Tuesday, July 18, 2017

Karkadeswarar temple - Crab

Courtesy: http://www.dailythanthi.com/Others/Devotional/2016/11/29154905/Nandu-becameGandharva.vpf
நண்டாக மாறிய கந்தர்வன்

நண்டாக மாறிய கந்தர்வன்
பூலோகத்தில் இறைவனுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்வதற்காக, புரஞ்சரன் என்ற கந்தர்வன் தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்தான்.
பூலோகத்தில் இறைவனுக்குச் செய்யப்படும் அனைத்து வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்வதற்காக, புரஞ்சரன் என்ற கந்தர்வன் தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்தான். அவன் பூலோகத்தில் இருக்கும் பல கோவில்களுக்குச் சென்று, அங்கு இறைவனுக்குச் செய்யப்படும் பல்வேறு அலங்காரங்களையும், வழிபாடுகளையும் கண்டு மகிழ்ந்தான்.

பூலோகத்தில் இருக்கும் கோவில்களில் அர்ச்சகர் ஒருவர் இறைவனுக்கு வழிபாடு செய்ய, அங்குக் கூடியிருக்கும் பக்தர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து இறைவனை வழிபடுவதும், அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையானதைத் தனியாகக் கேட்டு வேண்டுவதும் அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

ஒவ்வொரு கோவிலாகச் சென்று இறைவனை வழிபட்டு வந்த புரஞ்சரன், ஒரு நாள் அதிகாலை நேரத்தில் வான் வழியில் ஒரு காட்டிற்குள் சென்றான். அந்த அதிகாலை நேரத்திலும் வயதான முதியவர் ஒருவர், சிவலிங்கத்துக்கு வழிபாடு செய்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. அதைப் பார்த்த அவன், முதியவர் செய்யும் வழிபாட்டை நேரில் சென்று பார்க்கும் ஆர்வத்துடன் கீழே இறங்கினான்.

அதிகாலையிலேயே குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு வந்திருந்ததால், வழிபாடு செய்யும் முதியவரின் கை, கால்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. அவரது குரலும் நடுக்கத்துடன் இருந்தது. அதைப் பார்த்த புரஞ்சரன், முதியவரின் அருகே சென்று, 'வயதான காலத்தில், இப்படி நடுங்கிக் கொண்டு வழிபாடு செய்வது தேவைதானா? இறைவனை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டால் போதாதா?' என்று கேட்டான்.

ஆனால் அவன் சொன்னது எதையும் கேட்காமல், அந்த முதியவர் வழிபாட்டை செய்து கொண்டிருந்தார். தான் சொன்னது அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை என்று நினைத்த அவன், அவருக்குக் கேட்கும்படியாகத் தனது இரு கைகளையும் தட்டி அவரைக் கூப்பிட்டான். முதியவர் அதையும் கவனிக்காமல் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.

'முதியவருக்குக் காதுகள் கேட்கவில்லை போலிருக்கிறது' என்று நினைத்த புரஞ்சரன், அவரது பார்வைக்குத் தெரியும்படி அவரின் முன்னால் போய் நின்றான். அப்போதும் அவர் அவனைப் பார்க்கவில்லை. உடனே அவன், அவரது முகத்துக்கு முன்பாகத் தனது இருகைகளையும் அசைத்துக் காண்பித்தான். அப்போதும் அவனைக் கண்டு கொள்ளாத அவர், வழிபாடு செய்வதிலேயே கவனமாக இருந்தார்.

எரிச்சலடைந்த புரஞ்சரன், உடல் நடுக்கத்துடன் அவர் செய்யும் வழிபாட்டைக் கேலி செய்வதற்காக, அவரைப் போலவே நடுங்கிக் கொண்டு வழிபடுவது போல் நடித்துக் காண்பித்தான். அப்போதும் அவர் அவனைக் கண்டு கொள்ளவில்லை.

இதனால் அவனுக்கு மேலும் கோபம் உண்டானது. முதியவர் செய்யும் வழிபாடு, நண்டு நடந்து போவது போலிருக்கிறது என்பதைக் காட்டும் விதமாக, அவர் முன்பாக நண்டு போல் நடந்து காட்டிச் சிரித்தான்.

அதுவரைப் பொறுமையாக இருந்த முதியவர் அவனைப் பார்த்து, 'துர்வாச முனிவரான என்னுடைய வழிபாட்டைப் பார்த்து, கந்தர்வனான நீ கேலி செய்வதா?' என்று சத்தம் போட்டார்.

அவர் துர்வாச முனிவர் என்று அறிந்ததும் கந்தர்வன் பதறிப் போனான். 'சுவாமி! உங்கள் வயதான தோற்றத்தைப் பார்த்துத் தாங்கள் யாரென்று தெரியாமல் தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என்று வேண்டினான்.

அவன் மன்னிப்பு வேண்டியும் கோபம் குறையாத துர்வாசர், 'என்னுடைய வழிபாட்டுக்கு இடையூறு செய்தது மட்டுமில்லாமல், என் வழிபாட்டைக் கேலி செய்யும் விதமாக நண்டு போல் நடித்துக் காண்பித்த நீ, இந்தப் பூலோகத்தில் நண்டாகப் பிறந்து துன்பமடைவாய்' என்று சாபமிட்டார்.

அதைக் கேட்டு வருத்தமடைந்த புரஞ்சரன், 'சுவாமி! நான் தெரியாமல் செய்த இந்தத் தவறை மன்னித்து, எனக்குத் தாங்கள் கொடுத்த சாபத்தில் இருந்து விடுபடுவதற்கான வழியைக் காட்டியருள வேண்டும்' என்று வேண்டினான்.

மனமிரங்கிய முனிவர், 'கந்தர்வனே! நண்டாகப் பிறக்கும் நீ செய்யும் சிவ வழிபாட்டால், உனக்கு விரைவில் சுய உருவம் கிடைக்கும்' என்று விமோசனத்திற்கான வழியைச் சொன்னார்.

விமோசனம்

இந்திரன், அசுரர்களை அழிப்பதற்குத் தேவையான தனது சக்தியை அதிகரிக்க நினைத்தான். அதற்காக தேவகுருவான பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டான். அவர், 'பூலோகத்தில் தானாகத் தோன்றிய சிவலிங்கம் ஒன்றுக்கு, தினமும் ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களை வைத்து, 274 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் உன்னுடைய சக்தி அதிகரிக்கும்' என்று அறிவுரை சொன்னார்.

இதையடுத்து இந்திரன், பூலோகம் வந்து சேர்ந்தான். அவனுடைய வழிபாட்டுக்குச் சரியான சிவலிங்கத்தைத் தேடி அலைந்தான். அப்போது வெள்ளரளி வனப் பகுதியில், தாமரை மலர்கள் அதிகம் இருந்த குளம் ஒன்றின் அருகில், தானாகத் தோன்றியிருந்த சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. அந்தச் சிவலிங்கமே சரியாக இருக்கும் என்று நினைத்த இந்திரன், அங்கிருந்த குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து சிவலிங்கத்தைச் சுத்தம் செய்தான். பின்னர், அந்தக் குளத்திலிருந்து ஆயிரத்தெட்டுத் தாமரை மலர் களைப் பறித்து, சிவலிங்கத்தின் முன்பாக வைத்து வழிபட்டான்.

துர்வாச முனிவரின் சாபம் பெற்ற புரஞ்சரன், அந்தக் குளத்தில் நண்டாகப் பிறந் திருந்தான். இந்திரன் சிவலிங்கத்துக்குச் செய்த வழிபாட்டைப் பார்த்த அந்த நண்டு, அவனைப் போலவேத் தானும் தாமரை மலரைக் கொண்டு அந்தச் சிவலிங்கத்தை வழிபட வேண்டுமென்று நினைத்தது.

மறுநாள், இந்திரன் குளத்தில் இறங்கிச் சிவலிங்கத்துக்குப் படைப்பதற்காகத் தாமரை மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து கரையில் ஒரு இடத்தில் சேகரித்து வைத்தான். அப்போது, அந்த நண்டு, அங்கிருந்த மலர்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு போய், சிவலிங்கத்தின் முன்பாக வைத்து வணங்கியது.

இந்திரன் பறித்து வைத்த மலர்களில் ஒன்றை அந்த நண்டு முன்பே எடுத்துக் கொண்ட தால், இந்திரன் வழிபாட்டில் தினமும் ஒரு மலர் குறையத் தொடங்கியது. இந்திரன், தன்னுடைய தினசரி வழிபாட்டில் ஒரு மலர் குறைவதற்கான காரணம் தெரியாமல் தவித்து வந்தான்.

இந்நிலையில் ஒரு நாள், நண்டு ஒன்று தான் பறித்து வைத்த தாமரை மலர் ஒன்றை எடுத்துக் கொண்டு போய், அந்தச் சிவலிங்கத்தை வழிபடுவதைப் பார்த்தான். அதனைக் கண்டு கோபமடைந்த அவன், 'ஒரு சாதாரணமான நண்டு, தான் வழிபடும் சிவலிங்கத்தைத் தன்னைப் போன்றே தாமரை மலரைக் கொண்டு வழிபடுவதா?' என்ற ஆணவத்துடன் அந்த நண்டைக் கொன்று விட நினைத்தான்.

தன்னுடைய இடுப்பில் செருகியிருந்த வாளை எடுத்துச் சிவலிங்கத்தின் மேலிருந்த அந்த நண்டை வெட்ட முயன்றான். அப்போது சிவலிங்கத்தில் சிறிய துளை ஒன்று ஏற்பட, நண்டு அந்தத் துளையினுள் சென்று மறைந்து கொண்டது. அதனால், இந்திரனின் வாள் நண்டின் மேல் படாமல், சிவலிங்கத்தின் மேல் பட்டுச் சிவலிங்கத்தில் காயம் ஏற்பட்டது.

தன்னுடைய தவறான செயலால், சிவலிங்கத்திற்கு ஏற்பட்டக் காயத்தைக் கண்டு பயந்த இந்திரன், இறைவன் தன்னைத் தண்டித்து விடுவாரோ என்று நினைத்து, சிவபெருமானிடம் தனது செயலுக்கு மன்னிப்பு வேண்டி நின்றான். அப்போது அங்கு தோன்றிய சிவபெருமான், 'இந்திரனே! உன்னிடமிருக்கும் ஆணவமே உன் அழிவுக்கு முதல் காரணமாக இருக்கிறது. எந்த ஒரு செயலிலும் ஆணவம் கொண்டவர்கள் எந்த வெற்றியையும் பெற முடியாது. பணிவான குணம் கொண்டவர்களுக்கு மட்டுமே வெற்றிகளும், நன்மைகளும் வந்து சேரும் என்பதை நீ உணர வேண்டும்' என்று அவனுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் சிவலிங்கத்தில் இருக்கும் நண்டை வெளியில் வரச் செய்தார். சிவலிங்கத்திலிருந்து வெளியில் வந்த நண்டு கீழே வந்ததும், கந்தர்வனாக மாற்றமடைந்தது. சுய உருவம் பெற்ற அவன் மகிழ்ச்சியோடு சிவபெருமானைப் பார்த்து நன்றியோடு வணங்கினான்.

அவன் சிவபெருமானிடம், 'இறைவா! எனக்கு விமோசனமளித்த இந்த இடத்தில் தாங்கள் கோவில் கொண்டு அருள வேண்டும்' என்று வேண்டினான்.

அவன் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான், 'கந்தர்வனே! துர்வாச முனிவரின் சாபத்தால் நண்டாக மாறிய போதும், அந்த உருவத்திலேயே என்னை வழிபட்டுச் சாப விமோசனம் பெற்றதால், இங்கு நான் கற்கடேஸ்வரர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுவேன் (கற்கடம் எனும் சொல்லுக்கு நண்டு எனப் பொருள். இக்கோவில் தமிழில் நண்டாங்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது). வயதில் மூத்தவர்களை அவமதிப்பு செய்ததால் ஏற்பட்ட துன்பங்களிலிருந்து விடுபட விரும்புபவர்கள், இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுப் பயனடையலாம்' என்றார்.

வயதான முதியவர்களை வேண்டாப் பொருளாகப் பார்ப்பதும், அவர்களை அவமதிப்பதும், அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்துக் கேலி செய்வதும் தவறான செயலாகும். அதனால் பிற்காலத்தில் நமக்குப் பெருந்துன்பங்களே வந்து சேரும் என்பதையே புரஞ்சரன் பெற்ற சாபமும் விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.

No comments:

Post a Comment