Wednesday, June 14, 2017

Sevoor Valeesar temple

*சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *கொள்ளு பை,  சுயம்புவான சேவூர் வாலீசப் பெருமான்.* 🍁

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
வணிகர்குல வாணிபனொருவன் சிவபெருமான் மீது அளவில்லா பக்தியும் அன்பும் கொண்டு வாழ்ந்து வந்தான்.

தனக்கு துணையாகவும்,  சிவ வழிபாடு செய்வதற்குண்டான உதவிக்காகவும், தனது மைத்துனனொருவனை, எங்கும் செல்லும் போதும் தன்கூடவே அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் வணிகன்.

எந்த நிலையிலும் சிவ வழிபாடு செய்யாது உணவு உண்ணும் வழக்கத்தை செய்ததில்லை.

ஆனால், வணிகனின் மைத்துனருக்கு சிவ வழிபாட்டில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. அத்தானின் சிவ பக்தி மைத்துனனுக்கு ஒரு வித எரிச்சலாக இருந்து வந்தது.

என்றாவதொருநாள் எப்படியாவது நம் அத்தானின் சிவ வழிபாட்டைப் பொய்யாக்கி அவரை உணவு உண்ணச் செய்திட வேண்டுமென தீர்மானித்து காத்திருந்தான்.

ஒருமுறை வியாபார நிமித்தமாகக் குடக்கோட்டூர்க்கு செல்ல நேர்ந்தது. கூடவே மைத்துணனும் பயணித்தான்.

அன்றைய காலையில் வணிகன் எழுந்ததும், மைத்துனரை எழுப்பி, நான் அருகிலிருக்கும் குளத்திற்குச் சென்று நீராடி வருகிறேன். நீ பக்கத்தில் சிவாலயம் எங்குள்ளனதென அறிந்து வா!. என கூறிவிட்டுச் சென்றான் வணிகன்.

சரி நீராடச் செல்லுங்கள். நான் ஆலயத்தைக் கண்டு விட்டு உங்களை யழைத்துப் போக குளக்கரை வருகிறேன் என மைத்துனன் கூறினான்.

இதுதான் சந்தர்ப்பம். நம் அத்தானை ஏமாற்றுவதற்கு இதைவிட வேறுநேரம் நமக்கு வாய்க்காது. சிவலிங்க பூஜை புரியாமல் அவரை உண்ணச் செய்து விட வேண்டுமென முடிவெடுத்தான். 

வணிகனான சிவநேசரும் குளிக்கச் சென்றார். மைத்துனனின் கிறுக்குத்தனம் சிவநேயருக்கு தெரியாது.

வணிக சிவநேசச் செல்வன் அவ்விடம்விட்டு அகழ்ந்து சென்றதுதான் தாமதம், பயணத்திற்கு பயன்படுத்தி வந்த குதிரை அருகில் வந்தான். குதிரையின் முதுகில் குதிரையின் உணவான கொல்லுப்பயிரை தொங்கவிட்டிருந்த சாக்குப்பையை அவிழ்த்தெடுத்தான். மேலும் அந்தச் சாக்குப்பையில் இடமிருந்தளவுக்கு அங்கே பரவிக்கிடந்த மணலை வாரி சாக்குப்பையினுள் நிறப்பினான். 

மணல் நிரப்பிய வாய்ப்பகுதியை கட்டித் தலைகீழாகக் கவுழ்த்தி, கொஞ்சம் தள்ளி சாக்குப்பையை எடுத்துப் போய், மணல் தரையில் ஒருஅடி ஆழம் வரை பள்ளம் தோண்டி, சாக்குப்பையின் வாய்ப்பகுதியை தலைகீழாக கவுழ்த்தி அப்பள்ளத்தினுள் புகுத்தி, சாக்குப்பையைச் சுற்றி மணலைத் தள்ளி லிங்கம் போல மேலெழும்பி இருப்பது போல செய்து வைத்தான். பின் விபூதியிட்டு, சந்தனமிட்டு, பூ மாலைகள் சாற்றி, சரியா இருக்கிறதாவென பார்த்தான். அவனுடல் லேசாக பிரமிப்பு கண்டது. அவ்வளவு நேர்த்தி. 

வேகமாக அத்தானை அழைத்து வர குளக்கரை சென்று, அத்தான் வாருங்கள்! அழகான ஆலயமில்லா லிங்கமொன்றைக் கண்டேன். அதுவும் அருகிலேயேதான் உள்ளது. சீக்கிரம் வாருங்கள் எனவழைத்துப் போய் தானுருவாக்கிய லிங்கவுருவைக் காட்டி, இதோ! இவரே உங்கள் லிங்கப்பெருமான் என்றான்.

வணிகர் மணங்குளிர மனதார தரிசித்தார் அர்சித்துப்பூசித்தார். ஆகா!" ஊர் தெரியா இடம் வந்து உம்மை காணாதாகிவிடுவேனோ என்று பயந்தேன். எமக்கு  இம்மந்தை வெளியில் காட்சி தந்தீர்!. என்னே, உம்மழகோ அழகு!" பெருமானே!" உம்மை கண்டதில் ஆனந்தித்தோம். நீரே சுயம்புவானவரானதென அறிந்து இன்னும் மகிழ்ந்தோம். இனி உணவெடுத்து விட்டு வாணிபத்தை தொடர்கிறேன் என நா தழுதழுக்க வேண்டி வணங்கிக் கொண்டார்.

சிவபூஜைக்குப் பின் உணவருந்தும் வரை அமைதியாயிருந்த மைத்துனன்,
இவையனைத்தையும் ஏளனத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மைத்துனன்.........

அத்தான்! நீங்கள் நன்றாக ஏமாந்து விட்டீர்கள்! நீங்கள் சிவபூஜை செய்தது லிங்கமுமல்ல! தாங்களும் சிவபூஜை செய்யாது உணவருந்த மாட்டேனென தாங்கள் கடைபிடித்து வந்த கொள்கையும் இன்று பொய்யாகி கலங்கமாகிப் போய் விட்டது என்றான்.

என்ன சொல்கிறாய்!" இப்போதுதானே லிங்கப்பூஜை செய்து வந்தேன். பதற்றத்தோடு கோபமாகப் பார்த்தார் மைத்துனனை வணிகன்.

அது நிஜ லிங்கவுரு இல்லை. அதை என் கைகளாலால் நான்தான் உருவாக்கினேன். திரும்பவும் வாருங்கள் அல்லிங்கம் இருக்குமிடத்திற்கு அந்த லிங்கத்தை வெளியே எடுத்து மெய்ப்பிக்கிறேன் என எக்காளமாய் சொன்னான்.

இவர்களின் விபரீத உரையாடலில் இன்னும் பலர் கூடி விட்டனர். என்னவென பார்த்து விடலாமென்ற பொது ஜனமும், வணிகனின் மைத்துனன் முன் செல்ல, பின்பு வணிகனும் பொதுஜனமும் தொடர்ந்தனர்.

வணிகனின் மைத்துனன், சிவலிங்கம் போல தோற்றமளிக்கும்படி உருவாக்கிய குதிரையின் கொள்ளுப் பையை பிடித்து வெளியிழுத்தான். 

கொள்ளுப்பை அசையவில்லை.

பலமுள்ள மட்டும் மீண்டும் பற்றியிழுத்தான். எதிர்விசையில் தூரப்போய் விழுந்தான்.

திருப்பனந்தாள் எனுமொரு ஊரில்.சோழ மன்னன் சாய்ந்திருக்கும் லிங்கத்திருமேனியை வீரர்களை வைத்து நிமிர்த்த முனைந்த போது, அது முடியாது போக எவ்விதம் தூரப் போய் விழுந்தார்களோ அது போல.

*(திருப்பனந்தாள் லிங்கத் திருமேனியை --பூங்கச்சோடு பிணைத்த கயிற்றைத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டு குங்கிலியக் கலய நாயனார் இழுக்க சாய்ந்த லிங்கத்திரு வுரு நேரானது.)*

பின் புதையூட்டப்பட்ட லிங்கத் திருமேனியினைச் சுற்றி மணலை பரிக்க ஆரம்பித்தான். மணலை பரிக்க பரிக்க ஆழமாக சென்று கொண்டே போனது. கொள்ளுப்பையின் வாய்ப்பகுதி நுனியைக்  காண முடியவில்லை.

லிங்கத்தோத்பவர்பெருமானான ஈசனை திருமுடியைத் தேடி பிரமனும் அடிதிருவடியைத் தேடி மாலனும் சென்று காணாது தோற்று வந்தார்களே! அதுபோல  சிவநேசர் வணிகனுக்காக, கொள்ளுப்பை நுனி காணத்தராது நீண்டு நீங்கியிருந்தன.

சுற்றி நின்ற பொது ஜனங்களையும் துணைக்கழைத்து மணலை ஆழமாக பிரித்தெடுத்தும் கொள்ளுப் பையின் நுனியடி காணப் பெறவில்லை.

மணலல்லி புதைத்து வைத்து ஏமாற்றிய கொள்ளுப் பையே சுயம்பு உருக்கண்டது கண்டு வணிகனின் மைத்துனன், தனக்கு ஏதேனும் விபரீதம் நிகழக்கூடுமென அஞ்சினான். பயந்து நடுங்கினான்.  தன்னை மறந்து கைதூக்கி தொழுதான். ஈசன் மீது மனதில் நம்பிக்கை பிறந்தது. 

உண்மையான அடியார்க்கு ஈசன் உருக்கொண்டு விளங்குவார் என்பதற்கு இச்சம்பவமே் உண்மையானதாக நிகழ்ந்தது. மேலும் தன் அத்தானின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து,  தன் செயலை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான்.

வணிக சிவநேசரும் இறைவனின் கருணையை நினைந்தும், மனந் திருந்திய மைத்துனனை நினைத்தும் கண்ணீர் மல்கி நின்றார்.

மணலினுள் கொள்ளுப் பையால் கொண்டு உருவாக்கி எழுந்தருளியதால், இந்த லிங்கத்திற்கு *மொக்கணீசுரர்* என திருநாமம் உண்டாயிற்று.


*( மொக்கணி என்றால் குதிரைக் கொள்ளுப் பை எனவாகும்.)*

*(பழுதில் கண்டுயின்றோமில்லை பருப்பு நெய் கரும்புக்கட்டி எழிற்குமட்டித் திட்டே மிதவிய புல்லுமிட்டேங்கழுவிய பயறும் கொள்ளும் கடலையும் துவரையோடு முழுவதும் சிறக்கவிட்டே மொக் கணிமுட்டக்கட்டி!)*

---என வேப்பத்தூர் திருவிளையாடலில் காணப்பெறுகின்றோம்.

கோவை மாவட்டம் அவிநாசியிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழித்தடத்தில் சேவூருக்கும் அடுத்து கொடிவழியில் (குடக்கோட்டூர்) இவ்வூர் உள்ளன. 

இவ்வாலயம் தற்சமயம் பழுதுபட்ட நிலையிலுள்ளது. இன்றும் இவ்வூர் கோட்டூர்பள்ளம் என அழைக்கட்டு வருகிறது.

சிவநேசரும் வணிகருமான சிவநேச செட்டியார் நீராடிய குளத்தை *தாழையூற்று* என அழைக்கப் படுகிறது.

இவ்வாலயத்தின் உற்சவ மூர்த்தியானவர் *சேவூர் வாலீசப் பெருமான*் ஆவார்.

இந்நிகழ்வுகளை மாணிக்க வாசகப் பெருமானும் தனது கீர்த்தித்திரு அகவலில்........

*"மொக்கணியருளிய முழத் தழன் மேனி*
*சொக்கதாகக் காட்டிய தொன்மையும்"* ---என்று குறிப்பிடுகிறார்.

              திருச்சிற்றம்பலம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment