Tuesday, April 25, 2017

Thiruverumbur temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
(நேரில் சென்று தரிசித்ததைப் போல........)
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   (26)
     🍁 திருஎறும்பியூர். 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

இறைவன்:
பிப்பிலீகேஸ்வரர், எறும்பீசர்.

இறைவி: 
செளந்தர நாயகி, நறுங்குழல் நாயகி.

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம்.

தலமரம்: வில்வம்.

சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் ஏழாவது தலமாகப் போற்றபெறுகின்றது.

இருப்பிடம்:
திருச்சி-- தஞ்சை நெடுஞ்சாலையில் இருக்கிறது.

திருச்சியிலிருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் செல்கின்றன.

மலை மீதுள்ள இத்தலம் தொல்பொருளாய்வுத் துறையினரின் பாதுகாப்பில் இருக்கிறது.

பெயர்க் காரணம்:
மலைக்கோயில் புராணப்படி இதற்கு பிப்பிலீச்சரம், மணிக்கூடம், திருவெரும்பிபுரம், எறும்பீசம், பிரம்மபுரம், இலக்குமிபுரம், மதுவனபுரம், குமாரபுரம் எனப் பெயர்களும் உண்டு.

இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலத்திற்கு இப்பெயர் வந்தது.

தேவாரம் பாடியவர்கள்:
அப்பர் --5-ல் ஒரு பதிகமும், 6-ல் ஒரு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு இரண்டு பதிகங்கள்.

கோவில் அமைப்பு:
நுழைவு வாயிலில் நுழைந்ததும் இடது புறத்தில் செல்வ விநாயகர் இருக்கிறார். அவரை நாம் முதலில் வணங்கிக் கொள்கிறோம்.

வலப்புறமாக ஆஞ்சநேய சந்நிதியும் உள்ளன.

மலைக்கோயிலுக்குச் செல்ல நாம் நூற்று இருபத்து ஐந்து படிகள் ஏற வேண்டும்.

கல்லாலான கட்டிடத்தில் கருவறை அமையப் பெற்றுள்ளது.

முன்பாக செப்புத்தகடினால் கவசமிட்டு வேயப்பட்ட கொடிக்கம்பம் உள்ளது.

சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

மலையின் மீது உள்ளேயும் வெளியேயுமாக இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றது.

உள் பியகாரத்தில் நாம் உள்ளே நுழைந்ததும், நமக்கு நேராக மூலவர் சந்நிதி தென்பட பணிந்து உள்ளன்பால் வணங்கித் தொழுது கொள்கிறோம்.

பின்வலமாக வரும்போது, நால்வரின் பிரதிஷ்டை, சப்தமாதாக்களின் உருவங்கள், விநாயகர் சந்நிதி, காசி விஸ்வநாதர், ஆறுமுகர், கஜலட்சுமி முதலானவர்களும் அருளாகக் காட்சித் தருகின்றார்கள்.

கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவரிடத்தில் சங்கரநாராயணர் உருவம், விஷ்ணு, துர்க்கை ஆகியோர்களாக இருக்கிறார்கள்.

சண்டேசுவரர் சந்நிதியும் அமைந்திருக்கிறது.

நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியாரோடு நடுவில் உள்ளார்.

பைரவரும் இருக்கிறார்.

மூல லிங்கம் திருமண்புற்றாக மாறியிருப்பதால், இம்மூல லிங்கத்தின் மீது நீர் படாமல் பாதுகாக்கப்படுகிறது.

சிவலிங்கத் திருமேனி வடபாலாக சாய்ந்த நிலையிலும், லிங்கத் திருமேனியின் மேல்புறம் திருசொரசொரப்பாகவும் அமைந்திருக்கிறது.

தனிச் சந்நிதி கொண்டு வெளிச் சுவற்றில் அம்பாள் தெற்கு நோக்கி அருள்காட்சி அருள, அம்மையையும் வணங்கிக் கொள்கிறோம்.

தல அருமை:
தாருகாசூரனை அழிக்கத் தேவர்கள் வழிகேட்டு பிரமனை அணுகினார்கள்.

அவர்கூறியபடி இந்திரனும், தேவர்களும் தங்கள் உருவம் அசுரர்களுக்கு தெரியக்கூடாது என்றெண்ணி எறும்பு வடிவம் கொண்டு இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர்.

அவ்வாறு வழிபடும்போது லிங்கத்தின் மீதிருந்த எண்ணெய் பசையால் மேலே முடியாது கஷ்டபட்டது.

சுவாமியோ தன்னை எறும்பு புற்றாக மாற்றிக் கொண்டார்.

இதனால் எறும்புகள் திருமண்புற்று மீது மேலேறி பூசை செய்வதற்கு வசதியாக சொரசொரப்பாக திருமேனியையும் ஏற்படுத்திக் கொண்டார்.

அவ்வெறும்புகள் தன் திருமண்புற்றின் மீது ஊர்ந்தேறி வரும்படியும், தனது திருமேனித் தலையைச் சாய்த்தும் மேலேறி வர வசதியாகவும் ஏற்படுத்திக் கொடுத்து பூசையையும் ஏற்றுக் கொண்டார்.

திரிசிரன் திருச்ஞியில் வழிபட்டது போல, அவனுடைய சகோதரனான கரன் என்பவன் எறும்பு உருவம் கொண்டு இங்கு வழிபட்டுத் தொழுததாகவும் கூறப்படுகிறது.

திருமண்புற்றுத் திருமேனி லிங்கத்தில், எறும்புகள் ஊர்ந்த தடம் பதிந்திருப்பதைக் காணலாம்.

தல பெருமை:
திருமாலும்,பிரமனும், நைமிசாரண்ய ரிஷிகளும் வழிபட்ட தலம்.

தென்கயிலாயம் என்றும் இத்தலத்தைக் கூறுவார்கள்.

அர்த்த மண்டபத்திலுள்ள கல்தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது.

ஆதிசேடனுக்கும், வாயுதேவனுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டி வந்தன.

வாயுவால் பெயர்த்தெடுக்கப்பட்ட மேருமலையின் பகுதியே இம்மலையாகும்.

பொதுத் தகவல்கள்:
கருவறையின் வெளிப்புறம் கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

கோயில் கல்வெட்டில் இத்தலம் திரு கண்டசதுர்வேதி மங்கலம் என்றும், இறைவன் பெயர் திருமலையாழ்வார் என்றும், திருவெறும்பியூர் உடையநாயனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வெளிப்புறத்திலே முகலாயப் படையெடுப்பின்போது உண்டான இடிபாடுகள் காணப்படுகிறது.

கி.பி.1752- ஆண்டில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரருக்கும் நடந்த போரின் போது , இவ்விடத்தில் வீரர்கள் தங்கும் இராணுவ தலமாக விளங்கியிருந்தது.

தற்போது இவ்விடத்தில், துப்பாக்கித் தொழிற்சாலை, கொதிகலன் தொழிற்சாலை, தொழிற்பயிற்சி நிலையம் முதலியவை உள்ளன.

திருவிழா:
வைகாசி விசாகப் பெருவிழா பிரமோற்சவம்--திருக்கல்யாணம், சிவராத்திரி, அன்னாபிசேகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், நவராத்திரி, பங்குனி உத்திரம், வெள்ளிக் கிழமை தோறும் துர்க்கை வழிபாடு.

பெளர்ணமியன்று கிரிவலம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

பூஜை:
காமீக முறையில் நான்கு கால பூசை.

காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு, எறும்பீஸ்வரர் திருக்கோயில்,
திருவெறும்பூர் அஞ்சல்-- 
620 013
திருச்சி மாவட்டம்.

தொடர்புக்கு:
மணிகண்ட சிவாச்சாரியார்.
98429 58568
0431--2510251,  
0431--6574738

            திருச்சிற்றம்பலம்.

நாளை.....திருநெடுங்களம்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■


அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

No comments:

Post a Comment