Monday, July 3, 2017

Cataract surgery for Mahaperiyavaa - How it was done?

அது 1974-ஆம் ஆண்டு... காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வந்தார். தேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மகான்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கேற்றாற்போல் அவரது செயல்பாடுகளில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. இருந்தாலும் சில அன்பர்களது வற்புறுத்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ஒரு கட்டத்தில் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது போதிய பலன் தரவில்லை. அத்தோடு, பாதிக்கப்பட்ட அந்த கண்ணில் மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய இயலாது... அது பலன் தராது என்கிற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொரு கண்ணின் உதவியுடனேயே இருந்து வந்தார் மஹா பெரியவா.

நாளடைவில் நன்றாகச் செயல்பட்ட அந்த இன்னொரு கண்ணிலும் கேட்ராக்ட் (புரை) ஏற்பட்டது. இதை அறிந்த பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களும் ஸ்ரீமடத்து விசுவாசிகள் பலரும் பெரியவாளை அணுகி, 'கேட்ராக்ட்டுக்குப் பெரியவா ஏதாவது சிகிச்சை எடுத்துக்கணும்' என்று விக்ஞாபித்துக் கொண்டனர்.

புன்னகையுடன் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டார் பெரியவா. 'போதும்டா...இந்த ஒரு கண்ணை வெச்சுண்டே நான் சந்திரமௌலீஸ்வரர் பூஜையை நடத்திக்கிறேன். இந்தப் பார்வையே எனக்குப் போதும்' என்று அன்புடன் மறுத்துவிட்டார். ஆனால் மஹா பெரியவாளின் இந்த சமாதானமான பதிலை ஸ்ரீஜயேந்திரர் ஏற்கவில்லை. கேட்ராக்ட்டுக்கு அவசியம் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவாளிடம் வற்புறுத்துக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் பெரியவாளும் இதற்கு சம்மதித்தார்.

அப்போது மயிலாப்பூரில் பிரபல வக்கீலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் டாக்டர் பத்ரிநாத் மஹாபெரியவாளுக்கு அறிமுகம் ஆனது இந்த நேரத்தில் தான். சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்தார் பத்ரிநாத். இவரது சேவை மனப்பான்மை பற்றியும், தொழில் நேர்த்தி குறித்தும் ஸ்ரீமடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஸ்ரீமடத்து அதிகாரிகள் கலந்தாலோசித்த பிறகு பத்ரிநாத்தைக் கொண்டே மஹாபெரியவாளுக்கு கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

முதலில் ஸ்ரீஜயேந்திரரைச் சந்தித்த பத்ரிநாத் பெரியவாளுக்கு எப்படி ஆப்ரேஷன் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். 'ஒரு சந்நியாசிக்கு மருத்துவமனையில் வைத்தெல்லாம் சிகிச்சை செய்யக் கூடாது. அது போல் நர்ஸ், மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் ஸ்பரிசம் பெரியவாளின் மேல் படவே கூடாது' என்றெல்லாம் சில விஷயங்கள் ஸ்ரீமடத்தின் சார்பில் பத்ரிநாத் முன் வைக்கப்பட்டது. அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அவர், 'நானும் மகா ஸ்வாமிகளின் பக்தன் தான். அவரது துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாதவாறு இதைப் பார்த்துக் கொள்கிறேன்.' என்றார் மென்மையாக.

ஆப்ரேஷன் சமயத்தில் பத்ரிநாத் மட்டுமே மருத்துவர் என்ற முறையில் இருந்தார். இவரைத் தவிர, மருத்துவமனை சிப்பந்திகள் எவரும் இந்த சிகிச்சையின் போது உடன் இல்லை. அப்படி என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு ஆப்ரேஷன் நேரத்தில் உதவியவர்கள் யார்?

மஹா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் சிலருக்கே தேவையான மருத்துவப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தன் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார் பத்ரிநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம், ஆப்ரேஷன் தியேட்டராக மாற்றப்பட்டது. ஆப்ரேஷனுக்கு தேவையான அனைத்து விதமான உபகரணங்களும் சென்னையில் இருந்தே கொண்டு வரப்பட்டன. எல்லாம் தயார் ஆன பின், மிகக் கச்சிதமாக மஹாபெரியவாளுக்கு ஆப்ரேஷன் முடிந்தது.

ஆப்ரேஷன் முடிந்து விட்டாலும் மஹாபெரியவாளின் (ஆப்ரேஷன் செய்த) அந்தக் கண்ணைத் தினமும் கண்காணிக்க வேண்டுமே! இதற்காக தினமும் அதிகாலை வேளையில் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் வந்து மஹாபெரியவளின் கண்ணைப் பரிசோதித்துவிட்டு வேண்டிய மருந்துகளை அப்ளை செய்து டிரஸ்ஸிங் செய்து விட்டு சென்னைக்குத் திரும்புவார் டாக்டர் பத்ரிநாத். இது தினசரி நடந்து கொண்டிருந்தது.

அன்றைய தினம் கிரஹணம். யதேச்சையாக இது தெரிய வந்ததும், டாக்டர் பத்ர்நாத் பதறிவிட்டார். பொதுவாக கிரகண காலம் முடிந்ததும், ஸ்நானம் செய்வது இந்துக்களின் வழக்கம். அதுவும் சந்நியாசிகள் இன்னும் அனுஷ்டானமாக இருப்பார்கள். 'ஒரு வேளை பெரியவா கிரஹண காலம் முடிந்ததும், கண் ஆப்ரேஷன் செய்ததைக் கருத்தில் கொள்ளாமல் குளிக்கப் போய்விட்டால்....? என்று சுளீரென உறைத்தது பத்ரிநாத்துக்கு. அவ்வளவு தான்... இயல்பாகத் தான் காஞ்சிபுரம் புறப்படும் வேளைக்கு முன்பாகவே ஒரு காரில் காஞ்சியை நோக்கி அரக்கப் பரக்கப் பயணித்தார்.

ஸ்ரீமடத்தின் வாசலில் போய்த்தான் கார் நின்றது. 'சாதாரணமாக வரும் நேரத்தை விட இன்று இவர் ஏன் இத்தனை சீக்கிரமாக ஸ்ரீமடத்துக்கு வந்திருக்கிறார்? அதுவும் பொழுது இன்னும் புலராத வேளையில் இவ்வளவு அவசரமாக வரவேண்டியதன் அவசியம் என்ன? என்று ஸ்ரீமடத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் குழம்பினார்கள்.

ஸ்ரீமடத்து அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மகாபெரியவா முன் படபடப்புடன் போய் நின்றார் பத்ரிநாத். சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். பிறகு பெரியவாளையே பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றார்.தான் எதற்காக இப்படி பதைபதைத்து வந்தேன் என்பதற்கான காரணத்தை இன்னும் அவர் சொல்லக் கூட இல்லை.

அதற்கு முன்னதாக பெரியவா அவரை ஆசிர்வதித்து விட்டுப் புன்னகையுடன் திருவாய் மலர்ந்தார். 'என்ன குளிச்சிடுவேன்னு பயந்தியா?"

பத்ரிநாத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. எதை நினைத்துக் கொண்டு சென்னையில் இருந்து ஓடி வந்தாரோ அதைப் பட்டென்று உடைத்து விட்டார் பெரியவா. 'ஆமா பெரியவா. இப்பதான் கண் ஆபரேஷன் ஆகி இருக்கு. இந்த நிலைல கிரஹண காலத்தை உத்தேசிக்க ஸ்நானம் பண்ணினா, ஆபரேஷன் ஆன கண்ணுக்கு ஏதேனும் ப்ராப்ளம் வந்துடுமோன்னு கவலையா இருந்தது. அதான், ஸ்நானம் பண்ண வேண்டாம்னு பெரியவாகிட்ட பிரார்த்திக்கிறதுக்க்காக அவசர அவசரமா ஓடோடி வந்தேன்' என்றார் படபடப்பு இன்னும் அடங்காமல்.

பத்ரிநாத்தை அர்த்த புஷ்டியுடன் கூர்ந்து பார்த்த மஹாபெரியவா 'கிரஹணம் கழிந்தவுடனே ஸ்நானம் பண்ணனும்னு தான் சாஸ்திரம் சொல்றது. ஆனா நான் ஸ்நானம் செய்யலை. அப்படின்னா அந்த கிரஹணத் தீட்டு எப்படிப் போச்சுன்னு யோசிக்கிறயா?

சாஸ்திரத்துல மந்திர ஸ்நானம்னு ஒண்ணு இருக்கு. அந்த முறைப்படி நான் ஸ்நானம் பண்ணிக்கிறேன். என் கண் பார்வை போயிடுமோங்கிற பயத்துல நான் ஸ்நானம் பண்ணாம இல்லை. யூ ஆர் எ பட்டிங் டாக்டர் (வளர்ந்து வருகிற மருத்துவர்). உன்னோட வளர்ச்சி எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. அதுக்காகத்தான் நான் மந்திர ஸ்நானத்தை ஏத்துண்டேன்'... என்று சொல்ல.....கண்கள் கலங்கி, அந்த மகானின் திருப்பாதங்களுக்கு இன்னொரு முறை சாஷ்டங்க நமஸ்காரம் செய்தார் டாக்டர் பத்ரிநாத்.

மஹாபெரியவாளின் தரிசனம் பெற்றாலே பெரும் பாக்கியம். அதுவும் அவருடைய திருமேனியைத் தீண்டி, கண் ஆப்ரேஷன் செய்தார் என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம் அமைந்திருக்க வேண்டும்?!

பின்னாளில் காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தின் மூலம் 'மெடிக்கல் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' (சங்கர நேத்ராலயா) என்கிற அமைப்பு துவங்கும் போது டாக்டர் பத்ரிநாத் இதன் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைப்பின் தலைவராகவும் நிறுவனராகவும் தற்போது இருந்து வருபவர் இவர்.

நன்றி: திரு.Pitchai Iyer Swaminathan

No comments:

Post a Comment