Sunday, July 30, 2017

Vaayilaar nayanar -9 - Nayanmar stories

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌻 *(9) நாயன்மார் சரிதம்.*🌻
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🌻 *வாயிலார் நாயனார்.* 🌻
காலம்;........கி.பி. 660--700,
குலம்  :........வேளாளர்,
மாதம்...........மார்கழி,
நட்சத்திரம்..ரேவதி,
வழிபாடு......லிங்கம்,
ஊர்................திருமயிலாப்பூர்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தொண்டை நாட்டில் சிறந்த வளங்கள் நிறைந்ததும்,வாய்மையிற் சிறந்த பெருங்குடி மக்கள் வழி வழியாகப் பெருஞ் செல்வத்துடன் வாழ்வதுமான ஊரான திருமயிலாப்பூர் ஆகும்.

அங்கு ,அருகிலுள்ள கடலானது தன்னிடமுள்ள மணி முதலிய நிதிகளை வைப்பதற்குத் தேடிப் பெற்றதொரு பெரிய பண்டாரம் என்று கூறும்படியாக மரக்கலங்களைத் தள்ளிக் கொண்டிருக்கும்.

கடற்கரைக் கானலின் இடங்கள் எங்கிலும் மரக்கலங்கள் அயல்நாடுகளில் இருந்து கொண்டு வந்து இறக்கிய யானைக் கன்றுகளும் எருமைக் கன்றுகளும் கடலிற் படிந்து அணைகின்ற  மேகங்களோடு பிரித்து அறியக்கூடாத நிலையில், நிறவொப்புமையோடு விளங்கும்.

வீதிகள் எங்கும் விழாச் சிறப்புகளின் அலங்காரங்கள் நிறைந்திருக்கும். மாதர்களின் கூந்தல்களில் காளையர்களின் தூதராக இயங்குவன போலக் கருவண்டுகள் மொய்த்திருக்கும்.

அழகிய மாளிகைகள் எங்கும் நிதிகளும் அணிகளும் நீங்காமல் நிலைத்திருக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் *வாயிலார்* என்னும் பெரியார் ஒருவர் தோன்றினார்.

பழமையாகிய பெருங்குடியில் சிறப்புற்ற வாயிலார், சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிவதில் பெருவிருப்புடன் விளங்கி வந்தார்.

மறவாமையாகிய கருவியினால் அமைந்த மனமாகிய கோயிலிலே, சிவபெருமானை எழுந்தருளச் செய்து, அப்பெருமானை உணருகின்ற ஞானம் என்ற சுடர் விளக்கை ஏற்றி வைத்துப் பேரானந்தம் எனும் திருமஞ்சனமாட்டி, அன்பு என்ற திருவமுதை அமைத்து அர்ச்சனை செய்து ஞான பூஜையை நாள்தோறும் செய்து வந்தார்.

வாயிலார் இவ்வாறு தமது மனதுக்குள்ளாகவே செய்து வந்த அகப்பூஜையினால், சிவபெருமானை நெடுங்காலம் அன்போடு இடையறாது வழிபட்டு, இறுதியில் சிவபெருமானது திருவடி நிழலையடைந்தார்.

*துறைக் கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதி தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியோம்!*

              திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment