Sunday, May 28, 2017

Chakarapani - Periyavaa

இனிமே எல்லாம் வெளிச்சம்தான்

ஸ்ரீ வேங்கடாசலம் என்ற வைணவ அன்பருக்கு சங்கரரான ஸ்ரீ பெரியவா அவர் வணங்கும் சக்ரபாணியாக காட்சியருளியுள்ளார்.

ஒரு முறை வேங்கடாசலம் திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவணதீப தரிசனம் செய்துவிட்டு ஸ்ரீ பெரியவாளை தரிசிக்க அந்த மாலை சென்றார். அச்சமயம் ஸ்ரீ பெரியவா சற்று ஓய்வாக இருந்த நேரம்.

இவர் போய் தரிசிக்க நின்றபோது "நீ எங்கிருந்து வரே" என்று பெரியவா கேட்டார்.

"திருவையாவூர் ஏழுமலையான் கோயிலில் சிரவண தீபம். அங்கேர்ந்து வரேன்" என்றார் இவர். இப்படி சொன்ன பக்தரை ஸ்ரீ பெரியவா ஏனோ ஊடுருவுவதைப் போல் நோக்கினார். வேங்கடாசலத்துக்கு ஏதோ மனதிற்குள் உறுத்தியது. அப்படியே கரைந்து போவது போலானார். பேச முயன்றார். நா எழவில்லை, நெஞ்சு தழுதழுத்தது.

குற்ற உணர்வோடு ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டார் "எங்க குடும்பத்திலே ரொம்ப நாளா சிரவண தீபம், பூஜை, சந்தர்ப்பனை எல்லாம் நடந்தது. ஆனா இப்போ குடும்பத்திலே எல்லாரும் பிரிஞ்சு போயிட்டதாலே நடத்த முடியலே. மனசுக்கு கஷ்டமா இருக்கு…குத்தம் செய்யறாமாதிரி இருக்கு…ஆத்திலே இதனாலே வெளிச்சம் இல்லாம போயிட்டாப்போல இருக்கு" என்றார்.

ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வமே தன்னை தன் தீர்க்கமான பார்வையால் உள்ளேயிருந்த உணர்வை வெளியே கொட்ட செய்தது போல இவருக்கு தோன்றியது.

உடனே ஸ்ரீ பெரியவாளெனும் தாயன்பரின் ஆறுதல் கிடைத்தது. ஸ்ரீ பெரியவா அங்கிருந்த சிஷ்யரை கூப்பிட்டு எதோ சொல்ல, அவர் உள்ளே சென்று சற்று நேரத்தில் பெரிய அகல்விளக்கில் நெய் ஊற்றி, திரி போட்டு ஏற்றிக் கொண்டு வந்து ஸ்ரீ பெரியவாளின் எதிரில் வைத்தார்.

ஸ்ரீ பெரியவா எழுந்து கையில் தண்டத்தை ஏந்தி அந்த விளக்கை வலம் வந்தார். பின் விளக்கினை மகான் வணங்கினார்.

வேங்கடாசலம் திகைத்துநிற்க, ஸ்ரீ பெரியவா இவரை பார்த்து "சேவிச்சுக்கோ…சிரவண தீபம் போட்டாச்சு! இனிமே எல்லாம் வெளிச்சம்தான்" என்று அருளமுதமாக பொழிந்தார்.

வேங்கடாசலத்தால் உணர்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் போனது. கண்களில் நீர் பெருக ஸ்ரீ பெரியவா காட்டிய சிரவணதீபத்தை வணங்கி நிமிர்ந்தார்.

அப்போது வேங்கடாசலத்திற்கு ஸ்ரீ பெரியவள், சங்கரராக தெரியவில்லை.

"அங்கே சங்கரரை காணவில்லை சக்ரபாணியை தரிசித்தேன்" என்கிறார் அந்த பக்தர். அசிரத்தை காரணமாக ஆசார அனுஷ்டானங்களை விட்டுவிடக் கூடாது…தன்னால் முயன்ற அளவில் கட்டாயம் கடைபிடித்து செய்யவேண்டுமென்ற பெரிய அறிவுரையை ஸ்ரீ பெரியவா தனக்கருளிய அதே சமயம், தானே ஏழுமலையான், தானே சக்ரபாணி என்பதையும் மிக எளிமையாக ஆணித்தரமாக காட்டிவிட்டதாக வேங்கடாசலம் அனுபவித்து மகிழ்கிறார்.

இப்படி எல்லாமுமாகிய பெருந்தெய்வம், மகா எளிமையோடு நமக்கெல்லாம் அருளிய ஸ்ரீ பெரியவாளெனும் தூய உருவில் காத்திருக்க, நாம் கொள்ளும் பூர்ண பக்தி நமக்கெல்லாம் அந்த பேரனுக்கிரஹத்தால் சகல ஐஸ்வர்யங்களும், சகல மங்களத்துடன் நல்வாழ்வும் அருளும் என்பது சத்தியமல்லவா!

– கருணை தொடர்ந்து பெருகும்

No comments:

Post a Comment