Thursday, July 20, 2017

Idkazhi nayanar- 5 - nayanmar stories

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *(5) நாயனார் சரிதம்.* 🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🍁 *இடங்கழி நாயனார்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
அலைகள் மேன்மேலும் எழுந்து வரும் பெருங்கடலாகிய ஆடையை அணிந்திருக்கும் பெரிய நிலமாகிய பெண்ணின் மார்பில், இலைகள், மலர்கள் முதலிய  வடிவங்களை அழுத்திச் சித்தரித்த தொய்யலின் அணியைப் போல் மான் துளிர்களைக் கோதும் குயில்கள் நாடுகிற நாடு *கோனாடு* ஆகும்.

அந்தக் கோனாட்டின் தலைநகரம் *கொடும்பாளூர்* ஆகும். அந்நகரில் பொன்னம்பலத்து முகட்டைக் கொங்கு நாட்டுப் பசும் பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழனது மரபில், இருக்கு வேளிர் என்ற குறுநில மன்னன் குலத்திலே *இடங்கழியார்* எனும் பெரியார் ஒருவர் பெரும் புகழுடன் விளங்கி வந்தார்.

அவர் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிவதையன்றிப் புறச்சமயத்தைக் கனவிலும் நினையாதவர்.

இவரது ஆட்சியில் சைவம் ஆல்போலத் தழைத்தோங்கியது.  சைவ நெறியும், வைதீக நெறியும் வளரும் பொருட்டு சிவபெருமானது திருக்கோயில்களெங்கும் சிவாகம விதிப்படி, வழிபாடுகள் செய்ய ஏற்பாடுகள் செய்தார்.

இடங்கழியார் அரசு புரிந்து வரும் காலத்தில் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் தவமுடையார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் சிவனடியார்களுக்குத் திருவமுது ஆக்குவதற்குரிய பண்டங்கள் எங்கும் அகப்படாமையால் அவர் நியதிக்கு தடைப்பாடு உண்டாயிற்று.

அதனால் அவர் மனந்தளர்ந்தார்.

எப்படியாவது நெல் பெற வேண்டுமேயென்று பெருவிருப்பம் கொண்டார்.

அதனால் இடங்கழியாரின் அரண்மனைக்குள் நள்ளிரவில் திருடனைப் போல் புகுந்தார்.

அங்கு பண்டாரத்தில் நெற்கூட்டிலிருந்த நெல்லை அவர் முகர்ந்தெடுத்தார்.

நாழிகைப்படி இரவு முழுவதும் காவல் முரசு முழக்கும் காவலர்கள், அவ்வடியாரைக் கண்டு பிடித்து தங்கள் அரசன் இடங்கழியார் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

மன்னர் அவரை நோக்கி, "ஏனய்யா நெல்லைத் திருடினீர்?, என்று கேட்டார்.

அதற்கு அவர் , "சிவனடியார்களுக்கு திருவமுது செய்விப்பது எனது வழக்கம். அமுதுசெய்விக்க பொருளின்மையால் அது தடைப்பட்டது. அதனால் திருடினேன்!" என்று சொன்னான்.

அதைக் கேட்டதும் இடங்கழியார் மனமிரங்கி, *"இவரல்லவோ எனக்குப் பண்டாரமாவர்!"* என்று அவரை விடுவித்தார்.

பிறகு அவர், *நிலையழிந்த உள்ளத்தோடு,"சிவனடியார்கள் எல்லோரும் நற்பண்டார மட்டுமேயன்றி குறைவில்லாத மற்றைய நிதிகளின் பண்டாரங்களாகிய எல்லாவற்றையும் கொள்ளையாக முகர்ந்து கவர்ந்து கொள்க!"*  என்று எல்லாயிடங்களிலும்  பறையறிவிக்கும்படிச் செய்தார்.

அந்தக் கொள்ளைக் காட்சியைக் கண்டு அவர் மனமகிழ்ந்தார். இவ்வாறு இடங்கழி நாயனார் நெடுங்காலம் அரசு புரிந்து, திருவடி நிழலை அடைந்தார்.

*மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும்....அடியோம்.*

         திருச்சிற்றம்பலம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment