Thursday, June 1, 2017

Gorakumbha

Courtesy: Sri.JK.Sivan

இழந்த கைகளை விட்டலன் திரும்ப இணைத்து விட்டானே.
விட்டலன் அருள்.. Good Story by Shri. J.k. Sivan
**********************************************************************
கோரா கும்பர் பற்றற்ற துறவியாக, தனது மனைவி விட்டலனின் மேல் வைத்த ஆணைக்குக் கட்டுப்பட்டு, அவள் விரல் நுனி கூட தன் மீது படாதபடி ஒரே வீட்டில் வாழ்ந்த நிலையில் அவருக்கு அவர் மனைவி சாந்தி தன் தங்கை காமியையும் கல்யாணம் செய்து வைத்து இருவரையும் "ஒன்றாகவே நடத்துங்கள் என்று அவள் தந்தை வேண்ட, வாக்கு கொடுத்த கோரா, காமியையும் சாந்திபோலவே பாவித்து அவளையும் தான் தொடாமல் வாழ்ந்து வந்தார்!.
தலைவலி போய் திரும்பி திருகுவலியாக வந்த நிலையில் காமியும் சாந்தியும் பலநாள் யோசித்து ஒருநாள் இரவு கோரா தூங்கி கொண்டிருக்கும்போது ஆளுக்கொரு பக்கமாக அவர் அருகில் படுத்து அவர் இரு கைகளையும் எடுத்து ஆளுக்கு ஒன்றாக தம் மீது போட்டுகொண்டனர். தூக்கம் விழித்து எழுந்த கோராவுக்கு தூக்கி வாரி போட்டது. தன் கைகள் அவர்கள் இருவரையும் தொட்டது கண்டு துடித்து போனார். விட்டலன் மேல் இட்ட ஆணையை மீறுவது என்பது விட்டலனையே அவமதித்தது போல் அல்லவா?
மீறியாகிவிட்டதே. இப்போது. என்ன தண்டனை இந்த அபராதத்துக்கு? முடிவெடுத்து விட்டார் கோரா. ஆணை மீறிய தன்னுடைய அந்த இரு கைகள் இனி தன் உடலில் இருக்கக் கூடாது. வீட்டின் உள்ளே சென்று தேடினார். ஒரு கூரான கத்தி கண்ணில் பட்டது. விட்டலனை மனதில் நினைத்தார். கண்களில் நீர் ஆறாக பெருக கண் இமைக்கும் நேரத்தில் இரு கைகளும் துண்டாயின. சகோதரிகள் அழுது தீர்த்தனர். தம்முடைய முட்டாள் தனத்தால் அவர் கைகள் இழக்க காரணமாகிவிட்டோமே என்று கதறினார்கள். அவர் காலருகில் விழுந்து தம்மை மன்னிக்க வேண்டும் என்று கெஞ்சினார்கள்.
"அவன் மேல் இட்ட ஆணை மீறப்பட்டதால் விட்டலன் தானே மன்னிக்க வேண்டும் வாருங்கள் அவனிடம் செல்வோம்" என்றார் கோரா.
பண்டரிபுரம் சென்று விட்டலனிடம் மன்னிப்பு கேட்க மூவரும் சென்றனர். அன்று ஆடி ஏகாதசி ஆகையால் எண்ணற்ற பாண்டுரங்க பக்தர்கள் குழுமியிருந்தனர் பண்டரிபுரத்தில்.சந்திர பாகா நதியில் நீராடி அவர்கள் பாண்டுரங்கன் சந்நிதியில் நின்றபோது தெய்வீகமான ஒரு குரல் அபங்கங்களை பாடிக்கொண்டிருந்தது. ஆம். நாமதேவர் தான் தம்மை மறந்தநிலையில் பாண்டுரங்கனோடு இசையில் ஒன்றியிருந்தார். அருகில் ஞானேஸ்வர், நிவ்ரித்தி நாதர், முக்தாபாய் போன்ற பரம பக்தர்களும் விட்டலன் பஜனையில் கலந்து கொண்டு அனைவருமே பேரானந்தத்தில் மூழ்கியிருந்தனர்.
அபங்கங்கள் விட்டல் பஜனையில் பாடும்போது பாகவதர்கள், ரசிகர்கள், பக்தர்கள் அனைவரும் சேர்ந்தும் பாடவேண்டும். பஜனைக்கு தக்கவாறு ஆடுவதும், தலையசைப்பதும் கைகளை தட்டுவதும் வழக்கம். அன்றும் அப்படியே அனைத்து பக்தர்களும் நாமதேவர் "கை தட்டி அனைவரும் பாடுங்கள்" என்று கேட்டுக் கொண்டபோது அவ்வாறே கர ஒலி எங்கும் வியாபிக்க கோரா தன்னை மறந்த நிலையில் தன் கைகள் இல்லை என்ற நினைவே இல்லாமல் கைகளை தட்டி பாட முயற்சித்தபோது. அவர் கைகளிலிருந்தும் ஒலி எழுந்ததே! என்ன ஆச்சர்யம். இழந்த கைகளை விட்டலன் திரும்ப இணைத்து விட்டானே.
"விட்டலா,விட்டலா என்னே உன் மகிமை" என்று எல்லோரும் வியந்து போற்றினர். கண்ணெதிரே ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறதே. வெட்டுண்ட இரு கைகளுடன் வந்த கோரா எப்பேர்பட்ட பாண்டுரங்க பக்தர் என்று உணர்ந்தனர். நாமதேவர் கோரா காலடியில் விழுந்தார். சாந்தி கதறினாள்."விட்டலா உன் பெருமை தெரியாமல் உன்னை ஏசி விட்டேனே. என் குழந்தை இறந்த துக்கத்தில் அறிவின்றி உன்னை பழித்ததை மன்னித்து விடு. எனக்கருள் செய்." எனக்கு குழந்தை இல்லையே என்ற துக்கம் அவ்வாறு செய்ய தூண்டியது " என கதறினாள்
"அம்மா", என்று அவள் இடுப்பருகில் ஒரு சிறு குரல் கேட்டதும் திடுக்கிட்டாள். சிரிப்பால் அவளை மயக்கியவாறே அவர்கள் குழந்தை அவள் இடுப்பை பிடித்துக் கொண்டு நின்றது.''விட்டலா விட்டலா'' என்ற பக்தர்கள் குரல் வானை பிளக்க, ருக்மணி சாந்தியிடம் "உன் ஆணை இனி செல்லாது" எனவே நீங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கோராவுக்கு பணிவிடை செய்யுங்கள் இன்று சாந்தி காமி இருவரையும்
வாழ்த்தி அருளினாள்.
பண்டரிபுரத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் தெர்தொகி என்கிற ஊரில் கோராவின் சமாதி இன்றும் உள்ளது. அது அவர் வாழ்ந்த கிராமம். அங்கு குழந்தை மிதிபட்ட இடம் காட்டப்பட்டுள்ளது.

sollungo vittala vittala hari hari vittala..

Subramanian Jayaraman's photo.




No comments:

Post a Comment