உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🍀 *பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவரமருளு நாயகா போற்றி!!*🍀
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🍀 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*🍀
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🍀 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*🍀
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🍀 *திருமருகல்.*🍀
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*மாணிக்கவண்னர் (இரத்தினகிரீஸ்வரர்) கோவில், திருமருகால்.*
*இறைவன்:* மாணிக்கவண்னர், இரத்தினகிரீஸ்வரர்.
*இறைவி:*வண்டுவார் குழலம்மை, ஆமோதாளகநாயகி.
*திருமேனி:* சுயம்பு த்ரிஷா திருமேனி.
*உற்சவர்:* சோமாஸ்கந்தர்.
*தல விருட்சம்:* வாழை. (மருகல் என்னும் ஒருவகை வாழை.)
*தல தீர்த்தம்:* இலக்குமி தீர்த்தம், (மாணிக்கத் தீர்த்தம்) கோயிலுக்கு எதிரில் உள்ளன.
*தல விநாயகர்:* நிருதி விநாயகர்.
*ஆகமம்/பூஜை:* காமிகம்.
*ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.
*புராணப் பெயர்:* திருநாள் ஒளிப்புத்தூர், திருவாழ்கொளிப்புத்தூர்.
*தொடர்புக்கு:*
91- 4364- 254 879,
98425 38954.
*பதிகம்:*
திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2 (இவர் இயற்றிய மற்றொரு பதிகம் திருமருகல், திருசெங்கட்டாங்குடி இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவானது).
பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் என்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*இருப்பிடம்:*
நன்னிலத்தில் இருந்து பன்னிரண்டு கி.மி. தொலைவில் நாகூர் செல்லும் சாலை வழியில் இத்தலம் உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம்.
திருமருகலில் இருந்து அருகில் உள்ள திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம்.
திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.
*அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்,
திருமருகல்,
திருமருகல் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்,
PIN - 609 702.
*ஆலயத் திறப்பு நேரம்:* தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*கோவில் அமைப்பு:*
இவ்வாலயத்திற்கு புறப்பட்டு வந்ததும், கிழக்குத்
திசையில் பார்க்க பெரிய கோபுரம் தெரிந்தது.
*சிவ சிவ* மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.
அறுபத்தெட்டு அடி உயரமான கோபுரமே பிரதான நுழை வாயிலாக அமைந்துள்ளது.
கோவிலுக்கு வெளியே எதிரில் இத்தலத்தின் தீர்த்தமான மாணிக்க தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் உள்ளது.
தீர்த்தப் படிக்களில் இறங்கி சிரசிற்கு தெளித்தும் வானினை நோக்கி ஈசனை நினைந்து வணங்கிக் கொண்டோம்.
(நாங்கள் சென்றிருந்தபோது, இத்தீர்த்தக்குளத்தில் தீர்த்தம் இருந்தது. இத்தீர்த்தக் குளத்தில் தீர்த்தம் இல்லையென தெரிந்தோம். சரியாக தெரியவில்லை.)
தீர்த்தக் கரையில் முத்து விநாயகர் சந்நிதியில் இருந்தார். விடுவோமா? பிறகென்ன! காதைப் பிடித்து தோப்புக்கரணமிடச் செய்து வணங்கிக் கொண்டோம்.
தென் திசையில் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. நான்கு புறமும் மதில்களை உடைய இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும் உள்ளன.
விநாயகத் தொழுகைக்குப் பின், கோபுரம் வழியே உள்ளே புகுந்தோம்.
கொடிமரமிருக்க முதலில் வணங்கிக் கொண்டோம். ஆலயத் தொழுகை நிறைந்து வெளிவந்த பிறகு கொடிமரத்தின் முன்பு விழுந்து வணங்கிக் கொள்ளலாமென்று நகர்ந்தோம்.
பலிபீடத்து முன் நின்றோம். இருந்த ஆணவமலம் ஒழிய பலிபீடத்தில் பலியிட்டு விட்டு, மீண்டும் ஆணவமலம் தோன்றாதிருக்கும்படி வேண்டிக் கொண்டோம்.
அடுத்திருந்த நந்தியாரைக் கண்டோம். கால்மடித்து அவர் அமர்ந்திருந்த கோலம், நம்மை பக்தியுடன் ஆனந்தப் படுத்தியது. நம் ஆலய வருகையை அவரிடம் பதிவு செய்துவிட்டு, ஈசனைத் தொழச் செல்லும் அனுமதியும் கேட்டுக் கொண்டோம்.
இதனின் அருகாக இடதுபுறத்தில் மேடையுடன் வன்னி மரம் ஒன்று இருந்தது. இதனின் விபரத்தை அருகிருந்தோரிடம் வினவினோம்.
அதற்கு அவர்கள், இம்மரத்தினடியில் தான் ஞானசம்பந்தர் விஷம் தீர்த்து எழுப்பிய செட்டி மகனுக்கும், செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொன்னார்கள்.
பிரகாரத்தில் கொடிமர மண்டபத்தின் மேற்குப் பக்கம் அம்பாள் சந்நிதி அமைந்திருப்பதைக் கண்டு வணங்கிக்கொள்ள படிகளேறினோம்.
அம்மை அழகும் அருளும் பொருந்தி அருளோட்சிக் கொண்டிருந்தாள். அருமையான அம்மன் தரிசனம் கிடைத்தது. வணங்கிக் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளி வந்தோம்.
அடுத்து மூலவரைத் தரிசிக்க அவர் சந்நிதிக்கு மற்றும் புகுந்தோம். மூலவரான
இரத்தினகிரீஸ்வரர் (மாணிக்கவண்ணர்) சந்நிதியை ஒரு கட்டுமலை போல அமைத்திருக்கிறார்கள்.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருட்பிரவாகங்களை வாரிப் பொலிந்து கொண்டிருந்தார்.
மனமுருகப் பிரார்த்தனை செய்து அவனருளைப் பெற்றுக் கொண்டு, அவர்ச்சகர் தந்த வெள்ளிய விபூதியுடன் வெளிவந்தோம்.
சனீசுவர பகவானுக்கு சுவாமி சந்நிதிக்கு போகும் வாயிற்படியில் வடபுறம் தனி சந்நிதி இருக்கிறது.
இதுபோல வேறு எந்த தலத்திலும் சனிபகவானை இந்த அமைப்பில் காண முடியாது.
அடுத்து உள்பிராகாரம் வலஞ்செய்தோம். அவ்வலத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளைக் கண்டு நெஞ்சுக்கு நேராக கூப்பிய கடைகள் ஒவ்வொரு நாயனாரையும் வணங்கிக் கொண்டே நகர்ந்தோம்.
அதோடு பராசரலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகள் தொடர்ச்சியாக இருக்க, தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.
கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு ஒரு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது. வலஞ்செய்து தொழுது கொண்டோம்.
இதன்பிறகு, கோஷ்ட மூர்த்தங்களை வணங்க நடையிட்டோம்.
கணபதியும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் இருந்தனர்.
அனைவரையும் ஆத்மார்த்தமான மனநிறைவுடன் வணங்குதலை செய்து முடித்தோம்.
அடுத்ததாக, நவக்கிரக சந்நிதியும், பைரவர், சூரியன் திருவுருவங்களும், ஒரே பீடத்தில் அமைந்திருந்ததைக் காணப் பெற்றோம்.
இவர்களையும் தொடர்ச்சியாக தொழுது கொண்டோம்.
இதற்கடுத்ததாக, செட்டிப் பெண் மூலத்திருவுருவங்களும், பக்கத்தில் ஞானசம்பந்தர் மூலமேனியும் இருக்கக் கண்டோம். அத்திருவுருங்களைப் பார்த்து பிரமித்து வணங்கிக் கொண்டோம்.
பின் இத்தலத்து முருகப்பெருமானை வணங்கினோம். இத்தல முருகன் மீது அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளாராம்.
திருப்புகழ் வைப்புத் தலங்களில் இத்தலம் ஒன்றானது எனக் கூறினார்கள்.
இங்கிருக்கும் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
ஆலயத் தொழுகை முழுவதும் நிறைவாக, கொடிமரத்தின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து, தலை கால் தோள் புஜங்களை விழுந்த நிலையிலிருந்து அங்கங்கத் தேய்த்து வணங்கியெழுந்து ஈசனிடம் விடைபெற்று வெளிவந்தோம்.
*விஷம் நீக்கிய வரலாறு:*
பாண்டியநாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்தான்.
ஆனால் வாக்களித்தடி நடக்காமல், அவனுடைய பெண்களுக்கு பருவம் வந்த காலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான்.
அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர்.
திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் அவர்கள் இருவரும் இரவு தங்கினர். அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டியது. அவன் இறந்தான்.
திருமணம் ஆகாததால் வனிகனின் உடலைத் தீண்டமாட்டாளாய், இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள்.
சுவாமி தரிசனத்திற்காக அத்தலத்திற்கு வந்துகொண்டிருந்த திருஞானசம்பந்த சுவாமிகளின், திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது.
இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு பின்கேட்டு, இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல்............
*சடையாயெனுமால் சரண்நீ எனுமால் விடையா யெனுமால்வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே*
என்று தொடங்கும் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வனிகன் உயிர்பெற்று எழுந்தான்.
அதன் பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார்.
வாழ்வில் திருமணம் ஆகி ஏதேனும் ஒரு காரணங்களால் தம்பதியர் பிரிந்து வாழும் நிலை வந்தால், இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சய உண்மை.
திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணத்திலுள்ளது.
சம்பந்தப் பெருமான் திருமருகலில் வணிகன் விடம் தீர்த்து அத்தலத்தில் தங்கியிருந்த போது, சிறுத்தொண்டர் வந்து திருசெங்காட்டங்குடிக்கு எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
சம்பந்தரும் அடியார்களுடன் திருமருகல் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி சிறுத்தொண்டருடன் திருசெங்காட்டங்குடி செல்ல ஆயத்தமானார். திருமருகல் இறைவன் ஆளுடைய பிள்ளையாருக்கு திருமருகல் கோவிலிலேயே திருசெங்காட்டங்குடி கணபதீச்சரத்து இறைவனைக் காட்டி அருள் புரிந்தார்.
சம்பந்தரும் *அங்கமும் வேதமும் ஓதும் நாவர்* என்று தொடங்கும் (திருமருகல், திருசெங்கட்டாங்குடி இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான) பதிகம் பாடினார்.
*தல அருமை:*
'மருகல்' என்பது ஒருவகை வாழை. இது 'கல்வாழை' என்றும் சொல்லப்படுகிறது. இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் *'திருமருகல்'*என்று பெயர் பெற்றது.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடங்ககோயில்களள் (யானையேறாப் பெருங்கோயில்களுள்) இதுவும் ஒன்று.
பாம்பு கடித்து இறந்த செட்டி மகனை, ஞானசம்பந்தர் *'சடையாய்* எனுமால்' பதிகம் பாடி எழுப்பியருளிய தலம்.
இவ்வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றில் சேக்கிழார் பெருமான் மிகச்சிறப்பாகப் பாடியுள்ளார்.
இவ்வரலாற்றைச் சிற்பமாக இராஜ கோபுரத்தில் இடம் பெற்றுள்ளது.
மூலவரான சிவலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தியானவர்.
கிழக்கு நோக்கியது. எடுப்பான தோற்றம் - சதுர ஆவுடையார்.
'மடையார் குவளை மலரும் மருகல் உடைய' பெருமானை மனமாரத் தொழுதபாடி வணங்குங்கள்.
தலமரம் வாழை, தளிர்த்துத் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.
நடராஜ சபையின் வாயிலில் பதஞ்சலி, வியாக்ரபாதர் உருவங்கள் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளன.
நாள்தோறும் ஐந்து கால பூஜைகள். நடைபெறுகின்றன.
சித்திரையில் பெருவிழா, இவ்விழாவில் ஆறாம் நாள் திருவிழா விடந்தீர்த்த ஐதீகமாகவும், ஏழாம் நாள் விழா செட்டிமகன், செட்டிப் பெண் திரக்கல்யாணமகாவும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் உள்ள தெற்கு வீதியின் கோடியில் விடந்தீர்த்த விநாயகர் கோயில் உள்ளது.
இதன் பக்கத்தில் உள்ள மடமே வணிகன், செட்டிப்பெண், படுத்துறங்கிய இடம். இங்கு விஷம் தீர்ந்ததால் இங்குள்ள பிள்ளையார் *'விடந்தீர்த்த பிள்ளையார்'* என்ற
பெயருடன் விளங்குகிறார்.
இன்றும் இவ்வீதியில் பாம்பைக் காண்பது அரிது என்றும், பாம்பு கடிப்பது இல்லை, கடித்து இறப்பதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
விடந்தீர்த்த விநாயகரின் இருபுறமும் உள்ள விநாயகர்கள், சீராளன் (சிறுத்தொண்டரின் மகனார்) வழிபட்டவை என்று சொல்லப்படுகிறது.
முன்பு மடமாக இருந்த இடத்தில் தற்போது அலுவலகம் உள்ளது. இப்பகுதிதான் சீராளன் படித்த இடம் என்றும், இதன்பின் உள்ள குளம், *சீராளன் குளம்* என்றும் அழைக்கப்படுகிறது
கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும்.
மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும். இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் *"திருமருகல்"* என்று பெயர் பெற்றது
*திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருமருகல் தேவாரத் திருப்பதிகம்.*
(இரண்டாம் திருமுறை 18வது திருப்பதிகம்)
திருமருகல்விடந்தீர்த்ததிருப்பதிகம்
🌸சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.
🌸சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.
🌸அறையார் கழலும் மழல்வா யரவும் பிறையார் சடையும் முடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.
🌸ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.
🌸துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்டம் உடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.
🌸பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே.
🌸வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகற் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே.
🌸இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதிள்சூழ் மருகற் பெருமான் அலங்கல் லிவளை அலராக் கினையே.
🌸எரியார் சடையும் மடியும் மிருவர் தெரியா த்தொர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே.
🌸அறிவில் சமணும் மலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே.
🌸வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
திருச்சிற்றம்பலம்.
*நாளைய தலம் திருச்சாத்தமங்கை வளரும்.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment