Monday, April 24, 2017

Seshadri Swamigal

வெளியே அதிகம் தெரியாத ஒரு மஹான்:
J.K. SIVAN

''அத்திக்காயிலே ஈஸ்வரன் இருக்கான்''

பகவான் ராமணரிடமும் சேஷாத்திரி ஸ்வாமிகளிடத்திலும் பக்தி கொண்ட எண்ணற்றவர்களில் ஒருவர் தான் சேலத்தில் சாந்தாஸ்ரமத்தை சேர்ந்த ஒரு சாது. அவருக்கு ஒரு வழக்கம் என்னவென்றால் ஒரு இடத்தில் இருக்கமாட்டார். க்ஷேத்ராடனம் செய்து கொண்டே இருப்பார். காசி, ராமேஸ்வரம், பத்திரிகாச்ரமம், ஹரித்துவார், என்று மாறி மாறி யாத்திரை.

அவர் ஒருநாள் திருவண்ணாமலையில் சேஷாத்திரி ஸ்வாமிகளை தரிசித்து வணங்கினார். ஸ்வாமிகள் கம்பத்திளையனார் கோவில் வாசலில் அப்போது நின்று கொண்டிருந்தார்.

''எங்கே உன்னை ரொம்பநாளா காணோம்?''

''சுவாமி, காசிக்கு போனேன்.

'' அப்புறம்?''

'' பத்ரிகாஸ்ரமம், ஹரித்துவார் எல்லாம் போனேன்''

''எதுக்கு? எங்கே போறது? எங்கே வரது? நான் என்கிட்டேயே இருக்கேன். நீ உன்கிட்டேயே இருக்கே. அப்படி தானே இருக்கணும். அப்புறம் எதுக்கு இதெல்லாம்? '' என்கிறார் சுவாமி.

என்ன அர்த்தம்?

''நான் எப்படி சர்வ சதா காலமும் எனக்கான ஸ்வரூப ஸ்திதியில் இருந்து வருகிறேனோ அப்படியே நீயும் ஸ்வரூப நிஷ்டை பெற வேண்டும். வீணாக அங்கும் இங்கும் அலைவதில் அர்த்தமும் இல்லை, பயனும் இல்லை.'' என்று இருக்கலாம்.

வக்கீல் நரசிங்க ராவ் வீட்டில் குடியிருந்த வயதான பெண்மணி எச்சம்மா என்று பேர் பெற்ற லட்சுமி அம்மாள். சேஷாத்திரி சுவாமி பக்தை.

அவள் வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்த நேரம் அவள் வீட்டு வாசலில் ஸ்வாமிகள் நின்று இருந்தார். அவரை நமஸ்காரம் பண்ணிய எச்ச்சம்மாவிடம் ஸ்வாமிகள் பேசினார்:

''நீ இந்த வீட்டை விட்டு விட்டு வந்துடு. இங்கே நாய் இருக்கு. துஷ்டர்களும் இருக்கிறார்கள். கோபுரத்துக்கு வந்துடு. அங்கே இருக்கலாம்.''

''சுவாமி எனக்கு அவ்வளவு பக்குவம் வரலையே. நான் என்ன செய்வேன்? நானோ ஒரு ஸ்த்ரீ. எப்படி கோபுரத்தில் வந்து இருக்கிறது?''

''என்ன சொல்றே நீ. யார் ஸ்த்ரீ?'' என்று சொல்லி விட்டு போய் விட்டார். எச்சம்மா யோசித்தாள் . அர்த்தம் புரியவில்லை.

தேகம் அனாத்மா. எப்படி ஸ்த்ரீ என்றும் புருஷன் என்றும் ஆகும்.சுத்த வஸ்துவுக்கு குலம் , கோத்ரம், ஜாதி, வர்ணம், ஆஸ்ரமம், நாமம், ரூபம் ஏது? ஒரு பிரமையில், பிராந்தியால் , ஆத்மாவின் மேல் சுமத்தப்பட்டது தானே அவை. தேகத்தின் நினைவு இருக்கிற வரை தான் இந்த ஸ்த்ரீ புருஷன் என்கிற எண்ணங்கள் இருக்கும். தேகத்தை மறந்து விட்டால் அதெல்லாம் பறந்து போய்விடும். ஆத்மாவின் இந்த லக்ஷணத்தை ஸ்வாமிகள் ஒரு வார்த்தையில் உணர்த்தியிருக்கிறார் . ''யார் ஸ்த்ரீ?''

இதே எச்சம்மாவிடம் தான் ஒரு தரம் ஸ்வாமிகள் ''அத்திக்காயிலே ஈஸ்வரன் இருக்கான்'' என்று சொல்லியிருக்கிறார். அப்போது அவர் ஏதோ சம்பந்தமில்லாமல் பேசுகிறாரே என்று நினைத்திருக்கிறாள்.

அத்திக்காய் ரவுண்டு உருவம். உடைத்தால் உள்ளே நிறைய பூச்சி புழு இருக்கும். இதை உபமானமாக காட்டி இந்த பிரபஞ்சம் உருண்டை. பிரம்மாண்டம். பகவானுடைய சிருஷ்டி. அதில் உள்ள பூச்சி புழுக்கள் தான் எண்ணற்ற ஜீவராசிகள். பரமேஸ்வரன் தானே அவற்றுள் ஜீவ ரூபியாக இருக்கிறான். வேதத்தில் வரும் ''அநேக ஜீவேன ஆத்மனா ' என்று சிருஷ்டி ஸ்திதி லய காரியமாக ஈஸ்வரன் உள்ளிருந்து அருள்கிறான் என்று எடுத்துக் காட்டியிருக்கிறார். அதனால் தான் ''அத்திக்காயிலே ஈஸ்வரன்''.

Image may contain: 1 person, sunglasses

No comments:

Post a Comment