Thursday, October 19, 2017

Alangudi temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌷 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.116.*🌷
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌷 *பாடல் பெற்ற சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*🌷
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 *ஆபத்சகாயேசுவரர் கோவில், திருஇரும்பூளை (ஆலங்குடி)*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
(தற்போது ஆலங்குடி என்ற பெயரில் அறியப்படுகிறது)

*இறைவன்:* ஆபத்சகாயேசுவரர்.

*இறைவி:* பலவார் குழலியம்மை.

*தல விருட்சம்:* பூளை (மரம்) செடி.

*விசேஷ மூர்த்தி:*  குரு தட்சிணாமூர்த்தி.

*தல தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம் இதனுடன் மேலும் நான்கு தீர்த்தங்களுடன் மொத்தம் எட்டு தீர்த்தங்கள்.

தெய்வமனம் கமழும் தமிழகத்தில் அடியார்களின் மனங்களில் ஞானத்தையும் ஆனந்தத்தையும் ஊக்குவிக்கும் பெரும் அருளருவிகள். 

இத்தகைய மேன்மையான ஆலயங்களில் தனிப்பெருமருளைக் கொண்டது இத்திரும்பூளைத் தலமும் ஒன்று. 

இந்த புராணருளை வாசிக்கப் பெறுகையில் அவனருள் உங்களைக் காக்கும் என்பது அடியேனின் உத்தரவாதம்.

*தட்சிணாமூர்த்தி வழிபாடு:*
போனதில்லை அமர்ந்திட்டே மும்மலத்தின் கட்டவிழ்த்து

முத்திக்கு வித்தாகும் மூலகுரு மூர்த்தியாய்

தேனமுதப் பொருளாகி தென்முகமாய்த் தானமர்ந்து

தெவிட்டாத சின்மயத்தை தெளிவாக்கும் தெள்ளியனாய்

ஆனந்த நிலையாக ஆலின்கீழ் அமர்த்திக் கேட்ட

அறமதனை நால்வருக்கும் அறிவிக்கும் ஐயானாகித்

தானவனாய் ஆக்கிடுமோர் தற்பரமே தானகும்

தட்சிணாமூர்த்தியின் தாள்பணிந்து சிரமேற் கொள்வோம்.

*பதிகம்:* திருஞானசம்பந்தர்.

*இருப்பிடம்:*
கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே பதினேழு கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. 

*அஞ்சல் முகவரி:* 
செயல் அலுவலர்,
அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோவில்,
ஆலங்குடி.
வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
PIN - 612 801.

*தொடர்புக்கு:*
 04374 269407

*ஆலயத் திறப்பு காலம்:*
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00  மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*
பலமுறை இவ்வாலயத்துக்குச் சென்றிருக்கிறோம். இவ்வாலயத்துள் முதலில் நாம் நுழையவும்.....ஊரின் நடுவே நடுநாயகமாய் அமைந்திருக்கிறது இத்திருத்தலம்.

நான்கு புறத்தாலும் அகழிகள் சூழப்பட்டு, அவ்வகழிகளெங்கும் தாமரைகளால் பரவி விரிந்து மலரப்பெற்று, காணக் கிடைக்கப் பெற்றதைப் பார்க்கும் கண்கள் பெரும் பாக்கியம் செய்தவை. (இவ்வகழிகளில் நீர் இருப்பதற்கில்லையென அறிந்தோம்.)

இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கம்பீரமாகவும் அழகோடியளருடனும் காட்சி கிடைத்தது. *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தைக் கண்டு தரிசித்து ஆனந்தித்தோம்.

இக்கோபுரத்தின் தென்பகுதியில் மிகப்பழமையான சிற்பங்கள் அமையப் பெற்றிருப்பதைக் கண்டு பிரமித்துப் போனோம்.

கோபுரவாயிலினுள் உள்புக, மேலக்குடவரையில் விநாயகர் இருந்தார். இவரே இத்தல விநாயகரும் கலங்காமற் காத்த விநாயகரும் என்ற பெயர் பெற்றவர். 

இவரை பயபவ்யத்துடன் தலையில் குட்டிக் கொண்டு, காதைப்பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் கொண்டு முதல்வனான மூத்தவனை வணங்கிக் கொண்டோம்.

ஆலகால விஷத்தால் கலங்கிய தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர் இவர்தான்.

அடுத்திருந்த முதல் பிரகாரத்தில் நுழைந்தோம். அங்கு செல்லும் நமக்கெதிராக, தெற்கு நோக்கியபடி  சந்நிதியில் அம்மை ஏலவார் குழலியம்மை சந்நிதி அமைந்திருந்தது.

அம்மையின் முன் வந்து, நாடும் நாமும் நலம்பெற விளைவு காண, மனமுருகப் பிரார்த்தித்து வணங்கிக் கொண்டோம். பின் அர்ச்சகர் தந்த உயர்வான குங்குமத்தைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

வெளியே தென்புறத்தில் சூரியர் சந்நிதி கொண்டிருந்தார். அவர் முன் வந்து நின்றோம். வணங்கிக் கொண்டோம்.

சூரிய பகவானின் சந்நிதிக்கு தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி இருந்தது. இவரின் அழகியத் திருக்கோலத்தைக் கண்டு மெய்மறந்து அவரையே சிலநொடித் துளிகள் பார்த்து நின்றோம்.

அடுத்து வலத்தில், உள் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, குருமோட்சேசுரர், அகத்தியர் சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியோர்கள் காணக்கிடைக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

அடுத்து நாம் பார்க்க நேர்ந்தது ஆத்மா கணபதியை.  நின்ற கணபதி, வள்ளி தெய்வானை, சண்டிகேசுரர், கல்யாண சாஸ்தா முதலிய உற்சவர்களைப் பார்த்து வணங்கிக் கொண்டோம்.

இதனின் வடபுறத்தில் சபாபதி, சிவகாமியம்மை, சம்பந்தர், அப்பர், மணிவாசகப் பெருமான் ஆகியோர்களின் திருவுருவைக் கண்டு வணங்கி நகர்ந்தோம்.

அடுத்ததாக இருந்த சோமஸ்கந்தர் சந்நிதியில் இருக்கும் இந்த திருஉருவம் சுமார் மூன்றரையடி உயரம் வரை இருக்கும். மிக மிக அழகானவை. வருடந்தோறும் ஆருத்ரா உற்சவத்தின் போது இவர் வெளியே உலா வருகிறார்.

சபாநாதர் சந்நிதியில், திருமுறைக்கோயிலைக் கண்டு, விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டோம்.

அடுத்திருந்த உற்சவ தட்சிணாமூர்த்தியை அவருக்குண்டான வணங்கு முறையுடன் வணங்கி நகர்ந்தோம்.

அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால், நந்தியார் இருக்க, நம் வருகையினை இவரிடம் பதிவு செய்து வணங்கிக் கொண்டு இறைவனைக்காண உள்புக அனுமதியையும் பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்திருந்த பலிபீடத்தின் முன் வந்து நின்று,......நம்மிடம் ஆணவமலம் இல்லாதிருந்தாலும், முறைக்காக இவரிடம் ஆணவமலம் இருந்தால் பலியாகிப் போக்கிக் கொள்ளும்படியாக வேண்டி வணங்கி நகர்ந்தோம்.

அடுத்து மகாமண்டப வாயிலில் துவாரபாலகர்கள் இருக்க, இடப்புறத்திலிருக்கும் ஒருவரை வணங்கி உள்செல்ல அனுமதிக்க வேண்டிக் கொண்டோம்.

அடுத்த துவாரபாலகர் முன் வந்து நிற்க, நம்மால் முடியாது. காரணம் இடையேயாக தடுப்புக் கம்பி அமைந்திருந்ததாலும், நந்தியின் குறுக்கே செல்லுதல் என்பதற்காகவும், இங்கிருந்தே வரிசையில் நகர்ந்தவாரே, அடுத்திருக்கும் துவாரபாலகரை வணங்கி கருவறைக்கு வரிசையில் சென்றோம்.

கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், கிழக்கு நோக்கி அருளாட்சிக் காட்சி தந்து கொண்டிருந்தார். 

கூட்டநெருக்கத்துடனே பொது தரிசணத்தில் நாமும் சென்றதனால், ஈசனைக் காணும் தரிசனம் நமக்கு சிறப்பாகக் கிடைக்கவில்லை.

பக்தர்களின் தலைகள் பலமுறை மறைக்க, ஒருமுறை ஈசன் காட்சியருளி மறைந்து, மீண்டும் காட்சியருளி மறைந்த வண்ணத்துடன் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது.

கடைசியாக ஆபத்சகாயர் முன் நாம் வர, மனமுருக மனதில் பிரார்த்தித்த வண்ணம் ஈசனை முழுமையாகக் கண்டு தரிசித்து வணங்கிக் கொண்டு, ஆலய அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியுடன் வெளிவந்து, நம் நெற்றினில் அவ்வெள்ளிய விபூதியைத் திரித்து தரித்துக் கொண்டோம்.

அடுத்து திரும்பி பார்க்க, அங்கே அர்த்த மண்டபத்தில் பள்ளியறை சொக்கரும், போகசக்தி அம்மையாரும் இருக்க, அவர்கள் முன்வந்து நின்றோம்.  இவ்விடம் அருகாக அர்ச்சகர் வராததால், பள்ளியறை சொக்கரை, சிரமேற் கைகுவித்து தொழுது வணங்கிக் கொண்டோம்.

விசுவாமித்திரர் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டுமாம். இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்குமாம் என அருகிருந்தோர் கூறினர்.

இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் நடத்திக் கொண்டிருந்தனர்.  நிறையவர்கள் காத்து நின்று கொண்டிருந்தனர். இவரை வணங்கிக் கொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாவதால் இவர்கள் வணங்க நின்றிருந்ததைக் காணநேர்ந்தோம்.

இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்தி தான் பிரபலமானவர். குருவே தட்சினாமூர்த்தியாகவும், தட்சினாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இருப்பதை நாம் கண்டு, பவ்யபயத்துடன் நிம்மதியொன்றை அருளச்செய்வாயென விண்ணப்பம் செய்து வணங்கி நகர்ந்தோம்.

இந்த நிம்மதி விண்ணப்பத்தைக் கூட அவனிடம் வைத்தது நம் தவறு. ஏனெனில் நமக்குள்ளானது எதுவோ அதுவை அவன் அருளியே தீருவான். வேண்டாமென்றாலும் அவன் விடுவானில்லை.  அப்படியிருக்க நாம் அவனிடம் நிம்மதி வேண்டி விண்ணப்பித்தது நம் தவறுதானே!.

சராசரி சாதாரண தினக்கூலியாளன்தான் நான். அப்படியிருக்கும்போது சாதாரண அடியார்க்கு இருக்கும் மனநிலை நமக்கும் இருக்கும்தானே! 

இது தவறாயிருப்பின், இதுவும் ஒரு ஆணவமலமே! அப்படியிருப்பின், அடுத்த முறை அடுத்த ஆலயம் செல்கையில், அங்கிருக்கும் பலிபீடத்திடம் நம் ஆணவமலத்தை பலியிட்டுக் கொள்ளவேண்டியதுதான் என எண்ணம் கொண்டு, தொடர்ந்து நகர்ந்து செல்லலானோம்.

மேலக்கோட்டத்தில் செல்கையில், லிங்கோத்பவரைக் கண்டு அவர்பாதக்கீழ்கணைகளைத் தொட்டொற்றி வணங்கிக் கொண்டோம்.

வடகோட்டத்தில், பிரம்மா, துர்க்கையைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

அடுத்திருந்த சண்டிகேசுரரிடம் முன் வந்து அவருக்குண்டான முறையான வணக்கத்தைச் செலுத்தி, *"எம்மிடம் இல்லாதன இல்லையென* உள்ளங்கை விரித்தெடுத்து காட்டி, இவரின் தியாணம் நம் வணக்கத்தால் தடையேதும் ஏற்படாமலிருக்க, நிசப்தமாக வணங்கி விடைபெற்றுத் திரும்பினோம்.

அடுத்தாக, கிணறொன்றிருக்க அனைத்து அருகில் முன் வந்து நின்றோம். இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம், ஞானகூப தீர்த்தமாகும். எட்டிப் பார்த்து வணங்கி சிவ சிவ என மொழிந்து கொண்டோம்.

இத்தீர்த்தத்தை வாரி இறைத்து சிரசிலிட நினைத்தோம். அப்போது அங்கு எவ்வசதியும் அங்கிருக்கவில்லை.

அடுத்து, அம்மை இருக்கும் சந்நிதிக்கு சென்றோம். சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருந்தது. தனிப்பிரகாரம் கொண்டும் அமைந்திருந்தன. 

அம்மை சந்நிதி முன்னிருந்த துவாரசக்தியையும், செப்பிலான நந்தியையும், அம்மை முன் இருந்த பலிபீடத்தையும் வணங்கிக் கொண்டோம். 

அம்மையை பரிபூரணமாகக் கண்டு வணங்கி பரிபூரண அருள் பெற்று வெளிவந்தோம்.

இதனையடுத்து, திருமாலைக்கட்டி மண்டபத்தைக் கண்டோம். மேற்கு நோக்கி சனீஸ்வரர் சந்நிதி இருக்க வலம் வந்து நிறைசெய்தோம்.

வடபுறம் வசந்த மண்டபம் இருக்க, அங்கே சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தோம்.

எழுந்து திரும்ப புறப்படுகையில்,  யாகசாலை, பாக சாலை, அன்னதான சமையல்கூடம் போன்றவைகளைக் கடந்து நடந்தோம்.

ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார்.

வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விசேஷம். ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு சந்தான பாக்கியம் பெற்றாள். 

ஆலங்குடி தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ் பாடிய மகாவிஷ்ணுவும் ஸ்ரீதேவி சமேதராய் வரதராஜப் பெருமாளாக இங்கு கோவில் கொண்டார்.

வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு.

இவ்வைந்து தலங்களும் காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமையப்பெற்ற அமைப்பெற்றிருக்கின்றன. 

இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் செல்வதானால்.......

1. *திருக்கருகாவூர்* (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது. 

2. *அவளிவநல்லூர்* (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது. 

3. *அரதைப் பெரும்பாழி* (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது. 

4. *ஆலங்குடி* (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது. 

5. *திருக்கொள்ளம்புதூர்* (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது. 

சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர், தாம் தல யாத்திரை செய்யும் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

*திருவிழாக்கள்:*
பஞ்ச பருவ உற்சவம்.
மாதாந்திர குருவானவர் தோறும், விசேஷ தரிசனம். 
குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் காலங்களில் நடைபெறும் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை.
ஒவ்வொரு வருடமும் மாசி மாத குருவாரத்திலும், மகா குரு வானத்திலும், கலச பூசைகளும், மலர் அர்ச்சனைகளும்.
மாசி மாதக் கடைசி குருவாரத்தன்று, சங்காபிஷேகமும், விசேஷ அலங்கார ஆராதனைகளும்.
தைப்பூசத்திலும், பங்குனி உத்திரத்திலும் தீர்த்தவாரியும்.
சித்திரை பெளர்ணமியில் பத்து நாள் உற்சவம். மற்றும்
தட்சிணாமூர்த்திக்குத் தேர்த் திருவிழா ஆகியன.

*புதையல்:*
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில், இத்திருக்கோயிலின் உள்பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் பிரகாரம் கட்டுவதற்கு பூமியை அகழ்ந்தனர்.

அப்போது புதைபொருள் புதையலாக, திருவிளக்குகள் பல கிடைக்கப் பெற்றன.

இவ்விளக்குகள் அனைத்தும்  கி.பி. பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்காலத்தைச் சேர்ந்தவையாகும்.

*தல பெருமை:*
சுந்தரமூர்த்தி சுவாமிகள் காசியாரண்ய தலத்தில் விளங்கும் சத்குருவாகிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும், உலகிற்கு ஏற்படும் ஆபத்தை நிவர்த்தி செய்ததால் உண்டாகிய ஆப்தசகாயர் என்னும் திருநாமத்துடன் விளங்குகின்ற ஏலவார்குழலி உடனுறையும், சிவபெருமானையும் தரிசிக்க எண்ணி மிக்க பக்தியுடன் காசியாரண்யம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அகத்திய காவிரியில் (வெட்டாறு) வெள்ளப்  பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

அடியார்கள் கரையில் மணங்கலங்கி நின்றார்கள். காசியாரண்யேசுவரர், ஓடக்காரனாக வந்து முதலில் அடியார்களை இக்கரையில் சேர்த்தார்.

மீண்டும் திரும்பி வந்து சுந்தரரை இக்கரையில் சேர்க்க சன்மானம் பெற்று, அவரை ஏற்றி வரும் போது நடு ஆற்றில் சுழல் ஏற்படும்படி செய்து விட்டு, பற்றுக்கோலையும் ஆற்றில் நழுவவிட்டு, அப்பற்றுக்கோலை எடுப்பது போல பாசாங்குமா செய்து, தானும் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பது போல ஆக்கினார்.

படகில் உள்ள நாயனார் இறைவனை வேண்டித் துதித்தார்., ஓடம் சிறிது தூரம் சென்று பாறையில் மோதி நொறுங்கிப் போனது.

அப்போது, சிவபெருமான் ரிஷப ரூடராக தோன்றி யாவரையும் தூக்கி காப்பாற்றியதாக வரலாறு சொல்கிறது.

அதன்பின் சுந்தரர் இத்தலத்திற்கு வந்து முறைப்படி வணங்கி வழிபட்டு தட்சிணாமூர்த்தியை தரிசித்து ஞானபதேசம் பெற்றார். 

இத்தலத்திலுள்ள குருமூர்த்தியை குருவாரத்தில் வணங்கி வழிபடுவோர்க்கு சிவஞானம் எளிதில் கைகூடும் என்பது திண்ணம்.

மீண்டும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அடியார் கூட்டத்துடன் அரவூர் காள்கோள்வரரை வழிபட்டு, நீடாமங்கலத்திலுள்ள சக்கரவாகபட்சியால் பூசிக்கப்பட்டு கோகமுகேசுவரரை வழிபட்டார்.

*ஆலயச்சிறப்பு:*
அகண்ட சச்சிதானந்த ரூபியாய் அனந்த மூர்த்தியாகி எங்கும் நீக்கமற நிறைகின்ற எம்பெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு, ஆர்ச்சாவதார ரூபியாய் கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றது இத்தலம்.

பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவள நாட்டிடையே மத்தியார்கள் தலம் என்னும் திருஇடைமருதூரின் பரிவார தலங்களில் தட்சிணாமூர்த்தி தலமாகவும், காசியாரண்யம் என்று முனிவர்களால் போற்றப்ப பெற்றதும் பஞ்சாரண்யதலங்களில் பூளைவனம் என்று புகழ் பெற்றதும், அமிர்த மதனம் செய்யும் காலத்தில் உண்டான ஆலகால விஷத்தை உண்டதால் ஆலங்குடி என பெயர் பெற்றதும் இத்தலத்தின் சிறப்புகள் ஆகும்.

*தல அருமை;*
கருட பகவான் தன் தாயாரின் சாப விமோசனத்திற்காக அமிர்தம் கொண்டு வந்து தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்து தன் தாயாரின் விஷ தோஷத்தை போக்கினார். 

இதனால் இத்தலத்தில் விஷ உபாதையானது இதுவரை ஏற்பட்டது இல்லை என்பது கண்கூடு.

ஸ்ரீ ஆதிசங்கரர் இத்தலத்தில் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, குருமாலா மந்திரமாகிய இருபத்துநான்கு ஸ்தோத்திரங்களாக செய்வித்து, அறுபத்துநான்கு கலைகளையும் பிரார்த்தித்து பெற்ற தலமாகும்.

*அம்மை தழும்பு:* திருவாரூரில் நடைபெறும் விழாவில் அப்போது அரசாண்ட ஈச சோழ மன்னன் எல்லாத்தலங்களுக்கும் சென்று சுந்தரமூர்த்தி திருவுருவங்களை கொண்டு வந்து விழா நடத்தினார்.

எல்லா சுந்தர மூர்த்திகளையும் விட ஆலங்குடி சுந்தரரின் உருவம் அவரது மனதைக் கவர்ந்தது. அதை திருவாரூரிலேயே வைக்க வேண்டும் என்று விரும்பினார். 

இதை அறிந்த ஆலங்குடி ஆதி சைவ சிவாச்சாரியார்கள், குழந்தைக்கு அம்மை போட்டிருப்பது போல் தொட்டில் கட்டி, சுந்தரரை கொட்டிவிட்டு ஆலங்குடிக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். 

அதனால் ஏற்பட்ட அந்த அம்மைத் தழும்புகளை இன்றும் சுந்தரமூர்த்தி பெருமான் மீது காணலாம்.

*வழிபட்டோர்கள்:* ஆதிசங்கரர் குருமூர்த்தியை தரிசித்து சிவஞானம் பெற்றார். 

இந்திரன் முதலிய அஷ்டதிக்கு பாலகர்கள் இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூசித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கப் பேறு பெற்றார்கள்.

குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி *மூர்த்தி, தலம், தீர்த்தம்* ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும்.

மேலும் இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். 

இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

இத்திருக்கோவில் திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. 

அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டான். அமைச்சர் மறுக்க அவரின் தலையை வெட்டிவிடும் படி முசுகுந்தன் கூறினான். 

கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் *அமுதோகர்* என்ற சப்தம் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. 

தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான் என்பது வரலாறு.

மற்றுமொரு புராணச் செய்தியின் படி, தேவர்கள் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடையும் போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் உண்ட தலம் இதுவாகும். 

இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால் இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது.

இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கப் பெருமானுக்கு ஒன்பது பரிவாரத் தலங்கள் உள்ளன. 

அவற்றில் ஆலங்குடி தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது. மற்ற பரிவாரத் தலங்கள் முறையே....
1) திருவலஞ்சுழி (விநாயகர்), 
2) சுவாமிமலை (முருகன்), 
3) திருவாவடுதுறை (நந்திகேஸ்வரர்), 
4) சூரியனார்கோவில் (நவக்கிரகம்), 
5) திருவாப்பாடி (சண்டிகேஸ்வரர்),
6) சிதம்பரம் (நடராஜர்)
7)சீர்காழீ (பைரவர்) மற்றும்
8) திருவாரூர் (சோமஸ்கந்தர்).

நான்கு புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயம் சுமார் ஒன்னேகால் ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது.

வற்றாக் காவிரியும், சோழவளநாட்டின் வளமும், கொண்ட தேவாரம் பாடல் பெற்ற காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் தொன்னூற்று எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

இங்கிருக்கும் கல்வெட்டில் ஈசனை, திருஇரும்பூளை உடைய மகாதேவர் என்னும் பெயராகப் பொறிக்கப்பட்டுள்ளது.

*காளமேகப் புலவர் பாடல்:*
இவர் ஆலங்குடி தலத்தைப் பற்றி அற்புதமாக பாடியுள்ளார்.

*"ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் - ஆலம் குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் மடியாரோ மண் மீதினில்''*

என்று இந்த ஆலயத்தின் பெருமையை உணர்த்தி பாடியுள்ளார்.

குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவிலை சுமார் ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.

இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை. அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதாகும். வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாக, நேர்த்தியாக இங்கு  அருள்பாலிக்கிறார்.

பெயரும் *"சுக்ரவார அம்பிகை"* என்பதாகும்.

விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலம். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம்.

இதற்கு சுவாரஸ்யமான கதை ஒன்றையும் கூறக் கேட்டோம்.

கைலாசத்தில் பார்வதி தோழிகளோடு பந்தாடி விளையாடினார்.
 
அப்போது பார்வதி, உயரப் போன பந்தை பிடிக்க கையை உயர்த்தி பந்தை எதிர்பார்த்து நிற்க......
அந்த சமயம் வான வீதியில் சென்ற சூரியன், தன்னை நிற்க சொல்வதாக கருதிக் கொண்ட அவன்........

தேரை நிறுத்த, அதனால் அவன் தொழில் தடைபட்டு உலகம் அவதியுற்றது. இதனால் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர்.

அவர் சாபம் காரணமாக பார்வதி பூலோகத்தில் அவதரித்து தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்டார்.

*அம்மை தழும்புகள்:*
தட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் சுந்தரர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. 

இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறிக் கொண்டு இச்சிலையை எடுத்துச் சென்றார்.

ஆலங்குடி வந்து பார்த்த போது, சுந்தரர் சிலைக்கு அம்மை போட்டிருந்ததைக் கண்டு, அர்ச்சகர் அதிர்ந்து பயந்து மற்றையோரிடம் இதைக் கூறினார்.

இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

*நாகதோஷம் நீங்க வழிபாடு:*
நாகதோஷம் நீங்கவும், பயம் போகவும், குழப்பம் நீங்கவும் இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

*மாசியில் சிறப்பு:*
இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.
 
ஒரு காலத்தில் பாசிபடியாத தாலிக்கயிறை கூட இங்கு வந்து வணங்கிக் கொண்டு மாசியில் கயிற்றை மாற்றி கொள்வார்களாம் பெண்கள். 

குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும். அந்த குரு பகவானுக்கு மாசியில் அபிஷேகம் நடப்பது சிறப்பிலும் சிறப்பு. 

குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

*நெய் தீபம்:*
குரு தட்சிணாமூர்த்தியை இருபத்துநான்கு முறை வலம் வந்தும், இருபத்துநான்கு நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறமுடிகிறது.

முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள் தருகிறார்.

*தேவாரம்:*
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

🌷1. சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர் வாரார் முலைமங்கை யொடும் முடனாகி ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே. 

🌷2. தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர் குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே. 

🌷3. அன்பா லடிகை தொழுவீ ரறியீரே மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 

🌷4. நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர் கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன் உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. 

🌷5. சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர் நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே. 

🌷6. தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர் சேடார் குழற்சே யிழையோ டுடனாகி ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் காடார் கடுவே டுவனான கருத்தே. இப்பதிகத்தில் 

🌷7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. காணக்கிடைத்தற்கில்லை.

🌷8. ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர் பருக்கை மதவேழ முரித்துமை யோடும் இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே. 

🌷9. துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர் கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே. 

🌷10. துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர் பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே. 

🌷11. எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன் சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன் செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார் பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.

         திருச்சிற்றம்பலம்.

பாடல் பெற்ற சிவ தல அருமைகள் பெருமைகள் தொடரில் நாளைய அடுத்த பதிவு *திருஅரதைப் பெரும்பாளி.*

☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment