Monday, May 22, 2017

Thirunallur temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(37)*
🍁 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல....)
★★★★★★★★★★★★★★★★★★★★★
     🍁 *திருநல்லூர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:*
பஞ்சவர்ணோஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.

*இறைவி:*
கிரிசுந்தரி, பர்வத சுந்தரி, கல்யாண சுந்தரி.

*தலமரம்:* வில்வமரம்.

*தீர்த்தம்:* சப்தசாகர தீர்த்தம்.

சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள 128 தலங்களுள் இருபதாவதாகப் போற்றப்பெறுகின்றது.

*இருப்பிடம்:*
தஞ்சாவூர்.- கும்பகோணம் சாலையில் சென்று பாபநாசத்தை அடுத்தாக பிரிகின்ற வலங்கைமான் சாலையில் நான்கு கி.மீ சென்றோமோனாலால் இத்தலத்திற்கு வந்து சேர முடியும்.

*பெயர்க்காரணம்:*
பஞ்ச பூதங்களும் தன்னுள் அடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக, பரமன் ஒரே நாளில் ஐந்து முறை தன்மேனி வண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்.

தினந்தோறும் காலை முதல் மாலை வரை ஆறு நாழிகைக்கு ஒருமுறை நிறம் மாறும் ஈசன் திருநாமம் பஞ்சவர்ணோஸ்வரர்.

அமர்நீதி நாயனாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம்.

இவர்கள் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் இருக்கின்றது.

இது கோட்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.

கயிலை மலையிலிருந்து வாயுவால் ஏவப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றுதான் இத்தலம். (மற்றது ஆவூர்.) இதை சந்திரகிரி என்றும் வழங்கப்படுகிறது.

திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டயத் திருத்தலம்.

அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோல காட்சி தப்த இடம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்*1-ல் ஒரே ஒரு பதிகமான  *கொட்டும் பறைசீராற்* எனும் பாடலும், 3-ல் ஒரு பதிகமுமான  *பெண்ணமருந் திருமேனி* எனும் பதிகமும், 3-ல் ஒரு பதிகமுமான வண்டிரிய விண்டமலர் என்ற பதிகமும்,
*அப்பர்*4-ல் ஒரு பதிகமுமான *அட்டுமின் இல்பலி யென்றான் என்ற.பதிகமும்,* 6-ல் ஒரு பதிகமுமான *நினைந்துருகும் அடியாரை* எனத் தொடங்கும் பதிகமும், ஆக மொத்தம் ஐந்து பதிகங்கள் கிடைத்தன.

*கோவில் அமைப்பு:*
குடமுருட்டி ஆற்றின் தென்பகுதியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பளவுடன் அமைந்திருக்கிறது.

ஐந்து நிலைகளுடன் இராஜ கோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சியளிப்பதைக் கண்கள் கண்டதும், கைகளைத் தலைமேல் தூக்கி குவித்து *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தோனை வணங்கிக் கொள்கிறோம்.

கிழக்கிற்கு எதிரான திசையான மேற்கிலும் சிறியதான கோபுரமும் இருக்கிறது. அக்கோபுரத்தையும் தரிசித்துக் கொள்கிறோம்.

கருவறையான விமானம், பதினான்கு அடி உயரத்தால் அமைந்திருக்கின்றன. இவ்விமானம் கட்டுமலை மீது அமைந்திருக்கிறது. 

இராஜ கோபுரத்தில் ஒர் இடத்தில் அதிகார நந்தி இருப்பதைக் கண்டு வணங்கி கோபுரத்தைத் தாண்டி நடக்கிறோம்.

கோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் காட்சி தர குனிந்து தலயில் குட்டிக் கொண்டு வழக்கம் போல தொழுது கொள்கிறோம்.

அடுத்து இருக்கும் உயர்ந்த செப்பான கவசமிட்ட அழகிய கொடிமரம், பலிபீடம், இடபதேவர் இருக்க வணங்கிக் கொள்கிறோம்.

இவைகளைக் கடந்து சிறிது நடக்கிறோம்...சிறிது தூரம் தள்ளி *அயர்நீதி நாயனார்* வரலாற்றில் முக்கிய தொடர்புடையதான நான்கு கால்களுடன் அமையப் பெற்ற துலா (தராசு) மண்டபத்தில் துலா  இருப்பதைக் கண்டதும்,   அமர்நீதி நாயனாரின் வரலாறு நம் கண் காட்சியாகி வந்து நிழலாடிச் சென்றன.

இதனின் தென்கிழக்குப் புறத்தில் மடப் பள்ளி அமையப் பெற்றிருக்கிறது.

வெளிப்பிரகாரத்தில் நந்தவனம் உள்ளது.

நந்தவனத்திற்கு அடுத்ததாக அஷ்டபுஜ மகாகாளி கோயில் அமைந்திருக்கிறது.

நாம்,  இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்த போது, காசிப் பிள்ளையார் புன்னகைக்க கைதொழுது கொள்கிறோம். (இப்படி விநாயகரைத் தொழுத போது நமக்கு முன் சென்றவர்களும், பின் வந்தவர்களும் விநாயகரை வணங்காது சென்றனர். நாம் விநாயகரை குனிந்து வணங்கி நிமிர்ந்த போது, பின்னால் வந்தவர்களில் ஒருவர் தோள் மீது இடிக்கவும், அவர்கள் திரும்பிப் பார்க்க............

*(தெரியாது பட்டுவிட்டது எனச் சொல்வதைக் கூட ஏற்காது வேகமாக சென்றனர். அவர்கள் திரும்பிப் பார்த்து விட்டு வேகமாகச் சென்றதைப் பார்க்கும் போது, *நாங்கள் சுவாமியைப் பார்க்கப் போகிறோம் என்ற அர்த்தம் தெரிந்தது. ஆனால் கோவிலுக்கு வருபவர்கள் அதிகாரத்திலிருக்கும் தெய்வங்கள், முதல்வர்கள், துவாரபாலகர்களை வணங்காது உத்தரவு கேளாது செல்வது கூடாது.  இவ்விதம் செய்வது பாவம்.)*

விநாயகரிடம் விடைபெற்று நகர, இதன் தென்கிழக்கில் தேவர்கள் வணங்கப் பெற்ற லிங்கங்கள் இருக்கின்றன.

இங்கிருக்கும் சோமாஸ்கந்த மூர்த்தி தனிப் பெரும் கோயிலாகக் கொண்டு அருளுகிறார். இவரிடமும் வணங்கி அருளைப் பெற்றுக் கொள்கிறோம்.

முருகன் வள்ளி தெய்வானையுடன் சேர்ந்து நின்ற கோலத்தைக் கான சரணம்.சொல்லிப் பணிந்தெழுகிறோம்.

லட்சுமியும், சப்த மாதர்கள் இருக்கிறார்கள்.

திருமாளிகைப் பத்தில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், குந்திதேவி, அமர்நீதியார், அமர்நீதியாரின் மனைவியார் ஆகியோரின் சிலைவடிங்களைக் காணப்பெற்றுக் கொண்டோம்.

இவர்களுக்கெல்லாம் எதிர்புறத் திசையில் சண்டேசுவரர் சந்நிதியும், துர்க்கை சந்நிதியும் இருக்கிறது.

பதினான்கு அடி உயரத்துடன் கூடிய கட்டுமலையில் (செய்குன்றில்) கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதி கிழக்கு முகமாக இருக்கிறார். அவரைப்பார்த்து அருளை வேண்டித் திரும்புகிறோம்.......

சுவாமி சந்நிதியின் வடகிழக்கில் தனிக் கோயிலில் தெற்கு முகதிசையாக அம்பாள் கிரிசுந்தரி அமைந்து அருள் தருபவளாக இருப்பதால், விடுவோமா? பயபக்தியுடன் வணங்கிக் கொண்டோம்.

கோயிலின் எதிரில் திருக்குளம், பிரம்மதேவனால் கீழ்த்திசையில் *ரிக்*, தென் திசையில் *யஜுர்*, மேற்குத் திசையில் *சாம*, வடதிசையில் *அதர்வண வேதங்களையும்* குளத்தின் நடுவில் *சப்தகோடி மகா மந்திரங்களையும்,* *பதிணென் புராணங்களையும்* வைத்து தோற்றுவித்து, புனிதமாக்கப்பட்டது என்பதால், கும்பகோணம் மகாமகக் குளத்திற்கு இணையாக இக்குளம் விளங்குகிறது.

மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில் என்று கூறி, மாசி மக நாளின்போது, இக்குளத்தில் வந்து தீர்த்தமாடுவர்.

*தல அருமை:*
வைணவ ஆலயங்களில்தான் திருமாலின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தலையில் சூட்டுவது வழக்கம்.

சிவாயலங்களில் இவ்வழக்கொழுக்கம் எவ்வாலயத்திலும் இல்லை.

ஆனால், நல்லூர் திருத்தலத்தில் சிவனடி திருவடி பதிக்கப்பெற்ற முடியொன்றை, இத்தலத் தரிசனத்திற்கு வருகின்றவர்களுக்கு சூட்டுவது வழக்கம் இத்தலத்திற்கு மட்டுமே உள்ளதென்பதால் தரிசித்து, ஈசன் திருவடியை தலையில் ஏற்றுக் கொள்கிறோம்.

அப்பர் சுவாமிகள் திருச்சத்தி முற்றத்திற்கு வந்து, எமன் தன்னைக் கொண்டு போகும் முன் தன் தலை மீது திருவடியை சூட்டி அருளுமாறு இறைவனிடம் அப்பர் வேண்ட, அதற்கு ஈசன், *நீ நல்லூருக்கு வா!"* என கட்டளை பிறப்பித்தார்.

அதன்படி அப்பர் நல்லூருக்கு வந்து சிவனைப் பணிய இறைவன் திருவடி சூட்டப் பெற்றார்.

இவ்வரிய இந்நிகழ்வை இன்றளவும் சிவனடி திருவடி பதிக்கப் பெற்ற முடியொன்றை (சடாரியை) சூட்டும் வழக்கம் இருந்து வருகிறது.

பிருங்கி முனிவர் வண்டு வடிவம் கொண்டு வழிபட்டதால் சிவலிங்கத் திருமேனியில் துகள்கள் காணப்படுகின்றன.

சதுர ஆவுடையார் லிங்கத்திற்குப் பின்னால் அகத்தியர்க்கு திருமணக் கோலம் காட்டிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் இருக்கிறது. மறவாமல் பார்த்து அருளின்பம் பெறுங்கள்.

இருபக்கத்தில் திருமாலும் பிரமனும் காட்சி தர அகத்தியர் நின்ற நிலையில் வழிபடும் நிலையிலிருக்கிறார்.

இங்கிருக்கும் மூலவரின் பக்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு லிங்கங்கள் சிறப்பானதாக இருப்பதை அருட் பார்வையுடன் பணிந்து கை தொழுவுங்கள்.

*அமர்நீதி நாயனார் திருத்தொண்டு:*
அமர்நீதி நாயனார் சிவனடியார்களுக்கு திருத்தொண்டு புரிந்து வந்த சமயம், அவரை சோதிக்க எண்ணினார் சிவன், மறைநீதி ஓதும் சிவத்தொண்டர் போல் வேடம் தாங்கிக் கொண்டு, கையில் தண்டும், இடையில் கோவணமுமாக நாயனார் இல்லத்தை அடைந்தார்.

இல்லத்திற்கு வந்த அடியாரை (இறைவன்) வரவேற்ற நாயனார் அமுதுண்ண வேண்டினார். 

நீராடிய பின் விருந்துக்கு வருவதாகச் சொன்ன இறைவன், தன் கோவணம் ஒன்றை பத்திரமாக வைத்திருக்கச் சொல்லி விட்டுச் சென்றார்.

தன் திருவிளையாடலால் கோவணத்தை மறையச் செய்து விட்டு நீராடித் திரும்புபவர் போல் வந்து கோவணத்தைக் கேட்டார்.

அமர்நீதியார் வீடு முழுமையும் தேட கோவணம் காணாமற் போயிருந்தது.

கோவண மறைவுக்கு மன்னிக்க வேண்டினார் நாயனார்.

இறைவனான அடியார் கோவணத்திற்கு ஈடாக வேறொன்றை கேட்க நாயனாரும் சம்மதித்தார்.

துலாவில் ஒரு தட்டில் கோவணத்தை வைக்க, மறுதட்டில் கோவணத்துக்கு எதை வைத்தாலும் ஈடாகாமல் போகவே, கடைசியில் தன் குடும்பத்தோடு தராசில் அமர்ந்தார் நாயனார்.

நாயனாரின் பக்தியை மெச்சி அவருக்கு முக்தியை அளித்து தன் பாதம் சேர்த்துக் கொண்டார்.

*பூஜை:*
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 8.00 மணி முதல், பகல் 1.00 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்,
திருநல்லூர் கிராமம்-அஞ்சல்,
(வழி) சுந்தரப் பெருமாள் கோவில்-614 208
வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.

*தொடர்புக்கு:*
திருவாடுதுறை ஆதீனத்திற்குட்பட்டது.
நடராசன் (உள்துறை மணியம்)
93631 41676
04374-- 312857

          திருச்சிற்றம்பலம்.

*நாளை.......ஆவூர்ப் பசுபதீச்சுரம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*