Thursday, July 27, 2017

Tiruchirapalli Thayumanavar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(25)*
🌺 *சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.* 🌺
(நேரில் சென்று தரிசித்ததைப் போல........)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
     🌺 *திரிசிராப்பள்ளி.* 🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* தாயுமானேஸ்வரர், தாயுமானவர் மாத்ருபூதேஸ்வரர்.

*இறைவி:*
மட்டுவார் குழலி, சுகந்தகுந்தளாம்பிகை.

*தீர்த்தம்:* காவிரி.

சோழ நாட்டில் அமையப்பெற்று விளங்கும் 128 தலங்களுள் ஆறாவது தலமாகப் போற்றப் பெறுகின்றது.

*இருப்பிடம்:*
திருச்சி என்றழைக்கப்படும் இத்தலம் தமிழகத்தின் பெரிய நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

புகைவண்டி நிலையமும், தமிழகத்தின் எல்லா நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

*பெயர்க் காரணம்:*
எல்லா உயிர்களுக்கும் தந்தையாகவுள்ள இறைவன் ஒரு பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவி செய்தமையால் தாயுமானவர் என்று பெயர் பெற்றார்.

திரிசரன் (மூன்று தலை கொண்ட அசுரன்) வழிபட்ட இடமாதலின் இஃது திருசிராப்பள்ளி என்று பெயர்.

இத்தலத்திற்கு தென்கயிலாயம் என்ற பெயரும் உண்டு.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*--1-ல் ஒரே ஒரு பதிகமும், 
*அப்பர்*-- 5 -ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இரண்டு பதிகங்கள் இத்தலத்திற்கு.

*கோவில் அமைப்பு:*
தாயுமானவர் திருக்கோவில் மலைமேல் நடுவிடத்தில் உள்ளது.

இவ்விடத்திற்கு மலைக்கோட்டை என்று பெயர்.

பிரகாரத்தை வலம் வரும்போது,  முதலில் நால்வரை வணங்கிச் செல்லும் படி அமைந்திருக்கிறது.

வான்மீகி முனிவர், சப்த கன்னியர், வலஞ்சுழி விநாயகர், ஒன்பது சிவனடியார்கள், பைரவர், சூரியன், சந்திரன், பிரமன், இந்திரன், சடாயு, சப்தரிஷிகள், திரிசரன்,சாரமாமுனிவர், மெளனகுரு, தாயுமானவர் முதலியோர் வழிபட்ட தலம்.

திருச்சி என்றாலே மலைக்கோட்டையும், இம்மலையின் உச்சியில் அமர்ந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலுந்தான் நம் நினைவுக்கு வரும்.

இம்மலைக்கோட்டை நகரின் நடுவே அமைந்திருக்கிறது.

மலைக்கோட்டை அடிவாரத்தில் மாணிக்கவிநாயகர் சந்நிதி உள்ளது.

மலையேறும் முன் நாம், மாணிக்க விநாயகரைத் தொழுது வலம் வந்துதான் படிகளேறத் துவக்க வேண்டும்.

சிராப்பள்ளிக்கு குன்றுடையானைக் காணும் ஆர்வங் கொண்டு ஏறும் முன் வழியில் வலதுபக்கமாக தருமையாதீனத்தின் மெளன சுவாமிகள் கட்டளை மடம் இருக்கின்றன.

மடத்தின் முகப்பில் முத்துக்குமார சந்நிதி உள்ளன.

அவரையும் கைதொழுது மேலேறிச் செல்லும் போது, நூற்றுக்கால் மண்டபத்தைக் காணலாம்.

தொடர்ந்து படிகளேறிச் செல்ல, மலையின் நடுவிடத்தில் தாயுமானவர் திருக்கோயில் இடதுபுறமாய் இருக்கக் கண்டு வணங்கிக் கொள்கிறோம்.

வலது புறத்தில்உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதை நம்மை அழைக்கிறது.

*தல சிறப்பு:*
மூலவர்--பெரிதாக பருத்த உருவுடன் மேற்கு நோக்கிய வண்ணம் சிவலிங்கத் தியுமேனியாக காட்சி தருகின்றார்.

திருநீற்றுப் பட்டையுடனான கம்பீரக் காட்சியருள் கிடைக்கிறது.

பிரகாரச் சுவற்றில் வண்ணத்துடனான நன்றுடையான், சிராப்பள்ளிக் குன்றுடையான், மேலும் இறைவனின் பல்வேறு மூர்த்தங்களை எழுதியிருப்பதைக் கண்டு வணங்குகிறோம்.

அதன்பின் சண்டேஸ்வரரைத் தொழுது வெளியே வந்து அம்பாள் சந்நிதிக்கு வருகிறோம்.

அங்கே அம்பாள் மட்டுவார்குழலியம்மை நின்ற திருக்கோலத்துடன் மேற்கு முகமாக பார்த்த வண்ணம் காட்சியருள் புரிகின்றாள்.

பிரகாரத்தில் அருட்சக்திகளின் திருமேனிகள் இருக்கின்றன.

பின் நவக்கிரகங்களை வழிபட்டு முழு மனநிறைவுடன் வெளியே வருகிறோம்.

வெளி வந்த நாம் கொடிக் கம்பத்தினிடத்தில் வீழ்ந்து வணங்கிக் கொள்கிறோம்.

திரும்ப படிக்கட்டு படிகளை அடைந்து இங்கி, மேலேறிய வழிவழியிலே கீழே இறங்குகிறோம்.

தாயுமானவர் இத்தலத்தில் வாழ்ந்தார்.

தாயுமானவரின் குருவே மெளனசுவாமிகளாவார்.

சைவ எல்லப்பர் நாவலர் என்பவர் இத்தலத்திற்கு தல புராணம் பாடியுள்ளார்.

*தல அருமை:*
சுவாமி முன்னே-- கொடிமரம் பின்னே-- கோவில்களின் சிவன் சந்நிதிக்கு எதிரில் தான் கொடிமரம் இருக்கும்.

ஆனால் இக்கோயிலில் சிவனுக்குப் பின்புறம் கொடிமரம் இருக்கிறது.

சாரமா முனிவருக்காக மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கி திரும்பி விட்டதால், சந்நிதி வாசலில் கொடிமரம் அங்கேயே நிலைத்து விட்டது.

*தல பெருமை:*
வாயுபகவான், ஆதிசேஷனுக்கிடையே தங்களில் யார் பெரியவர் எனப் போட்டி உண்டானது.

ஆதிசேஷனை மீறி, கயிலாய மலையை வாயு பகவான் பெயர்ப்பது என அவர்களுக்குள் போட்டி வைத்துக் கொண்டனர். அதிலும் ஈடுபட்டனர்.

அப்போது கயிலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்தது.

இம்மலையில் மூன்று தலைகளை உடைய திரிசரன் என்னும் அசுரன் சிவனை வேண்டி தவம் இருந்தான்.

அவனது இரண்டு தலைகளை அக்னியில்போட்டுவிட்டு, மூன்றாவதுஸதலையையும் போடத் துணிந்தான். 

இறைவன் காட்சி தந்து அவன் வேண்டுகோளுக்கினங்கி இங்கேயே அவன் பெயரிலேயே திரிசிரனாதர் என்று எழுந்தருளி, தலம் திரிசிராமலை என்றழைக்கப்பட்டு அது மருகி திருச்சி என தற்போது மருவியுள்ளது.

*திருவிழா:*
சித்திரையில் பிரமோற்சவம்-ஐந்தாம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது.

அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பணிப் பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர்.

அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்து விடுவர்.

இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தையை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபாராதனை காட்டுவர்.

இந்த வைபவத்தின்போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும் மருந்து மற்றும் தைலமே பிரசாதமாகத் தரப்படும்.

பங்குனியில் தெப்போற்சவம்,
அன்னாபிசேகம்,
திருக்கார்த்திகை,
மகரசங்கராந்தி அன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம்.

சிவராத்திரி,
பங்குனி மாதம் மூன்று நாட்களில் மாலை வேளையில் சூரிய ஒளி சிவலிங்கம் மீது விழுகிறது.

*பூஜை:*
காரணம், காமிக முறையில் நான்கு கால பூஜை.

காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, தாயுமானவசுவாமி திருக்கோயில்,
மலைக்கோட்டை,
திருச்சி-- 620 002

*தொடர்புக்கு:*
தொலைபேசி: 0431--2704621
0431--2710484,    0431--2700971

              திருச்சிற்றம்பலம்.

*நாளை.......திருஎறும்பியூர்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டொன்று செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment