Tuesday, September 26, 2017

Krishna tied to mortar because of his pranks

Courtesy:Dr.Smt.Saroja Ramanujam

கிருஷ்ணாநந்த லஹரி-அலை5

சிலர் உரலில் தான்யம் இடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ச்ரமம் தெரியாமல் இருக்க அவர்கள் கண்ணனின் லீலைகளை பாடியவாறே தம் வேலையை செய்துகொண்டிருந்தனர்.

இதை பில்வமங்களர் பின்வருமாறு கூறுகிறார் .

உலூகலே ஸம்ப்ருத தண்டுலம் ச 
ஸங்கட்டயந்த்யோ முஸலை: ப்ரமுக்தா:
காயந்தி கோப்யோ ஜனிதானுராகா
கோவிந்த தாமோதர மாதவேதி

உலூகலே- உரலில் 
ஸம்ப்ருத – குவிக்கப்பட்ட
தண்டுலம்- நெல்லை
முஸலை:- உலக்கைகளால் 
ஸங்கட்டயந்த்ய: - இடித்துக் கொண்டிருந்த 
ப்ரமுக்தா: - முதிர்ந்த 
கோப்ய:-கோபியர்
ஜனிதானுராகா- கண்ணன் மேல் உதித்த அன்பு காரணமாக 
கோவிந்த தாமோதர மாதவேதி – கோவிந்தா தாமோதரா மாதவா என்று.
காயந்தி – பாடுகின்றனர்

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளம் கோபிகைகளுக்கு கண்ணன் உரலில் கட்டுண்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அவர்கள் சம்பாஷணையிலேயே இதை அனுபவிப்போம்.

"ஆனாலும் கண்ணன் விஷமக்காரன். தாய் பால் கொடுத்துக்கொண்டிருக்கையில் விட்டு விட்டு அவசர வேலையாக உள்ளே சென்றபோது தயிர்ப் பானையை உடைத்து விட்டானே. "

" அது மட்டுமா ? எல்லோர் வீட்டிலும் புகுந்து வெண்ணை திருடியதிலேயே அவன் தாய்க்கு கோபம். இப்போது செய்த விஷமத்தால் அவனை உரலில் கட்டிப் போட்டுவிட்டாள்"

" போடி! கண்ணன் எப்போ வருவான் வெண்ணை எடுப்பான் என்று எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு சில சிடுமூஞ்சிகள் தான் யசோதையம்மாவிடம் புகார் செய்தனர்."

ஆனால் அவனைக்கட்டிப்போட்டதில் அவன் ஒன்றும் கவலைப்படவில்லை . ஏற்கெனவே அந்த உரலில் கொஞ்சம் வெண்ணெய் ஒளித்து வைத்திருந்தான் . அதை தின்று கொண்டு இருக்கையில்தான் அவனைக் கட்ட கயிறு தேடினாள் அவன் தாய்."

"ஆனால் என்ன அதிசயம் ! எந்தக் கயிறும் போதவில்லையாமே? "

" ஆமாம் . கண்ணனைக் கட்டமுடியுமா? அவனே மனது வந்து தாய் படும் கஷ்டத்தைக் கண்டு கட்டுப்பட்டான். "

"அதற்குப் பிறகு அவன் செய்த காரியத்தைப் பார்த்தாயா? உரலை இழுத்துக் கொண்டு போய் மருதமரங்களையே சாய்த்து விட்டானே"

"ஆமாம் நம் கண்ணனால் முடியாதது ஒன்று உண்டா?"

"அந்த மரம் விழுந்த ஓசையை எல்லோரும் கேட்டோம். என்ன நடந்தது என்று பார்த்தால் இரண்டு மரம் விழுந்து கிடந்தது. நடுவில் கண்ணன் சிரித்துக்கொண்டு உரலில் கட்டிய படியே நின்றான்."

"நந்த கோபர் வந்து அவனை அவிழ்த்துவிட்டார் . யசோதை அம்மாவிற்கு தான் செய்த காரியத்தைக் குறித்து வெட்கமாகப் போய்விட்டது."

வாருங்கள் நாமெல்லாம் அவன் புகழ் பாடுவோம் என்று சொல்லி எல்லோரும் 'கோவிந்தா தாமோதரா மாதவா என்று பாடினர்.

இந்த சம்பவத்தை அடியார்கள் எப்படி அனுபவித்தனர் என்று பார்ப்போம்.

நாராயண பட்டாத்ரி சொல்கிறார் 
பந்தும் இச்சதி யம் ஏவம் ஸஜ்ஜன:
தம் பவந்தம் ஆயி பந்தும் இச்சதி (நாரா- 47.7)

"எவனை நல்லோர் தம் பந்துவாக எண்ணுகிறார்களோ அப்படிப்பட்ட உன்னை கட்ட நினைக்கிறாளே" என்கிறார். 
இங்கு பந்த் என்ற சொல் பந்து , உறவினர் என்ற அர்த்தத்திலும் பந்தம் , கட்டு எனற அர்த்தத்திலும் சிலேடையாக பயன்படுத்தப் படுகிறது

தேசிகர் சொல்கிறார் , 
கண்ணனை தாய் ஏதோ ஒரு புண்ணியம் செய்த உரலில் கட்டினாள் , 'உலூகலே குத்ரசித் ஆத்தபுண்யே' , அந்த உரல் எவ்வளவு புண்ணியம் செய்தது, என்கிறார்.

லீலாசுகர் கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் ஒருபடி மேலே போய்

வரமிமம் உபதேசம் ஆத்ரியத்வம்
நிகமவநேஷு நிதாந்த சார கின்னா:
விசினுத பவனேஷு வல்லவீனாம் 
உபநிஷதர்த்தம் உலூகலே பத்தம்

நிகமவநேஷு- வேதமாகிய காடுகளில் 
நிதாந்த சார கின்னா:- மிகவும் அலைந்து களைப்படைந்தவர்களே

இமம்- இந்த 
வரம் உபதேசம் – சிறந்த உபதேசத்தை 
ஆத்ரியத்வம் – செவி மடுத்துக் கேளுங்கள்

வல்லவீநாம் – கோபியருடைய 
பவனேஷு – வீடுகளில் 
உபநிஷத் அர்த்தம் – உபநிடதத்தின் பொருளான பிரம்மத்தை
விசினுத – தேடுங்கள்

உலூகலே பத்தம்- அது அங்கே உரலில் கட்டுண்டு இருக்கிறது.

'பிரமனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கண்ணனை
என்னதவம் செய்தனை யசோதா' என்ற பாபநாசம் சிவனின் கீர்த்தனை நினைவுக்கு வருகிறதல்லவா!

Image may contain: 2 people
Image may contain: 3 people, outdoor

No comments:

Post a Comment