Thursday, August 3, 2017

Thiruneelakudi temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
         *(தல தொடர் .50.)*
🍁 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
        🍁 *திருநீலக்குடி.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:*அருள்மிகு மனோக்ஞநாத சுவாமி, வில்வாரண்யேசுவரர், பிரமநாயகர்,  நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர், காமதேனுபுரீஸ்வரர்.

*இறைவி:*அருள்மிகு அநூபமஸ்தனி.(திருமணக் கோலம்), பக்தாபீஷ்டதாயிணி (தவக்கோலம்.)
  
*மூர்த்தி:*பக்தாபீஷ்டதாயினி, பஞ்சமூர்த்தி, பிரம்ம லிங்கம், விசுவநாதர், மகாலட்சுமி, பைரவர்,  நவக்கிரகம்.

*தீர்த்தம்:*தேவி தீர்த்தம், (எதிரில் உள்ள குளம்.), பாரத்வாஜ தீர்த்தம் (வெளியில் உள்ள குளம்), மார்க்கண்டேய தீர்த்தம் (உட்கிணறு), பிரம்ம தீர்த்தம் (கிணறு), க்ஷீரகுண்டம் (காவிரிக் கரையோரம்), 

*தலவிருட்சம்:* பஞ்ச வில்வம், பலாமரம்.

சோழ நாட்டின் தென்கரையில் அமையப் பெற்றுள்ள நூற்றி இருபத்தெட்டு  தலங்களுள் இத்தலம் முப்பத்து இரண்டாவது தலமாகப் போற்றப்படுகின்றது.

*இருப்பிடம்:*
மக்கள் தென்னலக்குடி என்று வழங்குகின்றனர்.
கும்பகோணம்- காரைக்கால் சாலையில் உள்ளது.
ஆடுதுறையிலிருந்து தெற்கே மூன்று கி.மீ தூரம்.

*பெயர்க்காரணம்:*
பாற்கடலில் அமுது கடைந்த.காலத்தில் தோன்றிய நஞ்சை உண்டு இறைவன் நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் திருநீலக்குடி என்றாயிற்று.

*தல அருமை:*
இத்தலத்தில் அதிசயம் என்ன என்றால் இங்குள்ள நீலகண்டேஸ்வரர் ஆலகால விஷத்தை உண்டதினால் அவர் தொண்டையில் தங்கி இருந்த அந்த விஷத்தன்மையைக் குறைக்க  நல்லெண்ணை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள்.

அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. நாள் பூராவும் எண்ணை அபிஷேகம்  செய்தாலும் அத்தனை எண்ணையையும் லிங்கத்தினால் உறிஞ்சப்பட்டு விடுகிறது.

தொடரும்  அதிசயம் என்ன என்றால், எத்தனை எண்ணை ஊற்றி அபிஷேகம் செய்தாலும், அதை துணியினால்  துடைப்பது இல்லை, தண்ணீர் ஊற்றி அலம்புவது இல்லை. ஊற்றப்படும் எண்ணையும் கீழே  வழிவதே இல்லை. லிங்கமே அதை உறிஞ்சி விடுகிறது.  

மறுநாள் சென்று பார்த்தால் எண்ணெய்  ஊற்றிய அடையாளமே தெரியாமல் லிங்கம் உலர்ந்து காணப்படும். அபிஷேகம் செய்யப்படும்.

எண்ணைய் அனைத்தும் எங்கு சென்று மறைகின்றது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தாலும் சிவலிங்கம்  வழுவழுப்பாக இருப்பதற்கு மாற்றாக சொர சொரப்பாகவே உள்ளது.  

அங்கு உள்ள லிங்கத்துக்கு அபிஷேகம் செய்த எண்ணையை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.  

மூலவருக்கு அபிஷேகம் செய்யும் எண்ணெய் பாணத்திற்கு உள்ளே சென்றுவிடும். அம்பாளே சுவாமிக்குத் தைலாபிஷேகம் செய்வதாக ஐதீகம்.

இங்கு உள்ள பலாமரத்தின் சுளையை சுவாமிக்குப் படைக்காமல் வெளியில் எடுத்து சென்றால் கெட்டுவிடுகிறது.

மிருத்யு தோஷம், ராகு தோஷம் ஆகியவற்றை நிவர்த்திக்கும் தலம்.

*தல பெருமை:*
மிருகண்டு என்கின்ற முனிவர் அவரது மனைவிக்கு புத்திர பாக்கியம் கிடைக்க,  சிவனை வழிபட்டு வந்தார்.  அவர் பக்தியை மெச்சிய சிவனும் அவர் முன் தோன்றி உனக்கு என்ன  வரம் வேண்டும் *''கேள் நல்ல குணங்களைக் கொண்ட மகனா?* இல்லை *தூய உள்ளம்  கொண்ட மகனையா?'*' எனக் கேட்க.... முனிவரும் தனக்கு நல்ல குணம் உடைய மகனே வேண்டும் என்றார். 

ஆகவே அவருக்கு நல்ல குணமுடைய மகன் பிறப்பான் எனவும், ஆனால் அவன் வயது பதினாறு  வருடமே உயிருடன் இருப்பான் எனவும் கூறி அவருக்கு புத்திர பாக்கியம் தந்துவிட்டு மறைந்தார்.   பிறந்த குழந்தைக்கு மார்கண்டேயர் எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

சிவபெருமானின் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது ஆனது.

இனி  தனக்கு ஆயுள் முடிய உள்ளது என்பதை பெற்றோர் மூலம் அறிந்து கொண்டவர், தன்னுடைய  ஆயுள் முடியக் கூடாது என எண்ணினார். அதற்கு ஒரே வழி மீண்டும் சிவபெருமானை  வேண்டுவதே என எண்ணிய மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக சென்று அங்கிருந்த சிவ பெருமானை தரிசித்து வேண்டி வந்தார்.  

அப்போது தான் அவர் திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். அங்கு வந்து கடுமையாக விரதம் அனுஷ்டித்து சிவபெருமானை தியானிக்க சிவனார் அவர் முன் தோன்றினார்.  உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க மார்க்கண்டேயர்   தன்னுடைய ஆயுளை நீடிக்க வேண்டும் என வேண்டினார்.  அதைக் கேட்டு மகிழ்ந்த  சிவபெருமானும் மார்க்கண்டேயார் அந்த தலத்தில் என்றுமே பதினாறு வயதுடைய இளைஞனாகவே இருக்கட்டும் என வரம் அளித்தார்.  

மார்க்கண்டேயரும் அங்கேயே தங்கி சிவனை  வழிபட்டு வந்தார்.

அதன் பின் அமிர்தம் கிடைக்க பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது  அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார்.  அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க பார்வதி தேவி அவரின் கழுத்தை எண்ணைப் போட்டு தடவி விட  விஷம் அவர் கழுத்தில் தங்கியது, 
வயிற்றுக்குள்ளே இறங்கவில்லை. 

ஆகவேதான் இங்குள்ள இறைவன் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.  

இந்த தலத்தில் பிரம்மா, வசிஷ்டர் போன்றவர்கள் வந்து சிவனை வழிபாட்டு உள்ளனர். ஆலயத்தின் அருகில் நான்கு புனித  தீர்த்தங்கள் உள்ளன.

 *தல வரலாறு:*
மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். இங்கு வந்து நாளும் பொழுதும் சிவபெருமானை எண்ணி தியானிக்கிறார். முடிவில் இறைவன் அவர் முன் தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மார்க்கண்டேயர் தமது விருப்பத்தை சொன்னவுடன் அதுபடியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி

பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வநிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

யோக மார்க்கத்தில் செல்பவருக்கு இது மூலாதாரத் தலம்.

மொத்தம் ஆறு ஆதாரங்கள் உள்ளன.

அவை... மூலாதாரம்,சுவாதிட்டானம், மணிபூரகம், அனாதகம், விசுக்தி, ஆக்ஞை முதலியன.

இந்த ஆறு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம்.

குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலன் தரும் சிறப்பு சக்தி படைத்த சிவத்தலமிது.

*கோவில் அமைப்பு:*
இத்தலத்தின் ஆலயம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவுடன் அமைந்து உள்ளது.

கிழக்கு நோக்கிய சந்நிதி.

இராஜகோபுரத்தைக் காணப் பெற்றதும் தலைமேல் கைகுவித்து *சிவ சிவ* என வணங்கிக் கொண்டோம்.

இக்கோயிலுக்கு இரண்டு பிரகாரங்கள் அமைந்துள்ளன.

முதல் நுழைவாயிலுக்கும் இரண்டாம்  நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் இருக்க தொடர்ந்து வணங்கி உள் செல்கிறோம். 

முகப்பு வாயிலைக் கடந்ததும், நேராக கருவறையில் இறைவன் ஸ்ரீ மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

முன்நின்றிருந்தவர்கள் வணங்கி நகரவும், பொறுமையாக இருந்து அழகான தரிசனத்தைப்  பெற்றோம்.

எண்ணெய்க் காப்புடன் காட்சியருள் தரும் எம்பெருமானை இமை மூடாது வணங்கித் தொழுது கொண்டோம்.

இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மையாக காட்சியருள் புரிகின்றாள்.

இரண்டாவது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை ஆவாள். இரு அம்மையையும் வணங்கிக் கொண்டோம்.

ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிரகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. 

இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். 

ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப படுகிறது. 

பரீட்சித்து பார்ப்பதற்காக மீறி எடுத்துச் சென்றவர்களுக்கு, இறைவனையே சந்தேகப்பட்ட அவர்களே,  தண்டனையை ஏற்படுத்திக் கொண்டார்கள் கூறுகிறார்கள்.

இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம்.

தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம், பாரத்வாஜ தீர்த்தம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோவில் விளங்குகிறது. 

மேலும் பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர், சூரபத்மன் ,காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம் என்ற பெருமையும், வருணனும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. 

ஸ்ரீ மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து இறைவனை வந்து வழிபடுங்கள். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர்.

மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுக்கிறார் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் நடைபெறும் சித்திரைப் பெருவிழா சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி பதம் தரப்பட்டதால், அதற்கு நன்றிக் கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை, ஏனாதிமங்கலம், திருநாகேசுவரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவகுடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். 

இவ்விழாவில் பன்னிரண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு ஏழூர் சென்று வருவது அற்புதமான காட்சியாகும். இந்த நிகழ்ச்சியை நினைவுகூறும் முகமாகவே இத்தலத்து சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது.

(ஏழூர்களாவன - *இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேச்சுரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடீ, திருநீலக்குடி).* இத்தலத்தில் பெருமான் மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்திப்பதால் திருவிழாக்காலத்தில் சுவாமிக்கு முன்னால் எதிர்முகமாக மார்க்கண்டேயர் உற்சவமூர்த்தியாக செல்கிறார்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*அப்பர்* 5-ல் ஒரே ஒரு பதிகம் மட்டும் பாடியுள்ளார்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பல்லவ மன்னன் அமணர்களின் ஆலோசனைப்படி அப்பர் பெருமானை கல்லோடு கட்டிக் கடலில் வீழ்த்திய போது, அவர் இத்தலத்து இறைவனைத்தான் ஆத்மார்த்தமாகப் பாடி உயிர்பெற்றதாக இத்தலக் குறிப்பு கூறுகிறது. 

இத்தலத்து பதிகத்தின் ஏழாவது பாடலில் அப்பர் இதனைக் குறிப்பிடுகிறார். *"அமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி மன்னர் உத்திரவின்படி கடலில் வீச, என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி இறைவனுடைய வநல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன்"* என்று அப்பர் பாடியுள்ளார். 

மேலும் தனது பதிகத்தில் *"தேடிவைத்த செல்வமும், மனைவியும், மக்களும் நீர் இறக்கும் போது உம்முடன் வரார், ஆகையால் நாள் தோறும் நினைத்து தொழுது சிவகதி சேர்வீர் என்றும், உயிர் உடலை விட்டுப் பிரிந்துபோவதற்கு முன்பே, நிழல் உடையதாய்ச் செறிந்த பொழில்களையுடைய நீலக்குடி இறைவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைகளால் தொழுது உய்வீர்களாக"*என்றும் அறிவுறுத்துகிறார்.


*1.* வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர் செத்த போது செறியார் பிரிவதே நித்த நீலக் குடியர னைந்நினை சித்த மாகிற் சிவகதி சேர்திரே. 

*2.*செய்ய மேனியன் றேனொடு பால்தயிர் நெய்ய தாடிய நீலக் குடியரன் மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங் கையி லாமல கக்கனி யொக்குமே.

*3.* ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு கூற்றன் மேனியிற் கோலம தாகிய நீற்றன் நீலக் குடியுடை யானடி போற்றி னாரிடர் போக்கும் புனிதனே.

*4.* நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர் நீலன் நீலக் குடியுறை நின்மலன் கால னாருயிர் போக்கிய காலனே. 

*5.* நேச நீலக் குடியர னேயெனா நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால் ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய் நாச மானார் திரிபுர நாதரே. 

*6.* கொன்றை சூடியைக் குன்ற மகளொடு நின்ற நீலக் குடியர னேயெனீர் என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர் பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே.

*7.* கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே. 

*8.* அழகி யோமிளை யோமெனு மாசையால் ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே நிழல தார்பொழில் நீலக் குடியரன் கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே. 

*9.* கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள் பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன் சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே. 

*10.*தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் அரக்க னாருட லாங்கோர் விரலினால் நெரித்து நீலக் குடியரன் பின்னையும் இரக்க மாயருள் செய்தனன் என்பரே.

*திருவிழாக்கள்:* 
சித்திரை மாதம் பிரம்மோற்சவம் பதினெட்டு நாட்களாக திருவிழா.
மார்க்கண்டேயரால் ஏற்படுத்தப்பட்டது.

திருவிழா நாட்களில் தினந்தோறும் சுவாமி வாகனங்களில் வீதி உலா செல்வார்.

அப்போது திருநீலக்குடி மட்டுமல்லாது, சுற்றியுள்ள சுற்றியிருக்கும் கஇராமங்களுக்கும் சுவாமி அருள்பாலிப்பார்.

பதினெட்டாவது நாளில் எலந்துறை (பவுண்டரீகபுரம்) என்ற ஊரில் அருள்பாலிப்பார்.

இது மிகவும் சஇறப்புடையதாக கருதப்படுகிறது.

திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை, மாதாந்திர பிரதோஷ நாட்கள், வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடக்கின்றன.

*பூசை:*
சிவாகம முறையில் நான்கு கால பூசைகள்.

காலை 6.00 மணி முதல், பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல், இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, மனோக்ஞநாதசுவாமி திருக்கோயில்,
திருநீலக்குடி-அஞ்சல்,
திருவிடைமருதூர் -வட்டம்,
தஞ்சை- மாவட்டம்.

*தொடர்புக்கு:*
திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பட்டது.
சுரேஷ் குருக்கள், சேகர்.
0435- 2460660
94438 61634

               திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்.....வைகல் மாடக்கோயில்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment