Tuesday, April 18, 2017

Other names of Ramanujar

இன்னும் இரு மாதங்களுக்கும்   குறைவான காலத்தில் ஆயிரமாவது அவதார  ஜெயந்தி காணவிருப்பவர்  பகவத்  ராமானுஜர், ராமானுஜர் என்ற பெயர் மட்டுமல்லாது இன்னும் சில திருநாமங்களால் இவர் அழைக்கப்படுகிறார்/ அறியப்படுகிறார் . அவை என்ன::::

அவரது திருதகப்பனார் திருத்தாயார் விரும்பியபடி தாய்மாமன் பெரிய திருமலைநம்பி சாத்திய திருமநாமம் ---"இளைய ஆழ்வார்'   (பிறந்த குழந்தை ஸ்ரீ ராமனது இளைய சகோதரன் லக்ஷ்மணனை ஓத்திருந்ததாகையால் , தாய்மாமன் பெரிய திருமலை நம்பி தனது உள்ளத்தில் நிலைநிறுத்திய திருநாமம் ராமானுஜன் (ராமனுடைய அனுஜன்-அனுஜன் என்றால்  இளைய  சகோதரன் என்ற பொருள்     சமஸ்கிருதத்தில்     )

அவரது  அவதார  தலமான ஸ்ரீபெரும்புதூர்  உறை ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் சாத்திய திருநாமம் ...."பூத புரீசர்"
(அக்காலங்களில் ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி என்னும் பெயருடன் அறியப்பட்டது )

திருவரங்கம் நம்பெருமாள் சாத்திய திருநாமம் ...."உடையவர்"….   திருவரங்கத்துக்கு வந்திருந்த ஸ்ரீ ராமானுஜரின் கைங்கர்ய சிறப்பைக்  கண்டு  சிலாகித்த ஸ்வாம்மி நம்பெருமாள் இவர் அதாவது ஸ்ரீ ராமானுஜர் பூவுலகான லீலாவிபூதிக்கும்  மேலுலகமான (வைகுண்டம் என அழைக்கப்படும்)  நித்ய  விபூதிக்கும் உடையவர் என அருளிச்செய்தார். மேலும் இவர்க்கு மட்டுமல்லாது இந்த ஸ்வாமியை பின் பற்றுபவர்க்கும், அவரது அடி தொழுவோர்க்கும் அவரைச் சார்ந்தவர்க்கும் கூட வைகுண்ட ப்ராப்தி  உண்டென்று அருளிச் செய்து, ஸ்ரீ ராமானுஜருக்கு "உடையவர்" என்ற திருநாமத்தை சூட்டினார்.

அத்திகிரி அருளாளன் தேவராஜப்பெருமான் (காஞ்சி தேவ்ராஜப்பெருமாள்) சாத்திய திருநாமம்...."எதி ராஜர்"     முனிவர்க்கெல்லாம், சன்யாசிகளுக்கெல்லாம் அரசர் என்று பொருள் தொனிக்க காஞ்சி தேவராஜப்பெருமாள் ஸ்ரீ ராமானுஜருக்கு "யதி ராஜர்", என்ற திருநாமத்தை சாற்றினார்.

திருமலை வாழ் திருவேங்கமுடையான் சாத்திய திருநாமம்....."தேசிகேந்த்ரன் "

"ஸ்ரீ பாஷ்ய காரர்"……       தான் முன்னும் பின்னும் பார்த்திராத ஆனால் பெரும் மதிப்பு வைத்திருந்த  ஆளவந்தாரின் இறுதி விருப்பத்திற்கிணங்க , பெருமாளின்   ஆசியுடனும்  ஆழ்வார் நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி யை வழிகாட்டியாய்  வைத்துக்கொண்டு பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் (பாஷ்யம்) எழுதித் தந்தமையால் பாஷ்யகாரர் என்ற திருநாமம் வழங்கப்பட்டது.
சிறந்த ஸ்ரீபாஷ்யம் அருளியதைக் கண்டு காஷ்மீரம்  சாரதாபீடத்திலுள்ள சரஸ்வதி தேவியால் உகந்து சூட்டப்பட்ட திருநாமம்.  என்றும் கூறுவர்...

______________
இவை தவிர ராமானுஜர் சம்பந்தப்பட்ட ஐந்து ஆச்சார்யர்கள் அவருக்கு சாத்திய திருநாமங்கள் வருமாறு:::::

காஞ்சி தேவராஜப்பெருமானால் அங்கீகரிக்கப்பட்ட அவரது முதல் ஆச்சார்யர்  மற்றும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து ராமானுஜரை  ஸ்ரீ வைஷ்ணவன் ஆக்கிய மஹாபூர்ணர் என்ற திருநாமம் கொண்ட   பெரியநம்பி -----'ராமானுஜர்'--தாஸ நாமம் ..

அஷ்டாச்சர மந்த்ரம் உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பி ------"எம்பெருமானார்"..   ஸ்ரீ ராமானுஜரது கருணை  உள்ளத்தைக்   கண்டு சாத்திய திருநாமம்

  திருவாய்மொழி கற்றுவித்த  திருமாலை ஆண்டான்---------"சடகோபன் பொன்னடி"... 
  
தான் அருளிச்செய்த நாலாயிர திவ்யபிரபபந்தங்களில் ஒன்றான திருப்பாவையில் தான் வேண்டிக்கொண்டபடி  தனது  அண்ணன்  மாதிரி பொறுப்பேற்று திருமாலிருஞ் சோலை ஸ்ரீ கள்ளழகப்பெருமானுக்கு நூறு தடா  அக்கார வடிசல்  (  சக்கரைப்பொங்கல்) சமர்ப்பித்த காரணத்தினால், ஸ்ரீ ஆண்டாள் சாத்திய திருநாமம் --"கோயில் அண்ணன்",   

இறுதியாக   -------
 நாலாயிர திவ்யப்ரபந்தங்களுடன் சேர்த்து குறிப்பிடத்தக்க பெருமை வாய்ந்த ஒன்றான,  ஸ்ரீ ராமானுஜரின் புகழ் பாடும்  ஸ்ரீ ராமானுஜர் நூற்றந்தாதி அருளிச்செய்த ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் -----"லக்ஷ்மண முனி" 
---ஆக மொத்தம் 11 திருநாமங்கள்

இவை தவிர 
நம்மாழ்வார், பிற்காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை  நிலைநிறுத்தி, அடியார்களை உய்விக்க அவதரிக்கப்போகும் பவிஷ்யதாரர் என்ற திருநாமத்துடன் குறிப்பிட்டது   ஸ்ரீ ராமாநுஜரையே ஆகும்    

இவைதவிர வழக்கிலிருக்கும் சில திருநாமங்கள்::;

திருப்பாவை ஜீயர் : திருவரங்களிருந்த நாட்களில் திருவரங்க வீதிகளில் அதிகாலையில் திருப்பாவை பாசுரங்களை பக்தியுடன் பாடி அதன் மூலம்   ஈயப்பெற்ற உணவை உண்டு வாழ்ந்தமையால் திருவரங்க மக்கள் சாத்திய திருநாமம்

கோதாக்ரஜார் :: ஆண்டாள் நாச்சியார் திருஅவதார ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் சாத்திய திருநாமம். இன்னொன்றும் சொல்கிறார்கள்...ஆண்டாள் நாச்சியாரே ஸ்ரீ ராமானுஜரை தனது அண்ணனாகப் பாவித்து இவ்வாறு அழைத்ததாகவும்சிலர்   கூறுவர்.

அப்பனுக்கு சங்காழி அளித்த பெருமான்::
திருவேங்கடமலையில் அந்நாட்களில் ஒரு சமயம் கோயிலின் உள்ளிருக்கும் பெருமான் சிவனின் அம்சமா, இல்லை விஷ்ணுவை அம்சமா என்னும் சர்ச்சை வந்தபோது ஸ்ரீ ராமானுஜர் மனமுருகவேண்டி  விஷ்ணுவின் அம்சமாகக் காட்சிதரவேண்டுமென பிரார்த்தித்து அதன்படியே கோயில் வாசலில் பெருமானின் ஆயுதங்களான சங்கும் சக்கரமும் இருந்ததைக்    கண்ட  மக்கள் உள்ளிருக்கும் இறைவன் விஷ்ணுவின் அம்சமே என ஒப்புக்கொண்டனர். இதனால் ஸ்ரீ ராமானுஜருக்கு "அப்பனுக்கு சங்காழி அளித்த் பெருமான்", என்ற  திருநாமம் ஏற்பட்டது..

 மேலே கண்ட திருநாமங்கள்   காரணமாகவே, பெருமாள் கோயில்களில் ஸ்ரீ ராமானுஜர் சந்நிதியைக் குறிக்கும் வகையில் ஸ்ரீ எம்பெருமானார் சந்நிதி, ஸ்ரீ பாஷ்யகாரர் சந்நிதி, ஸ்ரீ உடையவர் சந்நிதி, ஸ்ரீ எதிராஜர் சந்நிதி என்றெல்லாம் நுழைவாயிலில் எழுதப்பட்டிருந்தாலும் உள்ளே சேவை சாதிப்பவர் ஸ்ரீ ராமானுஜர் என்றே கொள்ளல் வேண்டும்...

No comments:

Post a Comment