Thursday, May 11, 2017

Thirukandiyur temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  (31)
🌸 சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர். 🌸
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
   🌸 திருக்கண்டியூர். 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

இறைவன்:
பிரம்மசிர கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வர், பிரம்மநாதர், ஆதிவில்வ வனநாதர்.

இறைவி: மங்கள நாயகி.

தலமரம்: வில்வம்.

தீர்த்தம்: நந்தி தீர்த்தம், தட்ச தீர்த்தம், பிரம்ம தீர்த்தங்கள்.

சோழ நாட்டின் காவிரி தென் கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் 12-வதாகப் போற்றப்படுகிறது இத்தலம்.

இருப்பிடம்: தஞ்சை- திருவையாறு பேருந்து சாலையில், தஞ்சையிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவு.

திருவையாற்றிலிருந்து மூன்று கி.மீ தொலைவு.

பெயர்க் காரணம்:
பிரம்மன் சிரத்தை சிவன் தம் சூலத்தால் கண்டனம் செய்த காரணத்தால் கண்டன புரம்- கண்டியூர் என்றாயிற்று.

இத்தலம் சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று.

அட்ட வீரட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர் 3-ல் ஒரே ஒரு பதிகமும்,
அப்பர் 4-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் இரண்டு  பதிகங்கள்.

கோவில் அமைப்பு:
ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டவை. கோபுரத் தரிசனம் செய்து கொள்கிறோம். வணங்கிக் கொள்கிறோம்.

இரண்டு பிரகாரங்களைக் கொண்டிருக்கிறது இத்தலம்.

கவசமிட்ட கொடிமரம்:- விழுந்து வணங்கி எழுகிறோம்.

நந்தி, பலிபீடங்கள் உள்ளன.

இடதுபுறமாக தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாகக் கொண்டு மண்டபத்துடனே இருக்கிறது.

தெற்குப் பார்த்த வண்ணமாக அம்மன் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறாள்.

இரண்டாம் பிரகாரத்தின் வலப்புறமாக விநாயகரும்,  இடப்புறமாக வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும், மற்றும் மகாலட்சுமி, இருக்கிறார்கள்.

இதற்கு எதிரான திசையில், நடராஜ சபை இருக்கிறது.

பின் வலப்புறமாக வரும் போது, விஷ்ணு துர்க்கை சந்நிதி அமைந்திருக்கிறது.

பைரவரும் பலவகையான விநாயர்களும், சூரியனும், அமர்ந்த கோலம் கொண்ட அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார்கள்.

சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாக இருக்கின்றன.

கோஷ்ட மூர்த்தங்களான பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் போன்றோர் மூர்த்தங்களும் அருளுகின்றன.

உள்வலத்தை முடித்து, பின் துவாரபாலகர்களை வணங்கிக் கொள்கிறோம்.

இடதுபுறமாக நவக்கிரகங்கள் சந்நிதி இருக்கின்றன.

துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில் சாதாதாப முனிவர் பெருமானின் உருவமும் உள்ளது.

அடுத்ததாக, சப்தஸ்தான லிங்கங்கள், பஞ்சபூத லிங்கங்கள், சாதா தாபருக்குக் காட்சி கொடுத்த காளத்தி நாதர் சந்நிதிகளும் இருக்கின்றன. ஒன்றையும் திசைமாறாது தொழுது கொள்கிறோம்.

நவக்கிரகங்களிலிருக்கும் சூரியன் இரு மனைவியருடன் காட்சி தந்து கொண்டிருக்கின்றார்.

மூலவர் சுயம்புவானவர்.

மூலவரின் பாணம் சற்று உயரமாகவே காட்சி தருகிறது.  வணங்க பார்த்த போது,,,,உள்ளார ஆனந்தமும், பக்தியின் வெளிப்பாடினால் குரல்வளை விம்முகிறது.

சுவாமி சந்நிதிக்குப் பக்கத்திலேயே பிரம்மன், சரஸ்வதி சிலா ரூபம் உள்ளன.

பிரம்மன் நான்கு முகங்களுடன், கைகளில் பூவுடனும், ஜபமாலை ஏந்தி இரண்டு கைகளும் பிரார்த்திக்கும் அமைப்பில் அமர்ந்திருக்கும் கோலத்துடனிருப்பதைக் காண்கிறோம்.

தல அருமை:
ஈசனுக்கு- ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு.

சிருஷ்டிகர்த்தாவான பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள்.

ஆதலால்தானோ என்னவோ,....பிரம்மன் முழுமுதற் கடவுள் என செருக்குற்றார்.

பார்வதியின் ஈசனிடம் வேண்டுகோள் வைக்க, சிவன் பைரவரை ஏவி விட, பிரம்மனின் தலையை இடக்கை நக நுனி மூலம் அழுத்தி நசுக்கி,  அதன் விளைவாக ஐந்தாவது தலை ஒட்டிக் கொண்டது.

அந்த கபாலத்துடன் பல சிவஸ்தலங்களை தரிசித்த பின் காசியை அடைந்தபோது, அவ்விடத்தில் அத்தலை அவரை விட்டு நீங்கிப் போயின.

சிற்பங்கள்:
கருவறையின் கிழக்குத் திசையான கோஷ்டத்தில் லிங்கோத்பவர் சிற்பம் இருக்கின்றது.

சிற்பத்துக்குக் கீழே வராஹம் காட்டப்பட்டுள்ளது.

மேல் மட்டத்தில் அன்னபட்சியைக் காட்டப்படவில்லை.

அன்னபட்சிக்கு மாற்றாக நான்முகன் வணங்கிக் கொள்வது போல சிற்பம் இடம் பெற்றிருக்கிறது.

இங்கு வைத்திருக்க வேண்டிய உமையொரு பாகன் சிற்பம் திருச்சுற்று மாளிகையின் மேற்குப் புறத்தில் காணப்படுகிறது.

நந்தியின் மேல் ஈசன் சாய்ந்த நிலையுடன் கூடிய திருவுருவம்.

இடப்புறத்தில் அம்மன் வடிவமுள்ளது.

இறைவனின் ஒரு கை நந்தி கொம்பின் மீதும், மற்றொரு கை முட்டி மீதுமாக உள்ளன.

பின்புறக் கை ஒன்று மழு ஏந்தியுள்ளன.

அர்த்த மண்டபத்தின் தென்புறக் கோஷ்டத்தில் உள்ள பிட்சாடனர் சிற்பமும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் போல பழமை வாய்ந்தனவையாகும். இவர் நாற்கரங்களுடன் காட்சி தருகிறார்.

மகாமண்டபத்தின் தெற்கில், கல்லான சண்ணல் இருக்கின்றது.

கருவறையும், அர்த்த மண்டபமும் சதுரமானவை.

இருதலக் கற்றளி.

சிறு சிறு தேவ கோஷ்டங்களுடன் இரண்டாவது தளம் அமையப் பெற்றிருக்கிறது.

கருவறையின் அரைத் தூண்களும், அதிட்டானப் பகுதியும் தரை மட்ஞத்திற்கு கீழே தாழ்ந்திருக்கிறது.

பிரஸ்தரத்தில் கொடுங்கையும், பூத கண வரிசையும், வரிமானத்தையும் காணப் பெறுகிறோம்.

இங்கிருக்கும் சிற்ப அமைப்புகள்,  கல்வெட்டு இவைகளின் மூலமாக---இவை முற்காலச் சோழர்கால கோயிலென உறுதிபடுத்திக் கொள்ளலாம்.

திருவிழாக்கள்:
சித்திரை மாதத்தில் ஏழூர் திருவிழா.
வைகாசி விசாகத்தில் பதின்மூன்று நாட்களுக்குப் பெரு விழாவாக வழக்கமாக நடைபெறுகிறது.

பிற செய்திகள்:
கருவறை அதிட்டானம் பள்ளமாகவும், அதனைச் சுற்றியுள்ள பகுதி மேடானவையாகவும் இருப்பதை கட்டிட அமைப்பின் கூறாக அகழி அமைப்புடையதாக என அறியலாம்.

கருவறை தாழ்வனவாக இருப்பதால், மாசி 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை மணி சரியாக 5.45 -மணி முதல் 6.15 மணியளவில் வரை சூரிய ஒளி மூலவர் மூதாக படர்கிறது.

கண்டியூரில் தொன்மை வாய்ந்த மூன்று கோவில்கள் உள்ளன. 

பிரம்மனுக்கென்று இது கற்றளிக் கோயில் இதுவாகும்.

இது பெருமாள் சந்நிதிக்கு அருகாமையில் உள்ளது.

பூஜை:
காமீக ஆகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு, பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோயில், 
திருக்கண்டியூர் அஞ்சல்,
தஞ்சை மாவட்டம். 613 202

தொடர்புக்கு:
பி.மணிகண்டன் குருக்கள்.
98653 02750
04362- 262222
04362- 262322
04362- 261100

         திருச்சிற்றம்பலம்.