**சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*(15)*
🍀 *திருக்கடவூர் தொடர்.* 🍀
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சதுரமறைகள் அரண்செய்யச் சூழ்ந்ததுபோல் சதுர வடிவிலே நான்கு பிரதான வீதிகளுடன் அமையப்பெற்றிருந்தது *திருக்கடவூர்*
திருக்கோவிலுக்கு நேரெதிரே சந்நிதித்தெரு நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்குவதுபோல் தோற்றமளித்தது.
திருக்கோவிலைச் சுற்றி உள்சதுரமாயி நான்கு வீதிகள். இவ்வீதிக்கு *மடவிளாகங்கள்* எனப் பெயர்.
திருக்கோயிலுக்கு வலப்புறம் பிரியும் மடவிளாகம் வடக்குத் தெருவில் சென்று சேருகிறது.
வேள்விப்புகை காற்றில் கலக்க சாமகானம் எங்கும் ஒலித்தது, மனத்தது.
மாடங்கள் கொண்ட மனைகளில் எரிதழல் ஓம்பப்பட்டது. சிறு குழந்தைகளின் காற் சதங்கையொலியும் புள்ளினங்களின் கீச்செனவொலியும் விடியல் வேளையின் அழகுக்கு மெருக்கேற்றிவிட்டிருந்தன.
இவற்றினிடையே தனித்தெழுந்து மனத்தது குங்கிலிய நறுமணப் பொன்புகை. நமசிவாயத்தை நாசிவழி உணர்ந்ததைப் போன்று உயிருணர்ச்சி ஏற்பட்டன. அதனால் முகமலர்ந்தன.
கனிந்த முகமும், குளிர்ந்த பார்வையுமாக, *"சிவ சிவ சிவ சிவ"* என உதட்டொழிகள் இசைத்தன. இச்சிவ மந்திரத்தை ஓதியவாறே திருக்கோயிலுக்குள் புகுந்து சென்றார் கலயநாயனார். அவர் இரு கைகளால் தாங்கிக் கொண்டு வந்த கலயத்திலிருந்து குங்கிலியம் பொங்கி நுரைந்து மணத்தது.
நாள்தோறும் எம்பெருமான் மகேசனுக்கு குங்கிலியம் இடும் தொண்டை தொடர்ந்து செய்து வந்தார். அதுவும் ஒவ்வொரு நாளுக்கும் பலமுறை குங்கிலியத்தை உயிர்ச்சிபெற மணக்க வைத்து வந்தார். இத் தொண்டை மிகவும் அவர் விருப்பங் கொண்டே செய்து வந்தார். அவர் பேதமிலா அன்புக்கும், வெற்றிமிக்கான ஒழுக்கத்திற்கும் உரிமையாளர்.
கடவூரில் நிறையவே நன்செய் நிலங்களை கலயர் வைத்து பரிபாலனம் செய்து வந்தார். அதனால் நிறையவே பொன்னும் பொருளும் அவரிடம் உறவாடிச் சேர்ந்தது.
ஈசனுக்கு, குங்கிலிய நுரை பொங்கி மணக்க வைப்பதில் காலந்தொட்டோறும் செய்து வந்த போதலினால், ஒரு நேரத்தில் அவரிடமிருந்த செல்வம் கரைந்தொழியத் தொடங்கியது.
கழனிகள் வற்றிக் குறைந்து கொண்டே வந்தது. மீதமிருக்கும் கழனியையும் காக்க மனம் இடங்கொடாது, விற்றுக் கொண்டே வந்தார்.
அத்தனை நிலமது போயினும் பரவாயில்லை! என் அத்தனுக்கு குங்கிலியம் மணக்கச் செய்யாது இருக்க மாட்டேன் என வைராக்கியத்தில் உறுதியாய் இருந்தார்.
கலயரின் துணைவியாரோ, தன் கணவனின் இறை தொண்டை மதித்து போற்றி, கணவருக்கு அருங்கணலாய் ஒத்துழைத்தார். சொந்தமான பொருள் விற்றுக் கரைந்து போயினும், வறுமை சேர்ந்து உறவாடவும், தன் கணவனின் இறைத் தொண்டு உறுதிப்பாட்டையென்னி மகிழ்ந்தாலும், வறுமையென்னோ மனதுக்குள் வலித்துக் கொண்டுதான் இருந்திருக்கும் போல. ஆனால், வெளியில் வறுமைத்தனத்தை காட்டிக் கொள்ளாமல்தான் தன் கணவனுக்கு கூடயிருந்து அமைதி காத்தாள்.
நாளும் உண்ணும் உணவுக்கும் பஞ்சம் பற்றிக் கொண்டது. பிள்ளைகள் பசித்தழுவதை பொறுக்காத கலயரின் மனையாள் தன் மாங்கல்யத்தை கழற்றி கணவரின் கைகளில் கொடுத்துவித்து, இதை பணமாக்கி உணவுக்கு வழிசெய்க என சொன்னாள்.
மாங்கல்யத்தைப் பெற்று, நெல் வாங்கி வந்து விடலாமென்ற எண்ணத்துடன் கலயர் வீட்டைவிட்டு புறம்போனார்.
*( இதுவரை வறுமைதான் கூட வந்தது, இனிதான் வேற திருவிளையாடல் நடக்கப் போகுது பாருங்கள்.)*
நெல் வாங்கி உணவாக்கும் எண்ணத்துடன்தான் கலயர் புறப்பட்டிருந்தார். ஆனாலென்னவோ..............
அவரெதிரே யார் வருகிறார் பாருங்கள்.!
வண்டியில் குங்கிலியத்தை பொதி பொதியாய் மூட்டைசெய்து, வணிகனொருவன்.......... *நல்ல குங்கிலியமோ குங்கிலியம்* எனக் கூவி வந்தான்.
*குங்கிலியம்* *குங்கிலியம்*
என்ன மணம்!"என்ன மணம்!!, ஆகா இவன் கூவும் உரத்த குரலையும் மீறி இவனிடமிருக்கும் குங்கிலியம் மணத்தைக் கொண்டுள்ளதே?
ஆகா...எத்தனை மூட்டைகள் என்ன உயர்வான மணத்தோடு உள்ளதே?" இத்தனை மூட்டை குங்கிலியத்தையும் நாம் வாங்கிக் கொண்டுவிட்டால், நம் இறைவனுக்கு நெடுநாள் பலவேளைக்கு பஞ்சமிருக்காதே?" என எண்ணிக் கலங்கி,,,,,,,,,,,,,வணிகனை நெருங்கினார் கலயர்.
கலயர் வீட்டை விட்டு வெளியே வந்த முன்பு வரை, அந்நாளில் குங்கிலியம் வாங்க குண்றுமணியளவுக்குக் கூட பொருள் இல்லாதிருந்த கலயர், இப்போது அவர் கண்ணெதிரே குங்கிலிய மூட்டைகள். அவர் அடையாமல் விடுவாரா? அதுவும் அவர் கையில் இப்போது பொருளுள்ளதே!" மனைவி தந்த மாங்கல்யம் அவருக்கு உற்சாகத்தைத் தந்தது.
வணிகனிடம் பேரம் பேசி, மாங்கல்யத்துக்கு மாற்றாக, அத்தனை பணத்துக்குண்டான குங்கிலிய மூட்டைகளை பெற்றுக் கொண்டார். திருக்கோயில் கொண்டு சேர்க்க வண்டியுடன் விரைந்தார் கலயர். பெரும் பணத்திற்கு பெருமளவு குங்கிலியம் விற்றுப்போன சந்தோஷமானான் வணிக வண்டிக்காரன்.
பகல் கரைந்தது. கரியயிருள் கூடியது. மெல்லியருளில் இறைவன் சிரித்தபடியிருந்தான். விடையவன் வித்தகனின் விமலமலர்ப் பாத ஒளியில், உடல் சாய்ந்து கவலை தெரியா நிலையில் ஈசனின் அழகில் சொக்கி பசியறியாது தூங்கிப் போனார் கலயர்.
*சந்நிதியில் இறைவன் காலடியில் கலயர் தூங்கிப் போனார்.*
*அங்கே வீட்டில் பிள்ளைகள் பசி என்னவானது?*
*கலய மனையாள் என்ன செய்தார்?*
*நாளை..............,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,*
*திருக்கடவூர் திருக்கோயிலில் கலயனாரின் குங்கிலியம் நாளையும் மணக்கும்.*
திருச்சிற்றம்பலம்.
*பெரும்புலர்க் காலைமூழ்கி பித்தர்க்குப் பத்தராகி*
*அரும்பொடு மலர்கள் கொய்து ஆங்குநல் ஆர்வத்தை உள்ளே வைத்து*
*விரும்பிநல் விளக்குத்தூபம் விதியினால் இடவல்லார்க்கு*
*கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே!*
-----திருநாவுக்கரசர்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள். இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
**சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*(19)*
🍁 *திருக்கடவூர் தொடர்.* 🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பெருமானின் பல்வேறு பெற்றிமைகளைப் பட்டியலிட்டு, *"அவனல்லவா கடவூரில் வீற்றிருந்து அருள் செய்பவன்"* என்று பெருமிதம் பொங்கப் பதிகத்தைப் பாடிப் பரவினார் ஆளுடைய பிள்ளையார்.
திருக்கடவூர் தலத்தில் நுழைந்த மாத்திரத்தில் அத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதனை உணர்ந்து, *விரிதரு தொல்புகழ் வீரட்டானம்* என்று சம்பந்தர் அருளிச் செய்ய கலயனாரின் கண்கள் நிறைந்தன.
திருக்கடவூரிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று திரைகடலில் இருந்து வருவதென்றே எல்லோரும் எண்ணியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் திருஞானசம்பந்தர் வேறொரு காரணத்தைச் சொன்னார்.
இங்கிருக்கும் பெருமான், உயிர்களுக்கெல்லாம் தலைவன். நள்ளிருளில் நடமாடுபவன். அடியவர்களின் இதயமாகிய தாமரையில் பாதங்களை வைத்திருப்பவன்.
புலித்தோல் அணிந்து விடையேறி வருமந்த விமலனிபால் அடியவர்கள் கொண்டிருக்கும் அன்பின் குளிர்ச்சியே திருக் கடவூரைக் குளிர்விக்கின்றது.
*நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர் போதின்கண்*
*பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங்*
*காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே*
*வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே!"*
கனல்வடிவாகிய கண்ணுதற் கடவுள் காலனை சங்கரித்தபோது பூபாரம் பெருக பூமாதேவி வந்து வழிபட்டாள். அட்ட வீரட்டானங்களில் பூமித் தத்துவம் பொருந்தப் பெற்றது திருக்கடவூர்.
இதனைக் குறிக்கும் விதமாக, "செங்கனல் வடிவாகிய சிவபெருமான், நில வடிவாகவும் நிற்கிறார். ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி எனும் மூவகை நெருப்பாகவும் திகழ்கிறார்.
நான்கு வேதங்களும் அவரே. ஞான நூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என்ற ஞான வேள்வி என ஐந்தை இயற்றும் முனிவர்களின் துணையாக நிற்பவரும் அவரே". என்று பாடினார் பிள்ளைப் பெருமான்.
*செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்*
*முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்*
*கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்*
*செவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே!"*
திருக்கடவூர் அமுதகடேசனை திருஞானசம்பந்தர் தமிழால் பாடுபவர்கள் பாவங்கள் நீங்கியொழியும் என்று பதிகப் பலனும் அருளினார் காழிப்பிள்ளையார்.
*திருச்சிற்றம்பலம்.*
*திருக்கடவூர் தொடர் நாளையும் பதிகம்பாடி வ(ள)ரும்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
(20)
🔴 திருக்கடவூர் தொடர். 🔴
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
திருக்கடவூர் அமுதகடேசனை திருஞானசம்பந்தர், தமிழால் பாடுபவர்கள் பாவங்கள் நீங்கும் என்று பதிகப் பலனும் அருளினார் காழிப்பிள்ளையார்.
தன்னுடைய பதிகம் நிறைவு பெற்றதைக் குறிப்பால் உணர்த்துவதுபோல் திருநாவுக்கரசரை நோக்கி திருஞானசம்பந்தர் கைகுவிக்க, ஆளுடைய அரசர் பதிகங்கள் அருளத் தொடங்கினார்.
திருநேரிசை அருளிய அப்பர் பெருந்தகை, "புலர் காலைப் பொழுதில் நீராடி,
இறைவன்பால் பெருங்காதல் கொண்டு முறைப்படி தூப தீபம் இடுபவர்களின் திருவுள்ளங்களில் இறைவன் கரும்புக் கட்டிபோல் இனிப்பான் என்ற பொருள் பட,,,,,
"பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவீர்வீ ரட்ட னாரே!"
என்று பாட திருஞானசம்பந்தர் பொருள்பொதிந்த பார்வையை கலயர் மேல் பதித்துப் புன்னகை புரிந்தார். திருக்கடவூர் தேவதேவனை, திருநேரிசை,
திருவிருத்தம்,
திருக்குறுந்தொகை, ஆகிய மூவகைப் பதிகங்களால் பாடிப் பரவினார் வாகீசப் பெருந்தகை.
வாழ்வின் வினைகளால் தடுமாறி, வெய்ய சோதியில் விழுந்த விட்டிலாய்த் தவிக்கும் மனிதர்கள், தகிக்கும் துன்பத்தைத் தணிக்கும் திருப்பாடல்கள் அவை.
"தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யாலே விளக்கதிற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ள் காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன் கடவீர்வீ ரட்ட னாரே!"
பெருமானை யானையாகவே உருவகித்து ஆளுடைய அரசர் பாடிய திருநேரிசைப் பதிகம் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. தல விநாயகராகிய கள்ளவாரணப் பிள்ளையாராகவும் இறைவனை உருவகித்தார் திருநாவுக்கரசர்.
"வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்
உள்ள வாறெனை யுள்புகும் ஆனையார்
கொள்ள மாகிய கோயிலுள் ஆனையார்
கள்ள ஆனைகண் டீர்கட வூரரே!"
சிவபெருமான், பாலுக்கழுத உபமன்யு முனிவருக்காக பாற்கடல் ஈந்ததையும், ஆலமரத்தின் கீழமர்ந்து அரும் பொருள் உபதேசம் செய்ததையும், மார்க்கண்டேயருக்காக காலனைக் காய்ந்ததையும் ஒப்பிட்டு, திருவிருத்தம் பாடினார்.
"பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரணமோதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான்கடவூருறை உத்தமனே!"
வழிபாடு நிறைவுபெற்றதும் இருபெரும் குரவர்களும் குங்கிலியக் கலயர் இல்லத்திற்கு எழுந்தருளினர். சற்று முன்னதாகவே மனை திரும்பி சைவத்தின் கண்களாய்த் திகழ்ந்த இருவரையும் எதிர்கொண்டழைத்த கலயர் திருப்புகலூரில் இவர்கள் இருவருடன் முருக நாயனார், நீலநக்கர், சிறுத்தொண்டர், ஆகியோர் ஓரிருநாட்கள் முன் தங்கியிருந்து உடனுறைவின் பயன் பெற்ற விதம் குறித்துப் பேரார்வத்துடன் கேட்டறிந்தார்.
அறுவகை உணவு பரிமாறி, அருளாளர்கள் அருளையும் சிவனருளையும் அள்ளிப் பருகினார் கலயர்தம் குடும்பத்தினர்.
இருவரும் விடைபெற அந்த அபூர்வ நிகழ்வின் நினைவுகளிலேயே நெடுங்காலம் லயித்திருந்து, அமுதகடேசப் பெருமானுக்கு குங்கிலியம் இட்டு குங்கிலியக் கலயர் என்னும் திருநாமம் பெற்று நிறைவாழ்வு வாழ்ந்து சிவனடி சேர்ந்தார் கலயர்.
குங்கிலிய நறுமணத்தில் கலயரின் தொண்டுச் சிறப்பையும் சேர்த்துச் சுமந்து திசையெங்கும் சேர்த்தது கடவூர்ப் பதியின் கொண்டல் காற்று.
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
( 21 )
🍁 திருக்கடவூர் தொடர். 🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
வீரட்டானத்து வித்தகப் பெருமானை நாடி அருளாளர்கள் திருவடிகள் நிலப்புழுதி எழுந்து பிரிந்து மறையுமாறு திருக்கடவூர் தலத்திருக் கோயிலுக்கு வந்து செல்லும் நேரமெல்லாம், திருக்கடவூருக்குத் திருவிழாக் கோலமே!
அப்படியாக அன்றும் திருக்கடவூரில் விழாக்கோலம் பூண்டு ஆனந்த பரவச அலைகள் ஆர்ப்பரித்தன.
தம்பிரான் தோழரான நாவலூர்க்கோன் இன்று திருக்கடவூருக்கு எழுந்தருள வருகிறாரென்று மக்கள்கள், பக்தர்கள், அடியார்கள், சைவ அன்பர்கள், முதலானோர்கள் தாமரையைமொய்த்த வண்டுகள் போல, தெய்வத்தமிழ் பருக திரண்டோடி திருக்கோயில் வந்து குழுமினார்கள்.
*திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், குங்கிலியக் கலயனாரும், இணைந்து ஒன்றாக சந்நிதியில் வந்து நின்ற சுந்தரரை வருகவென்று பணிந்தழைத்து வணங்கியது சுடர் முறுகிச் சிந்தின திருக்கோயிலின் திருவிளக்குகள்.
பெருமானைக் கண்ட ஆளுடைய நம்பிகள் அகம், நா, தழுதழுத்தது.
உன்னையன்றி வேறுதுணையுண்டோ எனக்கென அவருள்ளம் உருகின பாங்குகள் அவரின் திருபாட்டின் பெருக்கத்தோடு "பா"-- வில் தெரிந்தன.
அமுதகடேசப் பெருமானை ஒவ்வொரு திருப்பாட்டிலும் "அமுதே அமுதே" என்று அகநெகிழ்ந்தழைத்தார் ஆலால சுந்தரப் பெருமான்.
பொடியார் மேனியனின் பொன்னார் மேனியில் யானைத்தோல் போர்த்திருக்கும் எழிலையும், வாம பாகத்தில் அம்மை இடங் கொண்டுள்ளழகையும் திருநீல மிடற்றின் ஒளியையும் அனுபவித்தார் அவர்.
"போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்து
ஆரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே!"
எங்குமுள்ள பஞ்ச பூதங்களிலும் எதிர்ப்படும் ஒவ்வோர் உயிரினிலும் நிறைந்திருக்கும் சிவமே உயிர்த்துணை என்பதை பழையபடி பழையபடி சுந்தரமூர்த்தி சுவாமிகள் உணரும் விதத்துடன் அந்தத் தரிசனம் சிறப்பாக நடந்தது.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
( 22 )
🌜 திருக்கடவூர் தொடர். 🌛
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் விரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்காா்துணை நீயலதே!"
சுந்தரர் பாடப்பாட அமுதீசப் பெருமானையும் அமுதான தேவாரத்தையும் ஒருங்கே உணரும் பெரும்பேறு பெற்ற அடியார்கள் தங்கள் உவகையை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினார்கள்.
"கார்மேகம் பொழிவதுபோலல்லவா அருள் வாக்கு பொழிகிறது"
என்றார் ஒருவர்.
அந்த அடியவரை நோக்கி, "உங்களுக்கு எந்த ஊர்?" என்று தம்பிரான் தோழர் கேட்க,
அவரோ திகைத்தவராய், "எனக்கு திருக்கடவூர்தான் சுவாமி" என கூப்பிய கைகளுடன் சொன்னார்.
"கலகல" வெனச் சிரித்த நம்பியாரூரர், "திருக்கடவூரில் பிறந்த நீங்கள் என்னைப்போய் கார்மேகமென்று சொல்லலாமா?" கார்மேகம் போல் கவிபொழிந்த வல்லார் இத்தலத்திலேயே வாழ்ந்த நாயன்மாராகிய காரி நாயனார் அல்லவா!
அவருக்கும் அவர் தமிழுக்கும் நான் அடியவன் அல்லவா" என்றார்.
காரிநாயனார் திருப்பெயரை உச்சரித்த மாத்திரத்திலே ஆலால சுந்தரின் திருக்கரங்கள் சிரமேற் குவிந்து பணிவு கண்டு புளகித்தனர் அடியவர்கள்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
(23)
💐 திருக்கடவூர் தொடர். 💐
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
ஆலகால சுந்தரின் திருக்கரங்கள் சிரமேற் குவிந்து பணிவு கண்டு புளகித்தனர் அடியார்கள்.
"ஆம் சுவாமி!" இரண்டு நாயன்மார்கள் அவதரிக்கும் பெரும் பேற்றினை இத்தலம் கொண்டுள்ளது.
கோவைநூல் பாடுவதில் வித்தகராகிய காரிநாயனாரின் கற்கண்டுக் கவிதையில் மூவேந்தர்களும் தங்கள் உள்ளங்களைப் பறி கொடுத்தார்கள்.
கயிலாய நாதனையும் திருக்கயிலாயத்தையும் கணப்பொழுதும் மறவாத காரிநாயனார் பாடிப் பெற்ற பெருஞ் செல்வத்தை சிவாலயங்கள் எழுப்புவதற்கும் சிவனடியார்களுக்கு திருவமுது ஊட்டுவதற்கும் பயன்படுத்தினார் என்றார் ஓர் அடியாா்.
"ஆடவல்லான் அந்த மகானின் திருநாவிலல்லவா தாண்டவம் புரிந்தான். மனதில் மகேசனை நிலை நிறுத்தி கயிலாயநாதனையே கருதிக் கிடந்து கார்மேகமாய் வாழ்ந்த காரி எங்கள் ஊர் மேகவல்லவா" பெருமை பொங்கச் சொன்னார் மற்றொருவர்.
திருக்கோயிலை வலம் வந்து, அடியவர்கள் புடைசூழ கூங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்த அருள் மனையினையும் காரி நாயனார் வாழ்ந்த திருமனையினையும் தரிசிவிட்டு திருக்கடவூர் திருமயானம் சென்றார் சுந்தரர்.
அங்கே கோயில் கொண்டிருக்கும் பெரிய பெருமானடிகளையும் வாடாமுலை அம்மையையும் தரிசித்து மனமுருகப் பதிகம் பாடினார்.
திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் கலயருடன் தரிசித்த திருமயானத்தில் சைவ வழிபாட்டின் உள்மரபினராகிய பஞ்சவடியினரைக் கண்டார். கூந்தல் கொண்டு பூணூல் அணியும் மாவிரதிகளாகிய அவர்களைக் கண்டதும் மானக்கஞ்சாற நாயனாரின் நினைவு தோன்றிற்று. மணமகள் கோலத்திலிருந்த தன் மகளின் கூந்தலை மாவிரதியான சிவயோகி கேட்ட மறுவிநாடி அரிந்தளித்த அவரின் பக்தியை நினைந்து நெக்குருகினார்.
அந்த நாயன்மாரின் நினைவை அத்தருணத்தில் வழங்கிய மாவிரதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் அவர்களைக் காண நேர்ந்ததைப் பதிகத்தில் பதிவு செய்தார்.
"துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே விட்ட பாசுபதர்
பஞ்ச வடிவமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே!
-என சுந்தரர் பாட மாவிரதிகள் மனமகிழ்ந்தனர்.
"வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து காணில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமானடிகளே!
எனவும்,
"வேழம் உரிப்பர் மழுவாளர்
வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்குஅன்று
ஆனஞ்சு உகப்பர் அறமுறைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே!
என பெருமாளையும்,அம்மையையும் பலவாறாகப் போற்றிப் பாடி யாத்திரை தொடர்ந்த ஆளுடைய நம்பிக்கு ஊர் எல்லை வரை சென்று பிரியாவிடை தந்தனர் திருக்கடவூர் சிவநேசர்கள்
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
( 25 )
🍁 திருக்கடவூர் தொடர். 🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அமுதகடேசர் சந்நிதியில் அன்று பெருங்கூட்டம்.
முழுநீறு பூசி உருத்திராக்கம் அணிந்து சிவச்சிந்தையராய்த் திரண்டிருந்தார்கள் சிவனடியார்கள்.
இல்லற நெறியில் இருந்தபடியே இறைநெறியில் இதயம் தோய்ந்த சிவநெறிச் செல்வர்களும் நிறைந்து இருந்தார்கள்.
இவர்களின் நடுவில் கனிந்த சிவப்பழமாய், கனலும் அருட்தவமாய் அமர்ந்திருந்தார் ஒருவர்.
அப்படி சிவப்பழமாய் அமர்ந்திருந்தவரின் தீட்சாநாமம் ஆளுடைய தேவநாயனார் ஆகும்.
திருவியலூர் என்ற சிவத்தலத்தில் வாழ்ந்து வரும் வேளாளர் அவராவார்.
ஒவ்வொரு திருத்தலமாய் சஞ்சரித்து வந்த சிவயோகியாம் உய்யவந்த தேவநாயனார், திருவியலூர் வந்திருந்த போது இவரின் பரிவக்குவத்தைக் கண்டு தன்னுடைய சீடராக ஆட்கொண்டார்.
சீடனின் தலத்திலேயே நெடுங்காலம் தங்கியிருந்து, தன்னுடைய சீடனின் வழியாகவே உலகுக்கு சிவஞானம் புகட்டத் திருவுள்ளம் கொண்டு திருவுந்தியார் என்ற ஞானநூலை அருளினார் அவர்.
சிவத்தலங்கள் தோறும் திருவுந்தியாரை விரிவுரை வழங்குமாறு சீடனுக்கு ஆணையிட்டார் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்.
குருவின் ஆணைக்கிணங்க திருக்கடவூரில், திருவுந்தியார் விரிவுரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஆளுடைய தேவர்.
"ஊஞ்சலில் ஆடும் பெண்கள் பூமியில் பாதத்தை ஊன்றி உந்த ஊஞ்சல் பறக்கும். அவர்கள் பாதத்தை பூமியில் பதிப்பது மேலே பறப்பதற்காக. அதுபோல் இக வாழ்வை, பரவாழ்வு நோக்கிப் பறக்கும் பக்குவத்திற்குப் பயன்படுத்தவே அருளாளா்கள் இத்தகைய ஞான நூல்களை அருளினர்
ஒவ்வொரு பாடலிலும் உந்திப்பறக்குமாறு உயிர்களை இறை நெறியில் ஆற்றுப்படுத்துவது திருவுந்தியார்.
சிவப்பரம்பொருளுக்குத் தனி வடிவமில்லை. எனவே பலரும் சிவத்தை உணர்வதில்லை. அதனாலேயே குருநாதர் வடிவில் சிவம் தன்னை வெளிப்படுத்துகிறது.
நல்ல குருவை உணர்ந்தவர்கள் சிவத்தை உணர்ந்தவர் ஆவார்கள் என சொல்லிக் கொண்டிருக்கும் போதே தன் குருநாதரை நினைந்து மலர்விழிகளில் மஞ்சனநீர் பெருக்கினார் ஆளுடைய தேவர்.
மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரவிய அவருடைய பார்வை ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அங்கிருந்த மனிதவொருவரின் விழிகளில் வெள்ளம் பெருக, குவிந்த கரங்களுடன் உள்ளுருகி அமர்ந்திருந்தார்.
நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்த அவரின் தாகமும், சரியான சீடனை இனங்கண்ட ஆளுடைய தேவநாயனாரின் ஞானமும் அமுதகடேசர் சந்நிதியில் சங்கமித்தன.
விரிவுரை நிறைவுபெற்று மற்ற அன்பர்கள் விடைபெற்ற பிறகும் வைத்த கண் வாங்காது நின்று கொண்டிருந்த அந்த அன்பரை அருகே அழைத்து ஆட்கொண்டார் ஆளுடைய தேவநாயனார்.
எந்நேரமும் தன்னுடைய குருநாதரின் பொன்னார் திருவடிகளையே எண்ணிக் கிடந்த ஆளுடைய தேவநாயனாருக்கு தன் சீடனுக்கு வேறு தீட்சா நாமம் சூட்ட விருப்பமில்லை. எனவே தன்னுடைய குருநாதரின் பெயரையே சூட்டினார். தன் பழைய நாமமும் பழ வினையும் கழிந்து திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் எனும் திருப்பொலிவு பெற்றார் அவர்.
அடுத்தநாள் திருக்கடவூரில் ஒரே பரபரப்பு. "நம்முடைய ஆட்டு வணிகர் இருக்கிறாரே! அவர் இனிமேல் சிவனடியாராம்! என்ன விந்தை பார்த்தீர்களா?" என்றார் ஒருவர்.
"ஆண்டவன் நினைத்தால் ஆகாதென்ன? ஈசன்பால் இதயத்தைச் செலுத்தினால் மாடு தின்பவர்கூட நாம் வணங்கக்கூடிய கடவுள் என்று திருநாவுக்கரசர் பாடவில்லையா? என்றார் மற்றொருவர்.
"எல்லாம் சரிதான்! நாமறிய ஆடு விற்றுக் கொண்டிருந்தவர். சிவபக்தி உள்ளவரென்று தெரியும். அதற்காக அவரை அருளாளராக ஏற்றுக் கொள்ளமுடியுமா?என்று தான்......."மெல்ல இழுத்த ஒருவரை முதுகில் தட்டி அடக்கினார் இன்னொருவர்.
"மாணிக்கவாசகரின் இடர் தீர்க்க, சிவபெருமானே குதிரை விற்பவராய் வரவில்லையா என்ன? பக்குவமில்லாதவரை பரமாச்சாரியரான ஆளுடைய தேவநாயனார் ஆட்கொள்வாரா? உருவு கண்டும் தொழில் கண்டும் உள்ளொளியை நிர்ணயிக்க நாம் யார்?" என்ற அவரின் சொற்களில் இருந்த நியாயத்தை உணர்ந்தவர்கள் மெல்லக் கலைந்து சென்றனர்.
தன் குருநாதரின் திருநாமம் தரிக்கப் பெற்ற சீடருக்கு திருவுந்தியாரின் நுட்பங்களை விரித்துரைத்த ஆளுடைய தேவநாயனார், அவருடைய தகுதியில் முழுநிறைவு பெற்ற பின், திருவுந்தியாரை ஒவ்வொரு சிவத்தலமாகப் பரப்ப ஆணையிட்டருளி அனுப்பினார்.
No comments:
Post a Comment