Thursday, August 10, 2017

Thiruchemponpalli temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
  🍁 சிவ தல தொடர் 60. 🍁
🍁 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர். 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 திருச்செம்பொன்பள்ளி. 🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

இறைவன்: சொர்ணபுரீஸ்வரர், தேவப்பிரியர், சுவர்ணலட்சுமீசர், செம்பொன்பாள்ளியார்.

இறைவி: மருவார்குழலி, புஷ்பாளகி, தாக்ஷாயணி, சுகுந்தகுந்தளாம்பிகை, சுகந்தவனநாயகி.

தல மரம்: வன்னி,வில்வம் (சுவாமி, அம்பாள் சந்நிதிகளிடையே வன்னியும், வடக்குச் சுற்றில் வில்வமரமும் உள்ளன.)

 தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி.

வழிபட்டோர்:
வசிட்டர், அகத்தியர், பிரமன், திருமான், இந்திரன், குபேரன் முதலியோர்.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள நூற்று இருபத்தெட்டு தலங்களுள் இத்தலம் நாற்பத்து இரண்டாவது தலமாகப் போற்றப் பெறுகின்றன.

இருப்பிடம்:
மயிலாடுதுறையிலிருந்து பொறையாறு செல்லும் பேருந்து வழியில் உள்ளது.
மாயவரத்திலிருந்து பத்து கி.மி. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு நகரப் பேருந்து இயக்கப்படுகிறது.

பெயர்க்காரணம்:
இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்றும் பெயருண்டு, இந்திரன் நீராடி வழிபட்டு வித்திராசுரனைக் கொல்ல வச்சிராயுதம் பெற்ற தலம்.

இதனால் இந்திரபுரி என்றும் பெயர். கந்தபுரி என்ற பெயருமுள்ளது. செம்பொன்னால் வேயப்பட்டிருந்தமையால் செம்பனார் கோவில் என்றும், சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்று, சிறப்புற்று விளங்கியமையால் செம்பியன்பள்ளி என்று மருவி செம்பொன்பள்ளி என்றாயிற்று.

கோவில் அமைப்பு:
இக்கோயில் ஒன்னேமுக்கால் ஏக்கர் நிலப்பரப்புடன் ஒரு பிராகாரத்துடன் அமையப் பெற்றுள்ளது.

உள்நுழைந்ததும், மூலவரான இலிங்கத் தஇருமேனி சுயம்பு மூர்த்தமாக காட்சி தந்ததை அன்புடன் அவரருளை பெற்றுக் கொண்டோம்.

வட்ட வடிமான ஆவுடையார் உள்ள இத்திருமேனியை திருமாலும், சதுர வடிவுடைய ஆவுடையாருள்ள திருமேனியை பிரம்மனாலும் பூசிக்கப்பட்டதென அங்குள்ளவர்கள் கூறினார்கள்.

அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள் உளர்.

ஸ்தபன மண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சந்திரசேகர் முதலிய  திருமேனிகள் இருக்க தொடர்ச்சியாக வணங்கி நகர்ந்தோம்.

இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப்பழமையானதாக காட்சி தந்தன.

மகாமண்டபத்தில் விநாயகர், சூரிய சந்திர லிங்கங்கள், சுப்பிரமணியர் சந்நிகளுக்கு சென்று வணங்குதலை செலுத்திக் கொண்டோம்.

தெற்குச் சுவற்றில் துறவி ஒருவரோடும், அமைச்சர் ஒருவரோடும் நின்று வழிபடும் அரசனின் உருவம் இருப்பதைக் கண்டோம்.

தேவி சந்நிதி வந்து மனதிருப்தியுடன் அம்பாளை வணங்கினோம்.

தல அருமை:
மக்கள் வழக்கில் செம்பனார்கோயில் என்று வழங்கப்படுகிறது.

இத்தலம் தாக்ஷாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

இந்திரன் நீராடி வழிபட்டு விருத்திராசுரனை கொல்ல வச்சிராயுதம் பெற்ற தலம்.

இத்தலத்திற்கு இலக்குமிபுரி, இந்திரபுரி, கந்தபுரி என்ற பெயர்களுமுண்டு.

இக்கோயில் கோச்செங்கட் சோழனின் திருப்பணியாகும்.

கீழே பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையாரில் மூலவர் - இலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தமாக காட்சிதருகிறார்.

இங்குள்ள வட்டவடிவமான ஆவுடையார் உள்ள திருமேனி திருமாலும், சதுர வடிவுடைய ஆவுடையாருள்ள திருமேனி பிரமனாலும் பூசிக்கப்பட்டதாகும்.

தனியேயுள்ள தேவி சந்நிதி தெற்கு நோக்கியது; இத்தலத்திற்கு தென்மேற்கேயுள்ள பறியலூரில் தந்தையான தக்கன் செய்த வேள்விக்குச் செல்லும் கோலத்தில் மேற்கு நோக்கியிருப்பதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

சித்திரை 7-ஆம் நாள் முதல் 18-ஆம் நாள் முடிய சூரிய ஒளி சுவாமி மீது படுவதாகச் சொல்லப்படுகிறது. (இந்நாட்களில் விடியற்காலையில் சூரிய வழிபாடு நடைபெறுகிறது.)

இக்கோயிலில் சோழர் காலத்திய ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன; இவை மூன்றாம் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜசோழ தேவர், தஞ்சை சரபோஜி மன்னர் காலத்தியவை.

இக்கோயிலின் அமைப்பு முறை ஜேஷ்டாதேவியின் பிரதிஷ்டை முதலியவைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இக்கோயில் கி. பி. 879 - 907 வரை அரசாண்ட முதலாம் ஆதித்த சோழன் செய்த திருப்பணியாகக் கருத இடமுண்டு என்றும் செய்தி இவ்வாலயத் தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தலத்து காவிரித்துறையில் இறந்தவர் எலும்புகளைப் போட்டால், அவை பூ மரங்களாகிப் பூக்கிறதாம்.

சாதுக்கள் அப்பூக்களைக் கொண்டு இறைவனை வழிபடுகிறார்களாம்.

தல பெருமை:
பிரம்மாவின் புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை, இறைவனுக்கு மனம் முடித்துத் தருகிறார்.

தனக்கிருந்த அகந்தையால் தான் நடத்தும் யாகத்திற்கு சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

இதனால் தன் தட்சனைத் திருத்தி நல்வழிப்படுத்த, தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சன் யாகம் அழிய சாபமிட்டாள்.

அடுத்து சிவனிடம், தட்சனைத் தண்டிக்கும்படி வேண்டினாள். சிவனும் யாகத்தை தோற்றுவித்து யாகத்தை அழித்து, தட்சனை சம்ஹாரம் செய்கிறார்.

தாட்சாயிணியையும் மன்னித்து, சுகுந்தகுந்தளாம்பிகை எனும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் அருளாட்சி செய் என அருள்பாலிக்கிறார்.

தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர் 1-ல் ஒரு பதிகமும், 
அப்பர் 4-ல் ஒரு பதிகமும், 5-ல் ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள்.

முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள்
🍁மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேன் மன்னும் பாவமே. 

🌸மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக் கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்த வையாதவர்களைப் பாவங்கள் பற்றும். 

🍁வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம்மீசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 

🌸கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய், சிறப்புப் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும். 

🍁வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா வூனமே. 

🌸மலைகளில் செழித்து வளர்ந்த சந்தன மரங்களோடு, அகில் மரங்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா. 

🍁மழுவா ளேந்தி மாதோர்பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்
தொழுவார் தம்மேற் றுயர மில்லையே. 

🌸மழுவாகிய வாளை ஏந்தி உமையொரு பாகனாய் வளம் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை. 

🍁மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.

🌸மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு உடனாய் விளங்குபவனும், அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன் பள்ளியில் விளங்கும் சிவபிரானையே, இலைகளையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார் மேல் வினை நில்லா. 

🍁அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே. 

🌸பாறைகளிற் பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா. 

🍁பையா ரரவே ரல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே. 

🌸அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில் வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க வினைகள் மேவா. 

🍁வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே யடைந்து வாழ்மினே. 

🌸வானத்தில் விளங்கும் பிறை மதியை, வளர்ந்துள்ள சிவந்த தன் சடைமீது வைத்து, இனிமை பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளியவனும், புலால் பொருந்திய பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின். 

🍁காரார் வண்ணன் கனக மனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
ஓரா தவர்மே லொழியா வூனமே. 

🌸நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும், பொன்னிறமேனியனாகிய பிரமனும், தேடிக் காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித் தியானியாதவர் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா. 

🍁மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா வென்ன நில்லா விடர்களே. 

🌸அழுக்கேறிய உடலினராகிய சமணரும், மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரிபவர்களாகிய புத்தரும் பேசக் கூடாதவைகளைப் பேசித் திரிய அன்பர்கள் "ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!" என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா. 

🍁நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. 

🌸தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன் பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர். 
**************
🌺கான றாத கடிபொழில் வண்டினம்
தேன றாத திருச்செம்பொன் பள்ளியான்
ஊட றாததோர் வெண்டலை யிற்பலி
தான றாததோர் கொள்கையன் காண்மினே.

☘மணம் நீங்காத விளக்கம் உடைய பொழில்களில் வண்டினங்களின் தேன் நீங்காத திருச்செம்பொன் பள்ளி இறைவன், தசைவிட்டு நீங்காத ஒரு வெண்தலையில் பலியினைத் தான் ஏற்றலினின்றும் நீங்காத இயல்புடையவன்; காண்பீர்களாக.

🌺என்பு மாமையும் பூண்டங் குழிதர்வர்க்
கன்பு மாயிடும் ஆயிழை யீரினிச்
செம்பொன் பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன் பள்ளியுள் கவினை நாசமே.

☘எலும்பும், ஆமையும் அணிந்து திரிதருகின்ற செம்பொன்பள்ளி இறைவனும் சிவலோகனுமாகிய பெருமானை அன்பு செய்யும் ஆராய்ந்த இழையை அணிந்த பெண்களே! அப் பெருமானை நம் அழகிய மனக்கோயிலின்கண்ணே நினைந்தால் நம் வினைகள் நாசமாகும்.

🌺வேறு கோலத்த ராணலர் பெண்ணலர்
கீறு கோவண வைதுகி லாடையர்
தேற லாவதொன் றன்றுசெம் பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ண லவனையே.

☘வேறுகோலத்தோடு கூடியவரும், ஆண், பெண் அல்லாதவரும், கிழித்த கோவணத்துகிலாடையுடையவரும், செம்பொன் பள்ளியில் வீற்றிருந்து கங்கையாளைச் சடையிற் சூடிய அண்ணலாகிய அப்பெருமானைத் தௌத்துகொள்ளுதல் யார்க்கும் எளிதாம் ஒன்றன்று.

🌺அருவ ராததோர் வெண்டலை யேந்திவந்
திருவ ராயிடு வார்கடை தேடுவார்
தெருவெ லாமுழல் வார்செம்பொன் பள்ளியார்
ஒருவர் தாம்பல பேருளர் காண்மினே.

☘அருவருப்புக்கொள்ளாது ஒரு வெண்டலையை ஏந்திவந்து தெருவெல்லாம் உழல்வார் செம்பொன் பள்ளி இறைவர்; திருமாலும் பிரமனுமாகிய இருவரால் திருமுடி, திருவடிகளின் எல்லை தேடப்பட்ட அவ்வொருவர் பலபெயர்களும் கொண்டு திகழ்வர்; காண்பீர்களாக.

🌺பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான்
ஏவ லாலெயின் மூன்று மெரித்தவன்
தேவர் சென்றிறைஞ் சுஞ்செம்பொன் பள்ளியான்
மூவ ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.

☘தேவர்கள் சென்று இறைஞ்சுகின்ற செம்பொன் பள்ளி இறைவர் கொன்றைப்பூப் பொருந்திய சடையில் கங்கையைச் சூடியவரும், ஓரம்பினால் முப்புரம் எரித்தவரும், மூவர்க்கும் முதலாய் நின்ற மூர்த்தியும் ஆவர்.

🌺சலவ ராயொரு பாம்பொடு தண்மதிக்
கலவ ராவதின் காரண மென்கொலோ
திலக நீண்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவில் லாலெயில் மூன்றெய்த கூத்தரே.

☘பெருமைக்குரிய வில்லால் மூன்றெயில்களை எய்த கூத்தரும் , பொட்டணிந்தவரும், நீண்ட சடாமுடி உடையவருமாகிய செம்பொன்பள்ளி இறைவர் கங்கையைச் சூடியவராய், பாம்பும் குளிர்பிறையும் கலந்தவராய் ஆவதன் காரணம் என்னையோ?.

🌺கைகொள் சூலத்தர் கட்டுவாங் கத்தினர்
மைகொள் கண்டத்த ராகி யிருசுடர்
செய்ய மேனிவெண் ணீற்றர்செம் பொன்பள்ளி
ஐயர் கையதோ ரைந்தலை நாகமே.

☘கையிற்கொண்ட சூலம் உடையவரும், கட்டு வாங்கத்தை உடையவரும், திருநீலகண்டரும் ஆகி இருசுடர்களைப் போன்று சிவந்த திருமேனியும் அதிற்பூசிய வெண்ணீற்றினருமாகிய செம்பொன்பள்ளித் தலைவர் கையின்கண் உள்ளது ஓர் ஐந்தலை நாகமாகும்.

🌺வெங்கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
பைங்கண் ஆனையி னீருரி போர்த்தவர்
செங்கண் மால்விடை யார்செம்பொன் பள்ளியார்
அங்க ணாயடைந் தார்வினை தீர்ப்பரே.

☘வெவ்விய கண்ணையுடைய நாகத்தினை அஞ்சும்படி ஆர்த்துக்கட்டியவரும், பசுமையான கண்ணையுடைய ஆனையின் பச்சைத்தோலைப் போர்த்தவரும், செங்கண்ணையுடைய திருமாலைத் தமக்கு விடையாக உடையவரும் ஆகிய செம்பொன்பள்ளி இறைவர் தம்மை அடைக்கலமாக அடைந்தவர்களின் வினைகளைத் தீர்ப்பர்.

🌺நன்றி நாரணன் நான்முக னென்றிவர்
நின்ற நீண்முடி யோடடி காண்புற்றுச்
சென்று காண்பரி யான்செம்பொன் பள்ளியான்
நின்ற சூழலில் நீளெரி யாகியே.

☘செம்பொன்பள்ளி இறைவர் நன்மை மிக்க நாரணனும், பிரமனும் ஆகிய இருவரும் நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காணத்தொடங்கிச் சென்றும் காண்டலரியவராய் நின்ற அச்சூழ்நிலையில் நீண்டு அழலுருவாயினர்.

🌺திரியும் மும்மதில் செங்கணை யொன்றினால்
எரிய வெய்தன லோட்டி யிலங்கைக்கோன்
நெரிய வூன்றியிட் டார்செம்பொன் பள்ளியார்
அரிய வான மவரருள் செய்வரே.

☘செம்பொன்பள்ளி இறைவர் திரிகின்ற மும்மதில்களைச் செங்கணை ஒன்றினால் எரியுமாறு எய்து அனலினால் ஓட்டி, இராவணன் நெரியுமாறு தம் திருவிரல் ஒன்றால் ஊன்றியவர்; தம்மையடைந்த அன்பர்க்கு அரிதாகிய வீட்டுலக இன்பத்தை அப்பெருமான் அருள்வர்.
**************

🌿ஊனினுள் ளுயிரை வாட்டி
உணர்வினார்க்கௌய ராகி
வானினுள் வான வர்க்கும்
அறியலா காதவஞ்சர்
நானெனிற் றானே யென்னும்
ஞானத்தார்பத்தர் நெஞ்சுள்
தேனுமின் னமுது மானார்
திருச்செம்பொன்பள்ளி யாரே. 

