Monday, May 22, 2017

Appaya Dikshitar

Courtesy: Sri.JK.Sivan

அடையபலம் அப்பய்ய தீக்ஷிதர் -- J.K. SIVAN

கிட்டத்தட்ட நாநூறு வருஷங்களுக்கு முன் ஒரு மஹான் நமது தென்னாட்டில் வாழ்ந்திருந்தார். ( 1520–1593) அவர் பெயர் அப்பய்ய தீக்ஷிதர். அத்வைதி. யாக யஞங்கள் பண்ணுபவர். சிறந்த சிவ பக்தர்.அப்பா அம்மா வைத்த பெயர் விநாயக சுப்ரமணியன். ஊர்ஆரணி அருகே திருவண்ணாமலை ஜில்லாவில் உள்ள அடையபலம். அப்பா பெயர் ரங்கராஜுத்வாரி . ராமகவி என்ற குரு அவருக்கு சாஸ்திரங்கள் வேதங்கள் எல்லாம் கற்பித்தார். சிறுவயதிலேயே சகல வித்யைகளும் பாடமாகியது .

தீக்ஷிதர் நிறைய நடந்தார். வேலூர், வேங்கடகிரி,, தஞ்சாவூர், விஜயநகரம் எல்லா இடத்திலும் ராஜாக்கள் ஆதரவு. கௌரவம் மரியாதை. பரிசு. தர்க்க வாதங்களில் வெற்றி. சைவ மத பெருமைகளை வேத சித்தாந்தங்களை சென்ற இடம் எங்கும் எதிரொலித்தார்.

தீக்ஷிதர் ஒரு முறை திருப்பதி சென்றபோது பாலாஜி அவருக்கு சிவனாக காட்சியளித்தார் என்று சொல்வதுண்டு.

தீக்ஷிதர் ஒரு சித்த புருஷர் . ''என் ஆத்மா முழுதுமாக சிவனிடம் ஈடுபட்டிருக்கிறதா?'' தானே இதை அறிந்து கொள்ள ஒரு பரிசோதனை நிகழ்த்தினார். சீடா்களை அழைத்தாா்.

''என் கையில் இருக்கும் ஊமத்தைச் சாற்றை குடிக்கபோகிறேன். தன்நிலை மறந்து உன்மத்தம் ஆகிவிடுவேன். பைத்தியம் பிடிக்கலாம். அப்போது என் உடலிலே,உள்ளத்திலே, உணா்விலே, பேச்சிலே ஏற்படும் மாற்றங்களை ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளுங்கள். ரெண்டு மூணு மணிக்கு அப்பறம் இதோ இந்த சீசாவில் இருக்கும் மாற்று மருந்தை எனக்கு கொடுங்கள். நான் பழைய நிலைக்கு வந்துவிடுவேன்''

ஊமத்தஞ் சாறு தீக்ஷிதரை உன்மத்தராக்கியது. அப்பய்ய தீட்சிதா் குதித்தார், ஆடினாா் பாடினாா், உருண்டாா்,அழுதாா். எல்லாம் சிவனின் புகழைப் பாடிக்கொண்டே. ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பிறகு மாற்று மருந்தால் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

''என்னை மறந்த நிலையில் நான் எப்படி இருந்தேன்?''

'' ப்ரபோ, நீங்கள் முழுக்க முழுக்க சிவனின் புகழையே பாடி வழிபட்டீா்கள். அந்த ஸ்தோத்திரங்களை இதோ நாங்கள் எழுதி வைத்துள்ளோம்"

பரவசமடைந்து ''ஹர ஹர மஹாதேவா'' என உள்ளன்போடு சிவனை வணங்கினார் தீக்ஷிதர். உன்மத்த நிலையில் அவர் இயற்றியது " ஆத்மாா்ப்பண ஸ்துதி ". அவருடைய இன்னொரு ஸ்தோத்ரம் "சிவாா்க்க மணிதீபிகை"

தீக்ஷிதரின் சிவ பக்தி சேவையை கௌரவித்து வேலூரை ஆண்ட ராஜா சின்ன பொம்ம நாயக்கன் தனது அரச சபையில் அவருக்கு தங்கத்தினால் ஆன புஷ்பங்களினால் கனகாபிஷேகம் செய்தான்.

''இது என்னத்துக்கு எனக்கு? அடையபலத்தில் ஸ்ரீகாலகண்டேஸ்வரா் கோயிலைக் கட்டுங்கோ. சிவாா்க்கமணி தீபிகையை அனைவரும் படிப்பதற்கும் ஏற்பாடுபண்ணலாமே'' என்றார்

தீக்ஷிதரை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருவார்கள். பிரசாதம் போஜனம் அவர்களுக்கு உண்டு. ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் பக்தர்கள் வந்து பந்தி பந்தியாக போஜனம் நடந்தது. சமையல் அறையில் அன்னம் குறைந்து விட்டதே ? உள்ளே அரிசி இல்லை. கடையில் இருந்து வாங்கி சமைத்து பரிமாற நேரம் இல்லையே. 'சாப்பாடு இல்லை. போய் வாருங்கள்' என்று சொல்லமுடியுமா? விஷயம் தீக்ஷிதர் காதை எட்டியது. நேராக சமையல் அறைக்கு வந்தார். நிலைமை தெரிந்து கொண்டு அன்னலட்சுமியை வணங்கினார் . ஸ்தோத்ரம் உச்சரித்தார்.

''இருக்கும் சாதத்தை எல்லோருக்கும் பரிமாறுங்கள்"

அள்ள அள்ள குறையாமல் சாதம் நிறைந்து கொண்டே இருந்தது. அன்னம் அட்சய பாத்திரமாகவே மாறிவிட்டது. அன்ன பூரணி ஸ்துதிக்கு இவ்வளவு சக்தியா ?

தீக்ஷிதர் எழுதியது தான் சித்தாந்த லேஷ சங்கிரகம் என்ற விசேஷ தர்க்க நூல். இதில் ஏக ஜீவ வாதம், நானா ஜீவ வாதம், பிம்ப ப்ரதிபிம்ப வாதம், ஸாக்ஷித்வ வாதம், எல்லாம் விமர்சிக்கப்பட்டுள்ளது. எல்லா ஆச்சார்யர்களும் தமக்கு உரித்தான முறையில் ஒரே விஷயத்தை போற்றி வெவ்வேறு விதமாக உரைக்கிறார்கள். விஷயம் ஒன்று தானே யார் எப்படி சொன்னால் என்ன? என்கிறார்.

தீக்ஷிதரின் ப்ரம்ம சூத்ர ஸ்ரீ கண்ட பாஷ்யம் ஆதி சங்கரரின் பாஷ்யத்தை அடி ஒற்றி இருக்கிறது. சகுணோபாசனை மூலம் நிர்குண உபாசனை பெறுவது சுலபம் என்று விளக்கினார். தீக்ஷிதரின் ஆனந்தலஹரி சந்திரிகா ஒரு அற்புத படைப்பு.

நான் அறிந்த இன்னொரு அதிசய விஷயம் சொல்கிறேன். தீக்ஷிதரின் அந்திம காலத்தில் பொறுக்கமுடியாத வயிற்று வலியால் துடித்தார்.

''இது என் பிராரப்த கர்மா. என்ன செய்யமுடியும்? என்னுடைய அன்றாட சிவ பூஜைக்கு இந்த தாங்கமுடியாத வயிற்று வலி குந்தகமாக இருக்கிறதே என்பது தான் குறை''.

சிவபெருமானின் அருளால் ஒரு துண்டை எடுத்து இறுக்கி வயிற்றின் மேல் கட்டிக்கொண்டு தனக்கு எதிரே ஒரு தாம்பாளத்தில் நீர் நிரப்பி வயிற்றில் இருந்த பெரிய கட்டியை அதில் வெளியே கொண்டு வந்தார். அது ஒரு சேனைக்கிழங்கு போல் நீரில் மிதந்தது. தீக்ஷிதர் நிம்மதியாக பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் ரத்தக் கட்டி வயிற்றுக்குள் பழையபடியே சென்றுவிடும். இது அன்றாடம் தொடர்ந்தது.

''குருநாதா, தங்களால் அந்த கட்டியை வெளியே கொண்டுவர முடிகிறதே. அதை அப்படியே வெளியே விட்டுவிட கூடாதா?

''சிஷ்ய சிகாமணிகளே , வாஸ்தவம்.நல்ல யோசனை தான். என்னால் அதை வெளியேற்ற முடியும். அப்புறம் சேனைக்கிழங்கு பரங்கிக்காயாகி என்னை அடையும் போது அதை எப்படி பொறுத்துக் கொள்வது. இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டியதை சிவன் அருளோடு இப்போதே பொறுத்துக் கொண்டு அனுபவிக்கிறேனே''

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor