Friday, June 9, 2017

Kanda puranam & Ramayanam

Courtesy:https://www.facebook.com/notes/sriram-krishnaswamy-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/164519200245879/

கந்தபுராணமும் கம்பராமாயணமும்

முன்னுரை :  

இறைவனுக்கு வணக்கம். இன்பத் தமிழ்த் தாய்க்கு வணக்கம்.  நம் செந்தமிழ் மொழியினில் வெளிவந்துள்ள ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் புராணங்கள் சார்ந்து வெளிவந்த திரைப்படங்கள் சில நூறுகள் இருக்கும். அவற்றில் நம் நெஞ்சில் என்றும் நீங்கா இடம்பெற்று, நினைக்கும் போதெல்லாம் இன்புறச் செய்யும் திரைக்காவியங்கள் சிலவனவே. உதாரணத்திற்கு திருவிளையாடல், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் போன்றவற்றைக் குறிப்பிடலாம், இன்னும் சிலவும் உள்ளன. இவற்றுள் யாம் இக்கட்டுரை வரையக் காரணமாக இருப்பது மேலே கூறிய திரைப்படங்களில் ஒன்றான " கந்தன் கருணை " ஆகும்.

 

 

கந்தபுராணம் படிக்காதவர்கள் கூட ஷண்முகனான வேலனைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள உதவியது இத்திரைப்படம் எனில் மிகையாகாது. இத்திரைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் ஓடும் இன்னொரு கதை " இராமாயணம் ". காரணம் ? கதையமைப்பில் இரு நூல்களுக்கும் ( ராமாயணம் & கந்தபுராணம் ) உள்ள ஒற்றுமையே. நன்றாகக் கவனித்துப் பார்த்தால் இரு காவியங்களுக்கும் உள்ள ஒற்றுமை, காட்சிகளில், கதாபாத்திரங்களில் எனப் பல விடயங்களில் தெரியும். உதாரணத்திற்கு கந்த புராணத்தின் நாயகனாகிய குகனது பெயரையே இராமாயணத்தின் ஒரு கதாபாத்திரமான, நாவாய் வேட்டுவனும் கங்கைக் கரயில் இருக்கும் சிருங்கிபேரம் எனும் நகரைத்தைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்கிறவனும், இராமனால் சகோதரனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவனும் வீரனுமாகிய குகனுக்குச் சூட்டி அழகு பார்த்தனர்.( இராமாயணத்தின் சில பிரதிகளில் ' கங்கை படலம் ' குகப் படலம் ' எனக் குறிப்பிட்டிருக்கும்.)

 

 

நம் செந்தமிழ் மொழியிலுள்ள புராணங்கள் பலவற்றுள்ளும் சிறந்தனவாகத் திகழ்வன ஒன்பது புராணங்கள் என்று ஆன்றோர் கூறுவர். அவை பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம், கோயிற் புராணம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம், திருக்குற்றாலப் புராணம், சேது புராணம் என்பனவாகும். இவ்வொன்பது புராணங்களுள்ளும் மூன்றனை மிகச் சிறந்தனவாகக் கற்றோர் கூறுவர். பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், கந்த புராணம் என்னும் இம்மூன்று நூல்களையும் சிவபெருமானுக்கமைந்த மூன்று விழிகளைப் போன்றவை என்று போற்றி மகிழ்வர். தொண்டர்தம் பெருமையைப் பேசும் " திருத்தொண்டர் புராணம் " பெரிய புராணம் எனவும், சிவகுமாரனாகிய முருகன் பெருமையை விரித்துரைக்கும் கந்தபுராணமோ " புராண நன்னாயகம் " என்று போற்றப்படும். சங்கத்துச் சான்றோர் பாக்களாகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி முதலிய செந்தமிழ்க் காவியங்களுள் சிந்தாமணிக் காவிய நடையினை மேற்கொண்டு திருக்குறள் தமிழ் மறையின் அரிய கருத்துக்களில் தோய்ந்து, இனிய ஓசை நயந்தோன்றப் பிற்காலத்தில் எழுந்த அரிய கதைச் செய்யுள் நூல் கம்பராமாயணமே ஆகும்.

 

காஞ்சிக் குமரக் கோட்டத்தில் எழுந்தருளும் முருகவேளை முப்போதும் வழிபடுபவரும், வடமொழி தென்மொழியென இருமொழிப் புலமையுடைய பெருங்கவிஞரான கச்சியப்பர் தமிழில் பாடிய முருகன் வரலாறே கந்தபுராணமாகும். தமிழுக்குக் கதி, கம்பராமாயணமும் திருவள்ளுவமும் என்று கற்றோர் போற்றும் புலவர்களுள் ஒருவராகிய கவியரசர் கம்பர் பெருமானால் ஆக்கப்பெற்ற அரிய காவியம் கம்பராமாயணம் ஆகும்.

இனி இவ்விரு நூல்கள் மற்றும் நூலாசிரியர்களுள் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

 

கதாபாத்திரங்களில் உள்ள ஓற்றுமைகள் சில :

 

கம்பராமாயணம் - கந்தபுராணம்

1. இராமன் ( நாயகன் ) - வேலன் ( நாயகன் )

2. வீரஅனுமன் ( இராம தூதன் ) - வீரபாகுதேவர் ( வேலன் தூதன் )

3. இராவணன் ( அரக்கர்கோன் ) - சூரபத்மன் ( அசுரர்கோன் )

4. சூர்ப்பனகை ( இலக்குவனால் மூக்கறுபட்டவள் ) - அசமுகி ( மாகாளனால் கையறுபட்டவள் )

5. இலக்குவன் ( சீதையின் காவலுக்கு நின்றவன் ) - மாகாளன் ( இந்திரானியின் காவலுக்கு நின்றவன் )

6. சீதை ( இராவணனால் சிறை பட்டவள் - கற்புக்கரசி ) - சயந்தன் ( சூரனால் சிறை பட்டவன் )

7. இலங்காபுரி ( இராவணன் வசிப்பிடம் ) - வீரமகேந்திரபுரி ( சூரன் வசிப்பிடம் )

8. மண்டோதரி ( இராவணன் மனைவி - கற்புக்கரசி ) - பதுமகோமளை ( சூரன் மனைவி - கற்புக்கரசி )

9. இந்திரஜித் ( இராவணனின் மூத்த மகன் ) - பானுகோபன் ( சூரனின் மூத்த மகன் )

 

அடுத்ததாக கம்பநாடாருக்கும் கச்சியப்பருக்கும் உள்ள ஒற்றுமைகள் யாதெனப் பார்ப்போம் பின்னர் அவ்வாறே காட்சிகளில் உள்ள ஒற்றுமைகள் யாதெனப் பார்ப்போம்.

 

கம்பநாடார் ( கம்ப நாட்டாழ்வார் ) :

 

வடமொழியில் மகரிஷி வால்மீகி இயற்றிய இராமாயணத்தையே தமிழில் கம்பர் இயற்றினார்.

( ஸ்ரீ ராமனின் சரிதம் வால்மீகி மற்றும் கம்பரைப் போலவே இன்னும் சிலரால் வேறு சில மொழிகளில் இயற்றப்பட்டுள்ளது. ரங்கநாதர் - தெலுங்கு, மாதவ் கண்டளி - அஸ்ஸாமி, துளசி தாசர் - இந்தி, பலராம்தாஸ் - ஒரியா, நரஹரிகவி - கன்னடம், துஞ்சத்து எழுத்தச்சன் - மலையாளம், பிரேமாநந்தர் - குஜராத்தி, ஸ்ரீதரா - மராத்தி மற்றும் கிர்த்திவாஸ் - வங்காளம். )

இவர் சோழநாட்டில் திருவழுந்தூரில் உச்சவர் குடியில் தோன்றினர் என்பர். இவர் தந்தை ஆதித்தன் என்பர். இவர் திருவள்ளுவர் மற்றும் ஔவை முதலியவருடன் பிறந்தவர் என்பர். இவர் சிறு வயதில் காளிகோவில் கம்பத்தின் கீழ் கிடந்ததால் கம்பர் எனவும், இவரது ஆசிரியரின் கம்பங்கொல்லையை காவல் காத்தமையால் கம்பர் என அழைக்கப்பட்டார் என்பர். ஆனால் இக்கருத்துக்கள் ஒப்பத்தக்கவையாகத் தோன்றவில்லை. இவரை " சடயப்பவள்ளல் " என்பவர் உலகம் வாழ்த்தும் வண்ணம் ஆதரித்தார் என்பதை கம்பராமாயணத்தில் ஆயிரம் பாட்டிற்கு ஒரு பாடல் இவரைப் புகழ்ந்து பாடியதிலிருந்து அறியலாம்.

 

எவ்வாறு கச்சியப்பருக்கு பிரணவ வடிவானவனும் சிவானந்த குருவாகியவனுமான முருகனே வந்து திகடசக்கரம் என்று ஆரம்பிக்கும் பாவிற்கு அர்த்தம் கூறி அனைவரது சந்தேகத்தையும் தீர்த்து வைத்தாரோ அதேபோல் கம்பராமாயணத்தைக் கம்பர் திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யும்போது பெருமாளே கம்பரின் கவியை அங்கீகரித்தார். கம்பராமாயணத்தில் இரணிய வதம் பற்றிக் கம்பர் படியது குறித்துச் சர்ச்சை எழும்பியது. இராமாயணத்தில் இரணிய வரலாறு வரக்கூடாது இதை ஏற்கமாட்டோம் என அறிஞர் பலரும் உரைக்கவே, அவ்வாறாயின் எம்பெருமான் திருமுன்பு அரங்கேற்றம் நடத்துவோம் அவர் ஒப்புக் கொண்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான், என்று முடிவு கட்டி இவ்விடத்தே வந்து கம்பர் தமது கம்பராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் வேளையில் இச்சனதிக்குள் மேட்புரத்தில் எழுந்தருளியுள்ள அழகிய சிங்கப்பெருமாள், கம்பரின் ராமகாதையை நாம் அங்கீகரித்தோம் என்ற கர்ஜனையுடன் பெருமுழக்கம் செய்த்தாக திருவரங்க ஸ்தல வரலாறு கூறுகிறது. ( இந்த அழகிய சிங்கர் கோவில் 5 வது திருச்சுற்றுக்குள் உள்ளது. ) இக்கோவிலில் இவ்விடம் தாயார் சன்னதிக்கு எதிரே கம்பர் மண்டபம் எனும் பெயரில் நின்றிலங்குகிறது.

 

கம்பனுடைய இராமாயணத்தைப் படிப்பவர்கள், அந்த சொல் அலங்காரத்தில் மயங்குவதோடு, அவர் வர்ணிக்கும் காட்சிகளை, சம்பவங்களையெல்லாம் அப்படியே தத்ரூபமாக, மனக்கண்முன் கொண்டுவர முடியும், அத்தகைய நடைச்சிறப்பு மிக்க பாடல்கள் அவை. அப்படி ஒரு சிறப்பினை, திறமையினை யாரும் எளிதில் அடைந்துவிட முடியாது. அதனால்த்தான் ஒருவர் தன்னால் முடியக்கூடிய வேலையை " இது ஒன்றும் கம்ப சித்திரம் போலக் கடினமான வேலையல்ல " என்று சவால் விடும் தோரணையில் சொல்வது வழக்கமாயிற்று ( இதுவே மருவி பேச்சு வழக்கில் கம்ப சூத்திரம் என ஆகிற்று ).

 

சுவைகள் பலவற்றுக்கும் நிலைக்களமாக விளங்கும் கம்பராமாயணத்தை ஆக்கி உதவிய கம்பநாடாரின் பெருமையினைத் தமிழுலகமேயன்றி ஏனைய கவியுலகங்களும் கண்டுணர்ந்து கொண்டாடுகிறது. " கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு " என்று பாடிய கவிஞர் பாரதியாரின் கவிநயம் எண்ணியெண்ணி இன்புறுதற்கு உரியதாகும். ஓர் உயர்ந்த கவியின் இயல்பை அளத்தற்கு மற்றொரு கவியுள்ளமே சிறந்த கருவியாகும். அம்முறையில்

மகாகவி காளிதாசரின் இரகுவமிசம் என்னும் பெருங்காவியத்தை அருந்தமிழிற் பாடிய அரசகேசரி என்னும் புலவர்,

" கற்றார் கல்வியிற் பெரிதாந் தமிழ்க்கம்ப நாடான்

உற்றாங் குரைத்தான் உரையாதன ஓது கிற்பாம் "

என்று கவியரசராகிய கம்பர் பெருமையில் ஈடுபட்டுப் பாராட்டுவராயினர். கம்பர், வரலாற்று மாந்தர் இயல்புகளைத் தக்கவாறு அவர்தம் வாய்மொழியில் வெளிப்படுத்துந்திறன் வியத்தற்குரியது. " செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர் " என்று கம்பர் குறிப்பிடும் கவிஞர் இலக்கணத்திற்கு அவரே ஓர் அரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

 

கவியரசர் கம்பர் இயற்றிய வேறு சில நூல்கள், சரசுவதியந்தாதி, சடகோபரந்தாதி, ஏரெழுபது, குலோத்துங்கன் கோவை முதலியனவாம். இவர் மகனாகிய அம்பிகாபதி இயற்றியதே அம்பிகாபதிக் கோவை.

 

கச்சியப்பர் ( கச்சியப்ப சிவாச்சாரியார், கச்சியப்ப முனிவர் ) :

 

காஞ்சியில் இருமொழி வித்தகராகவும், பெருங்கவிஞராகவும் விளங்கிய கச்சியப்பரை அங்கு வாழ்ந்த கற்றோர் பலரும் முருகன் அருள்வரலாற்றை முத்தமிழில் பாடித் தருமாறு பலகால் வேண்டினர். முருகப்பெருமானும் ஒருநாள் கச்சியப்பர் கனவில் தோன்றி " அன்பனே ! நமது புராணத்தை நற்றமிழிற் பாடுக " என்று கட்டளையிட்டருளினார். தில்லைக் கூத்தனாகிய சிவபெருமான் " உலகெலாம் " என்று சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்தது போலவே கச்சியப்பருக்கு வேலவன் " திகடசக்கரம் " என்று முதல் எடுத்துக்கொடுத்தது மட்டுமின்றி காஞ்சியில் நூல் அரங்கேறும் போது திகடசக்கரம் என்று ஆரம்பிக்கும் பாவிற்கு வீரசோழிய முறைப்படி அர்த்தம் கூறி அனைவரது சந்தேகத்தையும் தீர்த்து வைத்தார்.

 

அது மட்டுமில்லாது நாள்தோறும் தாம் பாடிய ஓலைச்சுவடிகளை நள்ளிருட் பூசை முடிவுற்றதும் முருகப்பெருமான் திருவடியில் வைத்துப் பின் கதவை அடைத்து வருவார். மறுநாள் காலையில் திருக்கதவு திறக்கும் போது, அவர் வைத்து வந்த சுவடிகளில் திருத்தங்கள் இருக்கும். அத்திருத்தங்களை முருகப்பெருமானே செய்தருளினான் என்றால் இவ்வித்தகரின் அருளையும், பெருமைகளையும் என்னவென்று சொல்ல !. கம்பரே கந்தபுராணம் பாட விரும்பினார் என்றும், கச்சியப்பர் அதனை முன்னரே பாடியுள்ளார் என்பதை அறிந்து பின் இராமாயணத்தைப் பாடினார் என்றும் காது வழிச் செய்தி ஒன்று வழங்குகிறது. இதுகுறித்துக் " கச்சியப்பர் எனும் சுறாவா கந்த புராணக் கடலைக் கலக்கியது ? " என்று கம்பர் வினவியதாகப் பழமொழி ஒன்றும் உள்ளது. கட்டளைக்கலிப்பா பாடுவதே கடினம் என்பர், இப்புராணத்தில் இப்பாக்களே பரவிவந்துள்ளன எனில் இவர் புலமை காண்க.

 

அடுத்ததாக கம்பராமாயணம் மற்றும் கந்த புராணம் ஆகிய இரண்டிலும் இடம்பெறும் காட்சிகளில் உள்ள ஒற்றுமைகள் யாதெனப் பார்ப்போம்.

 

இராமனும் வேலனும் :

 

இலங்கையில் இராவணன் நிறுவிய அரசு இராமனது வில்லால் அழிந்தது. வீரமகேந்திரத்தில்

( இது சூரனால் உப்புக்கடலுக்கு நடுவில் இயற்றப்பட்ட மாயப்பட்டணம். இந்தப்பட்டணத்திற்கு எட்டுத்திக்கிலும் ஹேமபுரி, தேவபுரி, லங்காபுரி, நீலபுரி, சுவேதபுரி, அசுரபுரி ( வடக்கு - சிங்கமுகன் ), வாமாபுரி, பத்மபுரி, ஆகியன இருந்தது.இதோடுகூட தாரகனுக்காக மாயாபுரியும் இயற்றப்பட்டது. ) சூரன் அமைத்த அரசு முருகனது வேலால் முறிந்தது. இராவணன் நெடுந்தவம் புரிந்து பெற்ற வரத்தால் தேவரையும் மூவரையும் வென்றான். மாநில மன்னர் அவன்படை வலி கண்டு அஞ்சி அடி பணிந்தனர். இத்தகு வீரம் செறிந்த வேந்தன் கும்பகருணன் ( இவன் உறங்குவது ஐந்து மாதம் எழுந்திருந்து காரியங்கள் பார்ப்பது ஒரு மாதம் ) முதலான தம்பியரோடும், மேகநாதன் முதலிய மைந்தரோடும் இலங்கையில் சிறப்பாக விளங்கினான். வானவர் அந்த நாட்டில் வாயடைத்துப் பணிபுரிந்தனர். எங்கும் அறம் தளர்ந்து மறம் வளர்ந்தது. இவ்வாறே சூரனும் கடும் தவம் புரிந்து அண்டங்கள் அனைத்தும் ஆளும் பலம் பெற்றான். ( சூரன் தான் செய்த தவங்களின் பயனால் 1008 அண்டங்களையும் 108 யுககாலம் வரை அரசாளவும், எங்கும் சஞ்சரிக்கக்கூடியபடியும், அனைத்து தேவர்களையும் வெல்லும் சக்திவாய்ந்த ஆயுதங்களையும் சிவபெருமானிடம் இருந்து பெற்றான். அவனது மரணம் என்றுமே அழிவற்ற " சிவசக்தியால் " மாத்திரம் ஏற்படுமென்று அறிவுறுத்தப்பட்டது. சூரனுக்குப் பயந்து தேவர்கள் தவம் செய்த இடமாகக் கூறப்படுவது திருபெருந்துறை ( தேவசபை - சுந்தரபாண்டிய மண்டபம் ). சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கிய தலம் புகலி என்கிற சீர்காழி. ) விண்ணவரைப் பிடித்து வந்து தன் நகரமாகிய வீரமகேந்திரத்தில் சிறை வைத்தான்.சிங்கமுகன் முதலான தம்பியரோடும், பானுகோபன் முதலிய மைந்தரோடும் சிறப்பாக விளங்கினான்.

 

உலகில் மறம் பெருகி அறம் அருகும் பொழுது இறைவன் தோன்றி மறத்தினை வேரோடும் அறுத்து அறத்தினை சீரோடு நிறுத்துவான் என்பது ஆன்றோர் கருத்தாகும். அதற்கேற்ப அரக்கர்கோன் செய்த கொடுமையால் இராமன் அவதரித்தான். அசுரர்கோன் விளைவித்த தீமையால் வேலன் அவதரித்தான். சீதையை சிறை மீட்க இராமன் வில்லுடன் எழுந்தான். சயந்தன் முதலான வானவரை சிறை மீட்க முருகன் வேலுடன் விரைந்தான்.

 

முன்பொருசமயம் மகாவிஷ்ணு பிரம்மலோகம் வந்தார், அவரை பிரம்மாதிதேவர் அனைவரும் வரவேற்று உபசரித்தனர். அங்கிருந்த சனத்குமாரர் மட்டும் பேசாதிருந்து விட்டார். இதனால் கோபம் கொண்ட விஷ்ணு " சனத்குமாரரே ! நீர் கர்வம் கொண்டு அலட்சியமாய் இருந்துவிட்டீர் ஆதலால் நீர் சரஜனமா ( முருகன் சரவணபவன் ) எனப்பெயர் கொண்டு ஆவிர்பவித்து காமம் கொண்டு அலைவாய் " எனச் சபித்தார். இதனால் வேதனையுற்ற சனத்குமாரரும் " பகவான் தாங்களும் ஸர்வக்ஞன் என்ற எண்ணம் கொண்டிருக்கின்றீர், அதை நீர் சிலகாலம் விட்டு அஞ்ஞானியாய் திரிவீராக " என்று சாபம் கொடுத்தார் என்றும் யோகவஸிஷ்டம்( இது வால்மீகி மகரிஷியால் எழுதப்பட்டது. பாலகாண்டத்தில் வஸிஷ்டரால் இராமனுக்கும் பின் வால்மீகி மகரிஷியால் பரத்வாஜருக்கும் போதிக்கப்பட்டது, இது ஞான வஸிஷ்டம் என்றும் சொல்லப்படுகிறது. 32,000 சுலோகங்கள் அடங்கியிருக்கின்றன. இதை சுமார் 6000 சுலோகங்களில் சுருக்கி பின்னாளில் எழுதியவர் அபிநந்த பண்டிதரென்பவர். இதை இன்னும் சுருக்கி சுமார் 1700 சுலோகங்களாக எழுதியவர் ஞானாந்தபாரதீ சுவாமிகள் ) பேசுகிறது.

 

 

அதனால்த்தான் முருகன் தினைப்புலத்தில் வள்ளியைத் தேடி விரகமுற்றார் எனவும், இராமன் சீதையைத் தேடி சோகமடைந்தார் என்றும் தோன்றுகிறது.

 

அச(ஜ)முகியும் சூர்ப்பனகையும் :

 

சூரன் தங்கையாகிய அசமுகி தன் தமையன் அழிந்தொழிய வழிதேடினாள். இலங்கை வேந்தன் தங்கையாகிய சூர்ப்பனகை தன் அண்ணன் அரசோடொழிதற்கு அடிகோலினாள். அழகே உருவாயமைந்த சீதையைக் கவர்ந்து சென்று தன் அண்ணனிடம் சேர்க்க எண்ணினாள் சூர்ப்பனகை, அதனால் இராமன் இளவலாகிய இலக்குவனால் மூக்கறுபட்டாள். அவ்வாறே இந்திரன் மனைவியை தன் தமையனிடம் கவர்ந்து செல்லத் துணிந்த அசமுகி இந்திரானியைக் கண்ணுற்று, அவளைப் பலவாறு இழிந்துரைத்து எடுத்துச் செல்ல முயன்றாள். அவ்வேளை அச்சோலையைக் காவல் காத்த மாகாளன் வெளிப்பட்டு அசமுகியின் கையை வாளால் வெட்டி வீழ்த்தினான். சூர்ப்பனகை இராவணனிடம் முறையிட்டது போல் அசமுகியும் சூரனிடம் முறையிட்டு அரசொழிய வழிவகுத்தாள்.