🍃திருச்செம்பொன்பள்ளிஎம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித் தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய், உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும் அறியமுடியாத கள்ளத்தை உடையவராய், சிவபோதத்தினராய் இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும், சிவனடியார்களின் நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார்.

🌿நொய்யவர் விழுமி யாரு 
நூலினுண் ணெறியைக் காட்டும் 
மெய்யவர் பொய்யு மில்லார்உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகிநெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர்திருச்செம்பொன் பள்ளி யாரே.

🍃நீலகண்டராய திருச்செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய், சீர்மை உடையவராய், வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய், பொய்யிலியாய், உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர்.

🌿வெள்ளியர் கரியர் செய்யர்விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்ஒள்ளிய ரூழி யூழியுலகம தேத்த நின்றபள்ளியர் நெஞ்சத் துள்ளார்பஞ்சமம் பாடி யாடும்தௌளியார் கள்ளந் தீர்ப்பார்திருச்செம்பொன் பள்ளி யாரே.

🍃திருச்செம்பொன் பள்ளியார் வெண்மை, செம்மை, கருமை என்ற நிறத்தவராய், தேவர்கள் உள்ளத்திலே ஒளி தருபவராய், ஊழிதோறும் உலகங்கள் துதிக்கும் படியான பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுடைய நெஞ்சத்தில் உள்ளவராய், பஞ்சமம் என்ற பண்ணினைப் பாடி ஆடும் ஞானிகளுடைய உள்ளிருளைப் போக்குபவராய் உள்ளார்.

🌿தந்தையுந் தாயு மாகித்
தானவன் ஞான மூர்த்தி
முந்திய தேவர் கூடி
முறைமுறை யிருக்குச் சொல்லி 
எந்தைநீ சரண மென்றங்
கிமையவர் பரவி யேத்தச் 
சிந்தையுட் சிவம தானார் 
திருச்செம்பொன் பள்ளி யாரே.

🍃திருச்செம்பபொன் பள்ளியார் தந்தையாராய்த் தாயாராய், எல்லோருக்கும் கொடைவழங்குபவராய், ஞானவடிவினராய், முற்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முறைப்படி வேதங்களை ஓதி 'எங்கள் தந்தையே! நீயே அடியேங்களுக்கு அடைக் கலம் நல்குவை' என்று முன் நின்று வழிபட்டுத்துதிக்க, அவர்கள் உள்ளத்துள்ளே மங்கல மூர்த்தியாக இருப்பவராவர்.

🌿ஆறுடைச் சடையார் போலும்அன்பருக் கன்பர் போலும்கூறுடை மெய்யர் போலும்கோளர வரையர் போலும்நீறுடை யழகர் போலும்நெய்தலே கமழு நீர்மைச்சேறுடைக் கமல வேலித்திருச்செம்பொன் பள்ளி யாரே.

🍃நெய்தல் பூக்கள் மணம் கமழும் நீர்வளம் உடையதாய்ச் சேற்றிலே தாமரை பூக்கும் வயல்களை நாற்புறமும் எல்லையாக உடைய திருச்செம்பொன்பள்ளியார் கங்கை சூடியசடையராய்த் தம் அன்பர்களிடத்துத் தாமும் அன்பு செய்பவராய், பார்வதிபாகராய், கொடிய பாம்பினை இறுகக் கட்டிய இடையினராய்த் திரு நீறணிந்த அழகருமாவார்.

🌿ஞாலமு மறிய வேண்டில்நன்றென வாழ லுற்றீர்காலமுங் கழிய லானகள்ளத்தை யொழிய கில்லீர்கோலமும் வேண்டா வார்வச்செற்றங்கள் குரோத நீக்கில்சீலமுந் நோன்பு மாவார்திருச்செம்பொன் பள்ளி யாரே.

🍃மேம்பட்டது என்று சொல்லி உலகியலில் திளைத்து வாழும் உலகத்தவராகிய நீங்கள் வீணாகக் கழிகின்ற உங்கள் வஞ்சக வாழ்க்கையை விடாது மேற்கொண்டுள்ளீர். நீங்கள் திருச்செம்பொன் பள்ளியாரை அறியவிரும்புவீராயின், உங்கள் போலி அடியவர் வேடத்தையும் காமக் குரோத கோபாதிகளையும் நீங்கள் போக்கிவிட்டால் அவர் உங்களுக்கு ஒழுக்கமும் தவ விரதமுமாக இருந்து உதவுவார்.

🌿புரிகாலே நேசஞ் செய்யவிருந்தபுண் டரீகத் தாரும்எரிகாலே மூன்று மாகியிமையவர் தொழநின் றாரும்தெரிகாலே மூன்று சந்திதியானித்து வணங்க நின்றுதிரிகாலங் கண்ட வெந்தைதிருச்செம்பொன் பள்ளி யாரே.

🍃திருச்செம்பொன்பள்ளியார் விருப்பம் முற்பட்ட பொழுதே தம்மிடத்தே அன்பு செய்யும் அடியவர் இதயத் தாமரையில் இடம் கொண்டிருப்பவராய், தீ, காற்று, நிலம், நீர், ஆகாயம் என்ற ஐம்பூதங்களுமாகித் தேவர்கள் தொழுமாறு இருப்பவராய், காலை நண்பகல் அந்தி என்ற மூன்று வேளைகளிலும் ஆராயப்படும் திருவடிகளை நினைந்து அடியவர் யாவரும் வணங்க, முக்காலங்களிலும் நிலையாக இருப்பவர் ஆவர்.

🌿காருடைக் கொன்றை மாலைகதிர்மதியரவி னோடும்நீருடைய சடையுள் வைத்தநீதியார்நீதி யுள்ளார்பாரொடு விண்ணு மண்ணும்பதினெட்டுக் கணங்க ளேத்தச்சீரொடு பாட லானார்திருச்செம் பொன்பள்ளி யாரே.

🍃திருச்செம்பொன்பள்ளியார்கார் காலத்தைத் தனக்குப் பூக்கும் காலமாக உடைய கொன்றைப்பூ மாலையை ஒளிவீசும் பிறை, பாம்பு எனும் இவற்றோடு கங்கை தங்கும் சடையில் வைத்தவராய், நீதியே வடிவானவராய்த் தாமும் அந்நீதியையே நடத்துபவராய், பாதலம், தேவருலகம், மண்ணுலகம் என்ற மூன்று உலகங்களும் பதினேட்டுத் தேவகணங்களும் தம்மைத் துதிக்க, சீரோடு கூடிய பாடல் வடிவாய் உள்ளவர்.

🌿ஓவாத மறைவல் லானும் 
ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும்
முனிகளா னார்க ளேத்தும் 
பூவான மூன்று முந்நூற்
றறுபது மாகு மெந்தை 
தேவாதி தேவ ரென்றுந்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

🍃திருச்செம்பொன்பள்ளியார் என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பிரமனும், கடல் நிறத்தவனாகிய திருமாலும் காணமுடியாதவராய், மூத்தலோ பிறத்தலோ இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய், என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய் உள்ளார்.

🌿அங்கங்க ளாறும் நான்கும்
அந்தணர்க் கருளிச் செய்து
சங்கங்கள் பாட வாடுஞ்
சங்கரன் மலையெ டுத்தான்
அங்கங்க ளுதிர்ந்து சோர
வலறிட வடர்ந்து நின்றும்
செங்கண்வெள் ளேற தேறுந்
திருச்செம்பொன் பள்ளி யாரே.  

🍃சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெண்ணிறக் காளையை இவரும் திருச்செம்பொன்பள்ளியார், கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் உறுப்புகள் உதிர்ந்து தளர அவன் வாய்விட்டு அலறுமறு வருத்தி நின்றும் (நின்றவராயினும்) நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முனிவர்க்கு உபதேசித்துப் பூதகணங்கள் பாடக் கூத்தாடும் ஆனந்த வடிவினராவர்.

பூஜை:
காரணாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அ.மி. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
செம்பனார் கோயில் மற்றும் அஞ்சல்,- 609 309,
தரங்கம்பாடி வட்டம், நாகபட்டினம் மாவட்டம்.

தொடர்புக்கு:
முத்துக்குமார குருக்கள். 94437 97974