Thursday, July 20, 2017

Brahmpureeswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌸 *சிவ தல தொடர்.(66.)* 🌸
🌸 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*🌸
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌸 ** 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:* பிரம்மபுரீஸ்வரர்.

*இறைவி:* அம்மலகுஜநாயககி,
(வாடாமுலையாள், மலர்க்குழல் சின்னம்மை.)

*தல விருட்சம்:* கொன்றை மரம்.

*தீர்த்தம்:* காசி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

*பெயர்க்காரணம்:*

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றத் தலங்களுள் இத்தலம் நாற்பத்தேழாவது தலமாகப் போற்றப் பெறுகின்றது.

அமைதி என்பது இன்றைய உலகில் நம் அனைவருக்குமே அரிதான ஒரு விஷயம் ஆகிவிட்டது. பொதுவாகவே நமது அன்றாட வாழ்க்கையில் மன அமைதி தேடி திருக்கோயில் செல்வது வழக்கம். இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயில் செல்லும்போது அமைதியின் சிகரத்திற்கே நம்மால் செல்ல முடிகிறது. இக்கோயிலின் அமைப்பு அவ்வாறாக உள்ளது.

*இருப்பிடம்:*
இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயில், மயிலாடுதுறையில் இருந்து இருபது கிலோ.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து இருபது கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில்
மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் நேர் பின் திசையில் சுமார் இரண்டு கிலோ.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

*தல அருமை:*
இந்த சிறப்பு மிக்க திருக்கடவூர் மயானம் திருக்கோயில் கி.பி. 557-ம் ஆண்டில் கட்டப்பட்டது. கட்டிடக் கலையின் நேர்த்தியினை நமக்குப் பறைசாற்றும், உலக அரங்கில் நமக்குப் பெருமை தேடித்தரும் தஞ்சை பெரிய கோயிலைவிட பழமையான திருக்கோயில் இது. 

காசி மயானம்,கச்சி மயானம், காழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம் என்று சைவ சமயத்தில் ஐந்து விதமான மயானங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. காசி மயானம் காஞ்சிபுரத்திலும், காழி மயானம் சீர்காழியிலும், கச்சி மயானம் திருவீழிமிழலையிலும், நாலூர் மயானம் குடவாசல் அருகிலும், இவற்றுள் ஐந்தாவதாக விளங்கும் கடவூர் மயானம், இந்த திருக்கடவூரிலும் அமைந்துள்ளன. 

இங்கே மயானம் என்ற சொல் திருக்கோயிலையே குறிக்கிறது. மயானம் என்பது சிவன் குடியிருக்கும் இடமாகவே சைவ சமயத்தில் கருதப்படுகிறது.

இந்த ஐந்து தலங்களும் மயானத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

*தல பெருமை:*
ஒரு பிரம்மகர்ப்பத்தின் பல யுகங்களின் முடிவில் சிவபிரான் வெகுண்டெழுந்து பிரம்மதேவரை எரித்து சாம்பலாக்கி விட்டார். இதன் காரணமாக படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. இவ்வாறு சிவபிரானால் பிரம்மதேவர் எரிக்கப் பட்ட இடமே கடவூர் மயானம்.

பிரம்மதேவரை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் பொருட்டு தேவர்கள் அனைவரும் கடவூர் மயானம் வந்து பிரம்மபுரீஸ்வரரை வேண்டி தவம் புரிந்தனர்.

சிவபெருமான் கருணை உள்ளத்துடன் மனம் இறங்கி சிவஞானத்தை போதித்து, சிறப்பாக படைப்புத் தொழிலை செய்யும்படி பிரம்மனுக்குத் திருவருள் புரிந்தார். பிரம்மன் சிவஞானம் உணர்ந்த இடமே இத்திருக்கடவூர் மயானம். 

தற்போது திரு மெய்ஞானம் என அழைக்கப் படுகிறது.

*தலச் சிறப்பு:*
சைவத் திருத்தலங்களில் பாடல் பெற்றத் தலங்கள் 274.  அவ்வாறாக பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்று இந்த மயானக் கடவூர். அதிலும் மூவர் பாடல் பெற்ற ஸ்தலங்கள் 44. அவற்றுள் ஒன்றாக இருப்பது இத்தலத்தின் சிறப்பு. 

மேலும் இத்தலம் காவிரி தென்கரை திருத்தலம். பாடல் பெற்ற ஸ்தலங்களுள் 48வது திருத்தலம். திருமெய்ஞானம் என்றும், திருமயானம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

பிரம்மன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். தில்லை சிவபிரான், சிவாலய முனிவருக்குக் கூறியபடி அகத்திய முனிவரால் தொகுத்து வழங்கப்பட்ட  25 திருத்தலங்களுள் இதுவும் ஒன்று.

இத்திருக்கோயிலில் தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. சிவனடியார்களால் பாடப்பட்ட தேவாரம், திருவாசகப் பாடல்கள் இக்கோயில் சிவாச்சாரியாரால் பாடப்படுகின்றன.

*பொதுவாக திருக்கடையூர் செல்லும் பக்தர்கள் அனைவரும் கடவூர் மயானத் தலம் என்றால் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலைத்தான் குறிக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையில் இந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்தான் கடவூர் மயானம்.*

இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் உள்ளூர் மக்களுக்கோ, சுற்றுவட்டார மக்களுக்கோ இப்படி ஒரு திருக்கோயில் இங்கு இருப்பதே தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல பகுதிகளில் இது போன்ற மிகப் பழமையான கோயில்களின் நிலை இதுதான். இதுபோன்ற பழமையான கோயில்களை கண்டறிந்து அவற்றை சீர்படுத்தி மக்களின் பார்வைக்குக் கொண்டுவருவது இந்து அறநிலையத் துறையின் கடமை. நம்முடைய பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது நமது அடியார்களின் தலையாய கடமைகளுள் இதுவும் ஒன்று.

எல்லா திருக்கோயில்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுவது வழக்கம். அக்காலத்திய வாழ்க்கைமுறை கோயிலைக் கட்டியவர்களின் விபரங்கள், என்பதுபோன்ற வரலாற்றுச் செய்திகளைப் பற்றிய ஆவணங்களே இவை.

வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வண்ணம் கல்வெட்டுக்கள் பொதுவாக கிரந்த எழுத்துக்களிலேயே காணப்படும். இக்கோயிலில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக கல்வெட்டுக்கள் தமிழிலேயே எழுதப் பட்டுள்ளன. இக்கோயில் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

*திருக்கோயில் அமைப்பு:*
ஆறு ஏக்கர் நிலப்பரப்புடன் இக்கோயில் அமைந்திருக்கிறது.

இத்தலத்திற்கு நாம் செல்லும்போது, வழக்கமாக நாம் முதலாவதாகக் காணப்பெறும் இராஜ கோபுரத்தை அன்னாந்து எதிர்பார்த்தோம்...ஏமாந்தோம்.

பின்தான் தெரிந்து கொண்டோம், இத்தலத்திற்கு இராஜ கோபுரம் இல்லை என்பதை.

அதற்கும் *சிவ..சிவ, சிவ சிவ* என வழக்கம்  போல் நம் நாவிலிருந்து பிறந்தன.

அடுத்து வாயிலிலுள் உள் நுழையவும் அங்கும் ஏமாற்றம் கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே இருக்க, அப்பீடம் முன் நின்று நம்பியிருக்கும் ஆணவத்தையெல்லாம் பலியிட்டு விட்டு மேலும் ஆலயத்துள் நுழைந்தோம். 

வலம் சென்றோம். அவ்வலத்தில் நடராச சபைக்கு முன் வந்து சேரவே, அவராடற்கலையினை மெய்மறந்து வணங்கி நின்று மகிழ்ந்தோம்.

இவரின் மறுகோடியில் பைரவரைப் பார்க்கவும் அவரையும் முறைப்படி வணங்கிக் கொண்டோம். 

பின் அருகே இருக்கும் விநாயகரையும் வணங்கிக் கொண்டு நகர்ந்து உள் மண்டபத்தினை அடைந்தோம். அங்கு வள்ளி தெய்வானையுடன் சிங்காரவேலர் வில்லேந்திய கோலத்துடன் தரிசனம் தர அவருளைப் பெற்றுக் கொண்டோம்.

பின் ரே நோக்கினோம், மூலவர் அழைத்தார். கருவறை முன்வந்து நின்று மனமுருகிப் பிரார்த்தித்துக் கொண்டோம். 

அவர் நம் கண்களுக்கு சதுர ஆவுடையாருடன் பழமையான பூர்த்தியாக அருளாட்சி தந்தார்.

கோஷ்டமூர்த்தங்களாக துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாண சுந்தரர் மூர்த்தங்களைக் கண்டோம், ஆனந்தபெருக்குடன் வணங்கிக் கொண்டோம்.

அடுத்ததாக சுவாமி சந்நிதிக்கு எதிராக அருளாட்சி செய்து தனிக்கோயில் கொண்டிருக்கும் அம்மையை கைதொழுதோம். அவள் திருக்கரங்களில் தாமரை மலர்கள் ஏந்தியிருந்தாள். அவளருளைப் பூரணமாகப் பெற்ற மகிழ்வோடு வெளிவந்து அங்கிருக்கும் இடத்தில் சிறிது அமர்ந்து இளைப்பாறி வெளிவந்தோம். 

அம்மையின் கோவிலை மூன்று நிலைகளையுடைய முன் கோபுரம் அலங்கரிப்பதைக் கண்டோம். 

வாயிலில் இராஜகோபுரம் இல்லாக் குறையை, அம்மையின் வாயிற் கோபுரம் அதனைப் போக்கியது எங்களின் மனம் ஆறுதல் பெற்று, *சிவ சிவ,* என நாவு மொழிந்தன.

பிராகாரத்தில் உள்ள அறுபத்துமூவர் வடிவங்களையும், அதன் சுவற்றில் அந்தக்கால வண்ண ஓவியங்களையும், அழுகு மிளிரும் சிற்பங்களையும் கண்டு பிரமித்து வணங்குதல் செய்தோம்.

அடுத்ததாக இருந்த சிவவடிவமான தட்சிணாமூர்த்தியை வணங்கினோம். இவரின் இருபுறமும் முனிவர்கள் பலர் அவரிடம் உபதேசம் பெறும் காட்சியருளாக அமைந்திருப்பது நாம் கண்டு வணங்கவேண்டிய அற்புதக் கோலமிது என ஆனந்தித்து மகிழ்ந்து வணங்கினோம்.

ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தின் தென்பக்கம் சங்கு சக்கரத்துடன் *பிள்ளைப் பெருமான்* நின்று கோலத்தில் காட்சி தந்தார். வணங்கிக் கொண்டோம்.

கடவூர்த் தீர்த்தக் கிணறு எனச் சொல்லப்படும் காசித் தீர்த்தமானது கோவிலுக்குத் தென்புறத்தில், சற்றுத் தள்ளி வயல்கள் சூழ, நாற்புறச் சுவர்களுடன் நடுவில் கிணறு தோற்றத்துடன் இருப்பதைக் கண்டு ரசித்தோம், கிணற்று மூலையினைத் தொட்டு வணங்கிக் கொண்டு வெளியேறினோம்.

*சிறப்பு:*
மேற்கு பார்த்த சிவத்தலங்கள் நாற்பதில் இத்தலமும் ஒன்றாக விளங்குகிறது. 

ஸ்ரீ முருக பெருமான் இக்கோயிலில் சிங்கார வேலன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறார். கையில் வில்லும், வேலும் வைத்துக் கொண்டு பாதகுறடு அணிந்து ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். 

அரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆலயத்தின் மேற்குப் பிரகாரத்தின் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீ பிள்ளை பெருமாள் விளங்குகிறார்.

இக்கோயிலில் சிவனுக்கு முன்னால் மட்டுமல்லாது அம்மனுக்கு முன்பும் நந்தி பகவான் வீற்றிருக்கிறார்.

பக்தி மார்கத்தின் சிறப்பை மனித குலத்திற்கு உணர்த்திய மார்க்கண்டேயர், தினந்தோறும் சிவ பூஜை செய்வதற்காக காசி கங்கா தீர்த்தத்தை வரவழைத்துத் தந்த இடமும் இதுவே. 

இந்த தீர்த்தம் வந்த நாள் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரம் கூடிய சுப தினம். ஆண்டுதோறும் இந்த தினத்தில் பக்தர்கள் இங்கே புனித நீராடுவர். 

அருள்மிகு திருக்கடையூரில் உள்ள 
ஸ்ரீஅமிர்தகடேஸ்வரருக்கும், 
ஸ்ரீ அபிராமி அம்மையாருக்கும்,  
ஐந்து கால அபிஷேகத்திற்கும் இங்குள்ள காசி தீர்த்தத்தினால் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. 

மற்ற தீர்த்தங்களினால் அபிஷேகம் கிடையாது. மன்னன் பாகுலேயன், இத்தல காசி தீர்த்தத்தை பிற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று எண்ணி , ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்தார்.

அதன் காரணமாக, சிவலிங்கத்தின் மீது ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அந்தத் தழும்பு இக்கோயில் சிவலிங்கத்தின் மேல் இப்போதும்
காணப்படுகிறது.

ஒவ்வொரு திருக்கோயிலிலும் அக்கோயில் சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இத்திருக்கோவிலிலோ கோயில் பிரகாரம்தான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

எத்தனை பெரிய தாழ்வாரம். ஒரு ஆயிரம் பேரை வரவழைத்து அமோகமாக திருமணம் நடத்தலாம். அத்தனை பெரியது. 

இக்கோயிலில் பல வருடங்களுக்கு முன், இப்போது திருக்கடையூரில் நடப்பது போல் அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணங்கள் வெகு சிறப்போடு நடை பெற்றுள்ளன. இக்கோயில் பிரகாரமே இதற்கு சாட்சி.

முக்கியமாக இத்திருக்கோயில் மதில் சுவர்களின் மேல் மொத்தமாக 171 நந்திகள் இருக்கின்றன.

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயம் செல்லும் அனைவரும் இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயிலையும் சேர்த்து தரிசனம் செய்வதால், திருக்கடையூர் என்னும் தலத்திற்குச் செல்வதன் பூரண பலனையும் நாம் அடையலாம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

ஆலயம் என்பதில் 
ஆ என்பது ஆன்மாவையும், லயம் என்பது லயித்திருத்தல் 
என்பதையும் குறிக்கின்றன. ஆன்மா தெய்வத்தின்பால் லயித்திருக்கக் கருவியாக அமையும் இடமே ஆலயம் என்பது ஆன்றோர் வாக்கு.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 2-ல் ஒரு நதிகளும்,
*அப்பர்* 5-ல் ஒருபதிகமும்,
*சுந்தரர்* 7-ல் ஒரு நதிகளும் இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள்.

*திருஞானசம்பந்தர் அவர்களால் இந்த திருக்கடவூர் மயானம் திருக்கோயிலில் பாடப்பட்ட தேவாரப் பதிகம்:*

🔔வரியமறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியும் உசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர்எம் பெருமான் அடிகளே !!

🔔மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயானம் அமர்ந்தார்
செங்கண்வெள்ளேறு ஏறிச் செல்வம்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவர்எம்பெருமான் அடிகளே !!

🔔ஈடல்இடபம் இசைய ஏறி மழுவொன்று ஏந்திக்
காடதுஇடமா வுடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவம் உடையார் அவர்எம் பெருமான் அடிகளே !!

🔔இறைநின்றிலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கரைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறைநின்றிலங்கு சடையார் அவர்எம்பெருமான் அடிகளே !!

🔔வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
துள்ளும்இளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பிள்ளைமதியம் உடையார் அவர்எம்பெருமான் அடிகளே !!

🔔பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்தது உடையார் அதுவே ஊர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர்மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையர் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே !!

🔔பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்மேல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே !!

🔔செற்றஅரக்கன் அலறத் திகழ்சேவடிமேல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வழிய மாசில்வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவர்எம்பெருமான் அடிகளே !!

🔔வருமாகரியின் உரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமான்உரிதோல் இடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்
திருமாலொடுநான் முகனும் தேர்ந்துங் காணமுன் னொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவர்எம்பெருமான் அடிகளே !!

🔔தூய விடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
தீயகருமம் சொல்லும் சிறுபுன்தேரர் அமணர்
பெய்பேய்என்ன வருவார் அவரஎம் பெருமான் அடிகளே !!

🔔மரவம்பொழில்சூழ் கடவூர் மன்னு(ம்)மயானம் அமர்ந்த
அரவம்அசைத்த பெருமான் அகலமறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே !!

*விநாயகர்,*
பொதுவாக விநாயகர் பெரிய வயிறுடன்தான் இருப்பார். இக்கோயிலிலகருந்து இரண்டு கி.மீ தள்ளி இவர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். 

இவரை, *"பிரணவ விநாயகர்'* என்று அழைக்கிறார்கள்.

படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி இவ்விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம்.

இதனால், இவர் வயிறு சிறுத்து இருப்பதாகச் சொல்வர். திருக்கடையூர் ஆலயத்திற்குப் பின்னால், அதாவது கிழக்குத் திசை செல்லும் சாலையில் சுமார் இரண்டு கி.மீ தள்ளி அருகிலேயே இருக்கிறது!

திருக்கடவூர் மயானம் வரும் பக்தர்கள் இவ்விநாயகரை மறவாது தரிசனம் பெறத் தவறி விட வேண்டாம்!

மேலும் நந்தி தேவரின் சிரித்த முகத்தைக் காணத் தவறாதீர்கள்! 

இறைவன், பிரமனை ஒரு கல்பத்தில் எரித்து, நீராக்கி, மீண்டும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை அருளிய தலமாதலின் இப் பெயர் பெற்றது.

பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், *"கடவூர்மயானம்'* என்றும், *"திருமெய்ஞானம்'* என்றும்  இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு.

திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டுவது ஐதீகம் என்பதை மறக்க வேண்டாம்!.

வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றே சாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது.

முருகன் சிவனின் அம்சம் என்றாலும், இத்தலத்தில் ராமனின் சிலை போல வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாகக் கருதுகின்றனர். மாமனைப் போல் மருமகன் என்று கொண்டாடுகின்றனர்.

சிவசன்னதியின் ஒருபுறத்தில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல, இந்த முருகனுக்கும் ஒரு சண்டிகேஸ்வரர் உள்ளார். இவரை, "குக சண்டிகேஸ்வரர்' என்கின்றனர். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம்.

*மெய்ஞானம்:*
மெய்ஞானம் என்றால், பிரம்மாவுக்கு ஒரு நாள் (ஒரு பகல் + ஓர் இரவு) மனிதக் கணக்குப்படி 2000 சதுர முகங்களைக் கொண்டது.

இப்படிப்பட்ட 365 நாட்கள், பிரம்மாவின் ஒரு வருடம். 

பிரம்மாவின் ஆயுட்காலம் நூறு வருடங்கள். நூறு வருடங்கள் ஆனதும் தன் உடலை யோகாக்னியில் லயப்படுத்துவார். உடல் எரிந்து சாம்பலாகிவிடும்.

பின்னர் மீண்டும் இறைவன் அருளால் பிரம்மா முதல் அனைத்துமே படைக்கப்படும்.

புதிய பிரம்மாவிற்கு படைப்புத் தொழிலை இறைவன் அருளுவார். (பிரம்மாவின் ஆயுட்காலம் கல்பம் எனப்படும்.)

*திருவிழாக்கள்:*
வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி மாதத்தில் மார்க்கண்டேயர் எழுந்தருளி  தீர்த்தம் கொடுத்தல் ஆகியவை.

*பூசை:*
காரண காமீக முறையில் நான்கு கால பூசை.

காலை 7.00 மணி முதல் பகல்1.00 மணி வரை.

மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அ/மி. பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், 
திருக்கடையூர் மயானம்,
திருக்கடவூர் அஞ்சல்,
மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம். 609 311

*தொடர்புக்கு:*
கணேச குருக்கள். 04364-287222
94420 12133.

          திருச்சிற்றம்பலம்.
*நாளைய தலம்.....திருவேட்டக்குடி .*

🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*