Friday, May 26, 2017

Thirunallam temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
               *(தல தொடர். 52)*
🍁 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல..... )
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
        🍁 *திருநல்லம்.*🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:*: உமா மஹேஸ்வரர், மாமனி ஈஸ்வரர். பூமீஸ்வரர், பூமிநாதர்.

*இறைவி:*அங்கவள நாயகி, தேகசெளந்தரி.

*தல மரம்:*அரசுமரம்,13 தளம் உள்ள வில்வ மரம்.

*தீர்த்தம்:*, பிரம தீர்த்தம்.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள 128 தலங்களுள் இத்தலம் முப்பத்துநான்காவதாக போற்றப் பெறுகின்றது.

*இருப்பிடம்:*
கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ள ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் நகரப் பேருந்தில் சென்று கோனேரிராஜபுரம் கூட்டு ரோட்டில் இறங்கி ஒரு கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

*பெயர்க்காரணம்:*
பூமிதேவி பூசித்ததால் இறைவர் பூமிநாதர் என்றும், பூமிதேவியால் இக்கோவில் கட்டப்பட்டதால் பூமீஸ்வரம் என்றும் பெயர் பெற்றது.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 1-ல் ஒரே ஒரு பதிகமும்,
*அப்பர்* 5-ல் ஒரே ஒரு பதிகமும், ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.

*கோவில் அமைப்பு:*
ஊரின் நடுவே மூன்று நிலைகளுடனான இராஜ கோபுரத்தைக் கண்டதும் தலைக்கு மேல் தானாக உயர, கோபுரத்தை தரிசனம் செய்து வணங்கிக் கொண்டோம்.

கோவிலுக்கு இரண்டு பிராகாரங்கள் அமைந்துள்ளன.

குளக்கரையினருகே அரசு தலமரம் இருக்கின்றன.

முகப்பு வாயிலைக் கடந்து உள் சென்றதும் நீண்ட முன் மண்டபத்தைக் கண்டோம்.

இம்மண்டபத்தின் மேற்பாக உள்புறம் முழுமையும் அறுபத்து மூவர்களும், சிவமூர்த்தங்களும், பன்னிரண்டு ராசிக்கான அடையாள குறியீடுகள், மற்றும் மகரிஷிகள் வியாபித்திருக்க ஒவ்வொன்றையும் பொறுமையுடன் நிதானமாக அவ்வழகு வண்ண ஓவியங்களை ரசித்து ஆனந்தித்தோம்.

கவசமிட்ட கொடிமரத்தையும், அங்கேயிருக்கும் கொடிமரத்து விநாயகரையும், நந்தியையும் பலிபீடத்தையும் வழக்கம்போல் வணங்கிக் கொண்டோம்.

பிரகாரத்தில் செல்லும் பொழுது, சண்முகர் சந்நிதியில் அவரைக் கண்டு அவனருளைப் பெற்று நகர்ந்தோம்.
(இச்சந்நிதியின் இடப்பக்கமாய் உள்ள வழியைத் தொடர்ந்தால் அம்பாள் சந்நிதியை அடையலாம்.)

அடுத்ததாக இருக்கிறது வைத்தியநாதர் சந்நிதி. இவர்தான் புரூரவ மன்னனுக்கு ஏற்பட்டிருந்த குட்ட நோயைத் தீர்த்தொழித்தவர் ஈசன் இவர்தான்.

இத்தலத்திற்கு நீங்கள் செல்ல நேரும்போது, இச்சந்நிதியில் அமர்ந்து சில நிமிடங்கள் ஜபம் செய்யுங்கள். மன அமைதி பெறும். கூடவே உங்கள் ஜபத்திற்கு பலனுண்டு.

அடுத்திருக்கும் யாகசாலை மண்டபம், மகா கணபதி சந்நிதிகளைக்கண்டு வணங்கி வலம் முடித்து வாயிலைக் கடந்து உள் மண்டபத்தில் உள் நுழைகிறோம்.

மண்டபத்தின் இடபக்கமாய் பிரம்ம லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராச சபை, உற்சவத் திருமேனிகளைப் பாதுகாக்கும் அறை, நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், மற்றும் நவக்கிரகங்களைக் கண்டு ஆனந்தித்தும் வணங்கியும் நகர்ந்தோம்.

அடுத்து பைரவரைத் தொழுது வாயிலைக் கடக்கவும், மூலவர் சந்நிதியைக்.காண்கிறோம். மூலவர் சதுர பீடம். உயர்ந்த பாணம்.  மனமுருகிப் பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டோம்.

அம்பாள் சந்நிதிக்கு வந்தோம். அம்பாளின் நின்று அருள் பாலித்த கோலத்தைக் கண்டு ஆனந்தப் பெருக்கினால் கண்ணீர் உகுத்து வணங்கினோம்.

நடராஜ மூர்த்தத்தின் அழகைக் கண்டதும் , நம் கால்களுக்கு நடுக்கம் உண்டானது. அவ்வளவு நேர்த்தியான பக்தி அருள்மழை அவன் ஆடல் நயத்திலும், அவன் பார்வையிலும்.

பெரிய உயர்ந்த உருவம். புகழ்பெற்ற மூர்த்தி. நடராஜ மூர்த்தம் மிகவும் பேரழகு பொழிவு.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி,ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோரையும் கண்டு வணங்கி மகிழ்ந்து வெளி வந்தோம்.

அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததின் விளைவாக, கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.

பதினாறு சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.

மூன்று சண்டிகேஸ்வரர்கள் உள்ளனர்.

பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க சிவபார்வதி திருமணக் காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார்.

வரகுணபாண்டியனுக்காக சிவனும், பார்வதியும் பஞ்சலோகத்தின் குழம்பைக் குடித்து சுயம்பு மூர்த்தியாக நடராசர், சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர்.

மதுரை, உத்தரகோச மங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய மூன்று தலங்களிலும் நடராசருக்கு வீதி உலா கிடையாது.

பிரம்மாண்டமாக நடமாடும் இத்தல நடராசருக்கு மனிதருக்கு இருப்பது போலவே,உரோமம், மச்சம் ரேகை, நகம் ஆகிய அம்சங்களும் இருப்பது சிறப்பு.

இங்கிருக்கும் மக்களுக்கு நடராசர் ஆலயம் என்றால்தான் இக்கோயிலைத் தெரிகிறது.

இங்கிருக்கும் சனிபகவான் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். நளனும், அவன் மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அருள் பெற்றுள்ளனர்.

எனவே, மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனிபகவான் இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார்.

முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். 

மூலவர் உமாமகேசுவரர் சந்நிதி மேற்குப் பார்த்து உள்ளது. இக்கோவிலில் உள்ள மூலவர் உமாமகேசுவரர் மற்றும் மங்களநாயகின் சந்நிதியைத் தவிர இக்கோவிலில் உள்ள நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. 

இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் ஒன்பது அடி உயரம் உள்ளவர். நடராஜருக்கு ஏற்ற உயரத்தில் சிவகாமி அம்மைக்கும் செப்புச் சிலை உள்ளது. 

உற்சவ காலங்களில் தெரு உலா வருவதற்காக ஒரு சிறிய நடராஜர் செப்புச் சிலையும் இருக்கிறது. பெரிய நடராஜர் செப்புச் சிலை உருவம் மிகவும் கலை அழகுடன் காட்சி அளிக்கிறது. 

கோவிலின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. பூமாதேவி இத்தலத்து இறைவனை வழிபட்டிருக்கிறாள்.

தக்ஷினாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோருக்கும் இங்கு தனி சந்நிதிகள் இருக்கின்றன.

*தல பெருமை:*
இங்கு இறைவன் (வைத்தியநாதர்), புரூரவமன்னனின் குட்டநோயைத் தீர்த்ததாக சொல்லப்படுகிறது. (இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு என்று சொல்லப்படுகிறது).

*சிறப்புக்கள்:* 
கண்டராதித்த சோழன் மனைவியான செம்பியன் மாதேவியின் திருப்பணிப் பெற்ற தலம். கல்வெட்டில் இறைவன் 'திருநல்லம் உடையார் ' என்று குறிக்கப்படுகிறார். 

*கல்வெட்டுக்கள்:*
இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை. 

வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், *'நக்கன் நல்லத் தடிகள்'* என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது.

பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட, இங்குள்ள் மிக உயரமான நடராஜரின் சிலை, உலக ப்ரசித்தி பெற்றது. இந்த சிலை உருவாகியதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.

இந்த கோவிலில் ஒரு அழகான நடராஜர் சிலையை ஸ்தாபிக்கவேண்டும் என்று செம்பியன் மகாதேவியின் விருப்பம். தன் விருப்பத்தின்படி ஸ்தபதியிடம் ஒரு பஞ்சலோக சிலையை செய்ய ஆணையிட்டார். 

ராணியின் ஆணையின்படி ஸ்தபதியும் ஒரிரு சிலைகளை செய்ய அதை ராணி நிராகரித்தார். 

அவர்களுக்கு சிலை உயரமாகவும் உயிருள்ளது போல் தோற்றம் அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். 

இத்தகையான சிலையை குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் செய்து முடிக்கவேண்டும், அப்படி செய்யவிட்டால் ஸ்தபதியின் தலை சிரத்தேசம் செய்யப்படும் என்றும் கூறிவிட்டார்கள். 

கால அவகாசம் நெருங்க  ஸ்தபதிக்கு கவலையும் ஆதங்கமும் ஏற்பட்டது.

ராணியின் ஆசையின்படி ஒரு சிலையை செய்ய தனக்கு உதவுமாறு கடவுளை வேண்டிக்கொண்டார்.

அவர் கொதித்துக் கொண்டிருக்கும் பஞ்சலோகத்தை, தான் செய்துள்ள அச்சில்
ஊற்றுவதற்காக  தயாராக இருந்தார். 

இந்த சமயத்தில் அங்கு ஒரு வயதான தம்பதிகள் வந்தார்கள். அவர்கள் ஸ்தபதியிடம் குடிப்பதற்கு ஏதவது வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

சிலையை சரியாக செய்ய முடியவில்லை என்று மன விரக்தியும் கோபமும் கொண்டிருந்த ஸ்தபதி இந்த தம்பதிகளை சரியாக கவனிக்கவில்லை.  

*"வேண்டும் என்றால் இந்த பஞ்சலோகத்தை பருகுங்கள்"* என்று கூற, சற்றும் யோசிக்காமல் அவர்கள் அதை பருகிவிட்டார்கள். 

இதை கண்ட ஸ்தபதி ஆச்சரியம் அடைந்தார். கண் மூடி கண் திறப்பதற்க்குள் அந்த முதிய தம்பதி  நின்றுகொண்டிருந்த இடத்திலேயே நடராஜரின் சிலையாகவும் பார்வதியின் சிலையாகவும் தோன்றி நின்றனர்.

அப்பொழுது வேலை சரியாக நடக்கிறதா என்று காண ராஜாவும் ராணியும் அங்கு வந்தார்கள். 

சிலையை கண்டதுடன் அவர்களுக்கு ஆச்சிர்யமும் சந்தோஷமும் ஏற்பட்டது. சிலைகளில் நகங்களும் உடம்பில் உள்ள ரோமத்தையும் கண்டு அவர்கள் வியந்தன. 

இப்படி ஒரு அற்புதமான சிலையை எப்படி செய்ய முடிந்தது என்று ஸ்தபதியிடம் கேட்டார்கள். ஸ்தபதியும் நடந்ததை கூறினார். 

கதையை கேட்ட ராஜா இது இவரது கற்பனை என்று கோபம் அடைந்து தன் வாளை ஓங்கினார். சிலையின் வலது காலில் வாள் பட, வெட்டுப்பட்ட சிலையிலிருந்து ரத்தம் பீச்சியடித்தது. ராஜாவிற்கு குஷ்டரோகம் ஏற்ட்டது. 

தன் குற்றத்தை உணர்ந்த ராஜா ஈசனிடம் மன்னிப்பு கேட்டார். ஈசனும் ராஜாவிடம் இந்த நோயிலிருந்து குணமடைய 
இங்குள்ள வைத்யநாத சுவாமிக்கு நாற்பத்திரண்டு நாட்கள் அபிஷேகமும் பிரார்த்தனையும் செய்யுமாரு கூறினார். 

அதன்படி செய்த ராஜாவும் குணம் அடைந்தார். மகிழ்ச்சி அடைந்த மன்னன் கோவிலுக்கு காணிக்கையாக சிவன் சந்நிதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். வைகாசி விசாக நாளில் விழா நடக்கவும் ஏற்பாடு செய்தான்.

இங்குள்ள வைத்யனாதஸ்வாமி சகல நோய்களையும் தீர்த்து வைப்பார் என்று பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தன் குடும்பதில் ஒருவர் வைத்யனாதஸ்வாமியை வழிபட்டதால் கேன்சர் போன்ற கொடிய நோயிலிருந்து பூரண குணம் அடைவர்.

*திருவிழாக்கள்:*
வைகாசி மாதம் விசாகத்திலும்,
மார்கழி மாத திருவாதிரையிலும் இரண்டுபிரமோற்சவங்கள் வருடத்தில் நடக்கிறது.

*பூசை:*
காமீக ஆகம முறையில் நான்கு கால பூசை.

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 முதல் இரவு 8.30 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பூமீஸ்வரர், உமாமகேஸ்வரர் திருக்கோயில்,
கோனேரிராஜபுரம் அஞ்சல் 612 201,
மயிலாடுதுறை வட்டம்,.நாகை மாவட்டம்.

*தொடர்புக்கு:*
ஞானஸ்கந்த குருக்கள்.
0435--2449800 (கோவில்.)
0435-- 2449830 (வீடு.)

       திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்...திருக்கோழம்பம்.*

முக்திபேறு வேண்டச் செய்யும் நீங்கள், தர்மங்கள், மற்றும் அடியார்களுக்குத் தொண்டு செய்திருக்கிறீர்களா? அப்படியில்லையெனில் அத்தர்மத்தை முதலில் துவக்குங்கள்! ஏனெனில் *"முக்தி தர்மத்தின் மூலதானம்"*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment