Friday, August 11, 2017

Thiruvilanagar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 சிவ தல தொடர் 58. 🍁
🍁 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர். 🍁
**************
      🍁 திருவிளநகர். 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இறைவன்: துறைகாட்டும் வள்ளலார், உசிரவனேஸ்வரர்.

இறைவி:
வேயுறு தோளியம்மை.

தல விருட்சம்: விளா மரம் (நாணல்)

தீர்த்தம்: மெய்யான தீர்த்தம், காவேரி

சோழநாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள நூற்று இருபத்தெட்டு தலங்களுள் நாற்பது தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.

இருப்பிடம்:
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து ஆறு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.

பெயர்க்காரணம்:
விளாமரங்கள் அமர்ந்த இடமாக இருந்ததால் இத்தலம் விளநகராயிற்று. 

கபித்தன் என்னும் அசுரன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி வழிபாடு செய்தான்.

ஆகையால் அவன் பெயரால் இத்தலம் விளாநகர் எனப் பெயர் பெற்றதென்று தலமான்மியம் கூறுகிறது.

ஊருக்கு விழல் என்று பெயர். இதுவே பின்னர் (விழல் நகர்) விளநகர் என்றாயிற்று. உசிரம்--விழல்.

கோவில் அமைப்பு:
சிற்ப வேலைப்பாடுகளுடன் நிறைந்த ஐந்து நிலை ராஜகோபுரம் நம் கண்களுக்கு காட்சியாக கிடைக்க சிவ சிவ, சிவ சிவ  என மொழிந்து கௌபுரத் தரிசனம் செய்வித்தோம்.

துறை காட்டும் வள்ளலார் கோவிலானது இரண்டு பிரகாரங்களைக் கொண்டிருக்கின்றன.

இரண்டாவது பிரகாரத்தில் சிறிய நந்தி மண்டபத்தைக் கண்ணுற்றோம். முதல் வணக்கத்தை அம்முதல்வனுக்கு கொடுத்தோம்.

இதற்கடுத்தாற் போல ஆஸ்தான மனடபத்தை காண்கிறோம்.  இரண்டாவது கோபுர வாசலின் இருபுறமும் இரு விநாயகர் காணப்படுகிறார். விடுவோமா இவர்களையும் வணங்கினோம்.

மூலவர் சந்நிதிக்கு வந்தோம். அவர் கிழக்கு நோக்கியபடி காட்சி யருள் புரிந்து கொண்டிருந்தார். அவர் காட்சியருளைக் காண கூட்டம் அதிகமிருக்க, சிறிது சிறிதாக அடியார்பக்தர்கள் நகர , பின் தொடர்ந்து வந்து மூலவன் இறைவன் முன் வந்தோம். மனமுருக பிரார்த்தனை செய்தோம். எங்களுக்கும் அழகு பொருந்திய காட்சியினையும் தந்து மனநிம்மதிக்கான பிரவாகத்தை தந்தார்.

பின் அடுத்து அம்மையை வணங்கத் திரும்பினோம். இறைவியான வேயுறுதோளியம்மை,  தனது திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தந்தாள். அம்மையின் தரிசனம் முடித்து வெளியே நகர.....  

மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு சந்நிதிகளைக் கண்டு அவர்களையும் அவர்களுக்குண்டான வணக்கத்தை பக்திசிரத்தையுடன் வணங்கினோம்.

பின்,வடக்குப் பிரகாரத்தில் நடராஜரைக் கண்டோம். இவருக்கு முன்னால் கூட்டம் குறைவாக இருக்க சிறிது நேரம் அவனின் ஆடற்கலை நயங்களை பார்த்துக் கொண்டிருந்தோம்.

கிழக்கில் நவக்கிரக சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

தல அருமை
சம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை, வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. 

மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாய் மறைந்து விட்டதைக் கண்டார். இறைவனே வேடனாய் வந்து துறை காட்டியதால் அவர் துறை காட்டும் வள்ளலார் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்.

துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால், நம் பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம்.

தல பெருமை:
முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். 

நாள் தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். 

ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். தலையளவு வெள்ளம் வந்துவிட்ட போதிலும் தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற் கவலைப்பட்டான்.

அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவனுக்கு அருள் சொரிந்து ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் "துறை காட்டும் வள்ளல்" ஆனார்.

தேவாரம் பாடியவர்கள்:
*சம்பந்தர்*2-ல் ஒரே ஒரு பதிகம் பாடியுள்ளார்.

சிறப்பும் இனிமையும் பொருந்திய இப்பதிகத்திலுள்ள இப்பாடல்களைக் தினந்தோறும் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைய மாட்டார்கள், அவர்கள் தூய நெறியைப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுபிறார்.

1 ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர்கோவண வாடையர் குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் மிளிரிளம்பொறி யரவினார் மேயதுவிள நகரதே.

🌸விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல் 
உடையவர். கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை விரும்பியவர். ஒளியும் புள்ளிகளும் பொருந்திய இளநாகம் அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி உறையும் தலம், தண்ணிய மழை பொழியத்தக்க மேகங்கள் தவழும் பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும். 

2 அக்கரவ்வணி கலனென  அதனொடார்த்ததொ ராமைபூண்  டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவியமிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.

🌸எலும்பையும் பாம்பையும் அணிந்து, அவ்வணிகலனோடு ஆமை ஓட்டையும் பூண்டு இறந்தவரை எரித்த சுடுகாட்டு நீற்றை அணிந்து விளங்கும் பெருமான் மேவிய தலம் ஒளி நிறைந்த நீரை உடைய காவிரியில் மூழ்கிய அடியவர் துயர் கெடுமாறு நீறு பூசியவராய் வழிபாடு செய்கின்ற விளநகராகும்.🌸

3 வாளிசேரடங் கார்மதி  தொலையநூறிய வம்பின்வேய்த் தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கட னஞ்சுடன் காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர் மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே. 

🌸அம்பினைச் சேர்ப்பித்துப் பகைவரின் முப்புரங்களை அழியுமாறு செய்தவரும், புதிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்றவரும், உயர்ந்த பழமையான கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்டதோடு அதன் கரிய நிறம் மல்கிய கண்டத்தை உடையவரும், ஒளிவிரிந்த தழல்போலும் சடையினரும், வலிய விடையேற்றை உகந்து ஏறி வருபவரும் ஆன சிவபிரான் மேவியது விளநகர்.🌸

4 கால்விளங்கெரி கழலினார் கையிலங்கிய வேலினார் நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.

🌸காலில் விளங்கும் கழலணிந்தவர். கையில் விளங்கும் சூலத்தை உடையவர். பூணநூல் விளங்கும் மார்பினர். துன்புறும் நோயும் பிறத்தலும் இல்லாதவர். கருமை விளங்கும் ஒளி நிரம்பிய குற்ற மற்ற நீல மணி போலும் கண்டத்தினர். வானவெளியில் விளங்கும் வெள்ளிய பிறையைச் சூடியவர். அவ்விறைவர் மேயது விளநகர்.🌸

5 பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.

🌸வேதங்களை அருளியவர். அவ்வேதங்களைப் பாடுபவர். முடியில் திங்கள், சினம்மிக்க பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவர். மின்னுகின்ற பொன்போலும் முப்புரிநூலை அணிந்தவர். அவ்விறைவர் அன்பர்கள் வணங்கித் தூநெறி பெறும் பொருட்டு எழுந்தருளியிருக்குமிடம் பரவிய புகழையுடைய காவிரியின் துறைகளை உடைய கரையில் அமைந்த விளநகராகும்.🌸

6 தேவரும்மம ரர்களுந் திசைகண்மேலுள தெய்வமும் யாவரும்மறி யாததோ ரமைதியாற்றழ லுருவினார் மூவரும்மவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.

🌸தேவரும், அமரரும், திசைக்காவல் தெய்வங்களும் முதலான யாவராலும் அறிதற்கரிய இயல்பினர். தழல் போலும் உருவினர். திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரும் இவரே என்று கூறுமாறும் அவர்களின் தலைவராய் விளங்குவார் இவரே என்னுமாறும் பொருந்த அரிய பொருளாய் விளங்குபவர். அவ்விறைவர் மேவிய இடம் விளநகராகும்.🌸

7 சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார் கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே.

🌸எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர் மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும்.🌸

8 படர்தருஞ்சடை முடியினார் பைங்கழலடி பரவுவார் அடர்தரும்பிணி கெடுகென அருளுவார்அர வரையினார் விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.

🌸பரவிய சடைமுடியை உடையவர். தம் கழல் அடிகளைப்பரவும் அடியவர்களை வருத்தும் பிணிகள் கெடுவனவாக என அருள் செய்பவர். பாம்பினை இடையில் கட்டியவர். மலைப் பிளவில் இருந்து கிட்டும் நீலமணி போலும் மிடற்றை உடையவர். மின்னுகின்ற பொன் போன்ற முப்புரி நூலை அணிந்தவர். வலிய படைக்கலனாக மழுவை ஏந்தியவர். அவ்விறைவர் மேவியது விளநகராகும்.🌸

9 கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மெய்யிலங்கு ண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.

🌸கையில் விளங்கும் சூலத்தை உடையவர். தோலாடை உடுத்தவரமுற்றழிப்புக் காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர். பாம்பின் படம் போலும் அல்குலை உடைய உமையம்மையை இடப்பாகமாக உடைய பரமர்கரிய ஒளி நிறைந்த குற்றமற்ற நீலமணி போன்ற மிடற்றினை உடையவர். திருமேனியில் விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்தவர். அவ்விறைவர் மேவியிருப்பது விளநகர் ஆகும்.🌸

10 உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும் உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும் உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார் தருஞ்சடை முடியின்மேல் உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார் விளநகர் மேயதே.

🌸கீழ் உள்ள திருவடியை யான் காண்பேன் என்று சென்ற கரிய மணிவண்ணனாகிய திருமாலும், மேல் உள்ள திருமுடியை யான் காண்பேன் என்று சென்ற தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் உள்பொருளாய் விளங்கும் சிவபிரானைக் கண்டிலர். ஒளி பொருந்திய சடைமுடியின் மேல் விளங்கும் பிறை முதலியவற்றை யாரும் காண இயலாத சோதிப் பிழம்பாய்த் தோன்றும் அப்பெருமானார் தம்மை அன்பர்கள் கண்டு வழிபட விளநகரில் எழுந்தருளியுள்ளார்.🌸

11 மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய நன்பிறைநுத லண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் இன்புறுதமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் துன்புறுதுய ரம்மிலர் தூநெறிபெறு வார்களே.

மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ் போல முரலும் விளநகரில் காவிரித்துறையில் எழுந்தருளிய பிறைசூடிய பெருமானை, சண்பைப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்பும் இனிமையும் பொருந்திய தமிழால் புனைந்த இப்பாடல்களைக் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைதல் இலர். தூய வீட்டு நெறியைப் பெறுவார்கள்.

கல்வெட்டுக்கள்:
இத்தலத்தில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்வூரை திருவிளநகர் என்றும், இறைவன் துறைகாட்டுந் தம்பிரானார்.

துறைகாட்டுவான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. உத்தம சோழன் காலத்தைச் சேர்ந்த பழமையான கல்வெட்டு உள்ளன.

பூஜை:
காமீக ஆகம முறையில் நான்கு கால பூசை.

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, 

மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு, உசிரவனேஸ்வரர் திருக்கோயில்,
திருவிளநகர் (வழி),
மன்னம்பந்தல்- 609 305,
மயிலாடுதுறை வட்டம், 
நாகை மாவட்டம்.

தொடர்புக்கு:
தண்டபாணி குருக்கள்.
04364-- 282129

          திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment