Tuesday, June 6, 2017

Kamba ramayanam with explanations

Courtesy:http://kambaramayanam-thanjavooraan.blogspot.in/2010/05/3.html

   உரை நடை வடிவம்:    
                                                                        கம்பர் இயற்றிய இராம காதை யுத்த காண்டம் - 3ஆம் பாகம். யுத்த காண்டத்தின் முந்தைய பகுதியின் இறுதியில் கும்பகர்ணனுடைய வீர சாகசச் செயல்களையும், இராகவனது வாளி அவன் தலையைக் கொண்டு போய் கடலில் போட்ட வரலாற்றையும் பார்த்தோம். இனி இலங்கை மன்னன் இராவணன் சீதைபால் வைத்த பொருந்தாக் காமத்தால், தனது சிறுமைகளிலிருந்து விடுபடாதவனாக, மேலும் மேலும் தவறான வழிகளையே மேற்கொள்கிறான் எனும் வரலாற்றைப் பார்க்கலாம். இராவணன் தனது அமைச்சனான மகோதரனிடம் சீதையை நான் எப்படியும் அடைவதற்கு ஒரு நல்ல உபாயம் சொல் என்று கேட்கிறான். "சொல்கிறேன்" என்று மகோதரன் ஓர் சூழ்ச்சியைக் கூறுகிறான். "மருத்தன் என்றொரு அரக்கன், மாயையும், வஞ்சனையும் உடையவன். அவனை ஜனக மன்னன் போல உருவத்தை எடுத்துக் கொண்டு, சீதையிடம் கொண்டு செல்வோம். தன் தந்தை துன்பப் படுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அவள் உன்னை ஏற்றுக் கொள்வாள்" என்றான் மாயையில் வல்ல மகோதரன். இப்படியொரு ஆலோசனை வழங்கிய மகோதரனை, இராவணன் மார்போடு தழுவிக் கொண்டு, "அவனை இங்கே கொணர்ந்து அவ்விதமே செய்" என்றான். தீய எண்ணங்களோடு இராவணன் அசோகவனத்தை அடைகிறான். அங்கே சீதையிடம் தான் காமவசப்பட்டு தளர்வுறும் நிலையை எடுத்துரைத்துத் தன்னை ஆதரித்து அருளும்படி நிலத்தில் விழுந்து மன்றாடிக் கேட்கிறான். இந்த அரக்கனது செயலைக் கண்டு ஜானகி அச்சமுற்றாள். தூர்த்தனாகிய இராவணனை ஏறிட்டும் பார்க்கவில்லை. கீழே கிடந்ததொரு துரும்பை எடுத்தாள், அதை கீழே போட்டு அதனை இராவணனாக எண்ணிக்கொண்டு, தன் ஆருயிர் நாயகனாகிய இராமனையன்றி வேறு எவரையும் எண்ணாத தன் உள்ளத்து உறுதியை அறிவுறுத்துகிறாள். தீயோன் இராவணனைப் பார்க்கவும் விரும்பாமல் வேறு புறம் திரும்பிக் கொள்கிறாள். இராவணனுக்குத் தாங்க முடியாத அவமானம், கோபம். சீதையிடம் "நின் கணவனாகிய இராமனைக் கொல்வேன். அவனது சுற்றத்தார் அனைவரையும் அயோத்தியிலும், மிதிலையிலும் கொல்வேன். அவர்களைக் கொண்டு வர ஆற்றல் மிக்க அரக்கர்கள் சென்றிருக்கிறார்கள்" என்றான். வஞ்சனை மிக்க அவன் சொற்கேட்டு பெரும் துயரமடைந்தாள் சீதை. அந்த நேரம் மகோதரன் ஜனகன் வேடமிட்ட அரக்கனை, அவள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். தனது தந்தை அரக்கர்களிடம் சிறைப்பட்டுக் கிடப்பதைக் கண்டு ஜானகி பலவும் சொல்லி அரற்றுகிறாள். மாயா ஜனகன் இராவணனை வணங்குவதைக் கண்டு பறவைக் குஞ்சைப் போல பதறுகிறாள். ஜனகனாக வேடமிட்டவன் பொய்யானவன் என்பதை ஜானகி உணரவில்லை. தன் தந்தையின் துன்பத்தைப் போக்க வழி தெரியாதவளாய்த் தவிக்கிறாள். வலிமையற்ற பெண்ணான எனக்குத்தான் துயரம் என்றால், வேந்தனாகிய உனக்கும் இப்படி பகைவனை வணங்கிடும் இழிநிலை வந்ததே என்று வருந்தினாள். என் தந்தையையே பற்றிக் கொணர்ந்த இவர்களுக்கு, தவ நிலையில் இருக்கும் பரதனைப் பிடித்துக் கொண்டு வருதல் எளிதானதுதானே, அரியது அல்லவே! இப்படி வருந்தித் துயரத்தில் உழன்ற சீதையிடம் இராவணன் அவைளைத் தன் விருப்பத்திற்கு இசையுமாறு வேண்டுகிறான். வெகுண்டெழுந்த சீதை, "தூர்த்தனே! என் நாயகன் அம்பிற்கு நீயும் உன் சுற்றமும் அழியப்போவது திண்ணம்" என்றாள். "நீ இராமனின் அம்பு பாய்ந்து போர்க்களத்தில் வீழ்ந்து கிடப்பாய். காக்கைகள் உன் கண்களைத் தன் அலகினால் கொத்தித் தின்னும். புலால் தின்ற பேய் வாய்கள் உன்னைச் சுற்றி ஆடும். போரிலே உன் மகனை இலக்குவன் கொல்வான்; அவன் உடம்பை பிணம் உண்ணும் நாய்கள் தின்னும்; நீ இறந்த மகனை எண்ணி வாய்விட்டு அலறப் போகிறாய்!" இப்படி பிராட்டி சொன்னதும், வெகுண்டெழுந்த இராவணன், கைகளைப் பிசைந்து கொண்டு, பற்களைக் கடித்து, வாயை மடித்து, சீதையை நோக்கி விரைவாக வந்தான்; அப்படி வந்தவனை மகோதரன் தடுத்தான். "இவளை நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இவள் தந்தை ஜனகன் சொன்னால், இவள் கேட்பாள்" என்றான். கோபம் தணிந்து இராவணன் திரும்பி வந்தான். அப்போது ஜனகன் வேடமிட்ட மாய அரக்கன் சீதையிடம், "தந்தை உன் முன்னால் இறக்கும்படி நீ பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயோ? உன்னால், பிற உயிர்கள் அழிவது நல்ல செயலோ? நீ இலங்கை வேந்தர்க்கு உடன்பட்டு அவனை ஏற்றுக் கொள்வது உனக்கு ஒரு தீங்காகுமோ?" என்றான். மாயா ஜனகனின் சொற்களைக் கேட்ட சீதை அடைந்த நிலையை என்னவென்று சொல்வது? "அவ்வுரை கேட்ட நங்கை, செவிகளை அமையப் பொத்தி வெவ்வுயிர்த்து, ஆவிதள்ளி, வீங்கினள் வெகுளி பொங்க 'இவ்வுரை எந்தை கூறான், இன் உயிர் வாழ்க்கை பேணி செவ்வுரை அன்று இது' என்னாச் சீறினாள், உளையச் செப்பும்".

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

No comments:

Post a Comment