தி என்பதன் மூலம் பகவானை அடைய பக்தியே வழி என்று சொல்கிறார், புத்திபூர்வமான ஞானம் பக்திமூலம் வருவதாகும்.
வேதத்தின் முடிமேல் விளங்கி, சுருதி சிரசி விதீப்த, அதாவது வேதத்தின் முடிபோன்றது உபநிஷத்,. அதனால் சொல்லப்படுபவன் நாராயணனே என்று பொருள்.
பக்தியுடன் தன்னை ஆச்ரயிக்கும் உயிர்களை ரட்சிக்கும் வ்ரதத்தை உடையவன் வினதவிதிதபூதவ்ராதரக்ஷைகதீக்ஷே என்கிறார்.
ராமாவதாரத்தில் விபீஷண சரணாகதி கட்டத்தில் இதை அவன் வாயிலிருந்தே கேட்டோம் அல்லவா?
'சக்ருத் ஏவ பிரபன்னானாம் தவாஸ்மி இதி வாதினாம்
அபயம் சர்வபூதானாம் ததாமி இதி வரதம் மம" என்று.
சர்வபூதானாம் என்றால் எந்த உயிர்க்கும் என்று பொருள் கஜேந்த்ரனுக்கும் ஜடாயுவுக்கும் அருள் பாலிக்கவில்லையா?
ஸுதர்சனசூரி ஸ்ரீபாஷ்ய விளக்கத்தில் கூறுகிறார், அவன் காப்பது மட்டும் அல்ல கடைசியில் மோக்ஷமே தந்துவிடுகிறான் என்று.
அடுத்து சூத்திரங்களைப் பார்க்கலாம்.
Sreebhashyam padha1 -part1 suthra 1
பிரம்மசூத்ரம் நான்கு பெரிய பிரிவுகளைக்கொண்டது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பகுதிகள். முதல் பிரிவின் முதல் பகுதியில் அத்வைதத்தின் கொள்கைகளும் அதற்கு விசிஷ்டாத்வைதத்தின் மறுப்புகளும் வேதார்த்த ஸங்க்ரஹத்தில் எளிதாகப் புரியும்படி இருப்பதனால் அதை அங்கு பார்ர்க்கலாம். முக்கியமான பேதங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
சூத்ரம் 1
अथ अथो ब्रह्म जिग्ज्ञासा
அதாதோ பிரம்மஜிக்ஞாஸா
(अथ) அத-அதன் பின்
(अत) அத:-ஆகையால்
(ब्रह्म जिग्ज्ञासा) பிரம்மஜிக்ஞாஸா- பிரம்மத்தைப்பற்றி அறியும் ஆவல் ஏற்படுகிறது.
அத (अथ) என்னும் சொல் மங்களம், ஆரம்பம், பிறகு, இவைகளைக் குறிக்கும் சொல். இவ்விடத்தில் பிறகு என்ற அர்த்தத்திலேயே சொல்லப்பட்டிருந்தாலும் எதற்குப் பிறகு என்பது சங்கரராலும் ராமானுஜராலும் இரண்டு விதமாக விளக்கப்படுகிறது.
சங்கரரின் விளக்கம்- அத- அதற்குப்பிறகு என்பது எதைக்குறிக்கிறது என்றால் பிரம்மத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஆத்மசாதனைக்கு அப்புறம் எடுத்துக்கொள்ளப் படுகிறது என்று பொருள் என்கிறார்.
ஆத்மசாதனை என்றால் என்ன? இது சாதனா சம்பத் என்று கூறப்படும் நால்வகைப் பட்டது.
நித்ய அநித்திய விவேகம்- அதாவது எது அழியாப் பொருள் எது அழியும் பொருள் என்ற பகுத்தறிவு.பிரம்மமே நித்தியம் பிரபஞ்சம் அநித்தியம் என்று அறிவது.
இஹ அமுத்ர பல விராகம்- இந்த லோகத்திலும் மற்ற லோகங்களிலும் கிடைக்கக் கூடிய பலன்களில் ஆசையின்மை. அதாவது யாகயக்ஞாதிகள் மூலம் கிடிக்கக்கூடிய பலன்கள் அநித்தியம் என்று அவைகளில் பற்றின்மை.
சமதமாதிசம்பத்- இந்த்ரியங்கள் மனம் இவற்றை வசப்படுத்துவது.
முமுக்ஷுத்வம் – பிறப்பிறப்பற்ற முக்தி நிலையை அடைவதில் ஆர்வம்.
இது உள்ளவர் எவராயினும் பிரம்மஞானத்திற்கு முயற்சிக்கலாம் என்பது சங்கரர் கூற்று. வேதத்தின் கர்மகாண்டத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கர்மகாண்டத்தை . அதாவது பூர்வமீமாம்சம் என்று சொல்லப்படும் வேதத்தின் முதல் பகுதியை கற்காமலேயே பிற்பகுதியான உபநிஷத் அல்லது ஞானகாண்டம் மூலம் பிரம்மஞானத்தை அடையலாம் என்று சொல்கிறார்.
ராமானுஜரின் சித்தாந்தத்தின்படி வேதம் ஓர் முழுமையான பொருள் . அதனால் பூர்வபாகம் உத்தரபாகம் இரண்டுமே முக்கியமானவை,.
அதனால் கர்ம காண்டத்தில் சொல்லி உள்ளபடி வேத கர்மாக்களை செய்து விட்டு அதன் பின் அவைகளால் அடையும் பலன் தாற்காலிகம் ஆனதே என்று உணர்ந்து பிரம்மத்தை அடையும் முயற்சியையே அத (பிறகு) என்ற சொல் குறிக்கிறது என்கிறார்.
இந்த வேற்றுமை காரணமாகவே சன்யாசம் ஏற்கும் முறை அத்வைதத்திலும் விசிஷ்டாத்வைதத்திலும் மாறுபடுகிறது. பிரம்மச்சர்ய ஆஸ்ரமத்திலிருந்து நேராகவே சன்யாசம் கொள்வது அத்வைதம் கிருஹதாஸ்ரமத்திற்குப் பிறகு சன்யாசம் கொள்வது விசிஷ்டாத்வதம்
.அத: ஆகையினால் என்பது இந்த மேற் சொன்ன அறிவினால் என்பது பொருள்.
பிரம்மஜிக்ஞாஸா-பிரம்மத்தை அறியும் ஆவல் இது எப்படி ஏற்படுகிறது?
வேதத்தின் கர்ம காண்டத்தை பின்பற்றி வேதத்தில் சொல்லியுள்ள தர்மங்களை அனுசரித்து யாகயக்ஞாதிகளை செய்தபோதிலும் பிறப்பு இறப்பு இவை மாறி மாறி வருவதால் களைப்படிந்த ஜீவன் இதிலிருந்து மீள வழி உள்ளதா என எண்ணி வேதங்களின் முடிவுப்பகுதியான உபநிஷத்துக்களை நாடுகிறான்.
அங்கு வேதாந்த வாக்கியங்கள் மூலம் பிரம்மத்தை அடைவதுதான் ஒரே வழி என்று தெரிந்து பிரம்மத்தைப் பற்றி அறிய ஆவல் கொள்கிறான்.
இதுதான் இந்த சூத்ரத்தின் பொருள். சரி. பிரம்மம் என்றால் என்ன ? இது அடுத்த சூத்ரம்.
ஸ்ரீபாஷ்யம் -
ஜன்மாத்யஸ்ய யத:- சூத்ரம் 1.1.2 continued
அத்வைதக் கொள்கையின்படி இந்த உலகம் உண்மையன்று. அப்படி இருக்கையில் இந்த சூத்திரத்தை சங்கரர் எவ்வாறு விளக்குகிறார் ?
அத்வைதகோட்பாட்டின்படி உலகம் உண்மை அல்ல. அப்படி இருக்கையில் பிரம்மம் தான் உலகத்தைத் தோற்றுவிக்கிறது, அதைக் காக்கிறது பின்னர் அழிக்கிறது என்பது எவ்விதத்தில் பொருந்தும்?
இதற்கு அத்வைதத்தின் பதில்.
கயிறைப் பாம்பென்று நினைக்கிறோம். பாம்பைத் தோற்றுவித்தது எது?
கயிறே அல்லவா? அது கயிறு என்று தெரிந்த பின் பாம்பு எங்கே போகிறது? கயிறிலேயே மறைகிறது. கயிறைப்பாம்பாகப் பார்க்கும் வரை அந்தப் பாம்பை எது நிலைக்கச் செய்கிறது?
கயிறுதானே?
இதே போல பிரம்மம்தான் உண்மை என்று தெரியும் வரை உலகம் உண்மையாகவே தெரிகிறது. அதனால் இந்த உலகம் தோன்றுவதற்குக் காரணம் பிரம்மம்தான் என்று ஆகிறதல்லவா? உலகத்தைக் காணும்போது அதை நிலை நிறுத்துவது பிரம்மம்தானே? பிறகு பிரம்மத்தை அறிந்த பிறகு இந்த உலகம் உண்மை அல்ல என்று தெரியும்போது அது பிரம்மமாகவே காண்கிறோம் . அப்போது அதை அழிப்பதும் பிரம்மம் தானே ?
விசிஷ்டத்வைத சித்தாந்தத்தின் படி உலகம் பொய் அல்ல . பிரம்மத்தின் படிவம் (another form). எல்லாம் சூக்ஷ்ம வடிவில் இருப்பது பிரம்மத்தில். அதுவே ஸ்தூல வடிவத்தில் உலகமாக இருக்கிறது.
அதனால் உலகம், ஜகத், ஜீவன் , ஈஸ்வரன் மூன்றும் பிரிக்கமுடியாதவை. பிரம்மம் உயிர் என்றால் ஜகத் ,ஜீவன் இவை அதன் உடல். எப்படி பானை என்பது சூக்ஷ்ம உருவத்தில் மண்ணாக இருக்கிறதோ அதுபோல.
இங்கு திருமூலர் வாக்கைப் பார்ப்போம்.
மரத்தில் மறைத்தது மாமதயானை மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம் பரத்தை மறைத்தது பார் முதல் பூதம். இங்கு யானையும் நிஜம் மரமும் நிஜம் .பார்வையில் தான் வேறுபாடு. அதே போல பார் முதல் பூதம் அதாவது இந்த பிரபஞ்சமும் நிஜம் பிரம்மனும் நிஜம்.
பருகும் நீர் உண்ணும் சோறு தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்றது ஆழ்வார் பார்வையில். நம் பார்வையில் வெற்றிலையும் சோறும் தான் படுகிறது, இதுதான் வித்தியாசம்.
பிரம்மத்தை அறிய வேதமே பிரமாணம என்பதை அடுத்த சூத்ரத்தில் பார்க்கலாம்.
ஸ்ரீபாஷ்யம் -1.1.3
பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
சூத்ரம். 3
சாஸ்திரயோனித்வாத்-
சாஸ்திரம் அதாவது உபநிஷத்தில் சொல்லியுள்ளபடி.
இது எதற்கு என்றால் பிரம்மத்தை உபநிஷத்தில் சொல்லியதால்தான் அறிய வேண்டுமா என்ற கேள்விக்கு பதில்.
ஒரு வஸ்துவைப் பற்றி அறிய சாதாரணமாக உலகத்தில் மூன்று முக்கிய வழிகள் உண்டு.
ப்ரத்யக்ஷம்- நேரில் பார்த்து அறிவது.
அதாவது நம் இந்த்ரியங்கள் மூலம், கண்ணால் பார்த்தோ, செவியால் கேட்டோ, நாசியால் நுகர்ந்தோ, நாக்கினால் ருசி பார்த்தோ அல்லது தொடு உணர்ச்சியாலோ தான் எந்த விஷயத்தைப் பற்றியும் அனுபவம் ஏற்படுகிறது.
சுகம் துக்கம் என்பதைக் கூட இந்த்ரியங்கள் மூலம் உண்டான அனுபவத்தினால்தான் உணர்கிறோம். இவ்வாறு உணர்ச்சி எண்ணம் எல்லாமே ப்ரத்யக்ஷம் மூலம் தான் ஏற்படுகிறது.
அனுமானம் – ஒன்றை அனுமானத்தினால் அறிவது.
ஒரு மலையில் புகை காண்கிறோம் . உடனே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகிறோம். அதை பிரத்யக்ஷமாகப் பார்க்கவில்லை என்றாலும், நெருப்பில்லாமல் புகையுமா என்ற அனுமானத்தின் மூலம் அறிகிறோம் அல்லவா?
உவமானம் – சில விஷயங்களை இதைப்போல் அது என்ற உவமானத்தின் மூலம் அறிகிறோம்.
ஒருவன் புலியைப் பார்த்ததில்லை என்று வைத்துக்கொள்ளலாம். அவன் காட்டுக்குப் போகிறான். அவனிடம் ஒரு நண்பன் 'அங்கே புலி இருக்கும் ஜாக்கிரதை" என்கிறான் அதற்கு அவன் புலி எப்படி இருக்கும் என்று கேட்டால் அது பூனயைப்போலதான் இருக்கும் ஆனால் பெரிதாக மஞ்சளாக இருக்கும் மேலே கோடுகள் இருக்கும் " என்று கூறுகிறான். உடனே அவன் காட்டில் அந்த மாதிரி ஒரு மிருகத்தைப் பார்த்தவுடன் இது புலிதான் என்று அறிந்து கொள்வான் அல்லவா?
இதையெல்லாம் தாண்டிய நாலாவது அறியும் முறை தர்க சாஸ்திரப்படி சப்தம் அல்லது verbal testimony.
சப்தம் என்பதை ஆப்த வாக்கியம் என்று சொல்வது உண்டு. அதாவது நமக்கு நம்பத்தகுந்த நபர் ஒன்று சொன்னால் அதை அப்படியே உண்மையாக எடுத்துக் கொள்கிறோம் . ஒருவன் வேற்றூரில் இருக்கும்போது அவன் நண்பனோ அல்லது நெருங்கிய உறவினரோ ஒரு செய்தி நல்லதோ அல்லதோ சொன்னால் அதை நம்பி உடனே செயல் படுவான் அல்லவா?
நமக்கு மிகவும் நெருங்கிய நம்பத்தகுந்த ஆதாரம் வேதம்தானே?
ஆதலால் பிரம்மத்தை அறிய ஆதாரமாயிருப்பது வேதம் அல்லது உபநிஷ என்பது இந்த சூத்ரத்தின் பொருள்.
ஏனென்றால் பிரம்மத்தை ப்ரத்யக்ஷம் மூலம் அறியமுடியாது. இந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதனால்.
அனுமானமும் உபயோகம் ஆகாது ஏனென்றால் அதைக் குறிக்கும் அடையாளம் நெருப்புக்கு புகையைப் போல எதுவும் கிடையாது.
உபமானம் காட்ட முடியாது அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லாததால்.
அதை அறிந்தவர் யாரும் நமக்கு அது என்ன என்பதைச் சொல்ல முடியாது. கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். அதனால் வேதமே அதாவது உபநிஷதமே பிரம்மத்திற்கு பிரமாணம்.
ஸ்ரீ பாஷ்யம்
பிரம்மசூத்ரம் – பிரிவு 1 பகுதி 1
சூத்ரம் 5
பிரபஞ்சத்தின் காரணம் பிரம்மம் என்று உபநிஷத் வாக்கியங்களின் மூலம் ஸ்தாபித்த பின்னர் உலகம் தோன்றுவதற்கு காரணம் ப்ரகருதி பிரம்மம் அல்ல என்ற ஸாங்கிய மதத்தின் கொள்கையை மறுப்பது இந்த சூத்ரம்.
ஈக்ஷதே: ந அசப்தம்
அதுவல்ல (அதாவது ப்ரக்ருதி) காரணம், ஏனென்றால் 'ஈக்ஷதே' அது ஸங்கல்பித்தது' என்ற உபநிஷத் வாக்கியத்தின்படி வேதத்திற்கு விரோதமானது.
ஸாங்கிய சாஸ்திரத்தின்படி, உலகம் மூன்று குணங்களால் ஆனது. இந்த மூன்று குணங்கள் பிரகிருதி அல்லது இயற்கையில் உள்ளவை. இது எப்படி என்று தெரிந்துகொள்ள் சற்று ஸாங்கிய வாதத்தை பார்ப்போம்.
அவர்கள் கூற்றுப்படி ஜீவன் என்பது புருஷன் இயற்கை என்பது பிரகிருதி. இரண்டும் உண்மையான தத்துவங்கள். பிரகிருதி உருவமற்றது அதில் சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களும் ஒன்றுக்கொன்று கலக்காமல் தனித்தனியாக உள்ளன. அப்போது சிருஷ்டி ஏற்படுவதில்லை.
பிறகு இவை கலந்து மஹத் அல்லது புத்தி என்ற தத்துவம் உண்டாகிறது. புத்தியில் இருந்து அஹங்காரம் தோன்றி அது சாத்விகம், ராஜஸிகம் தாமஸிகம் என்று மூன்றுவகையாகப் பிரிகிறது. சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்த்ரியங்கள் மனம் இவை தோன்றுகின்றன. தாமஸிக அஹங்காரத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் தோன்றுகின்றன. ராஜச அஹங்காரம் இவை இரண்டும் செயல்பட உதவுகிறது (like a catalytic agent)
புருஷன் அல்லது ஜீவன் இந்த பிரகிருதியுடன் தன்னை அக்ஞானத்தினால் ஐக்யப்படுத்திக்கொண்டு சுகதுக்கங்களை அனுபவித்து சம்சாரத்தில் சிக்கி ஜனனமரணங்களை அனுபவிக்கிறான். ஒரு சமயம் இதை உணர்ந்து பிரகிருதியில் இருந்து விடுபட்டு முக்தியை அடைகிறான்.
பிரக்ருதி சிருஷ்டிக்கு காரணம் என்ன என்றால் புருஷனின் சமீபமே.
இதற்கு என்ன காரணம் கூறப்படுகிறது என்றால் ஒரு பொருள் எதனில் இருந்து தோன்றியதோ அதன் குணங்கள் அந்தப் பொருளுக்கு இருப்பதைப் பார்க்கிறோம். உலகத்தில் உள்ள எல்லாமே மூன்று குணங்களின் மாறுபாடு. ஆகையால் அவற்றிற்கு காரணம் ஆன பிரகிருதியே உலகத்தின் காரணம்.
இதை மறுப்பது இந்த சூத்திரம்.
உபநிஷத்தில் 'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய' என்ற வாக்கியத்தின் மூலம் உலகை படைத்தது ஜடமான பிரகிருதி அல்ல என்பது தெளிவாகிறது. 'அது சங்கல்பித்தது நான் பலவாக ஆவேன் என்று,' என்பது உணரும் திறமற்ற (insentient) பிரக்ருதிக்கு சரியாக அமையாது.
ஆனால் காரணத்தின் குணங்கள் அதன் மூலம் தோன்றியதில் இருக்க வேண்டுமே , முக்குணங்கள் அற்ற பிரம்மம் எப்படி இந்த உலகத்தின் காரணமாகும் என்பதற்கு ராமானுஜரின் பதில் என்னவென்றால்,
பிரம்மம் எல்லாவற்றிற்கும் உள்ளே அந்தராத்மாவாக இருப்பதனால் எல்லாமே பிரம்மத்தின் உடல் ஆதலால் எப்படி இந்த பஞ்சபூதங்களினால் ஆன உடலுக்கு உயிர் காரணமோ அதே போல இந்த ப்ரபஞ்சத்திற்கு பிரம்மமே காரணம்,
சூக்ஷ்ம சித் அசித் விசிஷ்ட பிரம்மம் ஆத்மா , ஸ்தூல சித் அசித் விசிஷ்ட பிரம்மம் உலகம். அதாவது எல்லா உயிர்களும் ஜடவஸ்துக்களும் உருவற்ற வடிவில் உள்ளது பிரம்மம். அதுவே உருவமாக உள்ளது உலகம்.
ஸாங்க்ய வாதம் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. சங்கல்பித்தது என்ற ஒரே சொல் அது பிரம்மமாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. வேதத்தில் 'அக்னி சங்கல்பித்தது' 'நீர் சங்கல்பித்தது' எனற வாக்கியங்கள் உண்டு,.அதனால் உணரும் திறன்(sentiency) என்பது அவசியமில்லை என்று. இதற்கு அடுத்த சூத்திரம் பதிலாகிறது.
சூத்திரம் 5
கௌணஸ் சேத் ந ஆத்மசப்தாத்
சங்கல்பித்தது என்பது உருவகமான(figurative) சொல் அல்ல. ஆத்மா என்ற சொல்லின் சம்பந்தத்தால்.
கௌண என்றால் என்ன?
இதற்கு ஒரு சொல்லின் பொருளை எத்தனை வகையில் தெரிந்துகொள்ளலாம் என்பதைப் பார்க்க வேண்டும்,. மொழி விக்ஞானத்தில் மூன்று வகைகள் சொல்லப் படுகின்றன .
அபிதா- - நேரிடை அர்த்தம். (direct meaning)சிங்கம் என்று சொன்னால் சிங்கத்தை மட்டுமே குறிப்பிடுகிறது.
கௌணம் அல்லது லக்ஷணா- ( indirect meaning)மறைமுகமான அர்த்தம். ஒரு மனிதனைப் பார்த்து அவன் சிங்கம் என்றால் அவனுக்கு நாலு கால் ஒரு பிடரி என்றெல்லாம் பொருள் கொள்வதில்லை. அது அவனுடைய குணத்தைக் குறிக்கிறது.
வ்யங்க்யம்- ( implied meaning) ஒன்றைச்சொல்லி குறிப்பாக இன்னொன்றைச் சொல்வது. இதற்கு ஒரு உதாரணம் காளிதாசனின் அபிக்ஞான சாகுந்தலத்தில் காணலாம் . சகுந்தலை துஷ்யந்தனுடன் இருக்கும்போது அவள் தோழி சொல்கிறாள். " ஒ சக்ரவாக பட்சியே உன் காதலனிடம் விடைபெறு . இரவு வந்துகொண்டிருக்கிறது. " அதாவது சகுந்தலையைத் தேடி அவள் தாய் போன்ற கௌதமி அம்மையார் வந்துகொண்டிருக்கிறாள் என்று அறிவுறுத்துகிறாள்.
இது எதற்கு இங்கே என்றால் ஸாங்கிய வாதி சொல்கிறான் , அது சங்கல்பித்தது என்பது பிரக்ருதிக்கும் ஓட்டும் , நீர் சங்கல்பித்தது நுதலிய வாக்கியங்கள் வேதத்தில் காணப் படுவதால் என்று. அதாவது கௌணமான அர்த்தத்தில் இது சாத்தியம் என்று,
அதற்கு இந்த சூத்திரம் பதிலளிக்கிறது. அது சரியல்ல என்று. ஏனென்றால் ஆத்மா என்ற சொல் அது சங்கல்பித்தது என்ற சந்தர்ப்பத்தில் உபயோகப்படுத்தி உள்ளது.
சந்தோக்ய உபநிஷத்தில் " ஏதத் ஆத்ம்யம் இதம் சர்வம் தத் சத்யம் தத் ஆத்மா தத் த்ப்வம் அஸி ச்வேத்கேதோ,"(சாந்தோக்ய உப. 6.8.7) அதாவது எல்லாமே பிரம்மத்தை ஆத்மாவகக் கொண்டது, அதுதான் உண்மை அதுதான் அந்தராத்மா. அதுவே நீ. என்று பொருள்.
ஜடமான் பிரகிருதி இந்த பிரபஞ்சத்தின் ஆத்மாவாக இருக்க முடியாது. அதனால் சங்கல்பித்தது என்ற சொல் முக்கிய அல்லது நேரிடை அர்த்தத்திலேயே உபயோகப்பட்டுள்ளது. மறைமுகமான் அர்த்தத்தில் அல்ல.
ப்ரம்மசூத்ரம் - பிரிவு1 பகுதி 1
சூத்ரம் 7-
தன்னிஷ்டஸ்ய மோக்ஷோபதேசாத்
முக்தி நிலை என்பது ஸத் அல்லது பிரம்மஉபாசனை மூலமே என்று சொல்லப்பட்டிருப்பதால்.
ஸத் என்பது பிரகிருதி அல்ல. அதனால் பிரகிருதி பிரபஞ்சத்தின் காரணம் அல்ல. சாந்தோக்ய உபநிஷத்தில் 'தஸ்ய ததேவ சிரம் யாவத் ந விமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே ,; என்ற வாக்கியம் காணப் படுகிறது. இதற்குப் பொருள், இந்த சரீரத்தில் உள்ளவரைதான் தாமதம் . பிறகு முக்தி அடைகிறான் என்பது.
ச்வேதகேதுவிற்கு உபதேசம் செய்யும் அவன் தந்தை தத் அல்லது பிரம்மத்தைப் பற்றி உபதேசித்து 'தத் தவம் அஸி' என்று சொல்லி பிறகு எப்படி அந்த நிலையை அடைவது என்று சொல்கிறார்.
பிரக்ருதியைப் பற்றிய அறிவால் அந்த நிலையை அடையமுடியாது. சாங்கிய மதத்திலும் புருஷன் ( ஜீவன்) பிரக்ருதியின் சம்பந்தத்தால் மயக்கத்தை அடைந்து உலகில் சுகதுக்கங்களினால் பீடிக்கப் படுகிறான். பிறகு அதனுடன் தனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிந்து விடுதலை ( அதாவது சம்சாரத்திலிருந்து) அடைகிறான் என்றுதான் சொல்லப் படுகிறது.
சூத்திரம் 8
ஹேயத்வ அவசநாத் ச
சத் அல்லது ப்ரம்மத்தை விடவேண்டும் என்று சொல்லப் படவில்லை.
சத் அல்லது பிரம்மத்தை உபாசித்தால் முக்தி கிடைக்கும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. சத் என்பது பிரகிருதியாக இருந்தால் இதற்கு அர்த்தமில்லை. ஏனென்றால் அதை விடுவதன் மூலம்தான் புருஷன் விடுதலை அடைகிறான் என்று காண்கிறோம். அதனால் அது பிரபஞ்சத்தின் மூல காரணம் அல்ல.
சூத்திரம் 9
பிரதிக்ஞாவிரோதாத்
ஆரம்பத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு விரோதமாக இருப்பதால்.
தத்வமஸி அத்தியாயத்தில் ஆரம்பத்தில் " எது ஒன்றைத் தெரிந்துகொண்டால் எல்லாம் விளங்குமோ அதைத் தெரிந்துகொண்டாயா?" என்ற பின்னர் இது எல்லாம் சத் ஆகவே இருந்தது என்று தொடங்கி தத் தவம் அஸி என்று முடிகிறது.
ஜடமான பிரகிருதி உலகத்தின் காரணமாயிருந்தாலும் அதைத் தெரிந்துகொண்டதனால் புருஷன் என்ற ஜீவன் தான் யார் என்று தெரிந்துகொள்ள முடியாது.
ஏனென்றால் பிரகிருதி வேறு தான் வேறு என்ற ஞானத்தின் மூலம்தான் முக்தி அடைகிறான். அதனால் பிரகிருதியே பிரபஞ்சத்தின் காரணம் என்பது ஆரம்பத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு விரோதம்.
இன்னும் மூன்று சூத்திரங்கள் மூலம் பிரம்மத்தின் ஜக்த்காரணத்தை ஸ்தாபிக்கிறார். அதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் தத் தவம் அஸி என்ற சாந்தோக்ய முழக்கத்தை நன்றாக ஆராய வேண்டும். அதற்கு ஒரு தனிப் பதிவு போடுகிறேன்.
அடுத்து வரும் எட்டு சூத்திரங்கள் உபநிஷத்தில் சொல்லப்படும் ஆனந்த மயமான புருஷன் என்பது ஜீவாத்மா அல்ல பரமாத்மாவே என்று வலியுறுத்துகின்றன.
சூத்திரம். 13
ஆனந்தமயோ அப்யாஸாத்
ஆனந்தமயம் என்று சொல்லப்படுவது பரமாத்மாவே ஜீவாத்மா அல்ல. திரும்ப திரும்ப சொல்லப்படுவதால்.
தைத்திரீய உபநிஷத்தில் ஆனந்தவல்லி அத்தியாயத்தில் 'ஏதஸ்மாத் வா ஆகாச: ஸம்பூத:' பிரம்மத்திடம் இருந்து ஆகாசம் தோன்றியது என்று ஆரம்பித்து பின்னர் மனித உடலுக்கு அன்னம் காரணம்(food) என்றுசொல்லி அன்னமயமான சரீரத்தின் ஆத்மா பிராணன் , ப்ராணமயமான சரீரத்திற்கு ஆத்மா மனம் , மனோமயமான் சரீரத்திற்கு ஆத்மா விக்ஞானம் ( consciousness) என்று சொல்லி அதற்கும் உள்ளே இருப்பது ஆனந்த மயமான ஆத்மா. என்று சொல்லி இருக்கிறது.
இதில் ஆனந்தமயமான ஆத்மா என்பது ஜீவாத்மாவா இல்லை ப்ரம்மமா என்பது கேள்வி.
இது ஜீவாத்மாதான் என்பதற்கு கூறப்படும் வாதம் இந்த ஆனந்தமயமான ஆத்மா வேறு பிரம்மம் வேறு என்றால் அதற்கு உள்ளே இன்னொரு ஆத்மா இருப்பதாகச் சொல்லி இருக்க வேண்டும். அப்படி இல்லை. அதனால் ஜீவாத்மாவே அன்னமய பிராணமய மனோமய விஞ்ஞானமய கோசங்களைக் கடந்த பின் (Discarding the outer sheaths)பிரம்மத்துடன ஒன்றாகி ஆனந்த மயமாகிறது என்பது. ஆனந்த மயம் என்பதற்குப் பொருள் ஆனந்த ஸ்வரூபம்.
இதை இந்த சூத்திரம் மறுக்கிறது.ஆனந்தமய ஆத்மா என்று சொல்லியிருப்பது பிரம்மம்தான் ஜீவாத்மா அல்ல. ஏனென்றால் அப்யாஸாத், அதாவது திரும்பத் திரும்ப பிரம்மத்தின் ஆனந்த ஸ்வரூபத்தை சொல்லி இருப்பதால்.
உபநிஷத் சொல்கிறது, ப்ரம்மத்திடம் இருந்து ஆகாசம் தோன்றியது. அதிலிருந்து வாயு, அதிலிருந்து நெருப்பு, அதிலிருந்து நீர், அதிலிருந்து நிலம். நிலத்தில் இருந்து அன்னம். அன்னத்தில் இருந்து மனிதன்.
இந்த அன்னத்தை சரீரமாகக் கொண்டது பிராணன். மனதிற்கு பிராணன் சரீரம் , புத்திக்கு மனம் சரீரம் அதற்கும் உள்ளே இருப்பது ஆனந்தமய ஆத்மா.
ஆனந்தம் என்பதற்கு அளவுகோல் என்ன என்றால் எல்லாம் உடைய ஒரு மனிதனின் ஆனந்தத்தை அளவுகோலாகக் கொண்டு அதற்குமேல் நூறு மடங்கு நூறு மடங்காக தேவர் முதலியவர்களின் ஆனந்தத்தைச்சொல்லி கடைசியில் ப்ரம்மானந்தத்தில் முடிகிறது.
கடைசியில் 'ஆனந்தம் பிரம்மனோ வித்வான் ந பிபேதி குதஸ்சன ' இந்த பிரம்மானந்தத்தை உணர்ந்தவன் எதைக்கண்டும் பயப்படுவதில்லை என்று முடிக்கிறது.
அதனால் ஆனந்தம் எல்லா இடத்திலும் ப்ரம்மத்தையே குறிக்கிறபடியால் ஆனந்தமய ஆத்மா என்பது பிரம்மமே என்று அறிகிறோம். ராமானுஜர் தைத்திரீய வாக்கியத்திற்கு இவ்வாறு விளக்கம் கூறுகிறார்.
ஆனந்தமய ஆத்மா என்பது எல்லாமே எதற்கு சரீரமோ அந்த பரம்பொருளையே குறிக்கிறது
சூத்திரம் 14
விகாரஸ்சேத் ந ப்ராசுர்யாத்.
மயம் என்ற சொல் பெரும்பாலும் என்ற பொருளில் அல்ல . ஆனந்த மயம் என்பது ஆனந்தமே உருவானது என்ற பொருளில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அது பிரம்மத்திற்குத்தான் பொருந்தும்.அன்னமய ஆத்மா, பிராணமய ஆத்மா , மனோமய ஆத்மா, விஞ்ஞானமய ஆத்மா என்று சொல்லப்பட்டிருப்பது ஜீவாத்மா. விஞ்ஞானமய ஆத்மாவை சரீரமாகக் கொண்டது என்பது பிரம்மம்தான். ஜீவாத்மா ஆனந்தஸ்வரூபம் அன்று.
சூத்திரம் 15
தத் ஹேதுவ்யபதேசாத் ச
அந்த ஆனந்தமய ஆத்மா ஜீவாத்மாவினுடைய ஆனந்தத்திற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
தைத்திரீய உபநிஷதத்தில்
யத் தத் ஸுக்ருதம் ; ரஸோ வை ஸ: ரஸஹ்யோவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி; ----ஏஷ ஹ்யோவா ஆனந்தயதி
இதன் கருத்து, எது ஆனந்தத்தின் காரணமோ அதன் தொடர்பால் ஜீவன் ஆனந்தம் அடைகிறது.
பிரம்மம் தான் ஆனந்தத்தின் ஸ்வரூபம் . அதனால் ஆனந்தமயம் என்று சொல்லப் படுகிறது.
.சூத்திரம் 16
மந்த்ரவர்ணிகம் ஏவ ச கீயதே
பிரம்மம் மந்த்ரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
தைத்திரீய உபநிஷத்தின் இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பிரம்மவித் ஆப்நோதி பரம் என்று இருக்கிறது.
அதாவது பிரம்மத்தை அறிந்தவன் மேலான கதியை ( முக்தியை) அடைகிறான் என்பது பொருள். அதற்குப் பிறகு 'ஸத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்ம,' என்ற வாக்கியம் வருகிறது. இதுதான் கடைசியில் ஆனந்த மயம் என்று சொல்லப்படுகிறது.
பிரம்மத்தை அறிந்தவன் என்பது உடல் மனம் புத்தி இவைகளைக் கடந்த ஜீவாத்மாவாகும்.
ஏனென்றால் பிரம்மஞானம் என்பது மனம், புத்தி, அஹம்காரம் இவைகளுக்கு அப்பால் உள்ளது. 'யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ' ,' , வாக்கும் மனதும் பிரம்மத்தைக் காண முடியாமல் திரும்பிவிட்டன என்ற வாக்கியம் இதை உறுதிப் படுத்துகிறது.
பிரம்மசூத்ரம்- பிரிவு 1. பகுதி 1
சூத்ரம் 10 ஸ்வாப்யயாத்
ஜீவன் ஆத்மாவில் ஒடுங்குவதால்.
சாந்தோக்ய உபநிஷத்தில் தத்வமஸி அத்தியாயத்தில் 'யத்ர ஏதத் புருஷ: ஸ்வபிதி நாம ஸதா சௌம்ய ததா ஸம்பன்ன: பவதி ஸ்வம் அபி அபீதோ பவதி,' (சாந். 6.8.1)என்னும் வாக்கியத்தை பார்க்கிறோம் .
இதன் பொருள் , ஒரு மனிதன தூங்கும்போது ஸத் அல்லது ப்ரம்மத்திடம் லயிக்கிறான். அப்போது ஆத்மா மட்டும்தான் விழித்திருக்கிறது. அது பிரம்மத்திடம் லயித்து இருக்கிறது.
உடல் மனம் புத்தி என்ற உணர்வு அப்போது இல்லை. ஆனால் அக்ஞானத்தின் காரணமாக அது அறியப்படுவதில்லை. அங்கு காரணம்தான் இருக்கிறது அதாவது பிரம்மம். இது பிரளயகாலத்து சூழ் நிலையை பிரதிபலிக்கிறது.
ப்ர்ஹதாரண்யாக உபநிஷத்தில் 'ப்ரக்ஞானேன ஆத்மாநா ஸம்பரிஷ்வக்த: ந பாஹ்யம் கிம்சன வேத ந ஆந்தரம்' (ப்ருஹத். 4.3.21)
இதன் பொருள், ஆழ்ந்த தூக்கத்தில் ஆத்மாவுடன் ஒன்றாகி உள்ளும் புறமும் எதுவும் உணர்வதில்லை. எழுந்தவுடன் நாம ரூபங்கள் உணரப் படுகின்றன.
அதனால் ஆத்மா என்பது பிரகிருதி அல்ல.
உடல் முதலியவை பிரக்ருதியின் மாறுபாடுகள். ஆனால் இவை இல்லாதபோதும் ஆத்மா ஆழ்ந்த தூக்கத்தில் தன்னை அறிகிறது. அதனால் ஜடமான பிரகிருதி பிரபஞ்சத்தின் காரணம் அல்ல.
சூத்ரம் 11. கதி ஸாமான்யாத்
சிருஷ்டியைப் பற்றிய மற்ற வாக்கியங்களும் இதோடு ஒத்து இருப்பதால்.
எல்லா உபநிஷத்துக்களும் பிரம்மமே முதல் காரணம் என்று சொல்வதால் பிரகிருதி காரணம் அல்ல.
ஐதரேய உபநிஷத்தில் ' ஆத்மா வா இதம் ஏக ஏவ அக்ர ஆஸீத். (ஐதரேய. ஆரண்யகம் 2.4.11) என்று காண்கிறோம்.
அதாவது ஆத்மா தான் முதலில் இருந்தது. இங்கு ஆத்மா என்ற சொல் ஸத் அல்லது அந்தராத்மாவைக் குறிக்கிறது.
மேலும் தைத்ரேய உபநிஷத், 'தஸ்மாத் வா ஏதஸ்மாத் வா ஆத்மன: ஆகாச: ஸம்பூத:, ஆகாசாத் வாயு:, வாயோ: அக்னி: , அக்னே: ஆப: , அத்ப்ய: ப்ருதிவீ,' (தைத். 2.1) ,
அதாவது, அந்த ஆத்மாவிடம் ( சத் அல்லது பிரம்மம்) இருந்து, ஆகாயம் தோன்றியது. ஆகாயத்தில் இருந்து வாயு, வாயுவிலிருந்து, அக்னி, அக்னியில் இருந்து நீர் , நீரிலிருந்து நிலம் தோன்றியது என்று சிருஷ்டிக்ரமத்தைக் கூறுகிறது
. இதைப்போல் உள்ள எல்லா பகுதிகளும் பிரம்மத்தையே முதல் காரணமாகக் கூறுகின்றன.அதனால் ஸத் என்பது பிரம்மம்தானே அன்றி பிரகிருதி அல்ல.
சூத்ரம் 12
ஸ்ருதத்வாத் ச
உபநிஷதத்தில் தெளிவாகக் கூறியிருப்பதால்.
ராமாநுஜர் பல ஸ்ருதிவாக்கியங்களைக் கூறி ஸத் என்பது ஸர்வசக்திமானும் , ஸர்வக்ஞனும், எல்லாவற்றிற்கும் ஆதாரமும் , அனந்த கல்யாண குணமும், மாசுமருவற்றதும் ஆன பிரம்மமே என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
மேலும் 'அந்தர்பஹி: ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:' (மஹாநாராயண உப.11) என்ற மஹாநாராயண உபநிஷத்தை மேற்கோள் காட்டி அது நாராயணனே என்று ஸ்தாபிக்கிறார்.
இதனால் பிரம்மம் நிர்விசேஷ சின்மாத்ரம்( undifferentiated consciousness) என்கிற அத்வைத கொள்கையும் மறுக்கப்படுகிறது.
ஸத் என்பது பிரகிருதி அல்ல என்பதை விளக்கும் பகுதி இதோடு முடிவடைகிறது.
அடுத்து ஜீவாத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள வித்தியாசங்கள் விளக்கப்படுகின்றன. இது ஜீவப்ரம்ம ஐக்யத்தைக் கூறும் அத்வைதத்தில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைக் காண்போம்.
சூத்ரம் 17
ந இதர: அனுபபத்தே: ச
பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் ஆனந்தமயம் என்ற சொல்லுக்கு ஒவ்வாததாக இருப்பதால்.
பிரம்மமும் ஜீவனும் ஐக்கியம் ஆக முடியாது.
ஏனென்றால் 'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேய ,' அந்த சத் அல்லது பிரம்மம் சங்கல்பித்தது 'நான் பலவாக ஆவேன் என்று,' என்பது ஜீவனுக்கு முக்தி நிலையில் கூட சம்பவிக்க முடியாத ஒன்றாகும்.
சூத்ரம் 18
பேதவ்யபதேசாத் ச
வித்தியாசம் ஏற்கெனவே காட்டப் பட்டதால்.
ஜீவாத்மா என்பது விஞ்ஞானமய ஆத்மா. அதற்கும் உள்ளே ஆத்மாவாக இருப்பது என்றால் அது பிரம்மமே.
சூத்திரம் 19
காமாத் ச ந அனுமானாபேக்ஷா
தைத்திரீயத்தில் ஸ அகாமயத- அது ஆர்வம் கொண்டது,
பஹுஸ்யாம் பிரஜாயேய- நான் பலவாக ஆவேன் என்று.
அதனால் ஆனந்தமயமான் ஆத்மா பிரம்மம்தான் ஸாங்க்ய வாதத்தின்படி ப்ர்க்ருதியும் அல்ல என்று தெரிகிறது.
சூத்திரம் 2௦
அஸ்மின் அஸ்ய ச தத் யோகம் சாஸ்தி
ஜீவன் பிரம்மத்தை அடைவது சொல்லப் படுகிறது.
இந்த இடத்தில் 'ரஸோ வை ஸ: ரஸஹ்யோவாயம் லப்த்வா ஆனந்தி பவதி,' என்று காண்கிறோம். அதாவது ஆனந்த மயமானது எதுவோ அதை அடைந்து ஜீவன் ஆனந்தம் அடைகிறது. அதனால் ஆனந்தமயம் என்பது பிரம்மம்தான் .
சூத்ரம்-21
அந்த: தத் தர்மோபதேசாத்
சூரியனுள்ளும் கண்ணின் உள்ளம் இருப்பதாகச் சொல்லபடுவது பிரம்மம் தான் அதனுடைய குணங்கள் சொல்லப்பட்டிருப்பதால்.
ஆனந்த மயம்,என்று சொல்லப்பட்டது பிரம்மமே என்று சென்ற எட்டு சூத்ரங்களில் பார்த்தோம்.
இங்கே சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் வாக்கியமான
' ய ஏஷோ அந்த்தராதித்ய: புருஷ: த்ருச்யதே ஹிரண்மயச்மச்ரு ஹிரண்யகேச: ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:; தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ; தஸ்ய உதிதி நாம ஸ ஏஷ ஸர்வேப்ய:பாப்மப்ய: உதித:,'
(சாந்- 1-6-8)
என்பது சான்றாகக் காட்டப்படுகிறது.
இதன் பொருள், ஒரு தங்கமயமான புருஷன் சூரியபிம்பத்தின் உள்ளே காணப்படுகிறான். அவனுடைய சிகை தலையிலும் முகவாயிலும் தங்க மயமானது. நகத்திளிருது எல்லாம் தங்கமயம். அவனி உடைய கண்கள் அன்றலர்ந்த தாமரையை ஒக்கும். உத் என்ற பெயரைக்கொண்ட இந்த புருஷன் எல்லா பாபங்களையும் அழித்து எழுகிறான்.
மேலும் சில வாக்கியங்களால் ருக் வேதமும் சாமவேதமும் அவனுடைய அங்கங்கள் , இவன் சூரியனைக் கடந்த சர்வலோகநாயகன் என்றும் காண்கிறோம்.
இதைத்தொடர்ந்து 'அத ய ஏஷோ அந்தரக்ஷிணி புருஷ: த்ருச்யதே ,' இந்த புருஷன் கண்ணின் உள்ளே காணப்படுகிறான், என்றும் உள்ளது.
புருஷன் என்ற சொல்லால் இது பிரம்மத்தைக் குறிக்காது என்ற வாதத்தை இந்த சூத்ரம் மறுக்கிறது.
ஏனென்றால் பாபங்களைப் போக்கி எழுகிறான் என்பது பிரம்மத்திற்குதான் ஒட்டிவரும்
. சூரியனைக் கடந்த சர்வலோகநாயகன் என்பதும் பிரம்மம் தான். சூரியனிலும் கண்ணிலும் உள்ளான் என்பது உபாசனைக்காக சொல்லப்பட்டது.
அதாவது பிரம்மத்தை சூரியனுள் இருப்பதாகவோ அல்லது கண்ணினுள் இருப்பதாகவோ தியானம் செய்யும் முறை.
ராமானுஜர் மேலும் சொல்கிறார்,
'ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விசரோ விம்ரருத்யு: விசோகோ விஜிகத்ஸோ அபிபாஸ: சத்யகாம: சத்யசங்கல்ப: ' (சாந்- 8-1.5)
இதன் பொருள்,
பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தராத்மா, பாபத்தை ஒழித்தவன் , கிழத்தன்மை, மரணம் , சோகம் , பசி , தாகம் அற்றவன். சத்தியமான எண்ணம் சங்கல்பம் இவை உடையவன். "
இது பிரம்மம்தான் என்று சந்தேகம் அறத் தெரிகிறது.
சூத்திரம் 22
பேதவ்யபதேசாத் ந அன்ய:
வேறுபாடு கூறியிருப்பதால்.
பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தராத்மா அன்று சொல்லப்பட்டிருப்பதால் அது சூரியனிலிருந்து வேறுபட்டது.
ப்ர்ஹதார்ண்ய உபநிஷத் கூறுகிறது.
'ய ஆதித்யே திஷ்டன் ஆதித்யாத் அந்தர: யம் ஆதித்யோ ந வேத யஸ்ய ஆதித்ய: சரீரம் ய: ஆதித்யம் அந்தர: யமயதி,' என்று. ( ப்ருஹத்-3.7.,19)
இதன் பொருள் , எவன் சூரியனிருந்து வேறுபட்டவனாய் சூரியனின் உள்ளிருந்து சூரியனை நடத்துகிறானோ , யாரை சூரியன் அறியவில்லையோ,யாருக்கு சூரியன் சரீரமோ' என்று பிரம்மத்தை வர்ணிக்கிறது.
இதே போல ஆத்மா, பூமி மற்ற எல்லாவற்றிற்கும் பிரம்மத்தையே அந்தராத்மாவாகக் கூறுகிறது. இதனால் பரமாத்மா எல்லாவற்றிற்கும் அந்தராத்மா என்று நிரூபிக்கப் படுகிறது
. பின்வரும் சூத்ரங்கள் ஆகாசம், பிராணன் , ஒளி முதலியவை பற்றி குறிப்பிடும் மந்திரங்கள் பிரம்மத்தையே குறிக்கின்றன என்று விளக்குகின்றன.
ஸ்ரீபாஷ்யம் - -பகுதி1 பிரிவு1
சூத்திரம் – 23
ஆகாசஸ்தல்லிங்காத்
ஆகாசம் என்று குறிப்பிட்டிருப்பது பிரம்மம்தான் , அதனுடைய அடையாளங்களால்.
இந்தப் பகுதியில் இதுவரை பிரம்மம்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றும் அந்தராத்மா என்றும் ஆனந்தமயம் என்றும் சேதன அசேதனப் பொருள்களினின்று வேறுபட்டது என்றும் சாஸ்திர மேற்கோள்களின் மூலம் காட்டப்பட்டது.
இப்போது இந்தப் பிரிவின் கடைசிப் பகுதியில், ஆகாசம் மற்றும் இதர வஸ்துக்களைப் பற்றிய வாக்கியங்களைப் பற்றி விளக்கத்துடன் எவ்வாறு இவை எல்லாம் பிரம்மத்தையே குறிப்பிடுகின்றன என்று நிரூபிக்கப் படுகிறது.
சாந்தோக்ய உபநிஷத்தில் பின்கண்ட வாக்கியம் காணப் படுகிறது. 'ஸர்வாணி ஹ வா இமானி பூதானி ஆகாசாத் ஏவ ஸமுத்பத்யந்தே, ஆகாசம் பிரதி அஸ்தம் யாந்தி'
இதன் பொருள், எல்லாம் ஆகாசத்தில் இருந்து தோன்றின ஆகாசத்தில் ஒடுங்குகின்றன என்பது. '
இங்கு ஆகாசம் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசமா இல்லை ப்ரம்மமா என்பது கேள்வி.
தைத்திரீய உபநிஷத்தில் , 'ஆத்மன: ஆகாச: ஸம்பூத:' என்று காண்கிறோம். அதனால் இங்கு பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம்தான் குறிப்பிடப்படுகிறது என்ற வாதத்தை இந்த சூத்திரம் மறுக்கிறது.
ஏனென்றால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள குணங்கள் எல்லாம் பிரம்மத்தையே ஒட்டி வருவன. பஞ்ச பூதமான ஆகாசம் அசேதனம். (ஜடவஸ்து). அது எல்லாவற்றிற்கும் காரணம் ஆக முடியாது . எல்லாம் அதில் ஒடுங்கும் என்பதும் சரியல்ல.
இது தத்வமஸி அத்தியாயத்தில் ஸத் ( ப்ரம்மம் ) ஒன்றுதான் முதலில் இருந்தது , அதைத்தவிர மற்றொன்று இல்லை என்று பார்த்தோம்.
பிறகு, அது, தான் எல்லாமாகவும் ஆக சங்கல்பித்தது என்றும் சொல்லப் பட்டது,. அதனால் பிரம்மம்தான் இந்த பிரபஞ்சத்தின் காரணம் என்று அறுதியிட்டுக் கூறியதோடு,
தைத்திரீயத்தில் ' எதனிடம் இருந்து இவை எல்லாம் உண்டானவோ எதனால் காப்பாற்றப் படுகின்றனவோ எதில் கடைசியில் ஒடுங்குகின்றனவோ அதைத் தெரிந்துகொள். அதுதான் பிரம்மம் என்று காண்கிறோம்.
( தைத். 3.1)
அதனால் இந்த குணாதிசயங்கள் எல்லாம் பிரம்மத்திற்குதான் பொருந்தும். ஆகவே ஆகாசம் என்று இங்கே சொல்லப் படுவது பிரம்மாதான் என்று நிர்ணயிக்கப்படுகிறது.
சூத்ரம்-26
சந்தோ அபிதாநாத் இதி சேத் ந ததா சேதோ அர்ப்பண நிகதாத் ததாஹி தர்சனம்
'காயத்ரீ வா இதம் சர்வம் ; என்ற வாக்கியத்தினால் சொல்லப்பட்டது காயத்ரீ சந்தஸ் தான் பிரம்மம் அல்ல என்பது சரி அல்ல ஏனென்றால் இதர வாக்கியங்களால் ப்ரம்ம்த்தைப் பற்றிய தியானமே சொல்லப் பட்டிருக்கிறது.
சாந்தோக்ய உபநிஷத்தில் 'காயத்ரீ வா இதம் ஸர்வம்,' (சாந்.3.12.1) பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாமே காயத்ரி என்ற வாக்கியம் காணப்படுகிறது. இந்த சூத்ரத்தின் மூலம் அது பிரம்மத்தைத்தான் குறிக்கிறது என்று தெளிவுபடுத்தப் படுகிறது. இது அடுத்த சூத்ரத்தின் மூலம் மேலும் விளக்கப்படுகிறது.
சூத்ரம் 27
பூதாதி பாதவ்யபதேச உபபத்திஸ்ச ஏவம்
பாதம் என்பது எல்லா சேதன அசேதன வஸ்துக்களைக் குறிப்பதால் .
சூத்ரம் 28
உபதேசபேதாத் ந இதி சேத் ந, உபயஸ்மின் அபி அவிரோதாத்
தேஜஸைப் பற்றிய வாக்கியத்திற்கும் காயத்ரியைப் பற்றிய வாக்கியத்திற்கும் பேதம் காணப்படுகிறதே என்றால் அது சரியல்ல. இரண்டிற்கும் பேதம் இல்லை.
சாந்தோக்யத்தில் 'யத் அத: பர: திவ: ஜ்யோதி: தீப்யதே' என்ற வாக்கியத்தில் ஜ்யோதி என்ற பதம் பிரம்மத்தைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொண்டால் , அந்த ஜ்யோதி விண்ணுலகத்திற்கு மேல் பிரகாசிக்கிறது என்று குறிப்பிடப் படுகிறது. ஆனால் காயத்ரியைப் பற்றிய வாக்கியத்திற்குப் பிறகு 'பாதோ அஸ்ய ஸர்வா பூதானி -த்ரிபாதஸ்யாம்ரருதம் திவி' என்று காணப்படுகிறது. அதாவது ஒருபாகம் இந்த பிரபஞ்சம் மற்ற மூன்று பாகம் விண்ணுலகத்தில் என்ற பொருள். ஜ்யோதி , காயத்ரி இரண்டுமே பிரம்மனைக் குறிக்கிறது என்றால் ஏன் இந்த வேறுபாடு?
இதற்கு ராமானுஜர் பதில் சொல்கிறார்.
இது வேறுபட்ட பொருள் அல்ல. ஒரு பறவை மரத்தின் மேல் பாகத்தில் இருக்கிறது என்பதற்கும் அது மரத்தின் மேல் இருக்கிறது என்பதற்கும் வித்தியாசம் இல்லை.
அதாவது ஜ்யோதியைப் பற்றிய் வாக்கியத்தில் "அந்த ஜ்யோதி விண்ணுலகத்திற்கு மேல் பிரகாசிக்கிறது' என்பதற்கும் காயத்ரியைப் பற்றிய வாக்கியத்திற்குப் பிறகு 'பாதோ அஸ்ய ஸர்வா பூதானி -த்ரிபாதஸ்யாம்ரருதம் திவி' அதாவது ஒருபாகம் இந்த பிரபஞ்சம் மற்ற மூன்று பாகம் விண்ணுலகத்தில் என்பதற்கும் ஒரேபொருள்
அதனால் இரண்டு உபநிஷத் வாக்கியங்களும் பிரம்மத்தையே குறிக்கும்.
No comments:
Post a Comment