Wednesday, July 19, 2017

Kotpuli nayanar -3 - nayanmar stories

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌺 *(3) நாயன்மார் சரிதம்.* 🌺
🌺 *கோட்புலி நாயனார்.* 🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சோழவள நாட்டிலுள்ள திருநாட்டியத்தான் குடியிலே வேளாளர் மரபினில் *கோட்புலியார்* எனும் பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

இவர் சோழ மன்னரிடம் சேனைத் தலைவராக இருந்து வந்தார்.

பகைவர்களை எதிர்த்து போரிட்டு, புகழ்களையும் வெற்றிகளையும் பெற்றுத் திகழ்ந்தார். 

அரசரிடம் பெற்றுக் கொண்ட சிறந்த வளங்களையெல்லாம் கொண்டு , சிவபெருமானின் திருக்கோயில்களாகப் பார்த்து பார்த்து திருவமுதுக்குரிய செந்நெல் குவியல்களை வாங்கி, மலைச்சிகரம் போல் குவித்து சேமித்து வைத்தார். அதைக் கொண்டு இடைவிடாது திருவமுதை செய்வித்து வந்தார்.

இதை அவருக்கேயுண்டான தனிப்பெரும் திருத்தொண்டாகச் செய்து வந்தார். இத் தொண்டு பல காலமாக தொடர்ந்தது.

இவ்வாறு திருப்பணி செய்து வரும் காலத்தில் அவர் அரசனது ஆணையை ஏற்று, போர்முனைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. 

அப்போது சிவபெருமானின் திருவமுதுக்காக தாம் திரும்பி வரும் வரையில் தேவைப்படும் அளவு செந்நெல் நெற்கூடுகளைக் கட்டி அக்கூடுகளில் நெல்லை சேமித்து வைத்தார். 

பிறகு அவர் தமது சுற்றத்தார்கள் எல்லோரையும் தனித்தனியே கூப்பிட்டு, "சிவபெருமானுடைய அமுதுபடிக்காக நான் சேமித்து வைத்துள்ள இந்நெற்கூடுகளை எக்காரணம் பற்றியும் உங்களுக்கென்று எடுத்துச் செலவழிக்கக் கூடாது. 

அப்படி செலவழிக்க உங்கள் மனத்தினாலாவது நினைத்தீரென்றால், *திருவிரையாக்கலி* என்று கூறி இறைவன் ஆணை வைத்துவிட்டுப் போர் முனைக்குச் சென்றார்.

கோட்புலியார் போருக்குச் சென்ற சில நாட்களுக்கெல்லாம் அந்த நாட்டில் கொடும் பஞ்சம் வந்தது.

கோட்புலியாரின் சுற்றத்தார்கள் *உணவுப் பொருள் இல்லாமல் நாம் மாண்டுபோவதைக் காட்டிலும் இறைவரின் திருவமுதுக்காகச் சேமித்து வைத்திருக்கும் நெல்லையெடுத்துப் பயன்படுத்திக் கொள்வோம் பஞ்சம் நீங்கிய பின் திரும்பக் கொடுத்து விடுவோம்.* என்று எண்ணி துணிவு கொண்டு நெற்கூடுகளைக் குலைத்து நெல்லையெடுத்துப் பயன்படுத்தினார்கள்.

கோட்புலியார், போர் முனையில் வெற்றி கொண்டு மன்னரிடம் நிதி பெற்றுத் திரும்பினார். வழியில் தம் சுற்றத்தார்கள் செய்த பிழையை அறிந்தார்.

ஆனால் அவ்வாறு தாமறிந்த செய்தியைப் பிறரறியாதபடி மறைத்துக் கொண்டு *"அச்சுற்றத்தாரையெல்லாம் வெட்டி வீழ்த்துவேன்"* என்று துணிவு கொண்டு வந்தார்.

வெற்றி வீரராகத் திரும்பிய கோட்புலியாரை, அவரது சுற்றத்தார்கள் எதிர்கொண்டு வரவேற்றார்கள். கோட்புலி நாயனார் அவர்களுக்கு இனியமொழி கூறிவிட்டு வீடு சேர்ந்தார்.

அவ்வூரிலுள்ள தமது சுற்றத்தாருக்கெல்லாம் பைந்துகிலும் நிதியமும் தருவதாகக் கூறி, தமது மாளிகைக்கு அழைத்தார். எல்லோரும் வந்து சேர்ந்ததும், அவர்களுக்குப் பெருநிதியம் கொடுப்பவர்போலக் காட்டித் தம் பெயருள்ள கோட்புலி என்னும் காவலாளனை தலைவாயிலிருந்து காவல் செய்யும்படி வைத்தார்.

பிறகு, இறைவரது வலிய ஆணையையும் மறுத்து, இறைவர் அமுதுக்குரிய நெல்லை அழித்து அடாத செயல்கள் புரிந்த இவர்களைக் கொல்லாமல் விடுவேனோ? என்று மிகச் சினந்தெழுந்து *தம் தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவியர்கள், சுற்றத்தார்கள், ஊரிலுள்ள உரிமையடிமைகள் இன்னும் அமுதுபடி நெல்லை அழித்துண்ண இசைந்தவர்கள் எல்லோரையும் தம் உடைவாளால் வெட்டி வீழ்த்தினார்.*

அதன்பிறகு ஒரே ஓர் ஆண் குழந்தை மட்டும் எஞ்சி நின்றது. நாயனார் அதையும் கொல்லத் துனிந்து பாய்ந்தபோது,................

வாயிற்காப்போன் அவரைப் பார்த்து, "பெருமானே! இந்தக் குழந்தை என்ன செய்தது? இது சிவன் சோற்றை உண்ணவில்லையே? ஒரு குடிக்கு ஒரே பிள்ளை! இந்தக் குழந்தையை வெட்டாது கருணை செய்வீர்" என்று கெஞ்சினான்.

அதற்கு, கோட்புலி நாயனார், "இந்தக் குழந்தை சிவன்.சோற்றை உண்ணவில்லை என்பது உண்மைதான்! ஆயினும் அந்தச் சோற்றை உண்டவளின் முலைப்பாலை உண்டது!" என்று கூறி அந்தக் குழந்தையை யெடுத்து மேலே வீசியெறிந்து, வாளினால் இரு துண்டாக விழும்படி வெட்டித் தள்ளினார். 

அந்நிலையில் சிவபெருமான் காட்சிக் கொடுத்துத் தோன்றி, *"புகழோய்!* உன்னுடைய கையிலேந்திய வாளினாலே வெட்டுண்ட உன் சுற்றத்தார்கள், எல்லோரும் பாசம் நீங்கப் பெற்றார்கள்.

அவர்கள், யாவரும் பொன்னுலகை விடச் சிறந்த உலகையடைந்து, அதன் பிறகு நமது உலகத்தினைச் சார்வர். *நீ இந்நிலையிலேயே நம்முடன் வருவாயாக!"* என்று கூறி அன்பான கோட்புலி நாயனாரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு எழுந்தருளினார்.

*அத்தனாய்,*
*அன்னையாய்,*
*ஆருயிராய்,*
*அமிர்தமாகி,* முத்தனாம் முதல்வன் தன் திருவடிகள் அடைந்த கோட்புலி நாயனார் போற்றி.

             திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment