சிவாயநம.திருச்சிற்றம்பலம்
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌸 திருநாளைப் போவார்.(நந்தனார்.) 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
காலம்:கி.பி.6 00--700
குலம்: ஹரிஜனர்.
மாதம்: புரட்டாசி.
நட்சத்திரம்: ரோகினி.
சோழநாட்டில் மேற்கா நாடு எனவொரு பிரிவு.
அந்நாட்டிலே கொள்ளிட நதிக்கரையோரமாக அமைந்திருக்கிறது.
ஆதனூர் என்ற கிராமம் ஊருக்குப் புறம்பே புலையர்கள் வசிக்கும் சேரி.
இவர்கள் குலத்திலே உதித்தவர் நந்தனார் என்பவர்.
நந்தனார் சிவபெருமானிடம் அளவிலாத பக்தி கொண்டவர்.
சிவாலயங்களில் உபயோகப்படும் பேரிகை,நகரா முதலான வாத்தியங்களுக்குத் தேவையான தோலும் வீணை, யாழ் முதலான வாத்தியங்களுக்கான நரம்பும், எம்பெருமானுக்குக் கோரோசனையும் கொண்டு போய் கொடுப்பார்.
எம்பெருமானுக்குச் செய்யும் இத்திருப்பணியில் அவர் கொஞ்சமும் ஊதியம் பெறுவதில்லை.
பகவானுக்குத் தம்மால் சமர்ப்பிக்கப்பட்டதாக இருக்கட்டுமே என சொல்லி செய்து மகிழ்வார்.
புலயர் குலத்திலே பிறந்தவரானதால் அவர் ஆலயத்துக்குள் நுழைவதில்லை.
கோபுர வாயில் முன்புறம் நின்றவாரே சிரம் குவித்து மனத்தால் இறைவனைத் தரிசித்துத் தொழுவார்.
அப்போது அவர் கண்களிலிருந்து நீர் பீரிட்டுப் பிரிந்து உதிரும்.
தேகமே உருகிக் கரைந்தது போல அவர் பக்தியோடு ஈசனைத் தொழுவார்.
ஆலயத்துக்கு வேண்டிய தோல் முதலான பொருட்களை அவர் கொடுத்து வந்ததால் ஊரார் அவர் ஜீவனத்துக்கென சில நிலங்களை மானியமாகக் கொடுத்திருந்தனர்.
அதில் கிடைத்த வருமாணத்தில் தமது ஜீவனத்துக்குப் போக எஞ்சியிருப்பதையும் எம்பெருமான் திருப்பணிக்கே செலவிட்டு மகிழ்வார்.
நந்தனார் இவ்வாறு பக்கத்திலிருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களுக்குத் தேவையான தோலும் நரம்பும் கொடுத்து வரும்போது, வைதீஸ்வரன் கோயிலுக்கு மேற்கே இரண்டு மைலிலுள்ள திருப்புன்கூர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலோக நாதரைக் கண்டு தரிசிக்க விருப்பம் கொண்டார்.
அவர் விருப்பமும் விரைவிலேயே நிறைவேறியது. திருப்புன்கூர் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார்.
கோபுர வாசலிலே நின்று எம்பெருமானைத் தரிசிக்க முயன்றார்.
அவ்வூர் ஆலயத்திலுள்ள நந்தி சற்று பெரியதானது. ஆகவே இறைவனின் மேனியைத் தரிசிக்க முடியாது நந்தி மறைத்திருந்தது.
நந்தனாரின் உள்ளம் ஏமாற்றமாய் வேதனை அடைந்தது. எத்தனை ஆசையோடு அவர் புறப்பட்டு வந்தார். ஆனால் அது காணக் கிடைக்கவில்லை.
"ஐயனே!, உன்னைக் கண்ணாரக் கண்டு மகிழலாமென ஓடி வந்தேனே! என் எண்ணம் ஈடேறாமல் போய் விட்டதே?" என கண்ணீர் உகுத்தவாறு வேண்டி மனம் உருகினார்.
பக்தனின் உள்ளத்தை அறிவவன் ஈசன். அவர் அவனை ஏமாற்றத்தோடு திரும்பிப் போகுமாறு அனுமதிக்கவில்லை.
தன்னைக் கண்ணாரக் கண்டு மகிழட்டும் என அருளினார்.
எதிரே தன்னைப் பார்த்து படுத்திருந்த நந்தியைப் பார்த்துத் தமது பக்தன் தரிசனம் செய்வதற்கு உதவும் வகையில் சற்று நகர்ந்திருக்குமாறு சொன்னார்.
நந்தியும் இறைவன் விருப்பப்படி வாயிலை விட்டு நகர்ந்து கொண்டது.
நந்தி விலகி எம்பெருமான் காட்சி தருவது கண்டு, நந்தனார் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார்.
பித்தனைப் போல் கூத்தாடினார்.
கண்கள் பக்தி வெள்ளத்தைச் சொரிந்தன.
பலவாறாகப் போற்றி துதித்தார்.
தமக்கு அருள் செய்த இறைவனுக்குத் திருப்பனி செய்ய விருப்பம் கொண்டார்.
சிவலோகநாதரின் ஆலயத்துக்கு அருகே ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார்.
இப்பள்ளத்தைக் குளமாக்கினால் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என நினைத்தார்.
உடனே ஊரிலிருந்து ஆட்களை வரவழைத்துக் குளம் வெட்டும் பணியை ஆரம்பித்தார்.
விரைவிலேயே வேலை முடிந்தது. திருக்குளத்தை சரியாக செம்மை படுத்தி விட்டார்.
நிறைவான உள்ளத்தோடு இறைவனைத் தொழுது பின் ஊர் திரும்பினார்.
இவ்வாறாக சுற்று வட்டாரத்திலிருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று தம்மால் முடிந்த திருப்பணிகளைச் செய்து வந்த நந்தனாருக்கு ஓர் ஆசை உண்டாயிற்று.
தில்லைக்குச் சென்று பொன்னம்பலவானனைத் தரிசிக்க வேண்டும் என்பதுதான் அது.
அடியார்கள் எம்பெருமானின் திருக்கூத்து வைபவத்தைக் கூறும் போதெல்லாம் நந்தனார் ஆவலோடு அதைக் கேட்பார்.
தாமும் சிதம்பரம் சென்று நடராசரைத் தரிசிக்கப் போவதாய் கூறுவார்.
தில்லைக்குப் போக வேண்டும் என்ற ஆவல் எழுந்ததும் தாமும் தில்லைக்குப் போய் பகவானைத் தரிசிக்கப் போவதாய் எல்லோரிடமும் கூறி வந்தார்.
ஆனால் அமைதியான சூழ்நிலையில் அதைப் பற்றி யோசிக்கும் போதுதான் அப்பிரயாணத்தில் உள்ள தடங்கல் தெரிய வந்தன.
ஆலயத்துக்கு அவர் போகலாம். ஆனால் ஆலயம் மிகப் பெரியதாயிற்றே! உள்புறம் சென்றால் தானே இறைவனின் திருத்தாண்டவக் கோலத்தைத் தரிசிக்க முடியும்? ஆலயத்துக்குள் இவர் எவ்வாறு உள் புகுவார்? அது முடியா செயலாச்சே?
இதனை நினைக்கும்போதுதான் அவருக்கு வேதனையாக இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்று புரியாது தவித்தார். மனதுக்குள்ளாவே குமைந்தார்.
நந்தனாரைப் பார்ப்பவர்கள் எல்லோருமே, இவர் எப்போது சிதம்பரம் போகப் போகிறார் எனக் கேட்டுக் கொண்டே வந்தனர்.
இவருடைய சிவ பக்தித் தொழுகையை அனைவருமே அறிந்து வைத்திருந்தார்கள்.
தில்லைக்குப் போகப் போவதாக நந்தனார் கூறியதிலிருந்து அவருடைய ஆவல் எவ்வளவுக்கு இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.
அதனால்தான் நந்தனாரைப் பார்க்கும் போதெல்லாம் இவரின் தில்லைப் பிரயாணத்தைப் பற்றிக் கேட்டனர்.
இவர்களின் கேள்விக்கு நந்தனார் என்ன பதில் அளிப்பார்? உண்மையைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பரிதவித்துத் தத்தளித்தார்.
எனவே, தில்லைக்கு எப்போது போவதாய் உத்தேசம் என யாராவது கேட்டால், அவசர வேலைகள் இருக்கிறது! அதனால் மறுநாளைக்குத்தான் போவதாகவும் கூறியே வந்தார்.
அவர் குறிப்பிட்ட மறுநாள் அடுத்தடுத்து வந்து போயிற்று. ஆனால் அவர் தில்லைக்குப் போகவில்லை.
சிதம்பரம் சென்று ஆனந்த நடராசரைத் தரிசிக்கத் தமக்கு வாய்ப்பில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தாலும், அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தை மட்டும் நந்தனார் விடவில்லை.
"நாளைக்குப் போவேன்", "நாளைக்குப் போவேன்" என்று இவர் கூறி வந்தமையால் எல்லோரும் இவரை "திருநாளைப் போவார்" என்று கூறி அழைக்கும் அளவுக்கு போய்விட்டன.
நந்தனாரின் உள்ளம் ஏமாற்றத்தை ஏற்க விரும்பவில்லை. ஏதேதோ சமாதானம் சொல்லியும் அது கேட்கவில்லை.
நாளுக்கு நாள் தில்லைக்குப் போக வேண்டும் என்ற ஆசை சுடர் விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கியது.
ஒருநாள் அவர் உறுதியோடு கிளம்பி விட்டார் தில்லைக்கு. ஆலயத்துக்குள் நுழையும் தகுதி அவருக்கில்லாவிட்டாலும், வானாளாவி உயர்ந்தெழும்பி பெருமானின் பெருமைகளைச் சாற்றும் அக்கோபுரங்களைத் தரிசித்து ஆலயத்தை வலம் வந்து வீழ்ந்து, வணங்கியாவது திரும்ப வேண்டும் என்ற முடிவோடு சிதம்பரத்துக்குப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார்.
நகரின் எல்லையை அடைந்த போதே, அவர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
எத்தனையோ நாட்களாக நாம் கண்டு வந்த கனவு இன்று நனவாகி விட்டதே!, என்று ஆனந்தம் பொங்கினார்.
தூரத்திலேயே வரும்போதே தெரிந்த உயரமான கோபுரங்களைக் கண்டு சிரமேற் கைகுவித்து வணங்கி ஆனந்தக் கூத்தாடினார்.
எல்லையைத் தாண்டி நகருக்குள் நுழைந்த நந்தனார், வீதிகள் தோறும் அந்தணர்களின் யாகசாலைகளையும், வேதம் அத்தியயனம் செய்யும் மாடங்களையும் கண்டார்.
அம்மடங்களையெல்லாம் நெருங்கவும் அஞ்சி நகர எல்லை வழியாகவே ஊரை வலம் வந்தார்.
அங்கிருந்தவாறே இறைவனை ஆறு காலங்களிலும் தொழுது களிப்படைந்தார். இம்முறைகள் போலவே தினமும் செய்து வந்தார்.
பக்தனை இந்நிலையில் விட்டு வைக்க இறைவனுக்கு விருப்பம் இல்லை போலும்.
தம்மைத் தரிசிக்க விரும்பி ஊணும் எலும்பும் கரைந்தொழுகும் பக்தியால் உள்ள பக்தனைத் தழுவி ஆனந்திக்க விரும்பினார்.
அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் தோன்றி தம் பக்தனின் வருகை பற்றி அறிவித்தார்.
"ஊருக்குத் தென்புறத்து எல்லையில் நம்முடைய பிரியமான பக்தன் ஆதனூர் புலையன் நந்தன் வந்திருக்கிறான்.
நாமும் அவனைப் பார்க்க பிரியப் படுகிறோம். வேள்வி தீமூட்டி அவனைப் புனிதனாக்கி எம்மிடம் அழைத்து வாருங்கள்"என தெரிவித்தார்.
நகர எல்லையில் தம் நினைவாகவே படுத்திருந்த நந்தனாரின் தூக்கத்தில் இறைவன் தோன்றினார்.
"அன்பனே!, நாளை நீ நம்மிடம் வருவாயாக! இந்தப் பிறவி நீங்க, வேள்வித் தீயிலே மூழ்கி எழுந்து வந்து எம்மைச் சேர்வாயாக" என்று அருளி மறைந்தார்.
தூக்கம் விடுபட்டு எழுந்த நந்தனார், இறைவனுடைய திருவருளை எண்ணி எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டே இருந்தார். பொன்னம்பலவனநாதனைப் பலவாறு போற்றிப் பாடிக் கொண்டாடினார்.
பொழுது புலர்ந்தது. இறைவன் புலைச்சேரியில் பிறந்த பக்தனை ஆட்கொள்ள விழைந்தது பற்றி தில்லை அந்தணர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
ஈசனின் திருவருள் பெற்ற அப்பெருமானைத் தாங்களும் தரிசித்து ஆனந்தமடைய விரும்பினர்.
ஆலயம் சென்று நடராசப் பெருமானை வணங்கி, அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறி புறப்பட்டார்கள்.
வேத கோசங்கள் விண்ணை எட்டின. மேளதாளங்களுடன் தில்லை அந்தணர்கள் வருவதைக் கண்டதும் நந்தனாரின் உடலும் உள்ளமும் பூரித்தது.
இறைவனுக்கு எந்நேரமும் தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அவர்களைத் தூரத்திலிருந்தபடியே கண்குளிரக் கண்டு தரிசித்தார்.
தலையிலே சர்வாங்கமும் பட விழுந்து வணங்கினார். பின்னர் எழுந்து அவர்களைப் பார்த்துத் தம் கன்னங்களில் போட்டுக் கொண்டனர்.
அவர்கள் ஏதோ முக்கிய காரியமாக யாரையோ எதிர்கொண்டு வரவேற்கச் செல்லுகிறார்கள் என எண்ணினார்.
அவர்கள் செல்லும் பாதையில் தாம் குறுக்கலாக நிற்பது கூடாது என, பாதையை விட்டு விலகி ஒரு ஒதுக்குறமான இடத்தினருகே இருந்த மரத்தடியின் கீழ் போய் நின்றார் நந்தனார்.
நந்தனார் நிற்குமிடத்தை நோக்கித்தான் அந்தணர்கள் வந்தனர். நந்தனாருக்கு ஒன்றும் புரியவில்லை.
மெய்சிலிர்த்தார். அந்தணர்கள் அருகில் நிற்கிறோமே என கூனிக்குறுகி நின்றார்.
தில்லைவாழணந்தர்கள் அவரை நெருங்கியதும், பூமியில் வீழ்ந்து படுத்து தொழுதெழுந்தார்.
"சுவாமி! அருகில் வர வேண்டும்!" என பிரார்த்தித்தனர்.
நந்தனாருக்கு வியப்புத் தாங்கவில்லை. தாம் நின்றிருந்த மரத்தடியை விட்டு விலகி பாதைக்கு வந்தார்.
அவர்கள் மீண்டும் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.
"சுவாமி,வர வேண்டும்! தங்களை அழைத்து வருமாறு பெருமான் திருவுள்ளம் செய்தார்" என்றனர்.
"ஆண்டவன் அழைக்கின்றானா? என்று கேட்ட நந்தனார், தம்மையே மறந்து சிறிது நேரம் நின்று விட்டார்.
திருப்புன்கூரிலே சந்நதியிலிருந்த நந்தியை விலகச் செய்து தரிசனம் தந்த பெருமான், இப்போது தில்லையிலே தமக்குக் காட்சி தந்தருள அழைப்பதைக் கேட்டபோது, அவரின் மயிர்க்கால்கள் ஒவ்வொன்றிலும் பேரின்பச் சிலிர்ப்பு ஏற்பட்டன. எம்பெருமானைத் தியானித்தபடியே நடந்தார்.
கூடவே வந்த அவர்கள் முதல் நாள் இரவு இறைவன் தங்களுக்குகிட்ட கட்டளையும் அவரைப் புனிதப்படுத்தி அழைத்துச் செல்ல தென் மதிற்புறத்திலே திருவாயிலுக்கு எதிரே வேள்வித் தீ தயாராக இருப்பதையும் அறிவித்தனர்.
ஈசனின் கருணையால் நந்தனாரின் நெஞ்சம் தழுதழுத்தது.
"இறைவா! எனக்கு அருள் புரிந்து விட்டாய்!" இதோ உன்னைக் காண ஓடி வருகிறேன்!... என்று சொல்லி படி ஓட்டமாய் ஓடினார்.
ஆனந்த மேலீட்டால் கால் தடுமாறத் தரையிலே விழுந்தார். பாதையிலே உருண்டு புரண்டார். திரும்பவும் எழுந்து கொண்டு ஓடினார்.
தென்புறத் திருவாயிலில் பள்ளம் ஒன்று வெட்டி அதிலே திகு திகு வென தீ எரிந்து கொண்டிருந்தது.
வேதியரில் சிலர் அதனருகே அமர்ந்து வேதமந்திரங்களை ஓதி ஹோமம் செய்து கொண்டிருந்தனர்.
இறைவனின் கட்டளைக்கினங்க அவருடைய பக்தனை புனிதனாக்க வளர்க்கப்பட்ட தீ அல்லவா? சாதராணமாக இருக்கலாமா?
நந்தனார் இரு கைகளையும் கூப்பி அம்பலவாணனின் ஆகாயமளவும் கோபுரங்களையும் நோக்கி வணங்கினார்.
எத்தனையோ நாட்களாக உன்னைத் தரிசிக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்த என்னை ஆட்கொள்ள இன்றுதான் உனக்குக் கருணை வந்ததோ?, இதோ வந்து கொண்டடேயிருக்கிறேன்! அம்பலவாணா! ஆனந்தக்கூத்தா!! அம்பலத்தாடும் பெருமானே!!! என பலவாறாகக் கூறியவண்ணம் ஆளுயுயரம் சுடர்விட்டு எரியும் வேள்வித்தீக்குழியை மும்முறை வலம் வந்தார்.
இறைவா போற்றி! எம் பெருமானே போற்றி போற்றி! என இறைவனைப் புகழ்ந்த வண்ணம் கொழுந்து விட்டெரியும் தீயின் செந்நாக்குகளினிடையே குழியினுள் இறங்கினார்.
எங்கும் "ஆஹா....ஆஹா... என்ற பரபரப்பு.
வேத மந்திரங்கள் வான் முகடு வரை மோதின.
மங்கலக் கோஷங்கள் எட்டுத் திக்குகளிலும் எதிரொலித்தது.
தீக்குழியிலே இறங்கினார் நந்தனார். கூப்பிய கரங்களுடனே எதிர்புறம் கரையேறினார்.
விண்ணவர்கள் மலர் மாரி பெய்வித்தனர்.
தேவதுந்துபிகள் முழங்கியது.
தீக்குழியை விட்டு வெளிப்பட்ட நந்தனார் புதிய மனிதராகத் தோற்றம் கொண்டிருந்தார்.
தலையிலே ஜடைமுடி.
நெற்றியிலே திருநீறு.
கழுத்திலே ருத்திராக்ஷ மாலை.
மார்பிலே வெள்ளவெளேரென்ற பூணூல்.
புலயராகத் தீயிலே இறங்கியவர் புதிய முனிவராக வெளிப்பட்டார்.
தில்லை மூவாயிரத்தினரும் அவரைப் பணிந்து வணங்கினர்.
அவர் பாதங்களைக் கழுவி மலர் கொண்டு அர்சித்துத் தொழுதனர்.
பின்னர் அவர்கள் அவரை ஆலயத்துள் அழைத்துச் சென்றனர்.
பொன்னம்பலத்திலே ஆனந்தக் கூத்தாடும் எம்பெருமானின் திருசந்நிதிக்கு அவரை அழைத்து வந்தனர்.
சந்நிதானத்தில் நுழைந்த நந்தனார் தம் இரு கரங்களையும் கூப்பி வணங்கியவராய், "ஐயனே! இதோ வந்திருக்கிறேன்! என்றார்.
அந்த அளவிலேயே ஐயனின் ஆனந்தக் கூத்திலே நந்தனார் ஐக்கியமாகி விட்டார்.
கூடவே வந்த மூவாயிரத்தார் நந்தனாரைக் காணாது திகைத்தனர்.
எம்பெருமானோடு ஐக்கியமாகிவிட்ட அவரைப் பலவாறு போற்றிக் கொண்டாடினர்.
திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.
No comments:
Post a Comment