Friday, May 26, 2017

Perumizhalai kurumba nayanar

Courtesy: Smt.Uma Balasubramanian

பெருமிழலைக் குறும்ப நாயனார்.

  சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவு பூகம் சூழ்பு உடைத்தாய்

                                வீதிதோறும் நீற்றின் ஒளி விரி மேவி விளங்கு பதி
                                
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து
                                
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை.

 

 

                தொண்டரும் , சான்றோரும் நிறைந்த பதியான பெருமிழலையில் , குறும்பனார் என்ற அடியார் வாழ்ந்து வந்தார். ஆண்டவனிடத்தில் இடையறாத அன்பு கொண்டு , அடியார்களுடன் உறவாடுவதில் ஆர்வம் கொண்டவர் ஆவார்.

                அடியவர்கள் எவர் வந்தாலும் , அவர்களை எதிர் கொண்டு சென்று அழைத்து வந்து உபசரித்து , அவர்களுக்கு வேண்டிய பொருட்களைக் குறிப்பறிந்து கொடுக்கும் ஆற்றல் மிகுந்தவராக விளங்கினார். அவர்களுக்கு வேண்டிய ஏவல்களையும் முகம் சுளிக்காது செய்து வந்தார். 

                அவர் அன்புடன் அடியார்களை உபசரிப்பதினால் அனேக தொண்டர்கள் அவரை நாடி வருவார்கள். அவர்களுக்கு அறுசுவை உண்டி வழங்குவதோடு , அவர்களுக்கு வேண்டிய பொருட்களையும் தந்து அனுப்புவார். இறைவன் திருவருள்தான் இறவாத பெரும் செல்வம் என்ற மெய்யுணர்வு  கொண்டிருந்தார்.

                திருத் தொண்டர்களிடத்தில் பேரன்பு கொண்ட அவர்க்கு , திருத் தொண்டத்தொகை பாடிய சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளிடம் மாறாத பக்தி உண்டாயிற்று. எப்பொழுதும் அப்பெருமானுடைய புகழைப் பேசியும் , அவரை நினைந்தும் இன்புற்றார். அடிக்கடி அவரைத் தரிசனம் செய்து விட்டு வந்து , அவரைப் பற்றியே பேசுவதில் இன்பம் கண்டார். அவரை  நினைத்து தியானமும் செய்து வந்தார்.  இறைவன் திருவருளைப் பெற ஒரே வழி சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளிடம் பக்தி கொள்வதே என்ற உறுதியோடு இருந்து வந்தார். அந்த உபாசனையின் பலத்தால் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றார். அதனை விரயமாக்காது , இறைவனுடைய திருவைந்தெழுத்தையே எல்லாமாக எண்ணித் தவம் புரிந்தார்.

 

        இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின்
                மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார்
                சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து
                நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார்.

               

சுந்தர மூர்த்தி நாயனாரின் அன்றாட நிகழ்ச்சிகளை ஒருவாறு தன்னுடைய உள்ளுணர்வால் அறிந்து கொண்டு இன்புற்றார். நாளாக நாளாக அவர் என்னென்ன செய்கிறார் என்று  பெருமிழலைக் குறும்ப நாயனார் உணர்ந்து கொண்டு வந்தார்.  சுந்தரர் திருவஞ்சைக்களம் சென்று அங்கிருந்தபடியே கைலாயம் செல்லப் போகிறார் என்பதைத்  தன்னுடைய உள்ளுணர்வால் அறிந்தார். அதனால் ' சுந்தரர் வாழாத  இந்த மண்ணில் நான் வாழ மனம் பொருந்தாது, ஆதலால் அப்பெருமான் திருக்கைலாயம் செல்லுமுன் நான் யோக நெறியால் அங்கு செல்வேன்" என்ற எண்ணம் அவர்பால் மூண்டது.

 யோக நெறி கைவரப் பெற்றவராகையால் , பிரமரந்திரத்தின் வழியே கருத்தைச் செலுத்திக் கபால நடுவின் வழியாக உயிர் இந்தச் சடலத்தை விட்டுப் பிரியும் வண்ணம் செய்து , திருக்கைலையை அடைந்தார். இறைவனிடத்து வைக்கும் பக்தியைக் காட்டிலும் , , அடியாரிடம் உள்ள பக்தி , கிடைப்பதற்கரிய சித்திகளைப் பெறும்படி செய்யும் என்பதற்குப் பெரு மிழலைக் குறும்பநாயனார் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும் .

 

        பயிலைச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதம் உறக்
                
கயிலைப் பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி
                
மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
                
குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.

No comments:

Post a Comment