**சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*( 27 )*
🌼 *திருக்கடவூர் தொடர்.* 🌼
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மன்னர் பெருமானின் மனம் கவர்ந்த அமைச்சராகிய அருண்மொழித் தேவர், தமிழகத்தில் வாழ்ந்து வந்த நாயன்மார்களின் வரலாற்றை *திருத்தொண்டர் மாக்கதை* என்று புராணமாகப் பாடியிருக்கிறாராம் . நம்மூரில் வாழ்ந்து வந்த குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோர்களைப் பற்றி அதில் விரிவாக வருகிறதாம் !" என்றார் புலவரொருவர்.
தில்லையில் மாக்கதை அரங்கேற்றத்திற்குச் சென்றிருந்த திருக்கடவூர் புலவர்கள், அப்புராணத்தின் பெருமையை அரங்கேற்றத்தின் போது திருத்தொண்டர் புராணச் சுவடிகள் பட்டுத் துணிகளில் அலங்கரிக்கப்பட்டு யானையின் மீதேற்றி விமரிசையாக ஊர்வலம் வரச்செய்து வெகு காலமாக விவரித்துக் கொண்டிருந்தார்கள்.
அபநயன் என்ற இரண்டாம் குலோத்துங்கன் சிவநெறியிலும் தமிழ்நெறியிலும் தலை நிமிர்ந்து நின்றான். இவனின் ஆதரவிலேயே துவங்கிய சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில், குங்கிலியக் கலயனாரும், காரி நாயனாரும் கலசம் போல் ஒளிர்ந்தார்கள்.
அரசர்களாலும், அறக்கொடையாளர்களாலும், தொடர்ந்து தொடர்ந்து நிலங்களும் நிலவந்தங்களும், திருக்கடவூர் திருக்கோயிலுக்கு பரிசளிக்கப்பட்ட காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலமாகும்.
நாடாளும் அரசனைப் பற்றி நாளும் பாராட்டும் புகழ்மொழியும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது கடவூர்காற்று. திருவாரூர் திருக்கோயிலுக்கு தரிசனத்திற்காகச் சென்று திரும்பிய திருக்கடவூர் சொக்கநாதர் பரபரப்படன் ஒரு செய்தியை விவரித்துக் கொண்டிருந்தார்.
*"கேள்விப் பட்டீர்களா?"*
திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் சந்நிதியில் இறைவாக்கொன்று உத்தரவானதாம்!" நம் அரசரை இறைவன் *"நம் தோழரே"* என்றே அருளினாராம். சுந்தர மூர்த்தி நாயனாருக்கும் பிறகு நல்ல நண்பர் கிடைகிகாமல் பெருமான் அவதிபட்டார் போலும்?! நல்ல வேளையாய் நம் அரசர் இறைவனுக்கு கிடைத்தார்!" என்றார் அவர்.
இருக்கும் இருக்கும்! தில்லைத் தலத்திலும் நம் அரசர் பெருமானை ஏக பக்தன் என்றே கொண்டாடுகிறார்கள் ஆனால்......" என்று பேச்சினை விழுங்கி மெல்ல இழுத்தார்.......முத்தையன்.
என்ன? ஏன் இப்படி பேச்சினை மழுங்கி இழுக்கிறீர். சொல்ல வந்ததை சொல்லிட வேண்டியதுதானே!"
மற்றவர்கள் தூண்டி விட்டனர். எல்லாம் சரிதான். நாம் தென்னாடுடைய சிவனே போற்றி என்கிறோம். ஆனால் இப்போது தென்னாட்டுச் சிவனடியார்களை விட, வடநாட்டு வைதீக மரபில் வந்த அடியார்களுக்கல்லவா செல்வாக்கு ஓங்கி இருக்கிறது!"
உடனே சட்டென நிலவிய அமைதியை கலைத்தார் நல்லசிவம் என்றொருவர். *" அதை விடுங்கள்"* ராஜராஜசோழன் காலத்திலேயே அப்படித்தான் இருந்ததாய் சொல்வார்கள் இதை பெரிதுபடுத்தாதீர்கள்!"
ஆனால் திருக்கடவூரில் இப்படியொரு பேச்சு நிலவியது தெரிந்தோ என்னவோ! மூன்றாம் குலோத்துங்கனின் ராஜகுரு சுவாமி தேவர் ஓரிரு நாளில் திருக்கடவூர் வருகிறார் என்ற அதிகாரப்பூர்வமான செய்தியொன்று கிடைக்கப் பெற்று ஊரெங்கும் இதைப் பற்றின பேச்சாய் பேசினர்.
"ராஜகுரு சாமித்தேவர் வருகிறாராமே! அவர் எந்த ஊர்க்காரர் அவர், ..என ஒருவர் வினா எழுப்ப,
"வடக்கிலிலுள்ள வங்கத்திலிருந்து வந்தவராம் இவர். கோஸ்சுவாமி மிஸ்ரா் என்பவரின் சகோதரராம் இந்தச் சாமித்தேவர். இவரின் இயற் பெயர் ஸ்ரீ கண்ட சம்பு. அச்சுத மங்கலத்தில் சோமநாதர் ஆலயம் எனவொரு சிவாலயம் புணர்வித்துருக்கிறாராம். இந்தத் திருக்கோவிலுக்கு நம் மகாராஜா ஏராளமான நிவந்தங்களையும் மடவிளாகங்களையும் தந்திருக்கிறாம் என்றார் மற்றொருவர்.
சுவாமித் தேவரை வரவேற்க ஊரெல்லையில் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூரண கும்ப மரியாதைகளுடன் திருக்கோயிலுக்கு ஊர்வலமாய் அழைத்து வரப்பட்ட சுவாமித் தேவர் "கடு கடு வென்றிருந்தார்.
என்னய்யா இது! சுவாமித் தேவர் மெளன சகிதமாய் வருகிறார். பேச காசு பணம் கொடுக்க வேனுமோ? என்றாரவொருவர்.
இவ்விதம் சொன்ன அவரைப் பார்த்து, அருகிலிருந்த மற்றொருவன், கை ஜாடை செய்து, நீர் பேசாது மெளனமாய் வாரும் என சொன்னார்.
சந்நிதியில் வடமொழி மந்திரங்கள் முறையாக உச்சரிக்கப்பட்ட சுவாமித் தேவரின் முகம் சற்று புன்னகையானது. சந்நிதியிலிருந்து நகரத் தொடங்கிய சுவாமித் தேவரிடம் பூசைப் பொறுப்பிலுள்ளவர்கள் தயக்கத்துடன் நெருங்கி ஏதோ சொன்னார்கள். இப்போது சுவாமித் தேவரின் முகம் பழையபடி மாறிப் போனது. அவர் சுற்றும் புறமும் நோக்கி விட்டு, இருவரை நோக்கி விரல் சுட்டிவிட்டு , திருக்கோயில் அதிகாரியை யழைத்து அவரிடம் ஏதோ முனு முனுவித்து விட்டு அவ்விடமிருந்து நீங்கிப் போனார் சுவாமித் தேவர். திருக்கோயில் உபசாரங்களை ஏற்று அவர் திரும்பிய பிறகுதான் நடந்தது என்னவென தெரிந்தது.
பார்த்தீர்களா? திருக்கோயில் பூசைக்கென்று மகாராஜா இரண்டு சிவாச்சாரியார்களை நியமித்திருந்தார் அல்லவா! அந்த நியமனத்தை நிறுத்தி விட்டு பூசைக்கு பரம்பரை உரிமை பெற்றவர்களையே சுவாமித் தேவர் நியமித்து விட்டாராம். இப்போதாவது தெரிந்து கொள்ளும் ராஜகுரு சர்வ வல்லமை படைத்தவரென்று!" என முத்தையன் சொன்னதை மற்றோர்கள் வியப்போடு கேட்டார்கள்.
சிறிது காலத்தில் தென்னகத் திருமடங்களைச் சார்ந்தவர்களுக்கும், வடநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் இடையே மோதல்கள் வலுத்தன. திருத்துரைப் பூண்டியிலும் மற்ற இடங்களிலும் தென்னகத் திருமடங்களின் குகைகள் இடித்து நொறுக்கப் பட்டன. இந்நிகழ்ச்சியினைக் *குகையிடிக்கலகம்* எனச் சொல்லப்பட்டது. சிவபக்தியில் தலைதூக்கி நிற்கும் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் இப்படியும் நிகழுமா? வென வேதனையோடும் விமர்சனங்களும் எழுந்தன.
திருக்கடவூர் திருக்கோயிலுக்கு உட்பட்ட நாட்டிய சாலையிலிருந்து கம்பீரமான குரலொன்று ஒலித்தது.
நம்மூருக்கு புதியதாக நட்டுவனார் ஒருவர் நியமித்திருக்கிறார்களாமே?...யா
"அவர் பெயர் பாரசவன் பொன்னன். காலவிநோத நிருத்தப் பேரரையன் என்னும் சிறப்பு விருது பெற்றவராம். அரசவைப் புலவர் வீராந்த பல்லவராயரின் பரிந்துறையில் நடந்த நியமனமாம். என்றானொருவன்.
எதற்கும் எச்சரிக்கையாய் இருங்கள். சுவாமித் தேவர் மறுபடியும் வந்து இந்த நியமனத்தையும் நிறுத்தி விடப் போகிறார் எனவொருவன் குறும்பாகச் சொன்னான்.
மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பிறகு மூன்றாம் இராஜராஜனும் அவனைத் தொடர்ந்து மூன்றாம் ராஜேந்திர சோழனும் ஆண்டதும் அவனுக்குப் பிறகு சோழநாடு, பாண்டியர்கள் வசம் சென்றதும் வரலாறு. ஜடாவர்மன், சுந்தர பாண்டியன், ஜடாவர்மன் வீரபாண்டியன், மாறவா்மன் குலசேகர பாண்டியன், போன்ற வேந்தர்கள் வேண்டி விரும்பி நல்கிய அருட்கொடைகளும் நிவந்தங்களும் திருக்கடவூர் வீராட்டனத்திற்கு வளம் சேர்த்தன.
மாறவர்மன் குலசேகரன் வழங்கிய முப்பத்தோரு வேலி நிலத்தின் வருவாய் திருக்கோவிலின் நித்திய பூசைக்கும், அரசனின் பிறந்த நாளாகிய ஆனி மூலத் திருநாளன்று சிறப்புப் பூசைக்கும் பயன்படுமாறு விதிக்கப்பட்டது.
பாண்டியர்கள் காலத்தில் திருக்கோவிலுக்கு நல்கப்பட்ட நகைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு காவிரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
பேரரசுகள் வேர்கொண்டெழுந்ததையும், வளர்ந்ததையும் விழுந்ததையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது காலம்.
திருச்சிற்றம்பலம்.
*திருக்கடவூர் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
**சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*( 28 )*
☘ *திருக்கடவூர் தொடர்.* ☘
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருக்கடவூர் அம்பாள் ஆலயத்தின் முன்பு பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த குழுவினர் கண்மூடி மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்தனர்.
செந்நிற வஸ்திரங்கள் பூண்டு, கழுத்தில் உருத்திராக்கம் அணிந்திருந்தனர்.
அம்பிகையை முழுமுதற் பொருளாக வழிபடும் சாக்த மார்க்கத்தினர் என்பது பார்த்தாலே புரிந்தது.
அவர்களில் சிலர் சோழி மாலைகள் அணிந்திருந்தனர். சிலர் சோழி மாலைகளைக் கைகளில் வைத்து உருட்டிய வண்ணம் செபித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களைச் சுட்டிக் காட்டிய சோமநாத சிவாச்சாரியார் இளம் அந்தணர்களுக்கு மெல்லிய குரலில் விலக்கிக் கொண்டிருந்தார்.
"தாந்திரீகத்தில் சோழிகளுக்கு ஹம்ஸீ என்று பெயர். உலகவாழ்வின் இன்பங்களும் செல்வங்களும் கடலளவு கிடைக்க சோழிகள் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.,
யோனி வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சோழிகளாலான மாலைகளை அணிந்து கொள்வார்கள்.
பாதரசத்தையும், மானின் கோமியத்தையும் கலந்து பொதிக்கப்பட்ட சோழிகள் உலக இன்பங்களை அளவின்றித் தருபவை. பாற்கடலைக் கடைந்தபோது வந்த புனிதப் பொருட்களில் சோழிகளும் அடங்குமென்று புராணங்கள் சொல்கின்றன.
சிவாச்சாரியார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஓர் இளைஞன் இடைமறித்துக் கேட்டான்.
"அது சரி சாமி! இவர்களெல்லாம் யார்?" இங்கே குழுவாக அமர்ந்து என்ன செய்கிறார்கள்?" இவர்கள் ராஜ மரியாதையுடன் வரவேற்கப்பட்டதும், சுற்றிலும் வீரர்கள் காவலுக்கு நிற்பதும் பெரிய இடத்துப் தொடர்புள்ளவர்கள் என காட்டுகிறதே!"
சிவாச்சாரியார் சொன்னார், "நீ சொல்வது சரிதான். நம்முடைய மன்னர் செவ்வப்ப நாயக்கரின் பெரும் மரியாதையைப் பெற்ற எல்லப்ப நயினாரின் சீடர்கள் இவர்கள்.
யாமள தந்திரத்தில் தலை சிறந்து விளங்கும் காளிங்கராயன் உண்ணாமுலை எல்லப்ப நயினார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவையாறு ஆகிய தலங்களில் துவார சக்தியைப் பிரதிட்டை செய்துவிட்டு திருக்கடவூரிலும் பிரதிஷ்டை செய்ய இங்கே வரவிருக்கிறார்.
இதன்பிறகு புள்ளிருக்கு வேளூரிலும் தில்லையிலும் பிரதிட்டை செய்யப் போகிறாராம். அதற்கான பிரதிட்டை சடங்குகளில் அவருடைய சீடர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்".
சொல்லிக்கொண்டிருக்கும்போதே துந்திபியும் எக்காளமும் முழங்கின. மறையவர் சூழ ராஜ பிரதானிகள் பின்வர நடுநாயகமாய் வந்து கொண்டிருந்தார் எல்லப்ப நயினார்.
நெடிதுயர்ந்த தோற்றம். நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க கண்களில் அமைதியும் தவமும் கனிந்திருந்தது.
அவரை முன்பின் கண்டறியாத பொது மக்கள் தம்மையும் அறியாமல் எழுந்து நின்று கைகூப்ப அவருடைய சீடர்கள் மட்டும் அசையாமல் தொடர்ந்து மந்திர ஜபத்தில் ஈடுபட்டிருந்தனர்.
விஜயநகரப் பேரரசு தஞ்சையில் நிலை கொண்ட நாள்முதலாய் திருக்கோயில்கள் புதுப்பொலிவு பெற்றன.
கிருஷ்ணதேவராயர் காலம் முதல் திருக்கடவூரில் திருப்பணிகள் நடந்தேறின. அவர் மறைவுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசராய் அரியணையேறிய அச்சுததேவராயர் தஞ்சையின் முதல் நாயக்க மன்னராக செவ்வப்ப நாயக்கரை நியமித்தார். துவார சக்தியின் பிரதிட்டை திருக்கடவூர் கோவிலுக்கு புதுப்பொலிவைக் கொடுத்தது.
நாயக்க மன்னர்களைப் பொறுத்தவரை தந்தையும் மகனுமாக சேர்ந்து ஆட்சிப் பொறுப்பை கவனிப்பது அடிக்கடி நடந்தது.
செவ்வப்ப நாயக்கர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் அதைத் தொடர்ந்து அச்சுதப்ப நாயக்கரும் அவர் மகன் இரகுநாத நாயக்கரும் ஒன்றிணைந்து ஆட்சிப் பொறுப்பை கவனித்தனர்.
தான் வாழும் காலத்திலேயே கூட இரகுநாதனின் திறமையை தாத்தா செவ்வப்ப நாயக்கர் அடையாளங்கண்டு பாராட்டியதுண்டு.
மக்கள் மத்தியில் இரகுநாத நாயக்கர் வேகமாக செல்வாக்குப் பெற அவருடைய இசைப்புலமையும் காரணம்.
கோவிந்த தீட்சிதரின் சீடரான இரகுநாத நாயக்கர் பற்றி சுவாரசியமான தகவல்கள் பரவின.
அரசருடைய சமையல் பரிசாரகரின் மைத்துனன் செம்பான், திருக்கடவூர் திருக்கோயிலில் வேலை பார்த்து வந்தான்.
மகாராஜா அரண்மனையில் இரகுநாத மன்னனுக்கு பரிமாறப்படும் உணவுவகைகள் பற்றி அவனை அடிக்கடி சொல்லக் கேட்டு ரசிப்பார்கள் ஊர்க்காரர்கள்.
திருச்சிற்றம்பலம்.
*திருக்கடவூர் தொடர் இன்னும் தொடர்ந்து நாளையும் வ(ள)ரும்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
**சிவாயநம,திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*( 29 )*
🌻 *திருக்கடவூர் தொடர்.* 🌻
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
இரகுநாத மன்னனுக்குப் பரிமாறப்பட்ட உணவு வகைகளை அடிக்கடிச் சொல்லி கேட்டு ரசித்தனர் ஊர்க்காரர்கள்.
அப்பளம், எள்ளுப்பொடிசேர்த்த கற்பூரக் கோழி, தேங்காய் துருவலுடன் கருவேப்பிலை பொடியையும் கலந்து சேர்த்த குங்குமக் கோழி, உளுந்தும் கடலைப் பருப்பும், சானகி சூர்ணம் கலந்து செய்த கஸ்தூரிக் கோழி, சர்க்கரைப் பாகுடன் சேர்த்த பால்கோழி, வெங்காயமும் பூண்டும் போட்டு மசித்தச் செய்யப்பட்ட கட்டுக்கோழி, நுலுவ கோழி, மீன் வறுவல் பலவகைகள், பேணி, மாண்டே, இலட்டு, பூர்ண கலச மோதகம், அதிரசம் போன்றவகைகள், கறிவடை, தயிர்வடை, ஆமைவடை, (பருப்பு வடை) பன்னீர்ப் பாயாசம் ஜீரக,பாயாசம், குளிர்ந்த பாயாசம், ஸொஜ்ஜி பாயாசம், சீகரணி ஆன சர்க்கரைச் சாதம், இன்னும் சிர வகையான எண்ணெய்ப் பலகாரங்கள், தேனில் அழுந்துக் கிடந்த பழ(பல) ரகங்கள், நீர்மோர், ஏலம் சுக்கு வெட்டிவேர் கலந்த குளிர்ந்த நீர் முதலியன.
விஜயரகுநாத மன்னன்
கைகால் கழுவி மனையிட்டு இலையின் முன்பாக அமரும் கோலத்தை செம்பான் வர்ணிக்கும்போது ஏதோ அவன் அடுத்த இலையில் அமர்ந்து விருந்துண்டு வந்தவன்போல் தோன்றும். எல்லாம் அவன் மைத்தபனன் சொன்ன கதைகளே!.
இரகுநாத நாயக்கர் காலத்தில் திருக்கடவூரில் பரவிய மற்றொரு பரபரப்பு டேனிஷ்காரா்கள் தரங்கம்பாடியில் கோட்டை அமைத்ததுதான்.
சங்ககாலத்திலேயே புகழ்பெற்ற தரங்கம்பாடிக்கு நாயக்கர் காலத்தில் சடங்கன்பாடி என்று தான் பெயர். அங்கிருந்த மாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலுக்கு நிறைய நிவந்தங்களும் நிலபுலன்களும் அளிக்கப் பட்டன.
சோழர் காலத்திலேயே தரங்கம்பாடியில் கைக்கோளர்கள் சேனை இருந்ததாலும் அச்சுதப்ப நாயக்கர் காலத்திலேயே தரங்கம்பாடி கோட்டை இருந்தாலும் இரகுநாத நாயக்கர் காலத்தில்தான் கோட்டை டேனிஷ்காரர்கள் வசமானது.
*"இப்படி பரதேசத்துக்காரர்களுக்கு மகாராஜா இடந் தரலாமோ"* மெல்லிய முணுமுணுப்பு திருக்கடவூர் குடி மக்களிடையே பரவியது. "கடல்வாணிகம் பரவத்தானே செய்கிறார். அவர் என்ன விபரம் தெரியாதவரா?" சிலர் சமாதானப்படுத்தினார்கள்.
ஆனால் அந்த அச்சம் அர்த்தமுள்ளது என்பதை இரகுநாத நாயக்கரின் இளையமகன் ஆட்சிக் காலத்தில் திருக்கடவூர் மக்கள் உணர்ந்தார்கள். இரகுநாத நாயக்கர் காலத்திலேயே அவருடைய மூத்தமகன் இராமபத்ர நாயக்கர் மரணமடைய இளையமகன் விஜயராகவ நாயக்கர் இளவரசு பட்டமேற்றார்.
பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அவர் ஆட்சிப்பொறுப்பேற்றபோது, டேனியர்கள் மிக மோசமான வணிக இழப்பை சந்தித்தார்கள். தங்கள் கோட்டையை விற்பது பற்றியும் அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரமது. ஆனால், விஜயராகவ நாயக்கர் அனுமதிக்கவில்லை.
திருக்கடவூர் ஏகாரம்பிள்ளை தன் சகாக்களிடம் ஒரு நாள் பெருங்குரலெடுத்துப் பேசிக் கொண்டிருந்தார்.
"நேற்று வரை புலம்பிக் கொண்டிருந்த டேனிஷ்காரன் இன்று நிமிர்ந்து விட்டான், ஆக அவர்கள் நாட்டிலிருந்து படை பலமும் பணபலமும் நிரம்பிய கப்பல் ஒன்று வந்து விட்டது. அவனுடைய இருபதாண்டு காலப் போராட்டம் ஓய்ந்து விட்டது. இனி அவனுக்குச் சுக்ரதிசைதான்.
ஆனால், திருக்கடவூர்காரர்கள் எதிர்பாராத ஒரு சம்பவமும் நிகழ்ந்தேறின.
தனக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்திக் கொண்டிருந்த மதுரைப் படையை எதிர்கொள்ள டேனிஷ்பர்க்கின் உதவியை நாடினார் விஜயராகவ நாயக்கர். இதற்கு கைமாறாக டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியைச் சுற்றியிருந்த ஐம்பது சதுர கி.மீ நிலபரப்பைக் கேட்டுப் பெற்றனர்.
டேனிஷ்காரர்கள் வசமான நிலப்பகுதியில் திருக்கடவூரும் இருந்தது. "மலைபோல் நம்பிய ராஜா நம்மை மாற்றான் வசம் ஒப்படைத்து விட்டாரே" என்று மாய்ந்து மாய்ந்து புலம்பினார்கள் திருக்கடவூர்காரர்கள்.
ஆனால், காலம் வேறொரு கணக்கை வெளிப்படுத்தியது. மதுரை சொக்கநாத நாயக்கர் வென்ற வல்லம் கோட்டையை மீட்க விஜயராகவ நாயக்கர் பீஜப்பூர் சுல்தான் உதவியைப் பெற்றார். கோட்டையையும் மீட்டார். ஆனால் அதே படைகள் மராட்டியப் படையுடன் கைகோர்த்து எதிர்பாராத நேரத்தில் விஜயராகவ நாயக்கரைத் தாக்கியது.
1675 பிப்ரவரி மூன்றாம் நாள் தஞ்சை வடக்குவீதி இராஜகோபாலசுவாமி திருக்கோவில் அருகே நடந்த மோதலில் விஜயராகவ நாயக்கரும் அவர் மகன் மன்னாருதேவனும் வீழ்ந்தனர். தஞ்சையில் நாயக்கர் ஆட்சி விழுந்தது. ஏகோஜி தலைமையில் மராட்டிய அரசு மலர்ந்தது.
*தன்னை அறியார் தலைவன் தனையறியார்*
*முன்னை வினையின் முடிவறியார் -- பின்னைக்*
*குருக்களென்றும் பேரிட்டுக் கொள்ளுவார்கள் ஐயோ*
*தெருக்களில் தனிலே சிலர்!*
--ஸ்ரீ குருஞானசம்பந்தர்.
( சிவபோகசாரம்)
திருச்சிற்றம்பலம்.
*திருக்கடவூர் தொடர் நாளையும் வ(ள)ரும்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
**சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*( 30 )*
🍃 *திருக்கடவூர் தொடர்.* 🍃
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருக்கடவூர்காரர்களின் வாழ்வை இயக்கும் ஆதார மையங்களே வயல் வேலையும் பெருமானைத் தொழுவதும்தான்.
திருக்கடவூர் திருக்கோயில் ஊரின் நடுநாயகமாய் விளங்கின. ஒவ்வொருவரின் அன்றாட வாழ்விலும் புகுந்து ஊடாடியது. ஆங்காங்கே நிற்கும் ஆலயப் பசுக்களை, போவோர் வருவோர் தொட்டும் வருடியும் செல்வார்களானார்கள். அமுதகடேசர் அபிராமியும் சார்ந்திருந்த நிழலில் அனைவருடைய வாழ்வும் அமைதியாகழும் ஆனந்தமாகவும் கழிந்து கொண்டிருந்தது.
மூன்று போக விளைச்சலைத் தரும் வயல்வெளிகளெல்லாம் உழவர்களுக்குத் தாய்மடி போல் உயிரோட்ட நிலை தந்து கொண்டிருந்தது.
வேளாண்குடி மக்களின் வியர்வையைத் துடைக்க கருவூர்க் காற்று வசந்தமாக வீசிக் கொண்டேயிருந்தது.
வானவெளியில் நீந்தி வரும் பறவைகள் மாலை நேரங்களில், திருக்கடவூர் திருக்கோயில் அமிர்தகடேசரின் ஆலயவெளி மதில்மீது அமர்ந்து பெருமானின் ஸ்பரிசத்தை அனுபவித்த வண்ணமிருந்தன. பின் இருள் கவ்விய பின்பு, திருக்கோயில் திருக்கோபுரம் புகுந்து புகழிடம் கொண்டன.
காலைநேரம் புலர்ந்து கோயில்மணிகள் ஒலிக்கத் தொடங்கியதும், இரவில் தஞ்சம் கொண்ட பறவைகள் சிறகடித்துப் பறந்தோடின.
மடவிளாகங்களில் ஓயாதொலிக்கும் சாமகானமும் சாளரங்கள் வழி வெளிப்படும் வேள்விப் புகையும் திருக்கடவூரை உயிர்ப்பும் உற்சாகமும் ததும்பும் தலமாகவே வைத்திருந்தன.
மராட்டிய மன்னர்களின் சாத்வீக அணுகுமுறையும் பக்தியும் அவர்களை,மிக நெருக்கமாக உணரும் மனநிலையை ஏற்படுத்தியது. அரசர்களின் ஆளுகையிலும் சிறிதுகாலம் டேனிஷ் கோட்டையின் கட்டுப்பாட்டிலும் இருந்த திருக்கடவூரில் ஒரு மாற்றம் வரத் தொடங்கின.
நாயக்கர் காலத்திலிருந்தே பொதுமக்களின் பக்திக்கும் அபிமானத்திற்கும் பெயர் பெற்று விளங்கிய தருமை ஆதீனத்தின் ஆளுகைக்கு அருளாட்சி ஒப்படைக்கப் பெற்றது.
தருமையாதீனத்தின் குருமுதல்வர் *ஸ்ரீ குருஞான சம்பந்தர்* சின்னஞ்சிறு வயதுள்ளவராய் பெற்றோர்களுடன் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து மதுரைக்குச் சென்ற சிறுபிள்ளை அவர். அந்தப் பிள்ளைக்கும் *ஞானசம்பந்தர்* என பெயர்.
மதுரை சொக்கநாதர் திருவடியை விட்டு நீங்க மனமில்லாமல் அவ்வாலயத்திலேயே தங்கிவிட்ட குழந்தை ஞானசம்பந்தரின் தீராத பக்தி பெருகியது.
பொற்றாமரைக் குளத்தின் ஈசான திசையில் சொக்கநாதப் பெருமான் திருவுரு கொண்ட பூசைப் பெட்டகம் கிடைத்தது. வழிபடு மூர்த்தம் கிடைத்தது போலவே வழிகாட்டும் குருநாதரும் கிடைக்க வேண்டும் என்னும் விருப்பத்தை விண்ணப்பத்தபோது அதனையும் நிறைவேற்ற ஆலவாய் சொக்கநாதன் திருவிளையாடலை உருவாக்கினான்.
திருவாரூரில் வாழ்ந்து வந்த *கமலை ஞானப்பிரகாசரே* தன் குருவென இறைவன் உணர்த்தியதை முன்னிட்டு ஆரூரையடைந்து ஆசாரியமூர்த்தியின் திருவடிகளைப் பணிந்தார் ஞானசம்பந்தர்.
சொக்கநாதன் அருள்பெற்று *சொக்கநாதக் கலித்துறை* பாடிய ஞானசம்பந்தர், தன் குருநாதரைக் குறித்து *ஞானப்பிரகாசமாலை* எனும் நூலினை இயற்றினார்.
பேரின்பப் பாதையில் விளக்கென ஒளிரும் குருநாதர் திருக்கோயில் தரிசனத்திற்குப் போகும்போது கை விளக்கெடுத்து வந்தார் ஞானசம்பந்தர்.
இல்லம் வந்ததும் இயல்பான மனநிலையில் குருநாதர், ஞானசம்பந்தரை நிற்கப் பணித்து உள்ளே சென்றார். குருநாதர் சொல்லிலிருந்து குன்றிமணியளவும் வழுவாக் கொள்கையுடைய ஞானசம்பந்தர் கைவிளக்கெடுத்தேந்தி வாயில் முனையிலேயே இரவு கழியும் வரையும் நின்றார்.
பொழுது புலர்ந்ததும் நிட்டா நியமங்களுக்கென வெளிவந்த குருநாதர் சுடர் விளக்கேந்திய சூரியனாய் தன் சீடன் நின்றிருப்பதை பார்த்தார். ஆச்சரியப் பட்டு வியந்தார்.
ஆச்சரியப்பட்டு வியந்ததற்குக் காரணம்.......
வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. வாயிலின் முற்ற வானவெளியில், ஒளிந்திருந்து கொண்டிருக்கும் விளக்கினை ஏந்தி நின்றவாறு சம்பந்தர் நின்று கொண்டிருந்தார்.
அம்மழை, சீடன் சம்ந்தர் மேல் விழுகாவண்ணம் பெய்தது. விளக்கின் மேலும் அம்மழை பொழியவில்லை. விளக்குடன் நிற்கும் இடத்தை தவிர மற்ற இடங்களில் மழை பெய்தது. சம்பந்தர் மீது மழை பொழியாமல், இவரை விட்டு விலகியே மழை பெய்த விந்தையைக் கண்டு குருநாதர் வியந்தார்.
தன்முன் சீடனாய் அரும்பிய செல்வன் குருவாய் மலரும் தன்மை எய்தியதை நற்குணர்ந்த கமலையார் பக்குவம் மிக்கவர்களுக்கு உபதேசம் செய்யும் அருட்பணியில் ஈடுபடப் பணித்தார்.
கண்ணுதற் திருவும் கமலைநகர்க் குருவும் அன்றி வேறொன்றறியாத ஞானசம்பந்தர், "பொதியும் சரி, பொதி சுமக்கும் எருதும் சரி, தம்முடைய தனிப்பட்ட இச்சையின் வண்ணம் செல்வதில்லை. இரண்டிலுமே தன்னை செலுத்துபவன் இச்சையின் வண்ணமே செல்வதுபோல், என் உடம்புக்கும் உயிருக்கும் தனிப்பட்ட இச்சைகள் எதுவுமில்லை. குருநாதர் இச்சை எதுவோ அதன்படியே வாழ்வேன். எனவே எனக்குரிய வழியையும் தாங்களே காட்ட வேண்டும்" என்று விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பம் அரியதொரு பாடலாகவே மலர்ந்தது.
*கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ*
*எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார் புரத்தைச்*
*சினக்கும் கமலையுள் ஞானப்ரகாச சிதம்பர இன்று*
*உனக்கிச்சை எப்படி, அப்படியாக உரைத்தருளே!"*
திருச்சிற்றம்பலம்.
*திருக்கடவூர் தொடரில் நாளை, குருஞானசம்பந்தரின் சிவ மணம் மணக்கும்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
**சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*( 31 )*
☘ *திருக்கடவூர் தொடர்.* ☘
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சீடன் குருஞானசம்பந்தரின் பக்குவமெய்திய பணிவுநிலை கண்டு நெகிழ்ந்த ஞானப்பிரகாசர், *"திருத்தமபுரத்தில் சென்றிருந்து சிவ மணம் பரப்புக"* என்று பணித்தார்
தருமையாதீனத்தின் குரு முதல்வரானார் குருஞானசம்பந்தர். சிவம் பெருக்கும் எட்டு அருள்நூல்களை அருளிச்செய்தார் அவர்.
தருமையாதீன பரம்பரையில் நான்காவது குரு மூர்த்திகளாக எழுந்தருளிய ஸ்ரீ மாசிலாமணித் தேசிகரிடம் உபதேசம் பெற்ற அருளாளராகிய ஸ்ரீ குமரகுருபரர் காசிப் பதியில் குமாரசாமி மடம் நிறுவினார். காலப்போக்கில் அதன் தலைமையகம் திருப்பனந்தாளுக்கு மாற்றப்பட்டது.
துறைசை எனப்படும் திருவாடுதுறை ஆதீனம் பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
சிவபெருமானின் முக்கண்களாய் விளங்கிய இத்திருமடங்களில் தருமையாதீனத்தின் அருளாட்சிக்கு உட்பட்டது திருக்கடவூர் திருக்கோயில்.
மூன்று திருமடங்களில் உள்ள குருமூர்த்திகளின் தரிசனமும் வழிகாட்டுதலும் சிவம் பெருகிச் செழித்த திருக்கடவூரில் அருள்நெறி பன்மடங்கு பெருகச் செய்தது.
"திருவெண்காட்டில் திருவாடுதுறை மகாசந்நிதானம் மகேசுவர பூசைக்கு அன்னதானக்கட்டளை நிறுவி இருக்கிறது"
திருக்கடவூர் கிராமசபையில் இதுபற்றிய ஆலோசனை நிகழ்ந்தது. சிவனடியார்களுக்குப் பாதபூசை செய்து, வரிசையில் அமர்த்தி, அவர்களை சிவபெருமானாகவே பாவித்து அமுது படைப்பதற்கு மகேசுவர பூஜை என்று பெயர்.
"நம்முடைய ஏழுமாகாணம் சார்பாக நூறுகலம் நெல் தரலாம் என்று நினைக்கிறேன். சபை தீர்மானத்தின்படி செய்யலாம்" என்றார் நட்சத்திர மாலை கணபதி பண்டாரம்.
அவரும் குத்தால பிள்ளையும்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாடுதுறை ஆதீனத்தலைவர் பின் வேலப்ப தேசிகரிடம் திருவெண்காட்டுக் கோயிலுக்கு மகமை நெல் தந்து வந்தவர்கள்.
அவருடைய பரிந்துறையை சபை ஏற்று தீர்மானத்தை செப்பேடாக அடித்து திருவாடுதுறை ஆதீனகர்த்தரிடம் சமர்பிதத்து.
திருக்கடவூர் சீமையின் ஏழு மாகாணங்கள் சார்பாக மணிக் கிராமச்சேரி பிறவிப் பெருமாள், பெருநாட்டுக் கட்டளை தானாபதி வேங்கிடத்தையன், உள்மாகாணம் கருப்பட்டியா பிள்ளை, நல்லாடை மாகாணம் திருமலை அய்யன், திருக்குராச்சேரி மாகாணம் சூரிய மூர்த்தியா பிள்ளை, திருவிடைக்கழி மாகாணம் நாகநாத பிள்ளை, ஆக்கூர் மாகாணம் ஆண்டியப்ப பிள்ளை, திருச்செம்பொன்பள்ளி மாகாணம் தம்பா உடையார், கொட்டுச்சேரி மாகாணம் கறுப்ப முதலியார் ஆகியோர் ஒப்பமிட்ட இந்த சாசணத்தை குண்ணமருதூர் பல்லவராய திருவேங்கடன் எழுதித் தந்தார்.
திருமடங்களின் அரவணைப்பில் புதிய உற்சாகம் பெற்ற திருக்கடவூர் குடிமக்கள் அரசின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
துளஜா மன்னர் ஆட்சியில் இருந்தபோது ஸ்வார்ஷ் பாதிரியார் தரங்கம்பாடியில் இருந்து தஞ்சை சென்றது அக்காலத்தில் பரப்பரப்பாகப் பேசப்பட்டது.
"வெள்ளையர் அரசுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்வார்ஷ் பாதிரியார் தன்னுடன் இருந்தால் நல்லதென்று மன்னர் நினைக்கிறாரோ?" திருக்கடவூர்,வந்த ராஜ,பிரதானியிடம் மெள்ள விசாரிக்க முற்பட்டார் வில்வநாதர். ஆனால் அவரோ பிடி கொடுக்கவில்லை.
துளஜா மன்னரின் சுவீகார புத்திரர் இரண்டாம் சரபோஜியின் நியமனத்தை வெள்ளைக்காரர்கள் ரத்து செய்தாலும் பின்னர் ஏற்றது ஸ்வார்ஷ் பாதிரியாரால்தான் என்று பேச்சு நிலவியது.
தன்னை சிறு வயது முதல் வளர்த்து அரச நியமனத்தையும் மீட்டுத் தந்த ஸ்வார்ஷ் பாதிரி மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார் இரண்டாம் சரபோஜி.
திசைகளை சிலிர்க்கச் செய்யும் ஒரு தெய்வீக சம்பவத்திற்காக இரண்டாம் சரபோஜியை திருக்கடவூர் வரச்செய்தன காலநேரம்.
*தன்னை அறியார் தலைவன் தனையறியார்*
*முன்னை வினையின் முடிவறியார்--பின்னைக்*
*குருக்களென்றும் போரிட்டுக் கொள்ளுவார்கள் ஐயோ*
*தெருக்கள் தனிலே சிலர்!*
--ஸ்ரீ குருஞானசம்பந்தர்
(சிவபோகசாரம்).
திருச்சிற்றம்பலம்.
*திருக்கடவூர் தொடர் நாளையும் வ(ள)ரும்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
**சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(32)*
☘ *திருக்கடவூர் தொடர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*சின்னஞ்சிறிய மருங்கினில் சார்த்திய செய்யப்பட்டும்*
*பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த*
*கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்துத்*
*தன்னந்தனி யிருப்பார்க்கு இதுபோலும் ஒரு தவமில்லையே!*
----அபிராமி பட்டர்.
டேனிஷ்கார்களும் டச்சுக்கார்களும் ஆங்கிலேயரும் வெவ்வேறு கரைகளில் வந்து கால் பதித்தாலும் நாடு கிழக்கிந்தியக்ஸகம்பெனியின் வசமான பின்னர் விதம் விதமான பல மாற்றங்கள் ஏற்பட்டன.
வாழ்க்கையின் பகைடைகள் உருள்வதும் வெற்றிகள் தோல்விகளாய்க் கவிழ்வதும் வேக வேகயமாய் அரங்கேறின.
திருக்கடையூரின் தேரோடும் வீதிகளும் ஏரோடும் வயல்களும் பெரியதாய் ஒன்றும் மாறிவிடவில்லை. கலப்பையைக் கொண்டு உழுபவர்களுக்கு களஞ்சியம் நிறைய தானியங்களை வாரியிரைத்தாள் பூமித்தாய்.
வீதிகள் தோறும் வேள்வி நறுமனப்புகை. தரிசனத்திற்கு வரும் யாத்ரீகர்கள் ஊருக்குள் நுழைந்த உடனேயே சந்தோஷத்தை உணர்ந்தார்கள்.
பல்வேறு மகுடங்கள் பணிந்த சந்நிதிகளும், ஆண்டாண்டு காலமாய் ஆண்டு வந்த அரசர்கள் விரிவு செய்த பிரம்மாண்டமானஸதிருக்கோயிலும் ஆகார்ஷணத்துடன் விளங்கின.
அபிராமி பட்டர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் திசையெங்கும் பரவின. தமிழகத்தில் சாக்த வழிபாடு மீண்டும் செழித்து வளர அபிராமி அந்தாதி ஆதாரமாய் நின்றன.
மார்க்கண்டேயர் எமபயம் நீங்கி சிரஞ்சீவித்துவம் பெற்றதால் சாந்தி ஹோமங்களுக்கு மக்கள் திருக்கடவூரைத் தேடிவரத் தொடங்கினார்கள். அதே போல அரச தண்டனை பற்றிய அச்சம் இருப்பவர்களும் அபிராமியம்மன் சந்நிதியில் வந்து பிரார்த்தனை செய்தார்கள்.
இத்தனை பேருக்கும் நடுவில் சட்டநாத குருக்கள் மகன் அபிராமிபட்டருக்கு அம்பாள் அருளிய வரலாற்றை குழந்தை பருவம் முதல் கேட்டு வளர்ந்த சந்திரமௌலீசுவரன், தனக்கும் அம்பாள் தரிசனம் தருவாள் என்று நம்பினான்.
ஒவ்வோர் அமாவாசையிலும் ஆகாயத்தில் நிலவு தெரியுமென்று விடிய விடிய விழித்திருக்கத் தொடங்கினான்.
தொடக்கத்தில் பெற்றோரும் மற்றவரும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
நாட்கள் போகப் போக அபிராமி எந்த நேரத்திலும் எதிர்ப்படுவாள் எண்ணும் எண்ணம் வலுப்படத் தொடங்கியது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்துக் கொண்டேயிருப்பது வாடிக்கையாகிப் போனது.
சட்டநாத குருக்கள் பக்குவமானார். ஆன்மிகத் தேடலுக்கு தீவிரமான ஆத்மசாதனை அவசியமென்பதை அறிவார்.
அத்தகைய சாதனைகள் இல்லாதபோது அதீதமான கற்பனை மனதை ஆக்கிரமித்து நிலைகுலையச் செய்யுமென்ற அச்சம் அவருக்கிருந்தது.
சாக்த நெறியில் சிறந்து விளங்கிய பலரும் அவருக்கு நெருக்கமானவர்கள் யாரிடமாவது சந்திரமௌலீசுவரன் முறையான தீட்சை பெற்றால் நல்லதாயிற்றே என்று நினைத்தார்.
சந்திரமௌலீசுவரன் பிடிகொடுக்கவில்லை. "எனக்கு குரு தேவையில்லை. அம்பாள் நேரடியாக வந்தென்னை ஆட்கொள்ளுவாள்" என்று முரண்டு பிடித்தான். சட்ட நாத குருக்கள் எவ்வளவோ வாதாடிப் பார்த்தார்.
பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் என்று அபிராமி பட்டரே பாடவில்லையா? பாதையை சரியாகத் தேர்ந்தெடுக்கா விட்டால் பயணம் போக முடியுமா? கெஞ்சியும் மிஞ்சியும் சொல்லியும் சந்திரமௌலீசுவரன் கேட்பதாயில்லை.
தன்னுடைய வழிதான் சரி என்னும் எண்ணமும் இருந்தது. தந்தை சொல்லச் சொல்ல சந்தேகமும் பிறந்தது. இரு வேறு உணர்ச்சிகள் நடுவே அவன் மனம் அலைமோதத் தொடங்கியது. ஆகாயத்தில் அம்பிகை தோன்றுவாள் என்னும் எண்ணம் வலுவிழந்தது. எதிர்ப்படும் பெண்கள் எவர் வடிவிலாவது அம்பிகை வருவாளா என்று கோயில் வாயிலில் நின்று கொண்டு ஒவ்வொருவரையும் உற்றுப் பார்க்கத் தொடங்கினான்.
சுவாமி சந்நிதியின் வெளிப்பிரகாரத்தில் பூக்கட்டும் பிச்சைக்கண்ணு மகள் காத்தாயி, அப்பாவிடம் பூக்குடலையைக் கொடுக்க தினமும் மாலையில் வருவாள்.
உள்ளே போகும்போதும் வெளியே வரும்போதும் தன்னையே உற்றுப்ஸபார்த்துக் கொண்டிருக்கும் சந்திரமௌலீசுவரனைப் பார்த்தால் அவளுக்கு பயமாக இருக்கும். அவனைக் கடக்கும் போது வேகவேகமாய் தாண்டிப்போய் இன்னும் பார்க்கிறானா என்று தொலைவில் நின்று திரும்பிப் பார்ப்பாள்.
திருச்சிற்றம்பலம்.
*திருக்கடவூர் தொடர் இன்னும் சில நாளில் மகிழ்ந்து நிறையும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
**சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*( 33 )*
🍁 *திருக்கடவூர் தொடர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
நாட்கள் போகப் போக காத்தாயிக்கு அச்சம் விட்டுப் போனது.
கோயில் வாயிலில் சந்திரமௌலீசுவரன் நிற்பானா என்ற எதிர்பார்ப்புடனே பூக்குடலையைக் கொண்டு வருவாள் காத்தாயி.
சந்திரமௌலீசுவரனை ஒரு சின்னப் புன்னகையுடன் கடந்து போகத் தொடங்கியவள் முகம் பார்த்து முறுவலிக்கத் தொடங்கினாள்.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் சந்திர மௌலீசுவரனுக்குள்ளும் ஏதோ அசைந்தது. அந்த உணர்வு பக்திமனயல்ல; அவள் அம்பிகையுமல்ல என்பது புரிந்தது.
அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் காத்தாயி தானாகவே முன்வந்து பேச்சுக்ஸகொடுத்தாள். "இங்கேயே நிக்கறதுக்கு நந்தவனத்தில் வந்து பூப்பறிச்சுக் கொடுத்தா புண்ணியமாப் போகுமில்லே!" என சொல்லிக் கொண்டே கடந்து போனவளின் காலடித் தடங்களைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
அதற்கடுத்த நாளில் அவனைக் கோயில் வாயிலில் காணவில்லை. அவனை வேறு யாரும் தேடவுமில்லை.
வழக்கமாக கோயிலுக்கு வரும் பெண்கள் அவன் இல்லாததைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தார்கள்.
காத்தாயி பூக்குடலையுடன் வருவதும் தாமதமாகத் தொடங்கியது.
கோயிலில் பூக்குடலையைக் கொடுத்த பிறகும் அவளுக்கு நந்தவனம் போக வேண்டியிருந்தது. அந்திஸமயங்கியஸபிறகு சந்திரமௌலீசுவரன் வீடு திரும்புவதும், நள்ளிரவு வரை திண்ணையில் புரள்வதும் சட்டநாதக் குருக்களை சஞ்சலப்படுத்தின. அவன் கண்களின் கீழ் படிந்த கருவளையம் அவன் சலனப் பட்டிருப்பதை உணர்த்தியது.
திருச்சிற்றம்பலம்.
*இன்னுமொரு நாளுடன் திருக்கடவூர் தொடர் மகிழ்ந்து நிறையும்.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment