Tuesday, June 27, 2017

Gnanananda giri swamigal & Periyavaa

அவருக்கு ஒண்ணும் ஆகல….

திருக்கோவிலூர் என்றாலே நம் அத்தனை பேருக்கும், உலகளந்த பெருமாளுடன், மற்றொரு மஹா அவதார புருஷரும் மனஸில் தோன்றுவார்.

ஆம்! பகவான் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள்தான்!

பாரதம் எப்பேர்ப்பட்ட புண்யபூமி! அள்ள அள்ள குறையாத அவதார புத்ர ரத்னங்களை பெற்றவள் நம் பாரதமாதா! நம்முடைய பெரியவா ஶரீரத்தோடு நடமாடிக் கொண்டிருந்த காலத்துக்கும் முன்பிருந்தே பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள். அவர் மஹா பெரிய யோகீஶர்!

அவருடைய வயஸு இத்தனைதான் என்று யாராலும் கூற முடியாது! அவர் வஸிக்கும் அந்த புண்ய இடத்தை தபோவனம் என்று கூறுவார்கள். குழந்தை மாதிரி களங்கமில்லா, பொக்கைவாய் சிரிப்புடன், அதே ஸமயம்அம்மா-வைப் போன்ற தாய்மையை, வாத்ஸல்யத்தை, அள்ளித் தருவார்.

மஹான்கள், வெளியில் வேறு வேறு தோற்றத்தில் இருந்தாலும், அத்வைதமான ஆத்மநிஷ்டையில் எல்லோருமே ஒன்றுதான்! அவர்களுக்குள் உயர்வு, தாழ்வில்லை!

வித்யாஸமெல்லாம், சுற்றி இருக்கும் கோஷ்டியில்தான்!

ஒருநாள் வழக்கம் போல் அவரை தர்ஶனம் பண்ண பக்தர்கள் வந்திருந்தார்கள். எப்போதும் ஆனந்தமாக அவரை தர்ஶனம் செய்பவர்கள் அத்தனை பேருமே, அன்று முகத்தில் ஏகக் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள்.

காரணம்?

ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள், முகத்தின் ஶாந்தமும், புன்னகையும் கொஞ்சங்கூட குறையாமல், அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ஒருமணி நேரமோ, ரெண்டுமணி நேரமோ என்றால், "ஸரி, இப்போது எழுந்து விடுவார்" என்று காத்திருக்கலாம்.

ஆனால் ஏறக்குறைய ஒரு வாரம், இப்படியே சிலை மாதிரி அமர்ந்திருந்த ஸ்வாமிகளை கண்டதும், கலங்கிவிட்டனர், அவருடைய ஶிஷ்யர்களும், பக்தர்களும்!

"ஸ்வாமிகள் இப்டி இருக்காரே! என்ன? ஏதுன்னே புரியலியே! அவாளோட ஸ்திதியை புரிஞ்சுக்கற ஶக்தியும் நமக்கு இல்லியே!…"

"காஞ்சிபுரத்துக்கு போயி, பெரியவாகிட்ட ஸ்வாமிகளோட ஸ்திதியை பத்தி சொல்லுவோம்…..அவர, விட்டா….யார் சொல்லுவா?.."

சில பக்தர்கள் கிளம்பி காஞ்சிபுரம் வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார்கள்.

"பெரியவா….தபோவனத்துலேர்ந்து வரோம்….. ஸ்வாமிகள்.. கிட்டத்தட்ட ஒரு வாரமா…..ஶரீரத்ல எந்த அசைவும் இல்லாம அப்டியே ஆடாம அசங்காம ஒக்காந்துண்டிருக்கார்!….. எங்களுக்கெல்லாம் ரொம்ப பயமா இருக்கு!……. "

பெரியவாளிடம் ஒரு அழகான புன்சிரிப்பு பிறந்தது….

"ஒண்ணும் கவலைப்பட வேணாம்! அவருக்கு ஒண்ணும் ஆகல!…… ஸமாதி நெலேல இருக்கார்!.…."

"நாங்க எதாவுது பண்ணணுமா.. பெரியவா….?"

" வேற ஒண்ணும் பண்ண வேணாம்….. ஸாம்ப்ராணி பொகைய போடுங்கோ!…. அது ஒருவிதமான ஆராதனை! ஸமாதி நெலேலேர்ந்து எழுந்துண்டுடுவார்!……"

மஹானை மஹானன்றோ அறிவர்! ஆதியான ஆத்மானந்தத்தோடு ஸமமாக பின்னிப் பிணைந்து, ஸமாதியில் உள்ளே ஒரே ஸ்வரூபமாக இருப்பவர்கள் மட்டுமே, மற்றவர்களை நன்றாக அறிவர் இல்லையா?

பக்தர்களுக்கு ஒரே ஸந்தோஷம்! பெரியவாளிடம் ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு திருக்கோவிலூர் வந்தனர்.

பெரியவா சொன்னபடிகமகம-வென்று நிறைய ஸாம்பிராணி புகையை ஸ்வாமிகள் இருந்த அறையில் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

"ஹரி ஓம்! ஹரி ஓம்!..."

ஸ்வாமிகள் ஸமாதி கலைந்து புன்னகை மாறாமல், எதுவுமே நடக்காதது போல் பக்தர்களுடன் பேச ஆரம்பித்து விட்டார்!

ஸதா க்ருஷ்ண விரஹத்திலேயே லயித்திருந்த பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாப்ரபு இம்மாதிரி ஸமாதி நிலைக்கு போகும் போது, அவருடைய காதில், ஹரி ஹரி ஹரி ! என்று உரக்க கூறினால்தான் அவருடைய ஸமாதி கலையும்.

ஸதா லோகாயதமான நினைவுகளிலேயே மூழ்கி ஸமாதி நிலையில் இருக்கும் நம் போன்ற அல்பங்களை நிஜரூபத்துக்கு கொண்டு வரத்தான், அவதாரபுருஷர்களும் பகவந்நாமத்தை நமக்காக, நம் காதுகளில் உச்சரிக்கிறார்கள், நம்மையும் உச்சரிக்கச் சொல்கிறார்கள்.


No comments:

Post a Comment