Thursday, July 27, 2017

Atharva veda - Periyavaa

அதர்வ(ண) வேதம் குறித்து மஹாபெரியவா கூறியது:
அதர்வன் என்றால் புரோஹிதர் என்று அர்த்தம். அந்தப் பெயரிலேயே ஒரு ரிஷி இருந்தார். அதர்வா என்ற அந்த ரிஷியின் மூலம் பிரகாசமானது அதர்வ வேதம். அதிலே பல விதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்வதற்கும் சத்துருக்களை அழிப்பதற்கும் மந்திரங்கள் இருக்கின்றன. ப்ரோஸ் பொயட்ரி இரண்டும் கலந்து இருக்கின்றன. மற்ற வேத மந்திரங்களுக்கும் இந்தப் பிரயோஜனம் உண்டு. ஆனால் மற்ற வேதங்களில் இல்லாத அனேக தேவதைகள், இன்னம் கோரமான பல வித ஆவிகள் இவற்றைக் குறித்தும் மந்திரங்கள் அதர்வத்தில்தான் இருக்கின்றன. மாந்திரீகம் என்று இப்போது சொல்கிற அனேக விஷயங்கள் அதர்வ வேதத்திலிருந்து வந்தவைதான்.

ரொம்ப உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மந்திரங்களும் அதர்வத்தில் இருக்கின்றன. லோகத்தில் இருக்கப்பட்ட ஸ்ருஷ்டி விசித்திரத்தையெல்லாம் கொண்டாடுகிற ப்ருத்வீ ஸூக்தம் இந்த வேதத்தில்தான் வருகிறது.

யக்ஞத்தை மேற்பார்வை இடுகிற பிரம்மாவை அதர்வ வேதத்திற்குப் பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது இதற்கு ஒரு பெருமை. இதன் சம்ஹிதா பாகத்தின் அத்யயனம் வடக்கே ரொம்ப ரொம்பத் தேய்ந்து போய் தெற்கே அடியோடு இல்லாமல் போய்விட்டாலும், பிரசித்தமான பத்து உபநிஷத்துக்களுக்குள் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம் என்ற மூன்று உபநிஷத்துக்கள் அதர்வ வேதத்தைச் சேர்ந்தனவாகவே உள்ளன.
முமுக்ஷுவானவன் (ஞான ஸாதகன்) மோக்ஷம் பெறுவதற்கு மாண்டூக்ய உபநிஷத் ஒன்றே போதும் என்ற வசனம் இருக்கின்றது. அப்படிப்பட்ட உபநிஷத் அதர்வத்தைச் சேர்ந்ததாகவே இருக்கிறது.

பிற்காலத்தில் அதர்வ அத்யயனம் விட்டுப் போனாலும், நீண்ட காலம் அது வழக்கில் இருந்திருக்கிறது என்பது கல்வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. திண்டிவனத்திற்குப் பக்கத்தில் பேரணிக்குக் கிட்டே எண்ணாயிரம் என்ற ஊரிலும், காஞ்சீபுரத்திற்குப் பக்கத்திலுள்ள வாலாஜாபாத் சமீபத்திலேயும் கிடைத்திருக்கிற கல்வெட்டுக்களில், ஆங்காங்கே இருந்த பெரிய வித்தியாசாலைகளைப் பற்றித் தகவல்கள் இருக்கின்றன. இவற்றைப் பார்த்தால் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்திலும் கூடத் தமிழ் தேசத்தில் அதர்வ வேத அத்யயனம் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது.

வடக்கே ஒரிசாவில் இருக்கும் பிராமணர்களில் பதினெட்டுப் பிரிவுகள் உள்ளன. அவர்களில் ஆதர்வணிகர் என்றே ஒரு பிரிவுக்குப் பெயர். அதர்வ வேதிகள் என்பதே இதற்கு அர்த்தம். 
இப்போதும் குஜராத், சௌராஷ்டிரம், கோசலம் முதலான தேசங்களில் ரொம்பவும் அபூர்வமாக அதர்வ வேதிகள் இருக்கிறார்கள்.

(ஸ்ரீ பெரியவர்கள் மேற்கொண்ட முயற்சிகளால் அதர்வ வேத அத்யயனம் மீண்டும் பொலிவு பெற வாய்ப்புள்ளது. தமிழக வித்தியார்த்திகளும் குஜராத்தில் உள்ள ஸினோருக்குச் சென்று அதர்வ வேதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.)
தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி 1978 – தொகுப்பாசிரியர் ரா.கணபதி அண்ணா வானதி பதிப்பகம் சென்னை

No comments:

Post a Comment